கட்டுரைகள்

சில்லறைக் குழப்பம்

அண்மையில் ஒரு நகரப் பேருந்தில் பயணி ஒருவர் பயணச்சீட்டு வாங்க சற்றே கிழிந்து போன ஐந்து ரூபாய் தாள் ஒன்றை நடத்துனரிடம் கொடுக்க, "இது செல்லாது' என்று சொல்லி நடத்துனர் அதைத் திருப்பிக் கொடுக்க, "இந்த நோட்டு நான் அச்சடித்தது அல்ல உங்களைப்போல ஒரு நடத்துனர் கொடுத்ததுதான்' என்று அந்தப் பயணி கோபப்பட அந்தச் விவகாரம் பெரிதாகி பேருந்தையே ஓரங்கட்டும் அளவுக்குப் போய்விட்டது.

ஜெயபாஸ்கரன்

அண்மையில் ஒரு நகரப் பேருந்தில் பயணி ஒருவர் பயணச்சீட்டு வாங்க சற்றே கிழிந்து போன ஐந்து ரூபாய் தாள் ஒன்றை நடத்துனரிடம் கொடுக்க, "இது செல்லாது' என்று சொல்லி நடத்துனர் அதைத் திருப்பிக் கொடுக்க, "இந்த நோட்டு நான் அச்சடித்தது அல்ல உங்களைப்போல ஒரு நடத்துனர் கொடுத்ததுதான்' என்று அந்தப் பயணி கோபப்பட அந்தச் விவகாரம் பெரிதாகி பேருந்தையே ஓரங்கட்டும் அளவுக்குப் போய்விட்டது.

சில்லறை ரூபாய் தாள்கள் நமது நாட்டின் பல கோடிக்கணக்கான மக்களிடையே புழங்குவதன் விளைவாக அவை கசங்கியதாகவும், கரிபூசியதாகவும், நடுப்பகுதி வெள்ளிக்கம்பி வெளியேறியதாகவும், எண்ணெய்க் குளித்ததாகவும், ஏதேதோ எழுதப்பட்டவையாகவும், சில நேரங்களில் மஞ்சள் பூசியதாகவும் கூட காட்சியளிக்கின்றன.

தனக்குக் கிடைத்துவிட்ட, கிழிந்த ரூபாய் நோட்டை கொடுத்து ஒவ்வொரு இடத்திலும் நிராகரிக்கப்படுகிற ஒருவரின் அவமானம் சாதாரணமானதல்ல.

அவரைப் போன்ற சாமானிய மனிதர்கள் சம்பாதிக்கிற சிறு அளவிலான ரூபாய் தாள்கள் மட்டுமல்ல, சில்லறைக் காசுகளும் கூட அவர்களுக்குத் துயரங்களாக மாறுகின்றன. அதுவும் அண்மைக்கால சில்லறைக் குழப்பங்கள் மிகவும் வினோதமானவை. தற்போதைய புதிய ஐந்து ரூபாய் நாணயத்திற்கும், புதிய ஒரு ரூபாய் நாணயத்திற்கும் பெரிய வேறுபாடு கிடையாது. தற்போதைய நமது இரண்டு ரூபாய் நாணயத்திற்கும் ஒரு ரூபாய் நாணயத்திற்கும் உள்ள வேறுபாட்டை கூர்ந்து கவனித்தால்தான் கண்டுபிடிக்க முடியும். தற்போதைய புதிய ஐம்பது காசு நாணயத்திற்கும் இருபத்தைந்து காசு நாணயத்திற்கும் உருவ அளவில் ஒரு வேறுபாடும் காணப்படவில்லை. புதிதாகக் களமிறக்கப்பட்டுள்ள புதிய இருபத்தைந்து காசு நாணயத்திற்கு எந்த மதிப்புமின்றி அவை "காமெடி பீஸ்'களாகவே பார்க்கப்படுகின்றன. இதுபோன்ற சில்லறை நாணயங்கள் நமது நாட்டின் லட்சக்கணக்கான மக்களிடையே குழப்பத்தையும், இழப்பையும் ஒவ்வொரு நாளும் அரங்கேற்றி வருகின்றன என்பது உயரத்தில் இருப்போர் உணராத உண்மைகளாகும். தான் கொடுத்த சில்லறைக் காசு எத்தனை ரூபாய் என்று அதை வாங்கியவர்களிடமே கொடுத்தவர்கள் கேட்டுத் தெரிந்து கொள்கிற அவல நிலை தோற்றுவிக்கப்பட்டிருக்கிறது. அத்தகைய சில்லறைக் காசுகளைப் பெறுகிறவர்கள் ஏமாறுவதற்கோ அல்லது ஏமாற்றுவதற்கோ நிறையவே வாய்ப்பிருக்கிறது என்பதுதான் இன்றைய நிலை.

