கட்டுரைகள்

மாற்றம் தேவை

கர்நாடக மாநிலத்திலுள்ள முக்கிய நகரங்களின் பெயர்களை கன்னட உச்சரிப்புக்கேற்ற வகையில் மாற்றம் செய்திருக்கிறது அந்த மாநில அரசு.

சா. ஜெயப்பிரகாஷ்

கர்நாடக மாநிலத்திலுள்ள முக்கிய நகரங்களின் பெயர்களை கன்னட உச்சரிப்புக்கேற்ற வகையில் மாற்றம் செய்திருக்கிறது அந்த மாநில அரசு.

அதேநேரத்தில், கல்வி நிறுவனங்களின் பெயர்களை மாற்றுவதை, அவற்றின் முடிவுக்கே விட்டுவிடுவதாகவும் சொல்லப்பட்டிருக்கிறது.

மொழிவாரி மாநிலப் பிரிவினையின்போதே, நமக்கு "தமிழ்நாடு' என்ற அழகான பெயர் கிடைத்துவிட்டபோதிலும், சில முக்கியமான கோரிக்கைகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.

அவற்றில் முதன்மையானது "மெட்ராஸ்' உயர்நீதிமன்றம்! புழக்கத்தில் "சென்னை உயர்நீதிமன்றம்' என்று மாறினாலும்கூட, அதிகாரப்பூர்வமாக "மெட்ராஸ் உயர்நீதிமன்றம்' என்ற பெயரே தொடர்கிறது.

இதை மாற்ற வேண்டும் என வழக்குரைஞர்கள் தொடர் போராட்டங்களையும் நடத்தியிருக்கின்றனர். அரசியல் கட்சிகளும் குரல் எழுப்பியிருக்கின்றன. ஆனால், பெயர் மாற்றம் நடந்தபாடில்லை.

இந்தக் குரல் ஏன் இன்னும் கொஞ்சம் உருமாறி, "தமிழ்நாடு உயர்நீதிமன்றம்' என்று மாற்றப்படக் கூடாது? மாநிலத்தின் உயர்நீதிமன்றம் மாநிலப் பெயரில் இருப்பதுதானே சரி.

இதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். எல்லாத் துறைகளிலும் வழக்கொழிந்து போன மெட்ராஸ் எனும் சொல், முக்கியமான துறையான நீதித் துறையில் மட்டும் ஏன் இருக்க வேண்டும்?

அதேபோல, தமிழ்நாட்டின் பெரும்பாலான தெருக்களில் இன்னமும் சாதிப் பெயர்கள் விடாமல் ஒட்டிக் கொண்டே இருக்கின்றன.

ஒரு நபரின் பெயருக்குப் பின்னால் சாதியின் பெயர் தொற்றிக் கொண்டிருப்பதைக் கூட விட்டுவிடலாம். நேரிடையாக சாதியின் பெயரில் தெருக்கள் ஏன் இருக்க வேண்டும்? இதை எதிர்த்து ஏன் எந்தக் குரலும் வலுவாக எழவில்லை?

இவற்றில் பெரும்பாலான தெருக்களின் பெயர்கள் அந்தப் பகுதியின் புழக்கத்திலும், அஞ்சல் முகவரி வழக்கத்திலும் வெகுவாக மாறிவிட்டபோதும், வாக்காளர் பட்டியலில் மட்டும் அப்படியே தொடருகிறது.

அந்தப் பட்டியலைத் தயாரிப்பவர்கள் வருவாய்த் துறையினர். அப்படியானால், வருவாய்த் துறையின் ஆவணங்களும் அப்படியே தொடருகின்றன என்பதுதானே பொருள்?

பெயரில் என்ன வந்துவிடப் போகிறது எனக் கேட்கலாம். பெயரில்தான் எல்லாமும் இருக்கிறது.

இன்னும் சொல்லப் போனால், பெயரில்கூட மாற்றத்தைக் கொண்டு வர முடியவில்லை என்றால், எந்த வகையிலான முன்னேற்றத்தை நோக்கி, வளர்ச்சியை நோக்கி இந்தச் சமூகம் சென்று கொண்டிருக்கிறது என்ற கேள்வி நியாயமானதுதானே.

இந்த வகையில் பார்த்தால் ரியல் எஸ்டேட் தொழில் ஏதோ சிலவற்றைச் செய்திருக்கிறது. ரோஜா நகர், அல்லி நகர், மல்லிகை நகர்களைப் பெருநகரப் பகுதிகளிலும், புறநகரப் பகுதிகளும் பார்க்க முடிகிறது.

இறுதியாக ஒன்று. மாநிலத்தின் மிக முக்கிய நகரங்களில் "கன்டோன்மென்ட்' பகுதி இருக்கிறது. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் நகரின் முக்கியமான - ராணுவ அலுவலகங்களைக் கொண்ட பகுதிகள் - இப்போதும் இவ்வாறு அழைக்கப்பட்டு வருகின்றன. இதையாவது ஒரு பொருத்தப்பாட்டுடன் கூடிய பெயர் என விட்டுவிடலாம்.

ஆனால், இன்னமும் ஆங்கிலேய அதிகாரிகளின் பெயர்களைக் கொண்ட தெருக்கள் பெருநகரங்களில் ஏராளமாக இருக்கின்றன.

அங்கே வாழ்ந்த மக்களில் ஏராளமானோர் இடம் பெயர்ந்து - புதிதாக வந்தவர்கள் கலந்து - முழு மாற்றம் பெற்ற பிறகும் ஏன் ஆங்கிலேய அதிகாரிகளின் பெயர்கள் மட்டும் தெருவின் பெயரில் தொடர வேண்டும்? தொல்லியலாளர்களுக்கும்கூட தெரியாத பெயர்கள் இனி எதற்கு?

மாநில அரசு தனியே சிறப்புக் குழுவொன்றை அமைத்து, மாவட்டம் முழுவதும் ஆய்வுகளை நடத்தி, மக்கள் அமைப்புகளிடையே ஆலோசனைகளையும் பெற்று, உறுதியான அறிவிப்புகளை வெளியிட வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்காவுடன் இடைக்கால வா்த்தக ஒப்பந்தம்: பேச்சுவாா்த்தை ஒத்திவைப்பு!

மாற்றம் பெறும் மதிப்பீட்டு முறை!

தமிழகத்தில் 2,506 முகாம்கள் மூலம் 3,09,707 பேருக்கு வேலைவாய்ப்பு!

தில்லியில் பயங்கரவாத தாக்குதல் சதி முறியடிப்பு: தமிழகத்தில் இருந்து 6 போ் உள்பட 8 போ் கைது!

இடையறா பயணத்தின் 'மைல்கல்' தேர்தல்!

SCROLL FOR NEXT