முகப்பு
கட்டுரைகள்

வேற்றுமையிலும் ஒற்றுமை காண...

இந்தியாவின் மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் சாதிவாரியாகப் புள்ளிவிவரங்கள் சேகரித்தல் தொடர்பாகக்

Updated On : 5 ஜனவரி, 2024 at 7:37 AM
பகிர்:

இந்தியாவின் மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் சாதிவாரியாகப் புள்ளிவிவரங்கள் சேகரித்தல் தொடர்பாகக் கடந்த நவம்பர் 7-ஆம் தேதி இந்திய உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் விளைவாகச் சாதிவாரியான இட ஒதுக்கீடு பற்றிய சர்ச்சை மீண்டும் தலை தூக்கியிருக்கிறது.

69 விழுக்காடு ஒதுக்கீட்டுச் சட்டம் தொடர்பான வழக்கு விசாரணையில், பிற்படுத்தப்பட்ட வகுப்பு என்பதை எந்த ஆதாரத்தின் பேரில் முடிவு செய்கிறீர்கள் எனக் கேட்ட அதே உச்சநீதிமன்றம், ஆதாரமாகக் கொள்ளும்படியாக வேறெதையும் பரிந்துரை செய்யாமலே, ஆதாரமாகத்தக்கதான சாதிவாரிக் கணக்கெடுப்பு தவறு எனக் கூறுதல் முரண்பாடு ஆகாதா?

சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்துமாறு உத்தரவிடுதற்குச் சட்டத்தில் இடமில்லை எனக்கூறும் உச்சநீதிமன்றம், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் எந்த விதியின்படி, ஒதுக்கீட்டளவு 50 விழுக்காட்டிற்கு மேற்படக் கூடாதெனத் தீர்ப்பளித்தது?

தற்போது நம்முன் உள்ள சிக்கல் யாது? சாதிவாரி ஒதுக்கீடு என்பதே கூடாது என்பதும், சாதிவாரி ஒதுக்கீடு நீடிக்க வேண்டும் எனவுமாகச் சர்ச்சைகள் முட்டி மோதுகின்றன. இன்னின்ன சாதியார் இன்னின்ன தொழில்களைச் செய்ய வேண்டுமெனத் தொழில்களுக்குச் செய்த ஒதுக்கீட்டின் விளைவுதான் இன்றைய கல்வி - வேலைவாய்ப்பு ஒதுக்கீடு என்பதைப் புரிந்துகொண்டால் வேகம் குறையும்.

இட ஒதுக்கீட்டால் நம் நாட்டுச் சாதிப் பிரிவினைகள் ஒழிய மாட்டா. ஆனால், சாதியொழிப்பிற்கு இட ஒதுக்கீடு ஒரு துணைக்கருவியாகும் என்பதுபோலவே, இட ஒதுக்கீட்டால்தான் சாதி நீடிக்கிறது என்பதில்லை. சாதிச் சங்கங்களும், சாதிகளுக்கிடையே விரோத மனப்பான்மையும் வளர்தற்கு இட ஒதுக்கீடும் ஒரு காரணியாகிறது என்பதையும் ஒப்பத்தான் வேண்டும். சிக்கல் தீர என்ன வழி?

= ஒவ்வொரு சாதியிலும் அந்தச் சாதியாரின் மொத்த மக்கள்தொகையில், பள்ளிப்படிப்பு, பட்டப்படிப்பு, அரசின் பல்வேறு நிர்வாகப் பொறுப்பு, நிலையான மாத வருமானம் என இவ்வாறான வகையினர் இன்னின்ன விழுக்காட்டினராக இருந்தால் அந்தச் சாதி தொகுதி ஒன்றுக்கு உரியதாகும்.

இவ்வாறே அடுத்தடுத்த விழுக்காடுள்ள சாதிகளை இரண்டு, மூன்று, நான்காம் தொகுதிகளாக தேவையான அளவுக்கு வகைப்படுத்த வேண்டும்.

= ஒவ்வொரு தொகுதிக்கான குறைந்த அளவு விழுக்காடும், அதிகபட்ச விழுக்காடும் குறைவான இடைவெளியில் அமைய வேண்டும்.

= ஒவ்வொரு தொகுதியிலும் உள்ளடங்கும், சாதிகளின் மொத்த மக்கள்தொகைக்கேற்ப அத்தொகுதிக்கான ஒதுக்கீட்டு அளவு அமைய வேண்டும்.

= கலப்பு மணம் புரிந்தோர், அவர்தம் வழி மரபினர் ஆகியோர் தனித் தொகுதியாகக் கொள்ளப்பட்டு அவர்களின் மொத்த எண்ணிக்கைக்கு ஏற்ற தனி ஒதுக்கீடு அமைய வேண்டும். இதுவே இட ஒதுக்கீட்டின் வழி சாதிப் பிரிவுகளை ஒழிப்பதற்கான முக்கிய வழியாகும்.

