கட்டுரைகள்

ஆஸ்"காரை' எங்கே நிறுத்துவது

நடிகர் கவுண்டமணி ஒரு திரைப்படத்தில் சினிமா "ஸ்டாராகவே' நடித்திருப்பார். அதில் அவரது அடிப்பொடிகளில் ஒருவர், ""அண்ணே...! நீங்க ஆஸ்கார் வாங்கியே தீர வேண்டும்'' என்று வலியுறுத்த, அதற்கு

சு. வெங்கடேஸ்வரன்

நடிகர் கவுண்டமணி ஒரு திரைப்படத்தில் சினிமா "ஸ்டாராகவே' நடித்திருப்பார். அதில் அவரது அடிப்பொடிகளில் ஒருவர், ""அண்ணே...! நீங்க ஆஸ்கார் வாங்கியே தீர வேண்டும்'' என்று வலியுறுத்த, அதற்கு மறுமொழி கூறும் கவுண்டமணி, ""டேய் நம்ம கிட்ட ஏற்கெனவே நிறைய கார் இருக்கு... இதுல இந்த ஆஸ்காரை வாங்கி எங்கடா நிறுத்துறது'' என்று கேட்பார்.

  மேற்கத்திய நாட்டவருக்காக, அவர்களால் ஏற்றுக் கொள்ளப்படும் படங்களுக்குத்தான் ஆஸ்கர் விருதில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது என்பது கண்கூடான உண்மை. எனவே அந்த விருதைப் பெறுவதில் அவர்கள் பெருமைப்பட்டுக் கொள்ள வேண்டியதுதான்.

 "இந்த ஆண்டு இந்தியர் யாருக்காவது அந்த விருதைப் பெறும் பாக்கியம் கிடைக்காதா?' என்று எண்ணி இந்தியாவே எதிர்பார்ப்பதாக ஆண்டுதோறும் ஒரு தோற்றம் உருவாக்கப்படுகிறது. மேற்கத்திய நாகரிகமும், ஹாலிவுட் மோகமும் அன்று முதல் இன்றுவரை நம்மில் பலரை ஆட்டுவிப்பதுதான் இதற்குக் காரணம்.

 எப்போதாவது தப்பித் தவறி அவர்களின் பார்வை கிழக்கத்திய நாடுகளின் திரைப்படங்கள் மீதும் படும். எனினும் இந்தியத் திரைப்படங்களுக்கு எந்த விருதும் கிடைத்ததில்லை.

 ஹாலிவுட்காரர்கள் எடுத்த படத்தில் சிறந்த பங்களிப்பு ஆற்றியதற்காக மட்டுமே இந்தியாவைச் சேர்ந்த பானு அத்தையா (ஆடை வடிவமைப்பாளர், படம் - காந்தி, 1982), ஏ.ஆர். ரஹ்மான், ரசூல் பூக்குட்டி, குல்சார் (ஸ்லம்டாக் மில்லினர், 2009) ஆகியோருக்கு விருது கிடைத்துள்ளது. அதுவே நம்மவர்களுக்கு உலகை வென்றுவிட்ட சந்தோஷம். நமது கலைஞர்களுக்கு அமெரிக்காவின் அங்கீகாரம் கிடைப்பது என்றால் சும்மாவா?

 திரைப்படத் துறையில் சர்வதேச அளவில் மிக உயரியதாக வர்ணிக்கப்படும் அந்த ஆஸ்கர் விருது சமீபத்தில் வழங்கப்பட்டது. ஆண்டுதோறும் விருதுகளுக்காக பெயர் அறிவிக்கப்படும்போது, அந்த நடிகர்களும், நடிகைகளும் உணர்வுகளை வெளிப்படுத்தும்  விதமும், கண்ணீர் மல்க கட்டியணைத்துக் கொள்வதும், ஆகா... திரையில் மட்டுமல்ல... நிஜத்திலும் நன்றாக நடிக்கும் இவர்கள் இந்த விருதுக்கு பொருத்தமானவர்கள்தான் என்ற எண்ணம் எழுவதால், நமக்கும் கொஞ்சம் சிலிர்ப்பு ஏற்படத்தான் செய்கிறது.

  இப்போது 85-வது ஆண்டாக ஆஸ்கர் விருது வழங்கப்பட்டுள்ளதாம். இதில் ""லைப் ஆஃப் பை'' என்ற திரைப்படத்தின் இயக்குநருக்கு, "சிறந்த இயக்குநருக்கான' ஆஸ்கர் விருது கிடைத்தது. இத்திரைப்படத்தில் இந்திய முகங்கள் சில தென்பட்டன. இந்தியாவை கதைக்களமாகக் கொண்டு, புதுச்சேரியிலும், மூணாறிலும் படப்பிடிப்பு நடத்தப்பட்ட ஒரு திரைப்படத்துக்கு விருது வழங்கப்பட்டுவிட்டது என்பதே நம்மவர்களுக்கு ஏகத்துக்கு  பெருமையை அளித்துவிட்டது. பத்திரிகைகள் பக்கம் பக்கமாகச் செய்தி வெளியிட்டும், தொலைக்காட்சிகள் சிறப்புச் செய்திகளை வழங்கியும் அந்தப் பெருமையில் பூரித்தன.

 சிறந்த வேற்றுமொழி (ஆங்கிலம் அல்லாத) படத்துக்கான விருதுக்காக இந்தியாவில் ஆண்டுதோறும் ஒரு படம் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டு வருகிறது. "எதுவும் நடக்காது, எளிதில் கிடைக்காது' என்று தெரிந்த பின்னும் ஆஸ்கர் எனும் மேற்கத்திய எஃகு கோட்டையின் கதவுகளை இந்தியா பலமுறை தட்டியதும், முட்டி மோதி மண்டையை உடைத்துக் கொண்டதும்தான் மிச்சம்.

 சிறந்த வேற்றுமொழி படத்துக்கான ஆஸ்கர் விருதுக்காக தமிழில் இருந்து அஞ்சலி, நாயகன், தேவர் மகன், குருதிப்புனல், இந்தியன், ஹே ராம், ஜீன்ஸ் உள்ளிட்ட படங்களும் ஹிந்தி, வங்காளி, மலையாளம், உருது உள்ளிட்ட மொழிகளில் வேறு பல இந்தியத் திரைப்படங்களும் ஆண்டுக்கு ஒன்றாக அனுப்பி வைக்கப்பட்டன. இதில் மதர் இந்தியா, சலாம் பாம்பே, லகான் ஆகிய 3 படங்கள் மட்டும் "விருதுக்கான பரிந்துரைக்கு ஏற்பு' என்ற நிலையை எட்டின. இதுவே அவர்கள் நமது படங்களுக்கு அளித்த மரியாதை.

 இந்த ஒரு படத்தைத் தேர்வு செய்வதற்காக இந்திய திரைப்படக் கூட்டமைப்பு ஒரு குழுவையே அமைத்துள்ளது.

 இதில் "ஆங்கிலத்தில் "சப்-டைட்டில்' போட வேண்டும், கலிஃபோர்னியா மாகாணத்தின் கடிகாரத்துக்கும், காலண்டருக்கும் உள்பட்டு படத்தை எடுத்திருக்க வேண்டும்' என்பது உள்ளிட்ட ஆயிரம் விதிகளும் உண்டு.

 வாழ்நாள் சாதனையாளருக்கான ஆஸ்கர் விருது சத்யஜித் ராய்க்கு 1991-ஆம் ஆண்டு அளிக்கப்பட்டது. அதன் மூலம் அந்த விருதுக்கு பெருமையே தவிர, சத்யஜித் ராய்க்கு அல்ல.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முன்னேர் வழியில் பொன்னேர் பூட்டிய கம்பர்

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 'ஹவாலா பணத்தை' கைப்பற்றுவோம்: இபிஎஸ் சபதம்

எப்படி நிகழ்ந்தது அது?

குடும்பக் கட்டுப்பாடு குறித்த முதல் கவிதை

அறிவுடையோர்: துறவுநெறியில் மனம் செலுத்துவர்

SCROLL FOR NEXT