பிரிவு 377இல் உள்ள மெய்ப்பொருள்
இப்பொழுது வரும் தலைப்புச் செய்திகள் எல்லாமே, சென்னையில் நடைபெற்ற இசை விழா மொழியில் சொல்ல வேண்டுமானால், ஏழரைக் கட்டையில்தான் பேசப்படுகின்றன.
இப்பொழுது வரும் தலைப்புச் செய்திகள் எல்லாமே, சென்னையில் நடைபெற்ற இசை விழா மொழியில் சொல்ல வேண்டுமானால், ஏழரைக் கட்டையில்தான் பேசப்படுகின்றன. அது டில்லியில் நடந்த தேர்தலோ, பாலியல் தொல்லையோ, தேவயானி கோப்ரகடே விவகாரமோ, இல்லை இந்த 377 வழக்கோ எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம், உரத்து பேசினால் போதும். ஆனால் சிறு வயதில் நான் படித்த ஒன்று நினைவுக்கு வருகிறது. அது "கண்ணால் பார்ப்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய்'.
377ஐ பற்றி இங்கே தீர விசாரிப்போம். இ.பி.கோ. பிரிவு 377 இயற்கைக்கு விரோதமான பாலுறவு பற்றிக் கூறுகிறது, அந்த செயல்கள் தண்டனைக்குரியது என்கிறது. இதில் ஓரினசேர்க்கையும் சேர்க்கப்பட்டுள்ளது. தில்லி உயர்நீதிமன்றத்தில் இந்த சட்டப்பிரிவு அரசியல் சாசனத்திற்கு விரோதமானது என்றும், சமத்துவம் பற்றிய ஷரத்திற்கும் தனி மனிதனின் கெüரவத்திற்கும் விரோதமானது என்றும் வாதிட்டார்கள். உயர்நீதிமன்றம் முடிவில் வயதுக்கு வந்த இருவரிடையே ஒப்புதலுடன் ஏற்படும் ஓரினச் சேர்க்கையை சட்டப்படி குற்றமாகக் கருதக்கூடாது என்றும் அதைக் குற்றமாக கருதுவது அரசியல் சாசனத்திற்கு விரோதம் என்றும் தீர்ப்பளித்தது.
சில சூழ்நிலைகளில் ஒரு சட்டத்தையோ அல்லது ஒரு சட்டப்பிரிவையோ முழுவதுமாக அரசியல் சாசனத்திற்கு விரோதம் என்று கூறுவதற்கு பதில் அந்த சட்டப்பிரிவின் வீச்சை நீதிமன்றம் குறைக்கும். இதனை ரீடிங் டௌண் (ழ்ங்ஹக்ண்ய்ஞ் க்ர்ஜ்ய்) என்பார்கள் . இதைத்தான் தில்லி உயர்நீதிமன்றம் செய்தது. இ.பி.கோ. பிரிவு 377 முழுவதையும் நீக்காமல், மேற்படி சூழ்நிலையில் நடக்கும் சேர்க்கையை மட்டும் குற்றமாகாது என்றது. அதன் பேரில் தாக்கல் செய்த மேல் முறையீடுதான் சமீபத்தில் வந்த உச்சநீதிமன்ற தீர்ப்பு.
Advertisement
தில்லி உயர்நீதிமன்றத்தின் காரணங்கள் இவை: தனிமனிதனின் உரிமை, அவனுடைய பாலியல் இயல்பு பற்றிய தன்னாட்சி, ஜனநாயகத்தில் வித்தியாசங்களின் உள்ளடக்கம் வேற்றுமைகளுக்கு கொடுக்க வேண்டிய மதிப்பு மற்றும் அரசியல் சாசன நெறி. தில்லி உயர்நீதிமன்றம் எந்த காரணங்களுக்காக அந்த முடிவிற்கு வந்ததோ அந்த காரணங்கள் ஏன் சரியல்ல என்பதை நமக்கு இந்த தீர்ப்பு விளக்கவில்லை.
