கட்டுரைகள்

வறுமைக் குறைப்பில் குறுநிதிகளின் பங்கு!

எஸ். ராமன்

சமீபத்திய புள்ளி விவரப்படி, இந்திய மக்கள் தொகையில் 50 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள் வங்கி கணக்கு பழக்கமில்லாதவர்கள். அதிக செலவில்லாத, எளிமையான வழிமுறைகள் மூலம், அவர்களை வங்கி சேமிப்பு பழக்க வட்டத்திற்குள் (Financial inclusion) கொண்டு வருவதற்கான முயற்சிகளில் இந்திய அரசாங்கம் ஈடுபட்டிருக்கிறது.

2016க்குள் 18 வயதான அனைவருக்கும் ஒரு எலெக்ட்ரானிக் வங்கி கணக்கு வசதி என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருப்பதாக சமீபத்தில் வெளியான ரிசர்வு வங்கியின் ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது. ஆனால், எதிர்நோக்கி இருக்கும் பல்வேறு தடைக்கற்களால், இந்த உயர் இலக்குகளை எட்ட நீண்ட காலமாகும். வங்கி கணக்கு பழக்கமில்லாதவர்களுக்கு, வங்கி கடன் உதவிகள் நேரடியாக போய் சேராது என்பதுதான் இதன் மோசமான பக்க விளைவாகும்.

இத்தகைய சூழ்நிலையில், கல்வி, திருமணம், மருத்துவம் போன்ற தங்கள் அவசரத்தேவைகளுக்கு, ஏழைகள் கந்து வட்டிக்காரர்களை நாட வேண்டிய அவசியம் உருவாகிறது. அம்மாதிரிக் கடனாளிகள், 150 முதல் 300 சதவீதம் வரையிலான வட்டி என்ற அரக்கனின் கோரப்பற்களுக்கு இறையாகி, தங்கள் வசம் இருக்கும் சிறிதளவு மண்ணையும், பொன்னையும் இழக்கின்றனர்.

ஏழ்மை நிலையில் இருக்கும் மக்களின் தேவைகளுக்கேற்ப, கடனுதவி வழங்குவதன் மூலம் அவர்களின் அடித்தள பொருளாதர நிலைமையை மாற்றி அமைப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளில் ஒன்றுதான் குறுநிதி அமைப்பு (Micro Finance institutions) ஆகும்.

வங்க தேசத்தில், முகமது யூனஸ் என்பவரால், வங்கி கடன் உதவி எட்டாத ஏழைகளுக்கு உதவும் நோக்கத்துடன் துவங்கப்பட்ட கிராமீண் வங்கியின் (Grameen Bank) செயல்பாடுகள்தான், உலகெங்கும் இந்த முயற்சிகளுக்கு முன்னோடியாக திகழந்தது எனலாம். அடித்தள மக்களின் பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றத்தைக் குறிக்கோளாகக்கொண்டு பெருமளவில் அவர்களுக்கு சிறு கடனுதவிகள் வழங்கி புதிய புரட்சியை ஏற்படுத்திய அந்த வங்கியின் உயர் நோக்கங்களின் வெற்றியை பாராட்டும் விதமாக, வங்கி மற்றும் அதன் நிறுவனரான யூனஸýக்கு 2006ஆம் ஆண்டு நோபல் சமாதான பரிசு (Nobel Peace prize) வழங்கப்பட்டது.

"அடித்தள மக்களின் வறுமைத் தளைகளை உடைத்தெறியும் பொருளாதாரப் பங்கீடுகள் மூலம்தான், உலகின் எந்த பகுதியிலும் உண்மையான பொருளாதாரப் புரட்சியை ஏற்படுத்த முடியும். ஏழைகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது என்பது, உலக அமைதியின் அடித்தளத்தை பலப்படுத்துவதாகும்' என்று பரிசை பரிந்துரைத்த நார்வே நோபல் குழு தன் கருத்தை பதிவு செய்தது. நீடித்த வறுமை என்பது வன்முறை போன்ற பல சமூக அவலங்கள் ஏற்படப்போவதற்கான அபாய சங்காகும்.

பயனாளிகளின் வசிப்பிடத்திற்கே சென்று, அவர்களின் வாழ்க்கை முறைகளைப் புரிந்துகொண்டு, அவர்களுக்கேற்ற தொழிலை தேர்ந்தெடுப்பதற்கு தேவையான ஆலோசனைகளை வழங்கி, அதற்குரிய கடன் திட்டங்களை விளக்கி, எளிதான தவணை முறையில் வாங்கிய கடனை திருப்பி செலுத்தும் வண்ணம் பயிற்சி அளிப்பது போன்ற செயல் திறன்களால் குறுநிதி நிறுவனங்கள், வங்கிகளிடமிருந்து தனித்து நிற்கின்றன.

