கட்டுரைகள்

ஐந்தெழுத்து மந்திரம்

ஒரு நாட்டின் பரப்பளவு, உள்ளதை விட அதிகமாக முடியாது. கடல் வேறு சிறுகச்சிறுக உலக உஷ்ண உயர்வால் நிலத்தை ஆக்கிரமித்துக் கொள்கிறது.

ஆர். நட​ராஜ்

ஒரு நாட்டின் பரப்பளவு, உள்ளதை விட அதிகமாக முடியாது. கடல் வேறு சிறுகச்சிறுக உலக உஷ்ண உயர்வால் நிலத்தை ஆக்கிரமித்துக் கொள்கிறது. ஜனத்தொகை பெருக்கமும் நிலத்தின் தேவையை அதிகரித்துள்ளது. இதை சரிகட்ட செங்குத்தாக அடுக்குமாடி கட்டடங்கள் கட்டுவதைத் தவிர வேறு வழியில்லை.

ஒப்பளிக்கப்பட்ட நிலங்களில் எந்த அளவு எத்தனை உயரம் அடுக்கு மாடி கட்டடங்கள் நிறுவலாம் என்பதை பெருநகர வளர்ச்சி கழகம் நிர்ணயிக்கிறது. சில இடங்களில் ஒரு சதுர அடிக்கு ஒரு மடங்கிலிருந்து இரண்டு அல்லது இரண்டரை மடங்கு வரை கட்ட அனுமதி அளிக்கப்படுகிறது. குடியிருப்பு, தொழிற்சாலை, வணிக வளாகம் என்று தேவைக்கேற்றவாறு இடங்கள் பிரிக்கப்பட்டு கட்டட உரிமங்கள் வழங்கப்படுகின்றன.

நியூயார்க், சிகாகோ, பாரீஸ், துபாய் போன்ற பெருநகரங்களில் மிக உயரமான கட்டடங்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. துபாயில் "புர்ஜ் கலிஃப்' என்னும் இடத்தில் சமீபத்தில் நிறுவப்பட்ட வணிக வளாகத்தின் உயரம் 828 மீட்டர் (2,716 அடி), 160 அடுக்குகள். சிகாகோ சீயர்ஸ் டவர்ஸ், நியூயார்க் எம்பையர் ஸ்டேட் பில்டிங்க் போன்ற 100 மாடிகளுக்கு மேல் உயரமான கட்டிங்கள் நிலைத்து நின்று நகரத்திற்கு பெருமை சேர்க்கின்றன.

அஸ்திவாரம் வலிமையாக அமையவேண்டும். ஸ்திரத்தன்மைதான் கட்டடத்துக்கு பாதுகாப்பு அளிக்கும். நேஷனல் பில்டிங் கோட், தேசிய கட்டட நில ஆணைகள் 2005இல் இயற்றப்பட்டு, அதில் பாதுகாப்பாக கட்டடம் அமைய தேவையான விதிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் சுமார் 1,720 உயர்மாடிக் கட்டடங்கள் உள்ளன. சென்னை மற்றும் புறநகர் பகுதியில் மட்டும் 1,500க்கும் மேற்பட்ட கட்டடங்கள். 15 மீட்டருக்குமேல் உயரமான கட்டடங்கள் "அடுக்கு மாடிக்கட்டடங்கள்' என்று பிரிக்கப்பட்டு அதற்கு சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் (சி.எம்.டி.ஏ.) அனுமதி வழங்குகிறது. கட்டடம் அமையக்கூடிய சாலையின் விஸ்தாரம், தொழிற்சாலை, கேளிக்கை, குடியிருப்பு ஆகிய பாகுபாடுகளில் எதில் அந்த இடம் அடங்கும் என்பதை வைத்து அனுமதி வழங்கப்படுகிறது.

சாதாரணமாக தரை அளவு குறியீடு நிலப் பரப்பளவிற்கு தகுந்தாற்போல் இரண்டரை மடங்கு வரை வழங்கப்படுகிறது. முழுமையாக கட்டி முடித்த பிறகு அனுமதிக்கப்பட்ட வரம்புக்குள் கட்டப்பட்டிருக்கிறதா என்பது உள்ளாட்சி கட்டுமானப் பிரிவால் தணிக்கை செய்யப்படுகிறது.