ஓரின சேர்க்கை என்பது வியாதி இல்லை. அது ஒரு மனநோயும் இல்லை. அது ஒட்டுவாரொட்டியும் இல்லை. இது ஒருவரின் பாலியல் தன்மை சார்ந்த விஷயம். இதை ஒருவர் வலுவில் தேர்ந்தேடுப்பதுமில்லை; கற்று பழக்கப்படுத்திக்கொள்ளும் வழக்கமுமல்ல. இது அவர் இயல்பு. அந்த இயல்பு உள்ளவர்கள் தான் அப்படி செயல்படுவார்களே அன்றி, இது குற்றம் இல்லை என்று சொன்னவுடன் மடை திறந்த வெள்ளம் போல் நம் நாட்டு மக்கள் தொகை முழுவதும் தனது பாலியல்பை (ள்ங்ஷ்ன்ஹப் ண்க்ங்ய்ற்ண்ற்ஹ்) மாற்றிக்கொள்ளாது. இது தன்வெளி சார்ந்த விஷயம்.
ஓரின சேர்க்கையால்தான் எய்ட்ஸ் நோய் பரவுகிறது என்று சொல்ல முடியாது என்று உலக சுகாதார இயக்கங்களே ஒப்புக்கொண்டு விட்டன. ஆனால் ஒரு அபாயம் உள்ளது. இந்த ஓரினசேர்க்கை இயல்பு உள்ளவர்களுக்கு எய்ட்ஸ் ஹெச் ஐ வி நோய் வந்தால் அவர்கள் மருத்துவ உதவியை நாடமாட்டார்கள். ஏனென்றால் அவர்கள்மீது குற்றவழக்கு தாக்கல் செய்யப்படக்கூடும். இதனாலேயே மத்திய அரசு உச்சநீதி மன்றத்தின் முன் இந்த செயலை குற்றமாகக்கருதுவதால் இவர்களுடைய உடல்நலத்துக்கான அடிப்படை உரிமை பாதிக்கப்படும் என்றும், இவர்கள் மருத்துவ உதவி நாட தயக்கம் இருக்கும் என்றும் ஒரு உறுதி மொழி ஆவணம் தாக்கல் செய்தது. அதாவது மத்திய அரசுக்கும் இந்த செயலை குற்றம் என்று தண்டிப்பதில் ஒப்புதல் இல்லை.
அடுத்தது, இது பாவம் என்று ஒரு வாதம். இந்த கேள்விக்கு போப்பாண்டவர் கருணை பூர்வமான ஒரு விடை அளித்தார். அவர்கள் உண்மையான நம்பிக்கையுடன் இறைவனை நெருங்கினால் நான் யார் இடையே வருவதற்கு? இது நம் எல்லாருக்கும் பொருந்தும். மேலும் இங்கே நாம் நீதிமன்றத்தின் தீர்ப்பைப்பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம். இறைவன் நம் பாவ புண்ணியங்களை எடைபோட்டு நமக்கெல்லாம் என்ன தீர்ப்பளிக்க போகிறான் என்பதை பற்றி அல்ல. அரசியல் சாசனத்தின் சமத்துவ ஷரத்தைப்பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம். எந்த ஒரு மத கோட்பாடைப்பற்றியுமல்ல. இதைச் சற்று தெளிவாக புரிந்து கொள்ளவேண்டும். இப்பொழுது நீதிமன்றத்தில் தீர்வு செய்யப்படவேண்டியது அவர்களை தண்டிப்பது நம் அரசியல் சாசனத்திற்கு உட்பட்டதா என்பது மட்டுமே.
பெண்களுக்கு இழைக்கப்படும் பாலியல் வன்முறைக்கு எதிராக குற்றவியல் சட்டத்தில் என்னென்ன மாற்றங்கள் கொண்டுவரவேண்டும் என்பதைப்பற்றி மறைந்த ஜஸ்டிஸ் ஜெ.எஸ்.வர்மா தலைமையில் ஒரு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அதில், சுதந்திரம் என்ற மனித உரிமையின் பொருள் என்னவென்றால், நமக்கு வித்தியாசமாக இருக்கவும் உரிமை உண்டு. வெறுக்கத்தக்க பாலியல் தன்மை என்று பட்டம் கட்டி யாரையும் ஒடுக்கவோ அடக்கவோ முடியாது. பாலியல் தன்மை என்பது ஒருவருடைய சமத்துவ உரிமையால் காக்கப்படுகிறது.