ஏழை மக்களை, சுய சம்பாத்தியத்தின் மூலம் அவர்கள் சிக்கித் தவிக்கும் கடன்களிலிருந்து மீட்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்திற்கு மாறாக, அதிக வட்டி, கடன் வசூலில் தவறான அணுகுமுறைகள் போன்ற தவறுகளால், ஆந்திர மாநிலத்தில் செயல்பட்ட சில தனியார் குறுநிதி நிறுவனங்களின் செயல்பாட்டில் 2010ஆம் ஆண்டு, மாநில அரசு தலையிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஆனால், அந்த துரதிருஷ்டவசமான சம்பவங்களிலிருந்து, தேவையான பாடங்கள் கற்றுக்கொள்ள வேண்டியதாயிற்று என்பது ஆறுதலான விஷயமாகும்.

வங்கி சாரா நிதி நிறுவனங்களின் ஒரு பகுதியாக குறுநிதி நிறுவனங்கள் பிரிக்கப்பட்டு, அவைகளின் செயல்பாடுகள் ரிசர்வ் வங்கியால் முறைப்படுத்தப்பட்டன. அதன்படி, கிராமப்புறங்களில் வசிப்பவர்களில், குடும்ப வருட வருமானம் 60,000 ரூபாய்க்கு மேற்படாத பெண்கள், கூட்டு கடன் குழுக்களில் (Joint Liability Groups) அங்கத்தினராக சேர்க்கப்படுகின்றனர்.

ஒரே சமயத்தில், அவர்கள் இரண்டுக்கும் மேற்பட்ட நிறுவனங்களிலிருந்து, 50,000 ரூபாய்க்கு மேல் கடன் பெற்றிருக்கக்கூடாது. துவக்க வட்டி 26 சதவீதத்திற்கு மிகையாகக் கூடாது. வட்டியை, செலுத்திய தவணை குறைந்த (Reducing balances) கடன் தொகையில் கணக்கிடவேண்டும். வலுக்கட்டாய கடன் வசூல் முறை (Coercive recovery methods) அறவே தவிர்க்கப்படவேண்டும்.

குறுநிதி நிறுவனங்கள், பயனாளிகளின் கடன்களை பற்றிய விவரங்கள், கூட்டமைப்பில் இயங்கும் மதிப்பீட்டு நிறுவனத்திடம் (Credit bureau) பதிவு செய்யப்படவேண்டும். அந்த அமைப்பின் மூலம் பயனாளிகளின் கடன் விவரங்களை அதன் அங்கத்தினர்களான அனைத்து குறுநிதி நிறுவனங்களும் அறிய முடியும்.

சொத்துகளை அடமானம் கோராத சிறு கடன்களை வழங்குவதன் மூலம், கடனாளிகளுக்கு புதிய சொத்துகள் உருவாகுவதற்கு (Asset creation) குறுநிதி நிறுவனங்கள் வழி வகுக்க வேண்டும். ஒரு குழுவில் பத்து முதல் முப்பது பேர் வரை பெண் அங்கத்தினர்கள் இருப்பார்கள். அவர்கள் ஒருவருக்கொருவர் உத்தரவாத கையெழுத்து (Guarantee) போட்டுக்கொள்கின்றனர். ஒரு அங்கத்தினர், தான் வாங்கிய கடனை செலுத்தவில்லை என்றால், மற்றவர்கள் அந்தக் கடனை பகிர்ந்து திருப்பி செலுத்தவேண்டும்.

ஒருவருக்கொருவர் நன்கு அறிமுகமானவர்களே ஒரு குழுவில் அங்கத்தினர்களாக சேர்க்கப்படுகின்றனர். குறுநிதி நிறுவனங்களுக்கான வெளிப்படையான செயல்பாட்டு அணுகுமுறை (Fair Practices Code) வகுக்கப்பட்டு, அவை முறையாகப் பின்பற்றப்படுகின்றனவா என்று கண்காணிக்கப்படுகிறது. 10,000 முதல் 50,000 ரூபாய் வரையிலான சிறு கடன்களை குறுநிதி நிறுவனங்கள் மூலம் பெறமுடியும்.

இம்மாதிரி முறைப்படுத்தப்பட்ட வழிமுறைகளினால், தனியார் குறுநிதி நிறுவனங்களின் செயல்பாடுகள் பெருமளவு சீரடைந்து விட்டது என்று கருதலாம். கந்துவட்டிக்காரர்களுக்கு மாற்றாகச் செயல்படும் இந்த நிறுவனங்களை கிராம மக்கள், தங்களின் உற்ற நண்பனாக கருதுகின்றனர். அதுவே, இந்த நிறுவனங்களின் வியாபார பெருக்கத்துக்கு காரணமாகும்.

இந்த மாற்றங்களினாலும், அதில் பொதிந்திருக்கும் வியாபார வாய்ப்புகளினாலும் ஈர்க்கப்பட்டு, சிறு கடன்களின் திசையில் காலடி எடுத்து வைக்க தயங்கிய வங்கிகள், குறுநிதி நிறுவனங்களுக்கு பெருமளவில் கடன் வழங்க ஆரம்பித்திருப்பதன் மூலம், கிராமப்புற பொருளாதார மற்றும் சமூக நல வளர்ச்சியில் மறைமுகமாக பங்கெடுக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி கொள்கின்றன.

தனியார் குறுநிதி நிறுவனங்களில் ஒருவருக்கொருவர் உத்தரவாதம் என்ற திட்டத்தின் கீழ் வழங்கப்படும் கடன்களில் 90 சதவீதம் வரை திரும்ப செலுத்தப்பட்டுவிடுவதால், வாராக்கடன்கள் என்பது குறைந்து காணப்படுகிறது. பெண்களின் முன்னேற்றத்திற்காக (Women empowerment) வழங்கப்படும் இம்மாதிரி சிறு கடனுதவிகள், சரியான வழியில் பயன்படுத்தப்படுவதை கண்காணிக்கும் (Loan utilisation check) வழிமுறைகள் அமலில் உள்ளன.

கடனில், ஒரு தவணையை செலுத்தவில்லையென்றாலும், அந்த விவரங்கள் மதிப்பீட்டு நிறுவனத்துக்கு (Credit bureau) தெரிவிக்கப்பட்டுவிடும். அந்த கடன் தொகையை செலுத்தும்வரை, கடனாளி வேறு நிதி நிறுவனங்களில் கடன் பெற

முடியாது.

மூன்று கோடிக்கு மேல் பயனாளிகளை உள்ளடக்கிய 150க்கும் மேற்பட்ட தனியார் குறுநிதி நிறுவனங்கள் நாடு முழுவதும் தற்போது இயங்கி கொண்டிருக்கின்றன. இந்நிறுவனங்கள் கடனாக வழங்கிய தொகை 25,000 கோடி ரூபாய்க்கும் மேலாகும்.

சமீபத்தில், தென் மாவட்டங்களில் இயங்கிக் கொண்டிருக்கும் சில தனியார் குறுநிதி நிறுவனங்களின் செயல்பாடுகளை மேற்பார்வையிடும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, பல பயனாளிகளை அவர்களின் வசிப்பிடங்களில் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது.

சிறு கடனுதவிகளைப் பெற்ற ஏராளமான பெண்கள், தையலகம், உணவுப் பொருள்கள் தயாரிப்பு, மளிகைக் கடை, துணி வியாபாரம், காய்கறி பயிரிடுதல் மற்றும் விற்பனை, கோழி வளர்ப்பு, கால்நடை பராமரிப்பு போன்ற பல தொழில்களில் ஈடுபட்டு, வருமானத்தை பெருக்கி, கடன் தவணைகளை முறையாக செலுத்தி, பெண் குழந்தைகளை கல்லூரி படிப்புக்கு அனுப்பும் உண்மைச் செய்திகளை என்னுடன் பகிர்ந்து கொண்டனர்.

அவர்களின் அன்றாட வாழ்க்கையில் குறுநிதி நிறுவனங்கள், ஒரு முக்கிய அங்கம் வகிப்பதை அவர்களின் நன்றி கலந்த வெளிப்படையான பேச்சிலிருந்து உணர முடிந்தது.

லாப நோக்கம் மட்டுமின்றி, ஓரளவு சமூக பார்வையையும் உள்ளடக்கிய குறுநிதி நிறுவனங்கள் ஏழைகளின் வாழ்வில் ஒளியேற்ற வல்லவை. அரசியல் தலையீடுகளைத் தவிர்த்து, ரிசர்வ் வங்கியின் வழிமுறைகளுடன் செயல்பட்டால், வறுமைக் குறைப்பில் குறுநிதிகளின் பங்கு குறிப்பிடத்தக்கதாக இருக்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெர்லின் திரைப்பட விழாவில் அசாம் பெண் இயக்கிய படத்துக்கு விருது!

பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு!

#t20wc | இலங்கை bowling எப்படி இருக்கு? | T20 World Cup Review | #SLvsENG

#t20 | இலங்கை Batting எப்படி இருக்கு? | T20 World Cup2026 Review | #SLvsENG |

தில்லி: வீட்டில் ஏற்பட்ட தீயை அணைக்க முயன்றபோது சிலிண்டர் வெடித்து 13 பேர் காயம்

SCROLL FOR NEXT