மக்களின் கைகளில் மிகவும் அதிகமாக புழங்கும் குறைந்த மதிப்புள்ள ரூபாய் தாள்களை மட்டும் உறுதியான, கிழிபடாத, நைந்து போகாத (சிங்கப்பூர் டாலர் தாள்களைப்போல) தாள்களில் அச்சிட்டுக் களமிறக்குவது சாத்தியமில்லாத ஒன்றா? ரூபாய் தாள் ஒன்று எவ்வளவு நைந்து கிழிந்திருப்பினும் அதை வெகு எளிதில் எல்லா இடத்திலும் அதன் மதிப்பு குறையாமல் உடனே மாற்றிக்கொள்கிற வசதி இன்றைக்கு நம்மிடம் ஏன் இல்லை? பழைய பட்டுப்புடவை இருக்கிறதா எனக் கேட்டு வீட்டு வாசலுக்கே வணிகர்கள் வந்துவிடுகிற இந்தக் காலத்தில் அரசாங்கம் அச்சடித்த ரூபாய் தாள்களை எடுத்துக்கொண்டு அவை செல்லுமா எனக் கேட்டு செல்லாத இடங்களுக்கெல்லாம் சென்றுவர வேண்டிய நிலையை தர்ம சங்கடமாகவே உணர வேண்டியிருக்கிறது.

கைத்தொலைபேசி மற்றும் தரைவழித் தொலைபேசிக் கருவிகளின் பொத்தான்களில் 5-ஆம் எண் பொத்தான் மட்டும் சற்று மேடாகவோ அல்லது சற்று வேறுபாட்டுடனோ வடிவமைக்கப்பட்டிருப்பது நம் எல்லோருக்கும் தெரியும். பார்வையற்ற சிலர் அந்தத் தொலைபேசியைப் பயன்படுத்த நேரும்போது அவர்கள் அதன் எண்களை விரல்களால் தடவிப்பார்த்து அவற்றில் 5-ஆம் எண்ணைக் கண்டுபிடித்து அதன் வழியாக மற்ற எண்களை உணர்ந்து சிரமமின்றி அதைப் பயன்படுத்த வேண்டும் என்கிற மிக உயரிய மனிதாபிமானமே தொலைபேசிகளை அப்படித் தயாரிப்பதற்கான காரணமாகும். இத்தகைய மனிதாபிமான உணர்வு நமது நாட்டின் நாணயத் தயாரிப்பில் காணாமல் போய்விட்டது ஏன்?

மேலை நாடுகளின் சில்லறை நாணயங்கள் ஒவ்வொன்றிலும் காட்டப்பட்டிருக்கும் வேறுபாடுகள் அதன் மதிப்பை எளிதில் கண்டறியும்படியாகவும் அழகியல்பூர்வமானவையாகவும் இருக்கின்றன. இத்தகைய போக்கு நமது நாட்டின் நாணயத் தயாரிப்பிலும் கடைப்பிடிக்கப்பட்டால் அது நமது பெரும்பான்மை மக்களுக்குச் செய்யப்படுகிற பெரு நன்மையாக அமையும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆப்கன் எல்லையில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! 15-க்கும் மேற்பட்டோர் பலி!!

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT