முகப்பு
கட்டுரைகள்

தூக்குக் கயிறா? திருந்த வாய்ப்பா?

தூக்கு தண்டனை அளிப்பது சரியா தவறா என்ற கேள்வி பல காலமாக உலகெங்கும் விவாதிக்கப்படுகிறது.

Updated On : 7 அக்டோபர், 2013 at 1:24 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 11:37 PM

தூக்கு தண்டனை அளிப்பது சரியா தவறா என்ற கேள்வி பல காலமாக உலகெங்கும் விவாதிக்கப்படுகிறது.

"மரண தண்டனை விதிக்கக் கூடாது, அதை சட்ட புத்தகத்திலிருந்து ரத்து செய்ய வேண்டும்' என்ற கட்சியின் முக்கிய வாதங்களில் சில: 1) தண்டனை அளிப்பதன் முக்கிய நோக்கமே குற்றவாளியைத் திருத்தி மேம்படுத்துவதுதான். குற்றவாளியைக் கொன்று விட்டால் எங்கே திருத்துவது? 2) மரண தண்டனை இருப்பதினால் மக்கள் கொலை புரிய அஞ்சுவார்கள் என்று நிரூபிக்கப்படவில்லை 3) குற்றவாளியின் கொடிய செயலைத் தண்டிக்க அரசு தன் பங்கிற்கு கொலையில் இறங்கலாமா?

"என் கண்ணை நீ பிடுங்கினால் உன் கண்ணை நான் பிடுங்குவேன் என்று செயல்பட்டோமானால் உலகமே பார்வை இழந்துவிடும்' என்று அண்ணல் காந்தி கூறினார்.

Advertisement

உலகநாடுகளில் மூன்றில் இரண்டு நாடுகளில் மரண தண்டனை சட்டபூர்வமாகவோ நடைமுறையிலோ செயல்படுத்தப்படுவதில்லை. அந்த நாடுகளில் கொலைக் குற்றங்கள் அதிகரித்துவிட்டன என்றோ மற்ற நாடுகளில் குறைந்துவிட்டன என்றோ புள்ளிவிவரம் எதுவும் இல்லை. ஆகையால் தன்னைத் தூக்கிலிடுவார்கள் என்ற அச்சம் கொலைக்குற்றங்களைக் குறைக்கவில்லை. இந்தக் காரணத்தை சொல்லி மரணதண்டனையை நியாயப்படுத்த முடியாது.

குற்றவியல் சட்டத்தின் நடைமுறையைப் பார்த்தோமானால், குற்றம் நடந்தவுடன் புகார் கொடுப்பதில் துவங்கி, காவல் துறை புலனாய்வு செய்து, நீதிமன்றத்தில் தக்க சாட்சியத்துடன் நிரூபித்து, நீதிமன்றம் எல்லாவற்றையும் ஆராய்ந்து சீர் தூக்கிப் பார்த்து தீர்ப்பளிப்பதில் நிறைவடையும்.

இந்த பயணம் நூற்றுக்கு நூறு மேடு பள்ளமில்லாமல், தடம் மாறிப்போகாமல் உண்மை என்ற இலக்கை அடைகிறது என்று சொல்லமுடியுமா? புகார் கொடுப்பதில் தாமதம், புகாரை ஏற்றுக் கொள்வதில் இடையூறுகள், புலனாய்வில் தொய்வு, குற்றவாளி செல்வாக்குடையவர் என்றால் சாட்சிகளை அச்சுறுத்துதல், வழக்குரைஞர்களின் வாதத்திறமை என வழியில் எவ்வளவோ திருப்பங்கள் உள்ளன. தவறாக ஒருவர் மாட்டிக்கொள்ள சாத்தியக்கூறுகள் உள்ளன என்றால் அவர் உயிர் போனது போனதுதானே? திரும்ப வருமா? அது அரசு புரிந்த கொலைதானே? இதற்காகவே அமெரிக்காவில் "இன்னசன்ஸ் ப்ரொஜக்ட்' என்று ஒரு ஸ்தாபனம் உள்ளது. இது லாப நோக்கமில்லாமல் இயங்கும் ஒரு தன்னார்வ நிறுவனம். இதன் குறிக்கோள் என்னவென்றால் டிஎன்ஏ பரீட்சை மூலமாகவும் மற்றும் வேறு முறைகளிலும் முடிந்து போன வழக்குகளில் தவறாக தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது என்று நிரூபித்து, குற்றவியல் சட்ட நடைமுறையை நீதியினின்று வழுவாமல் மாற்றவேண்டும் என்பதுதான். அந்த இயக்கத்தின் இணையதளத்திற்கு சென்றோமானால் 1989 முதல் 2013 (செப்டம்பர்) வரை 1224 வழக்குகளில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட தீர்ப்பு தவறு என்றும் அவர்கள் உண்மையில் நிரபராதி என்றும் நிரூபித்து உள்ளார்கள் என்று தெரிகிறது. கொலம்பியா பல்கலைக்கழகம் ஒரு வழக்கை ஆய்வுக்கு எடுத்து, இப்படி பிழை நடந்துள்ளது என்று ஒரு ஆய்வறிக்கை வெளியிட்டது.

கார்லோஸ் ஹர்நாண்டேஸ் என்பவர் செய்த கொலைக்கு கார்லோஸ் டி லூனா என்பவரை பிடித்து தீர்ப்பளித்து மரண தண்டனையையும் நிறைவேற்றிவிட்டது அமெரிக்க நீதிமன்றம். கார்லோஸ் டி லூனா இறந்த பிறகு உண்மை தெரிந்தது. போன உயிர் எப்படி வரும்?

இந்தியாவிலும் தவறாக மரண தண்டனை வழங்கியுள்ளோம் என்று உச்சநீதிமன்றமே ஒப்புக்கொண்டுள்ளது. 1980 இல் பச்சன் சிங் எதிர் பஞ்சாப் மாநிலம் என்ற வழக்கின் தீர்ப்பில் உச்சநீதிமன்றம் மரணதண்டனை அமலில் இருக்க வேண்டுமா வேண்டாமா என்ற வாத பிரதிவாதங்களை தீர ஆராய்ந்து, அந்த அதிக பட்சமான தண்டனையை விதிக்குமுன் நீதிமன்றம் வழக்கின் அம்சங்களை எப்படி சீர் தூக்கிப் பார்க்க வேண்டுமென்றும் கூறியுள்ளது.

இ.பி.கோ 302 பிரிவின்படி கொலைக் குற்றம் நிரூபணம் ஆனால் அரிதிலும் அரிதான வழக்கில்தான் மரண தண்டனை வழங்கவேண்டும் என்றும் தீர்ப்பளித்தது.

அதிலும் நீதிமன்றம் ஆயுள்தண்டனையா மரணதண்டனையா என்று முடிவு செய்யும் முன்னால் அந்த வழக்கில் குற்றத்தின் சூழ்நிலையை மட்டும் அன்றி குற்றவாளியின் சூழ்நிலையையும் கருத்தில் கொள்ளவேண்டும் என்றும் அறிவுறுத்தியது. பச்சன் சிங்கின் தீர்ப்பை அளித்தது ஐந்து நீதிபதிகள் அடங்கிய பெஞ்சு. ஆகையால் அந்த தீர்ப்பிற்கு வலு அதிகம். ஐந்துக்கும் குறைவான நீதிபதிகள் அடங்கிய பெஞ்சு பச்சன் சிங் தீர்ப்பை அனுசரித்து தான் போகவேண்டும்.

ஆனால் அந்தத் தீர்ப்பை அனுசரிக்காமல், குற்றவாளியின் சூழ்நிலையைக் கருத்தில் கொள்ளாமல் உச்சநீதிமன்றமே சில தீர்ப்புகளில் பதின்மூன்று பேருக்கு தூக்கு தண்டனை வழங்கிவிட்டது. இதை உச்சநீதிமன்றமே சொல்லியுள்ளது. சந்தோஷ்குமார் பாரியார் எதிர் மகாராஷ்டிர மாநிலம் என்ற வழக்கிலும் (2009) 6 எஸ்சிசி 498 திலீப் திவாரி எதிர் மகாராஷ்டிர மாநிலம் என்ற வழக்கிலும் (2010) 1 எஸ்சிசி 775 ராஜேஷ் குமார் என்ற வழக்கிலும் 2011) 13 எஸ்சிசி 706. இப்படி பிழையாக தூக்கு தண்டனை விதிக்கப்பட்டவர்கள் தயாநிதி பிசோய், சைபன்னா அங்குஷ் ஷிண்டே, அம்பாதாஸ் ஷிண்டே, பாபு ஷிண்டே, மாசு ஷிண்டே, ராஜ்ய அபா ஷிண்டே, சூர்யா ஷிண்டே சாத்தான், உபேந்திரா சிவாஜி பான்பு மோகன் சவான் முதலானோர். சந்தோஷ் குமார் வழக்கில் உச்சநீதிமன்றம் மேலும் கூறியது: குற்றவாளியின் சூழ்நிலையை மனதில் கொள்ளவேண்டியது அரசியல் சாசன விதியும் கூட. நம் அரசியலைப்பு சாசனம் ஷரத்து 21 உயிரைப் பாதுகாக்கும் உரிமை . அதன்படி எவருடைய உயிரையும் நீதியின் வழிமுறையை பின்பற்றாது பறிக்க முடியாது. இது நம் எல்லாருடைய அடிப்படை உரிமை. அவ்வாறாயின் உச்சநீதிமன்றமே தன்னுடைய சில தீர்ப்புகள் பிழையானவை என்று கூறியபின் அந்த தண்டனையை நிறைவேற்றுவது சட்டம் சார்ந்ததா? 14 முன்னாள் நீதியரசர்கள் (உச்சநீதிமன்ற நீதிபதி, உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் உள்பட)இந்த விஷயத்தை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளனர். இம்மாதிரி பிழையான தீர்ப்புகளின் தண்டனையை நிறைவேற்றக்கூடாது என்று அந்தக் கடிதம் கூறியது. ஆகையால் பிழையாகவும் தூக்குதண்டனை அளிக்கலாம் என்றும் தெரிகிறது.

அடுத்தது "அரிதிலும் அரிதான' என்ற விஷயத்திற்கு வருவோம். "அரிதிலும் அரிதான' என்பதற்கு அளவுகோல் என்ன? அதனை நிர்ணயிப்பது எப்படி? மும்பையை சேர்ந்த யுக் செüத்ரி என்ற வழக்குரைஞர் யாருக்கு தூக்கு தண்டனை விதித்தாலும் அதை எதிர்த்து போராடுபவர். அவர் கூறுகிறார்: ஒரே மாதிரியான வழக்குகளில் முரணான தீர்ப்புகள் வழங்கப்படுகின்றன.ஒரே மாதிரியான சூழ்நிலையும் சாட்சியமும் இருந்தும் உச்ச நீதிமன்றத்தில் ஒன்றில் தூக்கு தண்டனையும் மற்றொன்றில் ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு காரணம் நீதிபதிகள் வெவ்வேறானவர்கள் என்பதுதான்.

தூக்கு தண்டனையை எதிர்க்கும் குற்றவாளி நான் இருப்பதும் இறப்பதும் உச்சநீதிமன்றத்தில் யார் தீர்ப்பு வழங்குகிறார்கள் என்பதில் தொங்குகிறது என்றே நினைப்பார். ஏனென்றால் ஒருவருக்கு அரிதிலும் அரிது என்பது மற்றவருக்கு தோன்றாது போகலாம். இங்கேயும் எதுவும் நிச்சயம் இல்லை.

இந்தக் கட்டுரையின் துவக்கத்தில் உங்கள் முன் வைத்த கேள்வியின் பயணத்திலும் எவ்வளவு எதிர்பாராத திருப்பங்கள்? இன்னொன்று சொல்கிறேன். 2000 இல் சென்னை உயர்நீதிமன்றம் டிவிஷன் பெஞ்சு (இரு நீதியரசர்கள் அடங்கியது) ஒரு வழக்கை கேட்டது. அருப்புக்கோட்டையில் பள்ளிகூடம் படிக்கும் பதினாறு வயது சிறுமியை மூன்று பேர் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தி கொன்றுவிட்டார்கள்.

செஷன்ஸ் நீதிமன்றம் அரிதிலும் அரிதான வழக்கு என்று நிர்ணயித்து தூக்குதண்டனை வழங்கியது. அதற்கு மேல்தான் உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கு. குற்றவாளிகளுக்காக வாதாடிய வழக்குரைஞர்கள் பல வாதங்களை முன் வைத்துள்ளனர். அதில் குற்றவாளிகளிடம் தண்டனையைப் பற்றி விசாரணை செய்யவில்லை என்பதும் ஒன்று. நீதிபதிகள் உடனே சிறையில் இருக்கும் அந்த மூவரையும் வருவித்தார்கள். அவர்களைக் கேட்டு அவர்கள் இதற்கு முன் குற்றம் எதுவும் செய்ததாக சான்று இல்லை என்றும், அந்த மூவரில் இருவரின் பெற்றோர் ஆசிரியர்கள் என்றும், இவர்களால் சமூகத்திற்கு பெரும் கெடுதி விளையும் என்று நினைக்க எந்த அம்சமும் இல்லை என்றும் கூறி தூக்குதண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றி தீர்ப்பளித்தார்கள். கதை இதோடு முடியவில்லை அந்த மூவரில் ஒருவர் சிறையில் இருந்துகொண்டே மேல்படிப்பு படித்து தங்கப்பதக்கம் வாங்கியுள்ளார். சிறைச்சாலையின் உயர் காவல்துறை அதிகாரி இதை மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளார் என்று செய்தி படித்தேன். குற்றவாளியை மனமாற்றி மேம்படுத்துவது சமூகத்தின் கடமை என்றால் அதற்கு ஒரு வாய்ப்பு வேண்டும் இல்லையா?

பண்பாட்டில் உயர்ந்து நிற்கும் எந்த சமுதாயமும் ஒருவர் உயிரைப் பறிப்பதில் முழுமை அடையாது - அவர் யாராக இருந்தாலும். இந்த மரண தண்டனை அமலில் இருப்பதால் கொலைக்குற்றம் குறையவில்லை, வழக்கின் போக்கில் தவறு நடக்க இருக்கும் சாத்தியக்கூறுகள், தீர்ப்பளிப்பதிலும் தவறு நேரலாம், குற்றம் புரிந்தவன் திருந்தலாம் என்பது ஒரு பக்கம்; குற்றவாளியை தண்டிக்கவேண்டும் , கொலைக்குற்றம் புரிந்தவனுக்கு கருணை ஒரு கேடா என்கிற வாதம் இன்னொரு பக்கம். நீங்கள் எந்தப் பக்கம்?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.