திருநங்கைகளின் உரிமைகளும் இதுபோலவே பாலியல் தன்னாளுமை பற்றியதுதான். சமத்துவம், புரிதல் இன்னொருவருக்கு மதிப்பு என்ற அரசியல் சாசன கோட்பாடுகளுக்கு, நம்முடைய கலாசார விருப்பு வெறுப்புகள் தழைந்து போக வேண்டும். ஆகையால் நமக்கு ஓரினச் சேர்க்கை பிடிக்கவில்லை என்பதோ புரியவில்லை என்பதோ முக்கியமில்லை.
பாலியல்பு என்பது உடல் சார்ந்த வெளிப்பாடு மட்டுமல்ல, அது மனம் உணர்ச்சி சார்ந்ததும்தான். இது ஒருவருடைய தனித்துவம் பற்றியது. அந்த இயல்பை ஒருவரிடமிருந்து பிரித்து தனித்துப் பார்க்க முடியாது. அதுவும் அவர்தான். பெரும்பான்மையினர் சதுரங்களாக இருக்கும் ஒரே காரணத்தால், முக்கோணங்களையும், வட்டங்களையும் செவ்வகங்களையும் குற்றவாளிகள் என்று தண்டிக்க முடியாது; வித்தியாசமானவர்கள் என்று வெறுக்கவும் கூடாது. வித்தியாசங்களை உள்வாங்கி அணைத்துக்கொள்வதே ஒரு முதிர்ந்த ஜனநாயக சமூகத்தின் லட்சணம். இதைத்தான் தில்லி உயர்நீதிமன்றம் திரும்பத் திரும்ப கோடிட்டுக் காட்டியது.
இந்த பாலியல் சார்ந்த தனித்துவம் என் தன்வெளி பற்றியது. இதற்கும் அடிப்படை உரிமை என்ற பாதுகாப்பு உண்டு. மேலும் இங்கே கூறப்படும் ஓரினச் சேர்க்கையில் வன்முறை இல்லை. ஓரினத்தை சேர்ந்த வயதுக்கு வந்த இருவர் பரஸ்பர ஒப்புதலுடன் தங்கள் அந்தரங்கத்தில் ஈடுபடும் செயல். இதைத்தான் தில்லி உயர்நீதிமன்றம் குற்றமாகக் கருதக்கூடாது என்று தீர்ப்பளித்தது.
இதில் ஒருவர் சட்டப்படி சிறுவராக இருந்தாலோ, ஒருவர் வலுக்கட்டாயமாக மற்றவரை பணிய வைத்தாலோ, பொது இடத்தில் இந்த செயல் நடந்தாலோ இந்த தீர்ப்பு துணைக்கு வராது. சற்று கவனமாக சிந்திக்க வேண்டும். வன்முறையற்ற ஒப்புதலுடன் தன்வெளியில் நடக்கும் ஒரு செயல் இது. இது ஒருவருடைய பாலியல் இயல்பு சார்ந்த விஷயம். இந்த பாலியல்பு ஒருவருடைய தனித்துவம் பற்றியது. ஒருவருடைய தன்மையினாலேயே அவரைக் குற்றவாளி என்று கூறினால் அது அவருடைய அடிப்படை உரிமையை பாதிக்கிறது. அரசியல் சாசனத்தின் கண்ணோட்டத்தில் பார்த்தால், மேற்கூறிய நடத்தைக்கு ஒருவரை தண்டிப்பதும், அதனால் அவருடைய வாழ்கை உயிர் உடல்நலம்,கௌரவம் சார்ந்த உரிமைகளை மறுப்பதும் சரியல்ல என்று விளங்கும்.