= ஏனைய சிறப்பு ஒதுக்கீட்டிற்கு உரியோர்க்கு, அவரவர் சாதி இடம் பெறும் தொகுதியில் உள் ஒதுக்கீடு அளிக்கலாம்.

= குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு ஒருமுறை, சாதிகளுக்கான தொகுதிகளை அவ்வப்போதைய மக்கள்தொகைப் புள்ளிவிவரப்படி மாற்றியமைக்க வேண்டும். இதன்படி ஒவ்வொரு முறையும் முதல் தொகுதிக்குரிய சாதிகளின் எண்ணிக்கையும், அத்தொகுதிக்கான ஒதுக்கீட்டு அளவும் கூடிக்கொண்டே போகும்.

அதேசமயம் கீழ்நிலைத் தொகுதிக்கான எண்ணிக்கை குறைந்து மறைய, தொகுதிகளின் எண்ணிக்கை குறைந்துகொண்டே போகும். இறுதியில் எல்லாச் சாதியாரும் முதல் தொகுதியாளராக, அதாவது எல்லாச் சாதியாரும் கல்வி நிலை, வேலை நிலை என எல்லா நிலைகளிலும் ஒத்த விழுக்காட்டினர் ஆகும்போது, எல்லாமே பொதுப் போட்டியாகி, இட ஒதுக்கீடு என்பது இல்லாது ஒழியும்.

எனவே, மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்போது அனைத்துப் புள்ளிவிவரங்களும் சாதிவாரியாகக் கணக்கெடுக்கப்பட வேண்டும்.

அரசு வேலைவாய்ப்பு என்பது தனி வகையாகக் கணக்கிடத்தக்கது என்றாலும், அரசு அலுவலர் என்பது தவிர்த்துப் பிற வகையில் நிலையான மாத வருவாய் என்னும்படியான வேலைவாய்ப்புகள் எல்லாமும் தனியார்மயமாவதால் தனியார் துறையிலும் இட ஒதுக்கீடு கட்டாயமாக்கப்பட வேண்டும். அன்றேல் சமூகநீதி என்பது கால்பங்கு நீதியாகி பூசலும், குழப்பமும் நீடிக்கவே செய்யும்.

எனவே, அரசுத்துறை, தனியார்துறை இரண்டிலும் எல்லாச் சாதியாரும் ஒத்த விழுக்காட்டினர் ஆகும் வரைக்கும் இட ஒதுக்கீடு நீடிக்க வேண்டும். அவ்வாறே கல்வித்துறையும் தனியார் மயமாவதால் சுயநிதிக் கல்வி நிலையம் உள்பட அனைத்துக் கல்வி நிலையங்களிலும் இட ஒதுக்கீடு கட்டாயமாகப்பட வேண்டும்.

பொதுப் போட்டி கண்டிப்பாகத் தேவையெனக் கருதினால் அதற்கான மாற்று ஏற்பாட்டிற்கும் வழியுண்டு. மேலே சொன்ன தீர்வுத் திட்டப்படி முதல் தொகுதிக்கு 20, இரண்டாம் தொகுதிக்கு 25, மூன்றாம் தொகுதிக்கு 30, நான்காம் தொகுதிக்கு 15, ஐந்தாம் தொகுதிக்கு 10 என ஒதுக்கீடு அமைவதாக வைத்துக் கொள்வோம்.

பொதுப் போட்டிக்கான இடங்களைக் கணக்கிடும்போது ஒவ்வொரு தொகுதிக்கும் உரிய இடங்களிலிருந்து அதன் விழுக்காட்டின் அளவுக்கேற்ற இடங்களைப் பொதுப் போட்டிக்கு ஒதுக்க வேண்டும். அதாவது மக்கள்தொகை புள்ளிவிவரப்படி முதல் தொகுதிக்குரிய விழுக்காடு 20 என்பதால் அதிலிருந்து இருபது விழுக்காடாக நான்கு இடங்களைப் பொதுப் போட்டிக்கு வழங்கலாம்.

அவ்வாறே மற்ற தொகுதிகளிலிருந்து முறையே 6, 9, 2, 1 என எடுத்தால் பொதுப் போட்டிக்கான இடங்கள் 22 எனவும், ஒதுக்கீட்டின் அளவு 78 எனவும் அமையும். இதன்படி கீழ்நிலைத் தொகுதியாளர் தமது பங்கிலிருந்து ஒரு விழுக்காடு மட்டுமே பொதுப் போட்டிக்கு விட்டுக் கொடுக்கிறார். பொதுப் போட்டியில் அவர்கள் அரை விழுக்காடு மட்டுமே பெற முடிந்தாலும் அவர்களின் இழப்பு அரை விழுக்காடு மட்டுமே.

