முகப்பு
கட்டுரைகள்

பரிந்துரைகள் வேண்டாம்

முக்கிய பிரமுகர்களின் பரிந்துரையின்பேரில், மதுரை மாவட்டத்தில் 2012-ஆம் ஆண்டு பள்ளிக் காவலாளிகள் மற்றும் துப்புரவு ஊழியர்களை

Updated On : 5 ஜனவரி, 2024 at 6:57 AM
பகிர்:

முக்கிய பிரமுகர்களின் பரிந்துரையின்பேரில், மதுரை மாவட்டத்தில் 2012-ஆம் ஆண்டு பள்ளிக் காவலாளிகள் மற்றும் துப்புரவு ஊழியர்களை நியமித்ததில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து சி.பி.ஐ. விசாரிக்கக் கோரும் மனு குறித்து உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை அதிரடியான உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

நியமிக்கப்பட்ட பள்ளிக் காவலாளிகள் 6 பேரின் நியமனத்தை ரத்து செய்ததோடு, புதிதாகத் தேர்வு நடத்தி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்றும் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

போக்குவரத்துத் துறையில் நடத்துநர்கள், ஓட்டுநர்கள், சத்துணவுத் துறையில் மைய அமைப்பாளர்கள், அங்கன்வாடி மைய அமைப்பாளர்கள், நியாய விலைக் கடைப் பணியாளர்கள் போன்ற பல அரசுத் துறை பணி நியமனங்கள் எப்போதும் சர்ச்சையை ஏற்படுத்துகின்றன.

மேற்கண்ட பணி நியமனங்களுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு, தேர்வுகள் நடைபெற்றாலும், அது கண்துடைப்பாகவே இருக்கும் என்பதுதான் விண்ணப்பதாரர்களின் கூற்று.

பெரும்பாலும் அதிகமான தொகையை அளிக்கும் விண்ணப்பதாரருக்கே பணி நியமனம் தரப்படும் என்ற கருத்து எப்போதுமே இருக்கும்.

செல்வாக்கு படைத்த முக்கிய பிரமுகர்கள் தரும் நபர்களின் பெயர்கள், ஆளும்கட்சியின் மாவட்டச் செயலர் வாயிலாக அளிக்கப்படும் பெயர்களிலேயே மேற்கண்ட பணிகளின் நியமனங்கள் இருக்கும். ஆட்சிகள் மாறினாலும், இவ்விஷயத்தில் காட்சிகள் மாறுவதில்லை என்பதே நிதர்சன உண்மை.

அதாவது, உள்ளூரில் கட்சிப் பொதுக் கூட்டங்கள், நிகழ்ச்சிகள், போராட்டங்கள் போன்றவற்றை மேற்கொள்ளத் தேவைப்படும் செலவினங்களுக்காகவே இந்தப் பணி நியமனங்கள் கட்சி நிர்வாகிகள் வகிக்கும் பொறுப்புக்கேற்ப பிரித்து வழங்கப்படுகிறது என்பது சில அரசியல் பிரமுகர்களின் கருத்து.

"அரசுத் துறைகளில் ஊழியர்கள், அலுவலர்கள் உள்ளிட்ட பணி நியமனங்கள் தேர்வாணையம் மூலமாக நியாயமான, நேர்மையான முறையில் நடத்தப்படுகின்றன. இப்போது இடமாறுதல்கூட கலந்தாய்வு முறையில் நடக்கிறது.

ஆனால், அரசியல் கட்சிப் பிரமுகர்கள் சம்பாதிக்கவும், அரசியல் பிரமுகர்களுக்கு நெருக்கமானவர்கள் அரசுத் துறைகளில் பணி நியமனம் பெறவும் குறிப்பிட்ட சில அரசுத் துறைகளில் பணி நியமனங்கள் ஒதுக்கப்படுகிறது.

இதற்காகவே மேற்கண்ட துறைகளில் பணி நியமனங்கள் அரசியல் பிரமுகர்களின் வழிகாட்டுதலோடு நடக்கிறது' என்பதே அரசியல் பிரமுகர்களின் கூற்று.

ஆளும் கட்சிப் பிரமுகர்கள் அளித்த பரிந்துரைப் பட்டியலின்படி ஊழியர்களை நியமிக்காமல், நியாயமான முறையில் பணி நியமனங்களை மேற்கொண்ட சில ஆட்சியர்கள் சாதாரண துறைகளுக்கு அடுத்த சில நாள்களிலேயே பணியிட மாற்றம் செய்யப்பட்ட சம்பவங்களும் நிகழ்ந்ததுண்டு.

ஏழை, நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர்கள் மேற்கண்ட துறைகளில் வாய்ப்புகளை நாடும்போது, அவர்களுக்கு நியாயம் மறுக்கப்படுகிறது. தகுதியிருப்பதால் வாய்ப்பு கிடைக்கும் என்று நம்பிக்கையொடு இருக்கும் இளைஞர் அல்லது இளம் பெண்ணின் கனவு சிதைக்கப்படுகிறது என்பதை மறுக்க இயலாது.

பணம் தருவோருக்கும், செல்வாக்கு படைத்தோரின் வாரிசுகளும்தான் பணி நியமனம் பெறும் நிலை ஏற்படுகிறது. இந்நிலையை மாற்ற அரசு முன்வர வேண்டும்.

அரசுத் துறைகளில் ஊழியர்கள், அலுவலர்களை நியமிக்க தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் மூலம் வெளிப்படையான தேர்வுகளை நடத்தி முடிவுகளை அறிவித்து வருதல், அரசுத் துறைகளில் பணியிட மாற்றங்களை கவுன்சலிங் முறையில் நடத்துதல் என அதிரடியான நடவடிக்கைகளை எடுத்தவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா.

இந்த நிலையில், அரசியல் பிரமுகர்களின் பட்டியலின்படி நியமிக்கப்படும் சில அரசுத் துறைகளின் ஊழியர்கள் நியமனங்களிலும் வெளிப்படையான தேர்வை நடத்தவும், அரசியல் பிரமுகர்களின் தலையீட்டைத் தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கவும் முன் வர வேண்டும்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் வாயிலாகவே, அரசின் அனைத்துப் பணி நியமனங்களையும் மேற்கொள்ள அரசு நடவடிக்கை எடுத்தால், ஏழை, நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் பெரிதும் பயன் அடைவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.