முகப்பு
கட்டுரைகள்

முற்போக்கு முழக்கத்தால் கசப்பு மாறாது

திட்டமிட்ட கொலை அல்லவாயினும், கடந்த ஆண்டு டிசம்பர் 16 ஆம் தேதி தில்லியில், மருத்துவக் கல்லூரி மாணவி பாலியல் வன்முறைக்கும், கொடூரமான தாக்குதலுக்கும் உள்ளாகி உயிர் இழந்த நிகழ்வுக்காகக் குற்றவாளிகள் நால்வருக்கு, தில்லி விரைவு நீதிமன்றம் கடந்த செப்டம்பர் பதின்மூன்றாம் தேதி, மரண தண்டனை வழங்கியதன் மூலம், நீதி நிலைநாட்டப்பட்டுவிட்டது.

Updated On : 3 ஜனவரி, 2024 at 6:45 PM
பகிர்:

திட்டமிட்ட கொலை அல்லவாயினும், கடந்த ஆண்டு டிசம்பர் 16 ஆம் தேதி தில்லியில், மருத்துவக் கல்லூரி மாணவி பாலியல் வன்முறைக்கும், கொடூரமான தாக்குதலுக்கும் உள்ளாகி உயிர் இழந்த நிகழ்வுக்காகக் குற்றவாளிகள் நால்வருக்கு, தில்லி விரைவு நீதிமன்றம் கடந்த செப்டம்பர் பதின்மூன்றாம் தேதி, மரண தண்டனை வழங்கியதன் மூலம், நீதி நிலைநாட்டப்பட்டுவிட்டது. ஆனாலும் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் பாதிப்புகள் பற்றிய விவாதங்கள் விறுவிறுப்புக் குறையாமல் தொடர்கின்றன. தொடரத்தான் வேண்டும்.

பாலியல் வன்முறை என்பது உலகில் வேறெங்கும் நடைபெறாத நிகழ்வா? கடந்த 2011-ஆம் ஆண்டில் அமெரிக்காவில் பாலியல் வல்லுறவுகளுக்காகப் பதியப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை 83425 என்கிறது ஒரு புள்ளிவிவரம். அமெரிக்கா போல நான்கு மடங்கு மக்கள்தொகை கொண்ட இந்தியாவில், ஓராண்டில் பதிவான, பதிவாகாத பாலியல் வன்முறை நிகழ்வுகள் மூன்றரை லட்சத்திற்கு மேற்பட்டனவாக இருக்க மாட்டா. ஆனாலும் அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் இல்லாத வகையில் பாலியல் வல்லுறவு என்பது இந்தியாவில் முதன்மையிலும் முதன்மையான - ஆவேசத்திற்குரிய தேசியப் பிரச்னையாவதன் காரணம் என்ன என்கிற சிந்தனையில்தான் பிரச்னைக்கான தீர்வும் அடங்கியிருக்கிறது.

அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் ஒரு பெண் பாலியல் வன்முறைக்கு ஆளாக நேர்ந்தாலும், அவளே விரும்பி ஒருவருடன் உறவு கொண்டிருந்தாலும் அது காரணமாக, அவளைக் காதலிக்கவும், கல்யாணம் செய்து கொள்ளவும் எவரும் தயங்குவதில்லை. காரணம், விரும்பியோ, விரும்பாமலோ பாலியல் உறவாட நேர்ந்துவிட்ட ஒரு பெண் இழக்கக் கூடாததை இழந்தவளாக - கெட்டுப்போனவளாக அங்கே கருதப்படுவதில்லை.

ஆனால், இந்தியாவின் நிலைமை நேர் எதிர். இங்கே பாலியல் பிரச்னைக்கு உள்ளான பெண்ணின் சமூக மதிப்பும், திருமண ஏற்பாடு அல்லது குடும்ப வாழ்வும் பாதிக்கப்படுகிறது என்பதுதான் யதார்த்தம்.

