தழுநோய் ஏற்பட்டால் ஆரம்பத்தில் எந்த பாதிப்பும் தெரிவதில்லை. இந்நோயின் முக்கிய ஆரம்ப அறிகுறி "உணர்ச்சி இல்லாத' தேமல்தான். தேமல் என்ற தோல் நோயை அலட்சியப்படுத்தாமல் உடனடியாக அதைப் பரிசோதிப்பது நல்லது. தேமல் இருக்கும் இடத்தில் தொடு உணர்வு இல்லாமை, வியர்வைச் சுரப்பிகள் இல்லாமல் வறண்டு காணப்படுதல், மயிர்க்கால்கள் (சிறு முடிகள்) உதிர்தல் ஆகிய அறிகுறிகளுடன் தேமல் சிவந்து அல்லது வெளிர்ந்து காணப்படும்.
தோலில் இருக்கும் கிருமி நாளடைவில் பெருகி, நரம்புகளுக்குச் செல்லும்போதுதான் நோயின் தீவிரம் அதிகரிக்கிறது. இந்த நிலையில்தான் பாதிக்கப்பட்டவரது இயல்பான இயக்கங்கள் பாதிக்கப்பட்டு, ஊனம் மெல்ல தலைகாட்டுகிறது. கை, கால்களில் உணர்வு குறைந்து, அதன் இயக்கங்கள் முடக்கப்பட்டு, துவண்டு, இறுகி நிரந்தர உடல் ஊனம் என்ற தீவிர நிலைக்கு நோயாளித் தள்ளப்படுகிறார். இந் நோய் குறித்த அடிப்படை உண்மைகளை அறியாததாலேயே இந்த நிலை ஏற்படுகிறது.
பாலியல் உறவால் தொழுநோய் ஏற்படும் என்கிற தவறான கண்ணோட்டம் நிலவுகிறது. (உபயம் - "இரத்தக் கண்ணீர்' திரைப்படம்!). முறையற்ற பாலியல் உறவால் பால்வினை நோய்களும் எய்ட்ஸ் நோயும்தான் ஏற்படும்.
"மைக்கோ பாக்டீரியம் லெப்ரே' என்னும் கிருமித் தொற்றாலே இந் நோய் ஏற்படுகிறது. இது காற்றின் மூலம் பரவும் என்பதால், மனித உடலில் சுவாசத்தின் மூலம் மூக்கினுள் நுழைந்து, தங்கி, அங்கிருந்து உடலின் எல்லாப் பகுதிகளிலும் உள்ள தோல் பகுதிகளிலும் நரம்புகளிலும் பரவுகிறது. இக் கிருமியை டாக்டர் ஹேன்சன் 1873-இல் அடையாளம் கண்டார். எனவே தொழுநோய்க்கு "ஹேன்சன் நோய்' என்றொரு பெயரும் உண்டு.
தொழுநோய்க்கான சிகிச்சை பெறாத - அதிகக் கிருமியுள்ள - நோயாளி தும்மும்போதும், இருமும்போதும், காறித் துப்பும்போதும் வெளிப்படும் கிருமிகளாலேயே இந் நோய் பரவுகிறது. தொழுநோய்க் கிருமிகள் தாக்கியதற்கும், நோயின் அறிகுறிகள் தெரிவதற்கும் சுமார் 3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரையிலும் கூட ஆகும். இதனை "அடைவுக்காலம்' (இன்குபேஷன் பீரியட்) என்பர். இது மற்ற தொற்று நோய்களைப் போல எல்லோருக்கும் வருவதில்லை. உடலில் அதிக தடுப்புசக்தி உள்ளவர்களைப் பொதுவாக பாதிப்பதில்லை. தடுப்புசக்தி குறைவாக இருப்பவர்களுக்கே இந் நோய் வருகிறது. தடுப்பு சக்திக்கேற்ப, நோயின் வீரியமும் வித்தியாசப்படுகிறது.
3 அறிகுறிகளில் 2 உறுதிப்பட்டால் தொழுநோய் ஏற்பட்டுவிட்டதைத் தெரிந்துகொள்ளலாம். அந்த 3 அறிகுறிகள், 1. உணர்ச்சியற்ற தேமல், 2. நரம்புகள் தடித்தல், 3. தோல் பரிசோதனையில் "மைக்கோ பாக்டீரியம் லெப்ரே' கிருமிகள் காணப்படுதல்.
தோல் உணர்ச்சியின்மையைக் கண்டுபிடிக்க இறகு, பஞ்சு, நைலான் கயிறு ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றால் தேமல் உள்ள இடத்தில் தொடுவதன் மூலம் அறியலாம். வலி உணர்ச்சியை குண்டூசி, பால்பாயிண்ட் பேனா ஆகியவற்றால் தொடுவதன் மூலம் அறியலாம். பாதிக்கப்பட்ட பகுதி, பாதிக்கப்படாத பகுதி ஆகியவற்றில் தொட்டு, அப்போது ஏற்படுகின்ற தொடு உணர்வு, வலி உணர்வு மாறுதல்களை வைத்து - தோல் உணர்ச்சியின்மையை - உறுதிப்படுத்தலாம்.