தீயணைப்பு துறை மற்றும் காவல்துறை தணிக்கை செய்து தீ பாதுகாப்பு அதிகாரிகள், போக்குவரத்து போலீஸார் தடையின்மை சான்று வழங்குகின்றனர். தீ பாதுகாப்பு குறித்து, செய்ய வேண்டியவை, கூடாதவை பட்டியல் தரப்படுகிறது.

குடியிருப்புகள், மருத்துவமனைகள், தொழிற்சாலைகள், வணிக வளாகங்கள் திரை அரங்குகள், கல்விக் கூடங்கள் என்ற வகையில் கொடுக்கப்பட்ட விதிகள் பின்பற்றப்பட்டுள்ளதா என்பதை தணிக்கை செய்ய வேண்டும். கட்டடத்தின் ஸ்திரத்தன்மை, கட்டும்போது சிமெண்ட் - மண் கலவையின் அளவு, அஸ்திவாரம் கட்டட உயரத்திற்கு ஏற்றவாறு உபயோகிக்க வேண்டிய குறியீடுகளை கணித்து, கண்காணித்து முடிக்க வேண்டியது, பொறியாளர் மற்றும் கட்டடம் கட்டுவோரின் கடமை.

அரசு கட்டடங்களுக்கு பொதுப்பணித்துறை பொறுப்பேற்கிறது. தனியார் கட்டடங்களுக்கு சம்பந்தப்பட்ட பொறியாளரும், கட்டடம் கட்ட உரிமம் பெற்றவரும் பொறுப்பேற்பதுதான் நடைமுறையில் எல்லா நாடுகளிலும் உள்ளது. இதற்கு உள்ளாட்சிப் பொறுப்பில் உள்ளவர்களைக் குறைகூறுவது தவறு.

உதாரணமாக பல்வேறு வாகனங்கள் வெவ்வேறு தொழிற்சாலைகளில் தயாரிக்கப்பட்டு சாலைகளில் செல்கின்றன. அந்த வாகனங்கள் சாலைகளில் செல்வதற்கு போக்குவரத்து துறை உரிமம் மற்றும் சான்றிதழ் வழங்குகிறது. ஓட்டுநருக்கும் ஓட்டுநர் உரிமம் கொடுக்கப்படுகிறது. அந்த வண்டிகளில் மெக்கானிகல் பழுது இருந்தால் வாகனம் தயாரித்ததில், வாகனப் பராமரிப்பில் தவறு. விபத்து ஏற்பட்டால் விதிகளை மீறிய ஓட்டுநரின் தவறு. உரிமம் வழங்கிய போக்குவரத்துத்துறையை எவ்வாறு குறைகூற முடியும்?

எந்த ஒரு நிகழ்வையும் அரசியலாக்கி குறை கூறுவதில் பயனில்லை. ஆக்கபூர்மாக வருங்காலத்தில் எவ்வாறு இம்மாதிரி நேர்வுகள் தவிர்க்கப்பட வேண்டும் என்பதை யோசிப்பதுதான் முக்கியம்.

மெளலிவாக்கம் சம்பவத்தில் நிவாரணப் பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள முதலமைச்சரே நேரில் சென்று மீட்புப் பணிகளை பார்வையிட்டு, காயமுற்றவர்களுக்கு ஆறுதல் அளித்து, உயிரிழந்த குடும்பங்களுக்கு நிதியுதவிக்கு ஆணையிட்டு துரிதமாக நடவடிக்கை எடுத்தது எல்லோருடைய பாராட்டையும் பெற்றது. முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் ஒருபுறம், விசேஷ போலீஸ் புலன் விசாரணைக் குழு மறுபுறம். தவறு செய்தவர்கள் மீது உடன் நடவடிக்கையும், வருங்காலத்தில் இத்தகைய சம்பவங்கள் தவிர்க்கப்படும் என்பதும் உறுதி.

2004ஆம் வருடம் சுனாமி என்ற ஆழிப்பேரலை இந்திய துணை கண்டத்தை தாக்கியபோது தமிழக கடலோரப் பகுதிகள் வெகுவாக பாதிக்கப்பட்டன. உயிரிழப்பு அதிகம் ஏற்பட்டது. மொத்தத்தில் ஏழாயிரத்திற்கு மேற்பட்டவர்களும், சென்னை நகர கடலோரப் பகுதியில் மட்டும் 242 பேரும் உயிரிழந்தனர்.

இதற்குப் பிறகுதான் தேசிய அளவில் பேரிடர் மேலாண்மையை மத்திய அரசு அமைத்தது. பேரிடரை எதிர்கொள்ளவும், சேதாரத்தை குறைக்கவும் உயிர்களை காப்பாற்றவும், நிவாரணம் வழங்கவும், என்.டி.ஆர்.எஃப். என்ற தேதிய பேரிடர் மீட்புப் படை, பத்து பட்டாலியன்கள் நாட்டின் முக்கிய இடங்களில் நிறுவப்பட்டன. தென் மாநிலங்களுக்கு அரக்கோணத்தில் ஒரு பட்டாலியன் இயங்குகிறது.

ஒவ்வொரு பட்டாலியனிலும் 18 பிரிவுகள் உள்ளன. ஒவ்வொன்றிலும் பிரத்யேக மீட்புப் பணியில் விசேஷ பயிற்சி பெற்ற காவலர்கள் உள்ளனர். அவர்களிடம் நவீன இயந்திரங்கள், உபகரணங்கள் உள்ளன. எந்த ஒரு அசம்பாவிதம் நிகழ்ந்தாலும் அங்கு சென்று உதவ வேண்டும்.

2004ஆம் வருடம் தீயணைப்புப் படையை நவீனப்படுத்தவும் மேம்படுத்தவும் நீதியரசர் பக்தவத்சலம் தலைமையில் கமிஷன் அமைக்கப்பட்டது. கமிஷன் தனது பரிந்துரையில் தீயணைப்புத்துறை நவீனமயமாக்கல், மீட்புப் பணிகளில் செயலாற்றுவது எவ்வாறு என்பதை ஆராய்ந்து அதற்காக உபகரணங்கள் வழங்க வேண்டும் என்பதையும், தீ பாதுகாப்புக்கான தற்காப்பு நடவடிக்கைகள் பொது இடங்களில் மேற்கொள்ள வேண்டியது பற்றியும் விரிவாக கூறியுள்ளது.

போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகளுக்கான கருவிகள் வாங்குவதற்கும் அவற்றை பிரத்யேக வாகனங்களில் பொருத்தி அவை நடமாடும் தானியங்கி மீட்புப் பணி மையங்களாக செயல்படுவதற்கும் திட்டமிடப்பட்டது.

பேரிடர் இரு வகைப்பட்டது. இயற்கையால் உண்டாகும் பேரிடர், மனிதனின் அஜாக்கரதையாலும் சட்ட விரோத செயல்களாலும் ஏற்படும் சேதாரங்கள் என்று இருவகையாக பிரிக்கலாம். பூகம்பம், சுனாமி, புயல், வெள்ளம், கடும்மழை, நிலச்சரிவு, இவை இயற்கையால் விளைபவை. மரங்களை அழிப்பதாலும் இயற்கைக்கு மாறாக நாம் செயல்படுவதாலும் இயற்கை அன்னையின் சீற்றம், இவ்வாறு வெளிப்படுகிறது. மனிதனின் தீய செய்கைகளால், விதிமுறைகளை மீறுவதால், நாசவேலையில் ஈடுபடுவதால் ஏற்படும் நிகழ்வுகள் கொடூரமானவை.

இந்த இரண்டு வகை அபாயங்களையும் எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளது தமிழ்நாடு தீயணைப்புத்துறை. இந்தியாவில் உள்ள மாநிலங்களில் தீயணைப்பு மற்றும் மீட்பு துறைகளின் நிர்வாகம், செயல்திறன், நவீன கருவிகள் மற்றும் கட்டுமானங்கள் பற்றிய ஆய்வு செய்யப்பட்டது. தீயணைப்பு துறை, பக்தவத்சலம் கமிஷன் பரிந்துரை அடிப்படையில் நவீனமாக்கப்பட்டதால், தமிழ்நாட்டில் தீயணைப்புத்துறை மற்ற மாநிலங்களைவிட மெச்சத்தக்க வகையில் செயல்படுகிறது.

மெளலிவாக்கம் கட்டடம் இடிந்ததும் தீயணைப்புத்துறை மிக சிறப்பாக செயல்பட்டு காயமுற்ற 27 உயிர்களைக் காப்பாற்றியது. இத்தகைய இடிபாடுகளில் மீட்புப்பணி மிகவும் சிரமமானது. இடிந்தவற்றை அகற்றும் பொழுதே சிக்குண்டவருக்கு மேலும் காயம் ஏற்பட வாய்ப்புண்டு.

விரைவாக செயல்படல், நுணுக்கமாக இடிபாடுகளில் தேடுதல், காயமுற்றுவரை காப்பாற்றுதல், உடனடி மருத்துவ சிகிச்சை, தொழில் நுட்ப அடிப்படையில் ஆராய்ந்து செயல்படுதல் ஆகியவை மீட்புப்பணியின் முக்கிய அம்சங்கள். தூரதிருஷ்டி கேமராக்களை இடிபாடுகளின் இடையே நுழைத்து காயமுற்றவர்கள் எங்கிருக்கிறார்கள் என்பதை பார்க்க முடியும். தீயணைப்புப் பிரிவில் உள்ள இக்கருவி மிகவும் உதவியாக இருந்தது.

மோப்ப நாய்கள் காவல்துறைக்கு மட்டுமல்ல தீயணைப்புத்துறைக்கும் நண்பன். மோப்ப நாய்கள் பிரிவு இடிபாடுகளில் சிக்கியவரை மோப்பம் பிடித்து இனம் காண உதவும். மெளலிவாக்கத்தில் இந்த நாய்ப்படை காயமுற்றவர்களை காப்பாற்ற பெரிதும் உதவியது.

மீட்புப்பணியில் ஈடுபட்ட தீயணைப்பு பிரிவு, காவல்துறை, என்.டி.ஆர்.எஃப். படை வீரர்கள் மற்றும் வருவாய்துறை அதிகாரிகளை முதலமைச்சர் கெளரவித்தது, ஊக்குவிக்கும் விதத்தில் அமைந்தது.

அசம்பாவிதங்கள் நிகழாமல் தவிர்ப்பது ஒருபுறம். ஒருவேளை அவ்வாறு நிகழ்ந்தால் உடனடி போர்கால நடவடிக்கை எடுக்கப்பட்டு சேதாரத்தை குறைப்பது ஒரு முக்கிய அணுகுமுறை.

சென்னை போன்ற பெருநகரங்களில் பேரிடர் ஆளுமை மையங்கள் (டிஸாஸ்டர் ரிலீஃப் சென்டர்) அமைக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசு நேஷனல் டிஸாஸ்டர் மேனேஜ்மண்ட் அதாரிடி (சஈஙஅ) மூலம் அறிவித்துள்ளது. அதற்கான நிதி மாநகராட்சி மூலம் அளிக்கப்படும். சென்னையில் இந்த மையம் அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

நமது நாட்டில் செயற்கை உயிரிழப்பு 2013இல் 7,08,478. இதில் கட்டட குலைவால் 2013ஆம் வருடம் 1,355 உயிரிழந்தனர். அதிகமாக உத்தர பிரதேச மாநிலத்தில் உயிரிழப்பு 279. தமிழ்நாட்டில் இத்தகைய விபத்துகளால் சராசரி 70 பேர் உயிரிழக்கின்றனர்.

அதனால்தான் பேரிடர் மேலாண்மை கழகம் முக்கிய நகரங்களில் பேரிடர் தணிப்பு மையங்கள் நிறுவ வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளது.

விபத்துக்கள் தவிர்க்கப்பட வேண்டியவை. அதற்கு பல்முனை நடவடிக்கை அவசியம். எந்த நீண்ட பயணத்திற்கும் துவக்கம் முதல் அடி. கட்டடங்களுக்கு அடிதளம், அடிக்கல், கிராமங்களில் கூறுவது போல கடக்கால் தான் முதல் அடி.

இந்த ஐந்தெழுத்து மந்திரம்தான் கட்டடத்தை உறுதிப்படுத்துகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மகாராஷ்டிரத்தில் 2025-ல் மட்டும் 41 புலிகள் உயிரிழப்பு!

இருதரப்பு உறவை வலுப்படுத்துவது குறித்து பேச்சு : மோடி

எய்ம்ஸ் பணிகளை முடக்கும் திமுக: அண்ணாமலை! | செய்திகள்: சில வரிகளில் | 25.02.26

”அரசியல்வாதிகளுக்கு பாடமாக விளங்கியவர்!” நல்லகண்ணு குறித்து முதல்வர் முக ஸ்டாலின்!

காதல் ரீசெட் ரிபீட் டிரைலர்!

SCROLL FOR NEXT