ஆயிரமாயிரம் ஆண்டு வழி மரபாக இந்திய ரத்தத்தில் ஊறி நிலைத்து நிற்கும் இந்தியக் கலாசாரம் என்கிற இந்திய சமூக மனப்பான்மை அப்படி. இங்கேதான் சிக்கல் முடிச்சாகிறது.

மேற்கத்திய நாடுகளில் என்ன நடைபெறுகிறதோ அதுவே முற்போக்கு என்னும் மயக்கத்தாலும், உலகமயம் - தாராளமயம் எனும் விரிவாலும் மேற்கத்தியரின் பழக்க வழக்கங்களை அப்படியே மேற்கொள்கிறோம். அதேசமயம் நமது வழிமரபான சமூக மனப்பான்மையை முற்றாக விட்டுவிட்டோமா என்றால் அதுவுமில்லை.

குடும்பப் பெண்கள் அரைகுறை ஆடையுடன் நடமாடுதல் நல்லதல்ல எனச் சொன்னால், பெண்களை அவமானப்படுத்துவதாகக் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகின்றன. அது பிற்போக்குவாதம், ஆணாதிக்க வெளிப்பாடு, கட்டுப்பட்டித்தனம் என வசைபாடத் தொடங்கி விடுகிறார்கள். உடல் மூடி நடக்கும் பெண்களும்கூடத்தான் பாலியல் வன்முறைக்கு உள்ளாகிறார்கள். எனவே ஆடை குறைப்புப் பற்றிப் பேசுதல் அநாகரிகம் என்கிறார்கள் பெண்ணியவாதிகள். புகைப்பதால் புற்றுநோய் ஏற்படும். எனவே புகைத்தல் நல்லதல்ல எனச் சொல்லும்போது, புகைக்காதவர்களுக்கும் புற்றுநோய் உண்டாகிறது. எனவே புகைத்தலைக் கண்டித்தல் புத்தி கெட்ட தனம் என்பதுபோல இருக்கிறது இந்தவாதம்.

திரைப்படங்களிலும், வலை தளங்களிலும், அதே பான்மையில் நாட்டிலும், தெருவிலும் காணலாகிற காட்சிகளால் பாலியல் வக்கிர உணர்வுக்கு ஆளாகுவேர் தங்களுக்கு எளிமையாகும் சூழலில் தங்களின் வக்கிர உணர்வுக்கு வடிகால் தேடிக்கொள்கிறார்கள். உடலை மூடி நடக்கும் பெண்களும், சின்னஞ்சிறு பிள்ளைகளும் பாலியல் தொல்லைக்கு உள்ளாவதன் உள் வயணம் இதுதான் என்பதைப் பொறுமையாகச் சிந்தித்தால் புரிந்து கொள்ளலாம்.

பதினெட்டு வயது நிரம்பிய - வாக்களிக்கும் உரிமையுடைய பெண்ணுக்குத் தனது விருப்பம் போல் உடையணியும் உரிமை வேண்டாமா என்கிறார்கள். பதினெட்டு வயது நிரம்பி வாக்களிக்கும் உரிமை படைத்த - இருபத்தைந்து வயது நிரம்பி வாக்கு கேட்கும் தகுதியுடைய ஆணாயினும், பெண்ணாயினும் ஆடையின்றித் திரிய அனுமதி எந்த நாட்டிலும் இல்லை.

மனிதர்கள் ஒரு சமூகமாகக் கூடி வாழ்தல் எப்படி? பலவகையான கட்டுப்பாடுகளும், ஒழுங்குமுறைகளுமே மனிதர்களை ஒரு சமூகமாக இணைந்து வாழச் செய்கின்றன. மனித நாகரிகம் என்பது மறைக்க வேண்டியதை மறைப்பதிலிருந்துதான் ஆரம்பமாயிற்று என்பதை மறந்துவிட வேண்டாம்.

பெண்களுக்குப் பாதுகாப்பு வேண்டும் என்கிறார்கள். காவல் துறையினர் ஆண் பெண் நண்பர்கள் செல்லும் இடமெல்லாம் செல்லலாமா? செல்லத்தான் முடியுமா? ஆண் நண்பர்களே மோசம் செய்கிறார்களே அதற்கென்ன பாதுகாப்பு?

ஆண்களுடன் சேர்ந்து ஊர் சுற்றாதே, நேரம் காலம் பாராமல் எல்லா இடங்களுக்கும் செல்லாதே, ஆண்களிடம் அளவோடு பழகு என எச்சரிக்கும் பெற்றோர்களைப் பார்த்து, உங்கள் பிள்ளை மீது உங்களுக்கு நம்பிக்கை வேண்டாமா என்கிறார்கள். பெற்றோரின் நம்பிக்கையே போதுமென்றால், காவலர் பாதுகாப்பும் கடுமையான சட்டங்களும் எதற்கு? பாதுகாப்பு ஏற்பாடுகள் தேவையில்லை என்பதல்ல நமது வாதம். அது போதுமானதல்ல, இயலாததும்கூட என்பதே நமது வாதம்.

நாங்கள் எப்படியும் உடுத்துவோம், எந்த நேரத்திலும் எந்த இடத்திற்கும் செல்வோம். ஆனாலும் எங்களுக்குப் பாதிப்பு ஏற்படக் கூடாது என்றால் அப்படியொரு பாதுகாப்பை எந்த நாட்டு அரசாங்கமும் கொடுப்பது நடைமுறைச் சாத்தியமல்ல. கள்வன் பெரியவனா? காப்பான் பெரியவனா?

ஆண்கள் அப்படித்தான் நடந்து கொள்வார்கள். பெண்கள்தாம் கட்டுப்பாடு காக்க வேண்டும் என்று யாருமே கூறவில்லை. பெண்களும் கட்டுப்பாடு கடைப்பிடிக்க வேண்டும் என்றுதான் கூறுகிறோம்.

பாதிக்கப்படும் நிலையிலுள்ள பெண்களுக்கே கட்டுப்பாடு விதித்தல் நியாயமா? வரம்பு மீறும் ஆண்களுக்கல்லவா கட்டுப்பாடு வேண்டும் என்கிறார்கள். நோயில்லாத - நோய்க்கு வாய்ப்பில்லாத நபரைவிடவும், நோய் வாய்ப்படுபவர்க்குத்தான் கட்டுப்பாடு அவசியமாகிறது. ஏற்கெனவே நோய் வாய்ப்பட்டிருப்பவரிடம் அதைச் சாப்பிடாதே - இதைப் பயன்படுத்தாதே எனக் கட்டுப்பாடு விதித்தல் இரக்கமற்ற கொடுமை என்பாருண்டா?

பாலியல் வன்முறையைக் கடுங்குற்றமாகக் கருதி மரண தண்டனையளிக்க வேண்டும் என்கிறார்கள். இந்தியாவுக்கெனத் தனிக் கலாச்சாரத்தை ஒப்புக் கொள்ளாதவர்கள், பாலியல் குற்றத்திற்கு மட்டும், மேற்கத்திய நாடுகளில் இல்லாத மரண தண்டனை என்கிற தனி நியாயம் பேசுதல் என்ன நேர்மை? உயிரிழப்போ, உடல்நலப் பாதிப்போ இல்லாத பாலியல் தொல்லைகளுக்கும் மரண தண்டனை என்னுமளவுக்கு பாலியல் வன்முறை கடுங்குற்றமாதல் எப்படி?

கலப்பட வணிகம், லஞ்ச ஊழல் என்னும் முறையில் பல பேரின் சாவுக்குக் காரணமாகிற குற்றங்கள் ஒருபுறமிருக்க, பாலியல் எனக் கொண்டாலும் காதலித்துக் கர்ப்பமாக்கிக் கைவிடுதலும், காதலித்துக் கலியாணம் செய்து, குழந்தைகளும் பெற்ற பின்னர் அவளைக் கைவிட்டு மற்றொருத்தியுடன், மற்றவன் மனைவியுடன் வாழ்தலும், மணமானவன் எனத் தெரிந்தும் அவனைக் காதலித்து, இரகசியத் திருமணம் செய்து, முறைப்படி மணந்தவளைக் குழந்தைகளுடன் தவிக்க விடுதலும், கணவனையும் அவனுக்குப் பிறந்த குழந்தைகளையும் விட்டு, இன்னொருத்தியின் கணவனுடன் குடும்பம் நடத்துதலும், கணவன் மனைவியின் முறை பிறழ்வும் சாதாரணக் குற்றங்களா?

பள்ளிப் பிள்ளைகளுக்கும் பாலியல் கல்வி அளித்தால் மலைபோல் வரும் பாலியல் குற்றங்கள் பனிபோல் மறைந்து விடும் என்கிறார்கள். பாலியல் கல்வி குறித்து அந்தக் காலத்திலேயே பெர்ட்ரண்ட் ரசல் முதலான அறிஞர் பெருமக்கள் வலியுறுத்தியது உண்மைதான். ஆனால், இங்கிலாந்து உட்பட எந்தெந்த நாடுகளில் பாலியல் கல்வி காரணமாகப் பாலியல் குற்றங்கள் எந்தெந்த அளவு குறைந்திருக்கின்றன என்பதற்கான அதிகாரபூர்வமான புள்ளிவிவரம் ஏதும் தராமலே, பாலியல் கல்வியைப் பரிந்துரைத்தல் முறையல்ல.

பாலியல் குற்றங்கள் வளர்வதற்கான காரணிகளைப் பட்டியலிட்டு அவைகளைத் தடுக்கவும் குறைக்கவுமான நடவடிக்கைகளே பயன்தரும்.

முதலாவது, பெற்றோர்கள் பிள்ளைகளைக் கண்காணித்துக் கட்டுப்படுத்தாது சுதந்திரமாக விட வேண்டும் எனவும், பெண்கள் எப்படியும் உடை உடுத்தலாம், அது அவர்களின் விருப்புரிமை எனவும், வயதுப் பெண்கள் ஆண்களுடன் எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் சுற்றலாம். பொது இடங்களிலும் அரங்குகளிலும் ஆடிப்பாடிக் குடித்துக் கும்மாளம் போடலாம் எனவும், மணமாகாமலே பாலியல் உறவாடலாம், பிள்ளைகளைப் பெறலாம், ஒருவருடன் உறவாடி வேறொருவரை மணக்கலாம். ஆண்களுக்கும் பெண்களுக்கும் பாலியல் சுதந்திரம் வேண்டும் எனவுமாக முற்போக்கு என்னும் பெயரில் செய்யப்படும் பிரச்சாரங் களை நிறுத்த வேண்டும்.

பெற்றோரின் கண்காணிப்புக்கும் கட்டுப்பாட்டிற்கும் உட்பட்டு வளர்பவன் எவனும் பாலியல் வன்முறையில் ஈடுபட மாட்டான். அத்தகையோர் எண்ணிக்கை விரல் விட்டு எண்ணுமளவாகவே இருக்கும். பெண்கள் அப்படித்தான் இருப்பார்கள். அது அவர்களின் பிறப்புரிமை. ஆண்கள் கண்டுகொள்ளக் கூடாது என்னும் வாதம், எங்கள் வீட்டுப்பசுமாடு ஒரு மாதிரி, உங்கள் வீட்டுக் காளையைக் கட்டிப் போடுங்கள் என்பதன்றி வேறல்ல. உணர்வோடும் வழியோடாது சுயக்கட்டுப்பாட்டுடன் நெறிப்பட வாழ்தலே மனிதன் என்பதன் அடையாளமாவது. அன்றேல், மனிதன் விலங்கிலிருந்து வேறாக மாட்டான். பாலியல் சுதந்திரம் என்பது நெறிப்பட வாழ்தலை மறுதலிப்பது. அதன் ஒரு கூறுதான் பாலியல் வன்முறையும்.

இரண்டாவது, பிள்ளைகளைப் பெற்று வளர்க்கும் நிலையில் உள்ளவர்கள், தங்களின் பிள்ளைகளைப் பெரிய படிப்பாளியாக்க வேண்டும் என்னும் அக்கறையில் பாதியளவாவது, பிள்ளைகளை நல்லவர்களாக்க வேண்டும் என்பதிலும் காட்ட வேண்டும்.

மற்றவர்களுக்குச் சங்கடமோ, நட்டமோ ஏற்படாதபடி நடந்து கொள்ளும் மனப்பான்மையைக் குழந்தைப் பருவத்திலிருந்தே பழக்கப்படுத்த வேண்டும்.

பெரிய படிப்பு படித்து, பெரிய உத்தியோகம் பார்த்து, லட்சம் லட்சமாகச் சம்பாதிப்பது மட்டும் போதாது; நல்லவன் என்னும் பெயரோடும் மதிப்போடும் உறவுகள் சூழ வாழ்தல் முக்கியமானது என்பதைச் சிறு வயது முதலே திரும்பத் திரும்பச் சொல்லி மனத்தில் ஆழமாகப் பதியச் செய்ய வேண்டும். புகைத்தல், குடித்தல் முதலான பழக்கங்களுக்கு ஆளாகாதவாறு கண்ணுங் கருத்துமாகக் கண்காணித்துக் கட்டுப்படுத்த வேண்டும்.

மேற்கத்தியரின் பழக்க வழக்கங்களை அப்படியே பின்பற்றுதல் நல்லதல்ல என்பதை உளங்கொளச் செய்ய வேண்டும். பிள்ளைகளின் கைபேசி, கணினிப் பயன்பாட்டையும் கண்காணிக்க வேண்டும்.

மூன்றாவது, ஆபாசக் காட்சிகளைக் கொண்ட திரைப்படங்கள், பள்ளிப் பிள்ளைகள் காதலில் ஈடுபடுவதை நியாயப்படுத்தும் திரைப்படங்களுக்கு எதிராகவும், பேருந்துகளில் பாலியல் சார்ந்த பாடல்களின் ஒலிபரப்பு, பத்திரிகைகளில் பெண்களின் கவர்ச்சிப் படங்களை இட்டு நிரப்புதல், அரசின் மது விற்பனை, மதுபானக் கடைகள் என்பவற்றிற்கு எதிராகவும் பெண்கள் ஆவேசத்துடன் போராட வேண்டும்.

÷பாலியலில் பாதிப்பு என்பது ஆணுக்கல்ல பெண்ணுக்கென்பதுதான் இயற்கை நியதியாகிறது. இதைத்தான் நம் முன்னோர்கள் சேலையில் முள் விழுந்தாலும், முள்ளில் சேலை விழுந்தாலும் பாதிப்பு சேலைக்குத்தான் என நயவுரையாக எச்சரித்தார்கள். அந்த இயற்கை நியதியை மாற்ற மாட்டாதவரை பெண்கள் கூடுதல் கட்டுப்பாட்டிற்கு உட்படுதல் தவிர்க்க முடியாதது என்பதுதான் தவிர்க்கக் கூடாத - கசப்பான உண்மையாகிறது. எந்த முற்போக்கு முழக்கத்தாலும் இந்தக் கசப்பை மாற்ற முடியாது.

கட்டுரையாளர்: பள்ளி தலைமையாசிரியர் (ஓய்வு)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.