இந்த முறையிலும் முதல் தொகுதிக்கான இடங்கள் கூடிக்கொண்டே போவதால், பொதுப் போட்டிக்கான இடங்களும் கூடுதலாகும். இறுதியில் எல்லாச் சாதியாரும் முதல் தொகுதியாளராகும்போது பொதுப் போட்டி, ஒதுக்கீடு இரண்டும் ஒன்றாகிவிடும்.

இன்னொன்று, சமநிலையில் இல்லாதவரிடையே ஒத்த போட்டி பொதுப் போட்டி என்பது நீதியாகாது என்பதாலேயே ஒதுக்கீடு முறை கொள்ளப்படுகிறது. இந்நிலையில் இருசாராருக்கும் பொதுப் போட்டி என்பது, வலுத்தவர் தமது பங்குக்கும் மேலாக, வலுவற்றவரின் பங்கையும் பிடுங்கிக் கொள்ள அனுமதித்தல் என்பதன்றி வேறல்ல.

சமூகத்தில் அனைவரின் உரிமையையும் பாதுகாக்க வேண்டிய நீதிமன்றமே, வலுத்தவர் தம் பங்கிற்கு மேலாக இளைத்தவரின் பங்கைப் பிடுங்கிக் கொள்ளலாம் எனக் கட்டாயப்படுத்துதல் நீதியாகுமா?

ஆக, முற்றிலும் நூறு விழுக்காடு அளவில் ஒதுக்கீடு; ஒதுக்கீட்டு அளவுக்கேற்ற பொதுப்போட்டி என இருவகையான தீர்வுத் திட்டங்கள் முன் வைக்கப்பட்டுள்ளன. இரண்டுமே குறிப்பிட்ட அடிப்படையில் மாற்றமில்லாதவை. அவை:

= சாதிவாரியான மக்கள்தொகைப் புள்ளிவிவரம்.

= மக்கள்தொகைப் புள்ளிவிவரப்படி சாதிகளைப் பல தொகுதிகளாக வகைப்படுத்தல்.

= ஒவ்வொரு தொகுதியின் மக்கள்தொகை விழுக்காட்டையே அத்தொகுதிக்கான ஒதுக்கீட்டு அளவாக்குதல்.

= அவ்வப்போது மாறுகிற புள்ளி விவரங்களுக்கு ஏற்ப சாதிகளைத் தொகுதி மாற்றுதல்.

இறுதியாக நாம் கவனிக்க வேண்டியவை இவைதாம். ஒரு தேதியைக் குறிப்பிட்டு அதுமுதல் சாதிவாரி ஒதுக்கீட்டை கைவிட்டுவிடலாம் என்பது ஒருகாலும் நடக்காது. காரணம், சாதிவாரி ஒதுக்கீட்டால் பயனடைவோர் மிகப் பெரும்பான்மையர். அவர்களுக்கு எதிராக எந்தக் கட்சி ஆட்சியும் செயல்பட முடியாது.

அடுத்து, சாதிப் பிரிவினைகள் உள்ள மட்டும் சாதிவாரி ஒதுக்கீடும் நீடிக்க வேண்டும் என்பதும் முறையல்ல. அது சமூக நல்லிணக்கத்திற்கு எதிரானது. ஏற்றத்தாழ்வான சூழலில்தான் இட ஒதுக்கீடு என்பது சமூக நீதியாகிறது. எல்லாப் பிரிவினரும் சமநிலை எய்திய பின்னரும் ஒதுக்கீடு நீதியாதல் எப்படி?

சாதிப்பிரிவினைகள் மறையும்போது மறையட்டும். எங்கள் பங்கை மற்றவர்கள் பிடுங்கிக் கொள்கிறார்கள் என்னும் மனக்குமுறல் ஒருபுறமும், சாதிவாரி ஒதுக்கீட்டிற்கு முடிவே கிடையாதா என்னும் புலம்பல் மறுபுறமுமான முரண்பாடு சூழல் இப்படியே நீடிக்க வேண்டுமா?

இந்த நிலை நீடிக்கும்வரை எல்லாப் பிரிவினரும் சமூக முன்னேற்றத்திற்கு ஒருங்கிணைவான பங்களிப்புச் செய்தல் சாத்தியப்படாது.

வேற்றுமையிலும் உணர்வுபூர்வமான ஒற்றுமையாகும் இந்திய சமூகம் உருவாக இதனைவிட்டால் வேறு வழியில்லை.

கட்டுரையாளர்: தலைமையாசிரியர் (ஓய்வு).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.