கட்டுரைகள்

காட்சி ஊடகங்கள் கவனம் செலுத்துமா?

தமிழ்நாட்டில் கடந்த 2011ஆம் ஆண்டு 15, 422 பேர் சாலை விபத்துகளில் இறந்துபோயினர். அடுத்த 2012ஆம் ஆண்டு சாலை விபத்துகளில் இறந்தவர்களின் எண்ணிக்கை 16, 172 ஆக அதிகரித்தது.

ஜெயபாஸ்கரன்

தமிழ்நாட்டில் கடந்த 2011ஆம் ஆண்டு 15, 422 பேர் சாலை விபத்துகளில் இறந்துபோயினர். அடுத்த 2012ஆம் ஆண்டு சாலை விபத்துகளில் இறந்தவர்களின் எண்ணிக்கை 16, 172 ஆக அதிகரித்தது. தமிழ்நாட்டில் 3 நிமிடத்திற்கொரு சாலை விபத்து நடக்கிறது. அதன் விளைவாக இரண்டு மணி நேரத்துக்கு 3 பேர் இறக்கின்றனர்.

இந்தியாவில் 48 விழுக்காடு பெண் பிள்ளைகளுக்கு பதின்ம வயதுகளிலேயே திருமணம் நடந்துவிடுவதன் விளைவாக, பேறுகால தாய்சேய் மரணங்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே இருப்பதை இன்னொரு புள்ளி விவரம் முன்வைக்கிறது. அவ்வகையில் நமது தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி, சேலம், தருமபுரி, ஈரோடு போன்ற (மலைப் பகுதி) மாவட்டங்களில் குழந்தைத் திருமணங்களும் அவை தொடர்பான பேறு கால மரணங்களும் சர்வ சாதாரணமாகிவிட்டன. உலக அளவில் ஒவ்வொரு நாளும் சராசரியாக 1,500 பெண்கள் தாய்மைக் கோளாறுகளாலும் சிக்கலான மகப்பேறு காரணங்களாலும் இறக்கின்றனர். உலக அளவில் ஓர் ஆண்டுக்கு ஒரு கோடிப் பெண்கள் பிரசவம் தொடர்பான கடும் பாதிப்புகளுக்கும் இறப்புக்கும் ஆளாகின்றனர். இதில் 30 லட்சம் குழந்தைகள் இறந்தே பிறக்கின்றன. 37 லட்சம் குழந்தைகள் பிறந்த ஒரு மாதத்திற்குள் இறந்துவிடுகின்றன. இது போன்ற இன்னும் ஏராளமான அதிர்ச்சியூட்டக்கூடிய புள்ளி விவரங்களை ஐக்கிய நாடுகள் சபையின் சுகாதாரத்துறை ஆய்வு செய்து வெளியிட்டுள்ளது. விழிப்புணர்ச்சி பெறாதவர்களாகவும், வாழ்வியல் குறித்த அடிப்படை புரிதல் அற்றவர்களாகவும் இருக்கும் பெரும்பான்மை மக்களே இதுபோன்ற கொள்ளை மரணங்களுக்கு எளிதில் இரையாகிவிடுகின்றனர். விபத்து,சுகாதாரமற்ற சூழல், மது, புகை, குழந்தைத் திருமணம் போன்றவை தொடர்பான இறப்பு விகிதங்களில் தமிழ்நாடு முண்டியடித்து முன்னேறிக் கொண்டிருக்கிறது. விபத்து உள்ளிட்ட சிலவகை இறப்புகளில் தொடர்ந்து முதல் நிலை வகிக்கிறது.

பிறந்த குழந்தைக்கு உரிய முறையில் தாய்ப்பால் கொடுக்க வேண்டியதன் அவசியம், எந்தெந்த வேளைகளில் கைகளைச் சோப்புப் போட்டுக் கழுவ வேண்டும், கருவுற்ற பெண்களை எப்படியெப்படியெல்லாம் பாதுகாக்க வேண்டும், திறந்தவெளியில் மலம் கழிப்பதால் உண்டாகும் சுகாதாரக் கேடுகள் எத்தகையவை, குளுக்கோமா உள்ளிட்ட கண் தொடர்பான நோய்கள் வராமல் தடுப்பது எப்படி போன்ற நுற்றுக்கணக்கான அடிப்படை வாழ்வியல் முறைகளை இன்னமும் அறியாதவர்களாக, அல்லது அவற்றையெல்லாம் அறிந்து கொள்வதற்கான வாய்ப்புகள் அற்றவர்களாக நமது நாட்டின் பெரும்பான்மை மக்கள் வாழ்கின்றனர். அவர்களுக்கு மேற்குறிப்பிட்டுள்ளவற்றைப் போன்ற கூறுகளில் விழிப்புணர்வை உண்டாக்கும் பணிகளை நமது மத்திய மாநில அரசுகள் ஆங்காங்கே மேற்கொண்டுவருகின்றன. ஐக்கிய நாடுகள் சபையின் யுனிசெஃப் அமைப்பு இந்தியாவிலும் அத்தகைய விழிப்புணர்வுப் பிரச்சாரப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. அவ்வகையில் அவ்வமைப்பு நமது மத்திய மாநில அரசுகளின் துணையோடு தகவல் ஒலிபரப்புத் துறையின் இசை மற்றும் நாடகப்பிரிவு கலைஞர்களைக் கொண்டு தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி, சேலம், தருமபுரி போன்ற (குடும்பச் சுகாதாரம் மற்றும் சூழல் நல பாதிப்புகள் அதிகம் எனக் கண்டறியப்பட்டுள்ள) மாவட்டங்களின் கிராமப்புறங்களில் விழிப்புணர்வு வீதிநாடகங்களை நடத்திவருகிறது. என்றாலும் கூட இதுபோன்ற பிரசாரங்கள் நல்லதொரு முயற்சி எனும் அளவில் இருக்கிறதே தவிர, தேவைப்படுகிற அளவுக்குப் போதுமானதாக இல்லை. அதற்குக் காரணம், காலங்காலமாக அம்மக்களின் வாழ்க்கை முறைகளோடு இரண்டறக் கலந்து ஒன்றி உறுதிப்பட்டுப் போயிருக்கும் பழக்க வழக்கங்கள்தான்.

பெரும்பான்மை ஏழை எளிய மக்களுக்குத் தேவையான நலத் திட்டங்களை நிறைவேற்றுவதைக் காட்டிலும், அத்திட்டங்களை ஏற்றுக்கொள்வதற்கும் தொடர்ந்து அவர்கள் அவற்றை பயன்படுத்துவதற்குமான பயிற்சிகளும்தான் இன்றைக்கு தேவையானவைகளாக இருக்கின்றன. மக்களுக்குச் சரியாகப் புரியவைக்கப்படாத எந்தவொருத் திட்டமும் தோல்வியடைவது இயல்பே.

பெரும் பொருள் செலவிலான மக்கள் நலத்திட்டங்களை பெரும்பாலும் அரசுகள்தான் செய்ய முடியும். அல்லது அரசுகளின் துணையோடு பொருளாதார வலிமைபெற்ற அமைப்புகள் செய்யமுடியும். ஆனால், அத்திட்டங்களை மக்கள் ஏற்க ஏதுவாக, மக்களின் நெடுங்காலப் பழக்க வழக்கங்களில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய விழிப்புணர்வுப் பிரச்சாரங்களை பொதுப்படையாகவோ, தேவைப்படும் பகுதிகளிலோ யார் வேண்டுமானாலும் செய்யலாம். செய்யவும் வேண்டும். அவ்வகையில் பல பெரு நிறுவனங்கள்கூட சிஎஸ்ஆர் (கார்ப்பரேட் சோஷியல் ரெஸ்பான்சிபிலிடி) எனும் முறையில் தங்களது பகுதிகளில் பொது மக்களுக்குத் தேவையான சில நலத்திட்டங்களைத் தோற்றுவிப்பதுடன் அவற்றைப் பராமரித்தும் வருகின்றன. ஆனால் அவ்வகையில் கூட தேவைப்படுகிற மக்களுக்கான விழிப்புணர்வுப் பிரச்சாரப் பணிகள் அதிகப்படுத்தப்படவில்லை, வேகப்படுத்தப் படவுமில்லை. அதற்குக் காரணம் நமது நாட்டின் காட்சி ஊடகங்கள் இந்தத் திசையில் சிறு அளவிலேனும் கவனம் செலுத்திப் பயணிக்கவில்லை என்பதுதான். 1970களின் பிற்பகுதியில் தொடங்கப்பட்டு 1990 வரையிலும் மக்கள் மத்தியில் பரவலாகச் சென்றடைந்த தூர்தர்ஷன் என்றழைக்கப்படுகிற அரசுத் தொலைக்காட்சி விவசாய நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு வகையான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் கண்தானம் உள்ளிட்ட விழிப்புணர்வு விளம்பரங்களையும் மக்களுக்கு அதிக அளவில் வழங்கியது. அதற்குப் பிறகு 1990களில் செயற்கைக்கோள் தொலைக்காட்சிகள் தோன்றி களைகட்டத் தொடங்கின. காலப்போக்கில் வரிசை வரிசையாகத் தோன்றிக்கொண்டே இருக்கும் செயற்கைக்கோள் தொலைக்காட்சிகள் அனைத்தும் இப்போது மெகாத் தொடர்களில் அமிழ்கின்றன, திரைப்படங்களில் மூழ்குகின்றன. இன்றளவும் திரையுலகின் நீட்சியாகி அவ்வகைகளிலேயே தங்கள் ஊடகப் பயணத்தைத் தொடர்கின்றன.

மக்களோடு நேரடியாகச் சம்பந்தப்படாத வணிக. தொழில் நிறுவனங்கள்கூட தங்களது சமூகப் பொறுப்பாக சமூக நலச் செயல்பாடுகளை திட்டமாகவே முன்வைத்துச் செயல்படும்போது, மக்களோடு புழங்குகிற, மக்களை வசப்படுத்தி மடக்கி வைத்திருக்கிற, மக்களின் பார்வையால் டி.ஆர்.பி. பெறுகிற நமது காட்சி ஊடகங்கள் மக்களின் விழிப்புணர்வுக்கான தங்களது பொறுப்பை உணராமல் இருப்பது காட்சி ஊடக அறத்திற்கு நேர்ந்திருக்கும் மிகப்பெரியதொரு பின்னடைவுதான். ஒரு நாளைக்கு நூற்றுக்கணக்கான விளம்பரங்களை வெளியிடுகிற நமது காட்சி ஊடகங்கள் அவ்விளம்பரங்களுக்கிடையில் தங்களுடைய சமூகக் கடமையாக, ஊடக அறமாக எந்தவொரு விழிப்புணர்வு விளம்பரத்தையும் வெளியிடுவதில்லை. விழிப்புணர்வு விளம்பரங்களை காட்சி ஊடகங்கள் காட்சிப்படுத்தியேகூட வெளியிடலாம். ஆனால் எழுத்துவடிவில்கூட அவை வெளியிடப்படுவதில்லை என்பதுதான் வேதனையான ஓர் உண்மையாக இருக்கிறது. இன்றைய நிலையில் நமது தமிழ் மக்களின் வீடுகளில், அவர்களின் அன்றாட வாழ்க்கையில் இரண்டறக் கலந்திருக்கும் காட்சி ஊடகங்கள் ஒரு விழுக்காடு அளவுக்குக் கூட அம்மக்களின் வாழ்வியல் விழிப்புணர்வு குறித்த நடவடிக்கைகளுக்கு வித்திடுவது கிடையாது. முதன்மைத் தொலைக்காட்சிகளும் அவற்றின் வழி தோன்றிய கிளைகளுமாக சற்றேறக்குறைய 50 தொலைக்காட்சிகள் தமிழ்நாட்டில் தங்களது ஒளிபரப்புச் சேவைகளை வழங்கிவருகின்றன. இந்த 50 காட்சி ஊடக நிறுவனங்களும் ஒரு நாளைக்குப் பத்தே பத்து விழிப்புணர்வு விளம்பரங்கள் எனும் கணக்கில், அதிகபட்சம் ஐந்து நிமிடம் நேரம் ஒதுக்கி, அவ்விளம்பரங்களை ஒளிபரப்பும் வழக்கத்தைக் கொண்டவைகளாக இருந்திருக்குமேயானால், அதன் விளைவுகள் சமூகத்தின் ஏழை எளிய மக்களின் சுகாதார நலவாழ்வுக்குப் பெரிதும் உறுதுணையாக இருந்திருக்கும். தனி மனிதர்களாக இருக்கும் ஆட்டோக்காரர்கள்கூட தங்களது ஆட்டோவில் "பெண்ணின் திருமண வயது 21' "கண்தானம் செய்யுங்கள்' என்பன போன்ற சமூக நல விழிப்புணர்வு விளம்பரங்களை எழுதிக் கொண்டு உலா வருகிறார்கள். சில ஆட்டோக்காரர்கள் இன்னும் ஒருபடி மேலே சென்று "பிரசவத்திற்கு இலவசம்' என்கிற நிலைப்பாட்டை வெகுகாலத்திற்கு முன்பே எடுத்துவிட்டனர்.

இந்நிலையில் சமூகவியலாளர்கள் காட்சி ஊடகங்களிடம் இத்தகையதொரு பணியை ஏன் எதிர்பார்க்கிறார்கள் என்றால், அதன் "சென்று சேரும் வலிமை' அத்தகையது என்பதால்தான். ஒவ்வொரு நாளைக்கும் மணிக்கணக்கில் புதிய புதிய நிகழ்ச்சிகளைத் தயாரித்து ஒளிபரப்பும் வல்லமை கொண்ட நமது காட்சி ஊடகங்களுக்கு இது இயலாத காரியமல்ல. மீண்டும் மீண்டும் திரைப்பாடல்களையும். திரைக்காட்சிகளையும் பார்த்துக் கொண்டிருக்கிற - அவ்வளவு ஏன்? தங்களுக்கு முற்றிலும் பொருந்தாத விளம்பரங்களையும்கூட ஆண்டுக்கணக்கில் மீண்டும் மீண்டும் பார்த்துக் கொண்டிருக்கிற மக்கள் - இத்தகைய விளம்பரங்களையும் பார்க்கவே செய்வார்கள். காட்சி ஊடகங்கள் தங்களது சமூகக் கடமையாக இப்படிச் செய்ய முன்வராமற்போனதன் விளைவாகவே நமது நாட்டின் மக்கள் நலவாழ்விற்கான விழிப்புணர்வுப் பிரச்சாரத் திட்டங்களில் அரசுகளுக்கும், சேவை நிறுவனங்களுக்கும் அத்தகையப் பணி பெருங் கடினமாக மாறியிருக்கிறது. பண்படுத்தப்படாத மக்கள் திரளில் விழிப்புணர்வு மட்டும் விதைத்தால் முளைத்து வளருமா என்ன? சொல்லக் கேட்டுத் தெளிவதைவிடவும், படித்தறிந்து தெளிவதைவிடவும் ஏக காலத்தில் காட்சிகளாகக் கண்டும் கேட்டும் தெளிவடைய ஏதுவான கல்வியறிவற்ற வாழ்நிலையில்தான் நமது நாட்டின் பெரும்பான்மைப் பொதுமக்கள் உள்ளனர், எனவேதான் அவர்களுக்கான விழிப்புணர்வுப் பிரச்சாரப் பணியை காட்சி ஊடகங்கள் கையிலெடுக்க வேண்டும் என்று சமூகவியலாளர்கள் கருதுகின்றனர்,

தனிமனிதச் சிக்கல்கள் தொடர்பான வணிக விளம்பரங்கள் எல்லாருக்குமானவைகளாக அடிக்கடிப் பொதுமைப்படுத்தப்படுவதும், எல்லோருக்கும் தேவையான விழிப்புணர்வு விளம்பரங்கள் தனிமைப்படுத்தப்படுவதும் நமது காட்சி ஊடகங்களின் நடைமுறையாக இருக்கிறது. சான்றாக, லட்சத்தில் ஒருவருக்கு இருக்கும் வெண்புள்ளி, ஆண்மைக் குறைபாடு போன்றவை பற்றிய விளம்பரங்கள் அனைவருக்கும் உரியவைகளாக பொதுமைப்படுத்தப்படுகின்றன.

அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய கழிப்பறைப் பயன்பாடு போன்ற விளம்பரங்கள் அரசு மற்றும் தொண்டு நிறுவனங்களின் வேலையாகத் தனிமைப்படுத்தப்படுகின்றன. மக்களிடையே மண்டியிருக்கும் பல்வேறு வகையான அறியாமைகளையும் கவனக்குறைவுகளையும் ஒவ்வொருவர் வீட்டுக்குள்ளும் நுழைந்து களைவதற்கு ஏதுவான கைகளாகவே காட்சி ஊடகங்களின் கைகள் அமைந்துள்ளன. அத்தகைய கைகள் நமது மண்ணில் ஏராளமான எண்ணிக்கையில் பெருகியும் உள்ளன. அந்தத் திசையிலும் காட்சி ஊடகங்கள் பயணிக்குமேயானால் அது கோடிக்கணக்கான மக்களின் நல்வாழ்விற்குக் கைகொடுப்பதாகவே அமையும்.

கட்டுரையாளர்: எழுத்தாளர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆப்கன் எல்லையில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! 15-க்கும் மேற்பட்டோர் பலி!!

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT