விசாகா வழக்கு ஒரு ஒளி விளக்கு
அயர்லாந்து நாட்டில் 2002 இல் டப்ளின் நகரில் உலக மகளிர் நீதிபதிகள் மாநாடு நடந்தது.
அயர்லாந்து நாட்டில் 2002 இல் டப்ளின் நகரில் உலக மகளிர் நீதிபதிகள் மாநாடு நடந்தது. அங்கே என்னை சந்தித்த அயல் நாட்டு பெண் நீதிபதிகள் "நீங்கள் விசாகா நாட்டிலிருந்து வருகிறீர்களா? விசாகா எங்களுக்கு ஒரு ஒளிவிளக்கு' என்று ஒரே குரலில் சொன்னார்கள். அது என்ன விசாகா? விசாகா வழக்கு பணியிடத்தில் பாலியல் தொல்லை (ள்ங்ஷ்ன்ஹப் ட்ஹழ்ஹள்ள்ம்ங்ய்ற்) பற்றியது . அந்த வழக்கின் மூலம் என்ன?
இதற்கு நாம் 1992-ஆம் வருடத்திற்கு செல்லவேண்டும். பன்வாரி தேவி ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பெண்மணி. குயவர் வகுப்பை சேர்ந்தவர். அரசு நடத்திவரும் பெண்கள் முன்னேற்ற திட்டத்தில் அடிமட்ட ஊழியராக பணி புரிந்துவந்தார். நிலம், நீர், கல்வி, சுகாதாரம் போன்ற பொது நல விஷயங்களுக்காக உழைத்தார். பால்ய விவாகங்களைத் தடுப்பதிலும் அவர் முனைந்து பணி புரிந்தார்.
பழைய வழக்கங்களில் ஊறிப்போயிருந்த அந்த கிராம மக்களை இது சீற்றமுற வைத்தது. ஒரு நாள் பன்வாரி தேவி தன் கணவருடன் நிலத்தில் வேலை செய்துக்கொண்டிருந்தபோது, அக்கிராமத்தை சேர்ந்த ஐந்து பேர் பன்வாரி தேவியின் கணவரைக் கட்டிப்போட்டு பன்வாரி தேவியை பாலியல் கொடுமைக்கு உட்படுத்தினார்கள். பன்வாரி தேவி காவல் துறையிடம் புகார் கொடுத்தார். வழக்கு நடந்தது. பின் தள்ளுபடி ஆனது.
Advertisement
"மனைவிக்கு இந்தக் கொடுமை நடப்பதை எந்த கணவனும் பார்த்துகொண்டிருக்கமாட்டான், கீழ் சாதி பெண்ணை மேல் சாதி ஆண்கள் பாலியல் கொடுமைக்கு உள்படுத்தினார்கள் என்பது நம்ப முடியாதது' என்று மாவட்ட நீதிமன்றம் காரணம் கூறியது. ஆம் நடைமுறை உண்மைக்கும் இந்த காரணங்களுக்கும் இடைவெளி அதிகம் தான்.
பெண்கள் கொதித்தெழுந்தனர். பெண்களுக்காக பாடுபடும் அரசு சாரா நிறுவனங்கள் ஒன்று சேர்ந்து இந்திய அரசியல் சாசனத்தின் ஷரத்து 32 இன் படி ஒரு பேராண்மை மனு தாக்கல் செய்தன. விசாகா என்ற நிறுவனமும் மனுதாரர்களில் ஒன்று.
பணி புரியும் இடங்களில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும், இது பாலியல் சமத்துவம் பற்றியது என்றும் இது வாழும் உரிமை பற்றியது என்றும், சுதந்திரம் பற்றியது என்றும் சட்டத்தின் வழிமுறைகள் போதுமானதாக இல்லை என்றும், ஆகையால் இந்த சமூக அவலத்தை அகற்ற வேண்டும் என்றும் அதற்கு தேவையான மாற்று வழிமுறை வகுக்க வேண்டும் என்றும் இந்த மனு கோரியது.
அப்பொழுது உச்ச நீதி மன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த ஜே. எஸ்.வர்மா என்ற மாமனிதரின் தலைமையில் அந்த வழக்கு விசாரிக்கப்பட்டது.பணியிடங்களில் பாலியல் தொல்லையை தடுக்கவும், அதில் இருந்து பெண்களை பாதுகாப்பதற்கும் பிரத்தியேக சட்டம் இல்லாத நிலை அன்று. இதற்கு தீர்வு என்ன என்று உச்ச நீதி மன்றம் ஆராய்ந்தது.
நமது அரசியல் சாசனத்தில் பாலியல் சமத்துவம் என்பது அடிப்படை உரிமை. அந்த உரிமை பெண்களுக்கு முழுமையாக வசமாக வேண்டும். நம் நாட்டில் பணியிடங்களில் பாலியல் தொல்லை பற்றிய சட்டம் இல்லையென்றால் நீதி மன்றங்கள் சர்வதேச உடன்படிக்கைகளை துணைக்கு எடுத்துக்கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்தது.
இதில் முக்கியமான உடன்படிக்கை Convention to eliminate all forms of Discrimination against Women - CEDAW அதாவது பெண்களுக்கு எதிரான அனைத்து வேற்றுமைப்படுத்தும் நிலைபாடுகளை ஒழிப்பதற்க்கான உடன்படிக்கை.நீதித்துறை சுதந்திரம் என்பது நமது அரசிலமைப்பு சாசனத்தின் இன்றியமையாத பகுதி என்றும் இப்பிரச்னை குறித்து உள்நாட்டு சட்டங்கள் இயற்றப்படாதபோது சர்வதேச உடன்படிக்கைகள் மற்றும் வழிமுறைகள் நம் அரசியல் சாசனத்திற்கு விரோதமாக இல்லையெனில் அவைகளைப் பின்பற்றலாம் என்றும் இத்தீர்ப்பு கூறியது.
இந்த முடிவு சமத்துவம் , சகோதரத்துவம் போன்ற நம்முடைய அரசியல் சாசனத்தின் முக்கிய நோக்கங்களை நடைமுறையில் கொண்டு வர அடிகோலியது. விசாகா தீர்ப்பை பல தீர்ப்புகள் பின்பற்றின.
விசாகா தீர்ப்பில் சில விதிமுறைகள் வலியுறுத்தப்பட்டன அவைகளில் முக்கியமானவை:-
அ - பாலியல் தொல்லையைத் தடுப்பதும் குற்றம் இழைப்பவர்கள் மீது வழக்கு தொடருவதும் பணியிடங்களின் நிர்வாகம் மற்றும் அதிகாரிகளின் கடமை.
ஆ - பாலியல் தொல்லை என்றால் என்னென்ன செயல்கள் என்றும் குறிப்பிட்டது . இந்த செயல்களுக்கு ஸ்பரிசம் ஒரு கட்டாயமாகக் கருதப்படவில்லை. அவை அப்பெண்ணின் விருப்பத்திற்கு மாறான வரவேற்கப்படாத செயல்கள், உதாரணத்திற்கு தொடுதல் அல்லது அதற்கான முயற்சி, அவளை தன்னிச்சைக்கு இணங்க வற்புறுத்தல் அல்லது வேண்டுகோள் விடுத்தல், பாலியல் தொடர்பான விமர்சனங்கள், வக்கிரமான புகைப்படங்களை காண்பித்தல் முதலியன.
இந்தச் செயல்களின் தாக்கத்தை புரிந்துகொள்வது கடினம். அதுதான் தொடக்கூட இல்லையே எதற்கு இத்தனை கூச்சல் என்று கூட கேட்கத் தோன்றும். ஆனால் இவை எல்லாம் பெண்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் கண்ணியத்தை பாதிக்கும். அதைத்தான் இந்த தீர்ப்பும் கூறியது .
இ - பாலியல் தொல்லையை பணியிடங்களில் தடுப்பதற்க்கான வழிமுறைகளை விவரித்தது.
ஈ - வன்முறைக்கு ஆளாக்கப்பட்டவர் அளித்த புகாரின் பேரில் எடுக்கவேண்டிய நடவடிக்கை
உ - ஒழுங்கு நடவடிக்கை
ஊ - முறையீட்டுக்கான விதிகள்
எ - முறையீட்டுக்குழு. இதன் அங்கத்தினர்களாக யார் இருக்கவேண்டும்
ஏ - இது குறித்து விழிப்புணர்வு
இதற்கென அரசு சட்டம் இயற்றும் வரை மேற்படி வழிகாட்டுதல்கள் அனைவரையும் கட்டுப்படுத்தும். இவைகளை செயல்படுத்தவேண்டும் என்றது இந்த தீர்ப்பு.
1997ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் இந்த தீர்ப்பு வெளிவந்தது. இப்பொழுது தான் சட்டமாக வந்திருக்கிறது.ஆமை நிதானம் . போகட்டும் முயல் ஆமை போட்டி கதை போல ஆமை வென்றால் போதும்.
விசாகா தீர்ப்பின் பரிமாணங்கள் நம்மை வியக்கவைக்கும். அதற்கு முன் இந்த பொருள் குறித்து முன்னோடி தீர்ப்புகள் இல்லை.வெற்று பலகையில் முதல் எழுத்து எழுதுவது போல தான். இந்த குற்றத்தை தடுக்கும் சட்டம் எதுவும் இல்லை, ஆகையால் நாங்கள் ஒன்றும் சொல்ல இயலாது என்று உச்சநீதி மன்றம் கூறி இருக்கலாம். ஆனால் சமூகம் எத்தனை சீரழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்பதற்கு பன்வாரி தேவிக்கு நடந்த கொடுமை ஒரு அத்தாட்சி என்று உச்ச நீதி மன்றம் கூறியது.
சர்வ தேச உடன்படிக்கையை நம் நாட்டு சட்டத்தின் அங்கமாக செய்யலாம் என்பதற்கு 1995 இல் பீஜிங் கூட்டத்தில் ஆசியா மற்றும் பசிபிக் நாடுகள் ஏற்ற நீதித்துறையின் சுதந்திரம் என்ற கொள்கைகளை துணைக்கு ஏற்றது . நீதியையும் பெண்ணுரிமையையும் சமத்துவத்தையும் நிலைநாட்டவேண்டும் என்ற வேட்கை இந்த தீர்ப்பின் ஒவ்வொரு வரியிலும் பளிச்சிடும்
அது நாள் வரை பணி புரியும் பெண்கள் புகார் தாக்கல் செய்ய வேண்டும் என்றால் காவல் துறையைத்தான் அணுக வேண்டும்.வேறு வழியில்லை. காவல் நிலையங்களுக்குப் போவதையும், காவல் துறையை அணுகுவதையும் பலர் விரும்புவதில்லை. அதனால், விசாகா தீர்ப்பு பணியிடத்திலேயே ஒரு முறையீட்டுக்குழுவை ஏற்படுத்தவேண்டும் என்று கூறியது. அந்த குழுவில் அங்கத்தினர்களாக பெண்கள் கட்டாயம் இருக்க வேண்டும் என்றும் சொன்னது.
இது புகார் செய்யும் பெண்களுக்கு இன்னும் நம்பிக்கையை கொடுக்கும். நடைமுறையில் பார்த்தால் இந்த வன்முறையை புரிபவர் அந்த பெண்ணை விட வயதானவராக, மேலதிகாரியாக, சமூகத்தில் மதிப்பு பெற்றவராக இருப்பார். நாம் புகார் கொடுத்தோமானால் நம்மை நம்புவார்களா, நம் வேலை போய்விடுமா என்றெல்லாம் பெண்கள் தயங்குவார்கள். அவர்களுடைய முறையீட்டை சமநிலையுடன் சீராக விசாரிப்பார்கள் என்ற நம்பிக்கையை அந்த பணியிட சூழல் ஏற்படுத்த வேண்டும். பணியிடங்கள் இது குறித்து கண்டிப்பாகவும் கவனமாகவும் இருக்கவேண்டும்
அவ்வப்பொழுது பெண்கள் தான் கவனமாக இருக்க வேண்டும் என்ற குரல் கேட்கிறது. கவனம் என்றால் என்ன? பெண்கள் வெளியே செல்லாமல், வேலைக்கு போகாமல் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்பதா? பள்ளிக்கூடத்திற்கோ கல்லூரிக்கோ செல்லும் வழியில் பெண்ணுக்கு இன்னல் வந்தால் படிப்பை நிறுத்தவேண்டும். பணியிடங்களில் அவளுக்கு இன்னல் வந்தால் அவள் ராஜினாமா செய்யவேண்டும் என்பதா? "எப்போது ஒரு பெண் சுதந்திரமாக நள்ளிரவில் தெருவில் நடக்கமுடிகிறதோ அன்றுதான் நம்நாடு சுதந்திர நாடு' என்று அண்ணல் காந்தி சொன்னதை நினைவு படுத்திக் கொள்ளவேண்டும்.
இன்று மிகவும் உயர்ந்த இடங்களில் கூட இந்த பாலியல் தொல்லை நடப்பதாக புகார்கள் வந்துவிட்டன. இதுவே ஒரு பெண்ணை நம் சமூகம் எப்படி பார்க்கிறது என்பதை துல்லியமாக காட்டும் ஒரு அளவுகோல். "நம் நாட்டில்தான் பெண்ணை தெய்வமாக போற்றுகிறோம்' என்று சொல்வது எல்லாம் வெற்றுப் பேச்சு. பெண் என்பவள் சுதந்திரமும் சமத்துவமும் சுயமதிப்பும் உள்ள சக மனுஷி என்று புரிந்து கொண்டால் போதும். அவள் போகப்பொருள் அல்ல என்பதை எல்லோரும் எப்போதும் நினைவில் வைத்துக்கொள்ளவேண்டும். இதற்கு நம் காட்சி ஊடகங்கள் ஒத்துழைக்கவேண்டும். "கலரு', "பிகரு' என்றால் பெண்கள் உயிருள்ள மனிதர்கள் என்பது போய் அவள் அனுபவிக்கவேண்டிய பொருள் என்ற செய்திதான் ஆழ் மனங்களில் பதியும்.
1996 என்று நினைக்கிறேன். ஒரு வாரப்பத்திரிகை சில பெண் வழக்கறிஞர்களை சந்தித்து பேட்டியெடுத்தது. அவர்கள் இது போல தொல்லைகள் பணியிடங்களில் நடப்பது உண்மைதான் என்றார்கள். இது பெண் வழக்கறிஞர்கள் சங்கத்தில் கலவரத்தை ஏற்படுத்தியது. ஏனென்றால் அந்த பத்திரிகையையைப் படித்தால் பெண் வழக்கறிஞர் குடும்பத்தினர் அவர்களை வேலைக்கு செல்ல விடமாட்டார்கள் என்ற அச்சம்தான். இங்குதான் பெண்ணின் அடிப்படை சுதந்திரம் அடிபடுகிறது.
நீதிமன்ற வளாகத்தில் பெண்கள் இந்த தொல்லைக்கு ஆளானால் அவர்கள் சட்டம் பயில வேண்டாம், மருத்துவ மனையில் நடந்தால் பெண்கள் மருத்துவர்களாக வேண்டாம், சக ஆசிரியர் இந்த குற்றம் புரிந்தால் ஆசிரியர் பதவியை பெண் ராஜினாமா செய்து விடலாம்.பத்திரிகையாளராக இருந்தாலோ பெண்கள் நிருபர் வேலைக்கு போகக்கூடாது என்பதா இதற்குத் தீர்வு? இதற்கு சேலை தானே கிழியும் என்று பழமொழி வேறு துணை போகும்.
இங்கு இந்த குற்றத்தை புரிபவர் உயிரற்ற வஸ்துவல்ல. அவர் தெரிந்துதான் அந்த குற்றத்தை புரிகிறார். பாலியல் தொல்லை என்பது அதிகாரத்தை வெளிபடுத்தும் செயல். அது மட்டுமல்ல. நீ ஆணுக்கு சமம் அல்ல, நீ மரியாதைக்கு உரியவள் இல்லை, என்று கூறாமல் கூறுகிறது. இந்த குற்றம் தண்டிக்கப்பட வேண்டியது.
விசாகா தீர்ப்பில் குறிப்பிடப்பட்ட முறையீட்டு குழுக்களே பல பணியிடங்களில் இன்றுவரை அமைக்கப்படவில்லை. இந்த சட்டத்தின் விதிமுறைகளை முழுமையாக பின்பற்ற வேண்டும். புகார் கொடுக்கும் பெண் அச்சமில்லாமல் நடவடிக்கை எடுக்கும் சூழ்நிலை உருவாகவேண்டும். நிர்வாகம் இந்த விஷயத்தில் உறுதியாக இருக்கும், நிர்வாகம் விரைவாக நடவடிக்கை எடுக்கும் குற்றவாளியை தண்டிக்கும் என்று தெரிந்தால் மட்டுமே குற்றங்கள் தடுக்கப்படும்.
எல்லாவற்றிற்கும் மேலாக அந்தப்பெண்ணை குற்றவாளியாகப் பார்க்கக்கூடாது. மறைந்த மதிப்பிற்குரிய நீதிபதி ஜெ எஸ். வர்மா ஏற்றிவைத்த ஒளி விளக்கை நாம் ஊதி அணைத்துவிடக் கூடாது.
கட்டுரையாளர்:
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி (ஓய்வு)