இந்த சட்டம் ஆங்கிலேயர்கள் இயற்றிய குற்றவியல் சட்டத்தின் பிரிவில் உள்ளது. இரு நூற்றாண்டுகளுக்கு முன் ஆங்கிலேயர்களின் கண்ணோட்டத்தில் எது பொது நெறி என்று நினைத்தார்களோ அதன் அடிப்படையில் இயற்றப்பட்டது. இன்று அவர்களுடைய நாட்டிலேயே இந்த சட்டம் மாறிவிட்டது. சமத்துவ கோட்பாடுகளின் அடிப்படையில் விரிந்து விட்டது.
தில்லி உயர்நீதிமன்றம் அரசியல் சாசன அறநெறி பற்றியும் கூறியது. அந்த தீர்ப்பின் வாசகங்களையே சற்று பார்ப்போம். பொது வழக்கத்தில் நாம் நெறி என்று எதை கருதுகிறோமோ எந்தச் செயல்களைக் கண்டிக்கிறோமோ அதன் அடிப்படையில் அரசியல் சாசனத்தின் ஷரத்து 21இன் பாதுகாப்பை அகற்றுவது முறையல்ல. அரசியல் சாசனம் எந்த கோட்பாடுகளை மதிக்கிறதோ அதன் அடிப்படையில் அமையும் அரசியல் சாசன நெறியும் பொது நெறியும் ஒன்றல்ல. பொது நெறி நமக்கு இது சரி இது தவறு என்று மாறி மாறி வரும் அபிப்பிராயங்களின் அடிப்படையில் உருவாகும் ஒன்று. அரசின் அக்கறையைப் பாதுகாக்க ஒரு சட்டம் உள்ளது என்றால் அந்த அரசின் நலன், அக்கறை அரசியல் சாசன நெறியின் அடிப்படையில் இருக்க வேண்டுமே அன்றி பொது மக்களின் விருப்பு வெறுப்பின் அடிப்படையில் அமைக்க கூடாது.
இந்த அரசியல் சாசன நெறியை டாக்டர் அம்பேத்கர் அரசியல் சாசனம் இயற்றும் நேரத்தில் நடந்த விவாதங்களில் பெரிதும் வலியுறுத்தினார். இந்த நெறியை நாம் கவனத்துடன் வளர்க்க வேண்டும். இது தானாக வராது என்றும் கூறினார். மேலும் அவர் இந்தியர்கள் இந்த நெறியை கற்றுக்கொள்ளவேண்டும், ஏனென்றால் நமக்கு இன்று வரை ஜனநாயகம் என்பது மேல்பூச்சாகத்தான் உள்ளது என்றார்.
அரசியல் சாசன நெறி சமத்துவம் சார்ந்தது; நம்முடைய சுய கெüரவத்தை மதிப்பது; நம்முடைய தனித்தன்மையை மதிப்பது; நம்முடைய தன்வெளியை மதிப்பது. இந்த பிரச்னை சிலரைத் தானே பாதிக்கும் என்று ஒதுங்க முடியாது. எல்லாருக்கும் நம் அரசியல் சாசனத்தின் பாதுகாப்பு உண்டு. ஒருவருடைய அடிப்படை உரிமை பாதிக்கப்பட்டால், அது அரசியல் சாசன நெறிக்கு விரோதமாக உள்ளதா என்றுதான் உச்சநீதிமன்றம் பார்த்திருக்க வேண்டும்.
நம் தாய் முப்பது கோடி முகமுடையவள் என்றார் பாரதி. அந்த முகங்களில் மதம், மொழி, இனம், சாதி, வயது, பொருளாதாரம், அதிகாரம், திறன் இப்படி எவ்வளவோ வித்தியாசங்கள் காணலாம். பாலியல்பு வித்தியாசமும் அதில் ஒரு முகம். இம்முகங்களின் உள்ளே உள்ள மெய்ப்பொருள் ஒன்றுதான்.
கட்டுரையாளர்: உயர்நீதிமன்ற நீதிபதி (ஓய்வு)