நோய்க்கிருமிகளின் பாதிப்பு அதிகரிக்கும் நிலையில் நோயாளிக்கு உணர்ச்சியற்ற, வெளிர்ந்த அல்லது சிவந்த தேமலுடன் கை, கால்களில் மதமதப்பு அல்லது ஊசி குத்துவது போன்ற உணர்வு இருக்கலாம். தோல் தடித்தும், எண்ணெய் பூசியது போன்றும் தோற்றமளிக்கலாம். உடலிலே ஏதாவது ஒரு பகுதியில் வியர்வை இல்லாமல் இருக்கலாம்.
அதே சமயம் மற்ற பகுதிகளில் அதிகமாக வியர்க்கலாம். காது மடல்கள் தடித்தும், புருவ முடி உதிர்ந்தும் காணப்படலாம். பாதங்களில் சாம்பல் பூசியதுபோலக் காணப்படும்; பாதங்களில் பெரிய வெடிப்புகள் ஏற்படும். உள்ளங்கை சதை மேடுகள் சூம்பியிருக்கும். கை - கால் விரல்கள் மடங்கும், குறையும், திரும்பியிருக்கும். கண்ணிமை மூட முடியாமலிருக்கும். முகத்தின் பாதி பாகம் செயலிழக்கும். மணிக்கட்டு தொங்கிவிடும். கணுக்கால் செயலிழக்கும். ஆறாத, உணர்ச்சியற்ற, நீண்ட நாளைய புண்கள் ஏற்படும்.
இவை அனைத்தும் ஒருவருக்கே ஏற்பட வேண்டும் என்பதில்லை. இவற்றில் எது வேண்டுமானாலும் பாதிப்பாக வெளிப்படலாம். தொழுநோய் பரம்பரை நோய் அல்ல, தோலிலே கிருமி உள்ள நிலையில் சிகிச்சை எடுத்துக் கொண்டால் நோய் விரைவிலும், முற்றாகக் குணமாகிவிடும். நோய் முற்றிய நிலையில் சிகிச்சைக்கு வந்தால் ஊனங்களைத் தவிர்ப்பது சிரமமாகிவிடும். ஆயினும் இப்போது "இயன்முறை மருத்துவம்' (பிசியோ தெராபி), சிறப்பு அறுவைச் சிகிச்சைகள் மூலம் ஊனங்களை ஓரளவு சரிசெய்ய முடிகிறது.
மிகவும் பாதிக்கப்பட்ட தொழுநோயாளி கை, கால்கள் குறைந்து, புண்கள் அதிகமாகி, மிகவும் விகாரமானத் தோற்றத்துடன் காணப்படுவார். இதற்கு நோய் காரணமல்ல. நோயாளியின் அலட்சியம் அல்லது அறியாமையே காரணம். நோயின் காரணமாக கை, கால்களில் உணர்ச்சி மட்டுமே குறைகிறது. இயக்கங்களும் பாதிக்கப்படுகின்றன. இந்த நிலையில் கை, கால்கள் குறைவதில்லை. உணர்ச்சியில்லாத - இயக்கங்கள் பாதிக்கப்பட்ட கை, கால்களைக் கொண்டு பிற பொருட்களோடு மோதுவதாலோ, அளவுக்கு அதிகமாக அழுத்தம் கொடுப்பதாலோ அந்த இடங்களில் அடிபட்டு புண் ஏற்படுகிறது. புண் ஏற்படுவது உணர்ச்சியற்ற இடமாக இருப்பதால் நாளடைவில் புண் பெரிதாகி, ஒரு கட்டத்தில் அழுகி கை, கால் விரல்கள் உதிர்ந்துவிடுகின்றன.
1940-களில் தொழுநோய்க்கான ஒரே மருந்தாக, "டாப்சோன்' மாத்திரை மட்டுமே தரப்பட்டது. இதில் நோய் கட்டுப்பட்டாலும் முற்றிலும் குணமாகவில்லை. இந்த மாத்திரைகளைப் பல ஆண்டுகள் சாப்பிட வேண்டியிருந்தது. சிலருக்கு வாழ்நாள் முழுவதும் சாப்பிட நேர்ந்தது. 1960-ஆம் ஆண்டு வாக்கில் இந்த மாத்திரைக்கும் கிருமிகளிடையே எதிர்ப்புசக்தி பெருகிவிட்டதால் "ரிபாம்பிசின்', "குளோஃபாசமின்' என்ற மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டன. 1981-ஆம் ஆண்டு உலக சுகாதார நிறுவனம் இந்த 3 மாத்திரைகளைக் கொண்டு "முக்கூட்டுச் சிகிச்சை முறையை'ப் பரிந்துரை செய்தது. 6 மாதம் முதல் 2 ஆண்டுகள் வரை சிகிச்சைக்கு ஆனது. இப்போது மேலும் குறைக்கப்பட்டு 6 மாதம் முதல் ஓராண்டுக்குள் நோய் முற்றிலும் குணமாக்கப்படுகிறது.
நோய் அறிகுறிகள் குறித்து அச்சப்படாமல் நேரடியாக அரசு மருத்துவமனைக்கோ, ஆரம்பச் சுகாதார நிலையத்துக்கோ சென்று சிகிச்சை பெறுவது பலன்தரும்.
கட்டுரையாளர்: சிகிச்சை மேற்பார்வையாளர், அரசு மருத்துவமனை, ஒரத்தநாடு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.