கட்டுரைகள்

தெய்வமும் உண்டுகொல்?

அண்மையில் தில்லி மாநகரத்திலே வெள்ளைப் புலி ஒன்று, ஓர் இளைஞரைக் குற்றுயிரும் கொலையுயிருமாகச் சாகடித்த செய்தி, நம்முடைய ரத்தத்தை எல்லாம் ஒரு கணம் உறைய வைத்தது.

தி. இராசகோபாலன்

அண்மையில் தில்லி மாநகரத்திலே வெள்ளைப் புலி ஒன்று, ஓர் இளைஞரைக் குற்றுயிரும் கொலையுயிருமாகச் சாகடித்த செய்தி, நம்முடைய ரத்தத்தை எல்லாம் ஒரு கணம் உறைய வைத்தது. ஆனால், கடந்த நூறு ஆண்டுகளாக ஹரியாணா மாநிலத்தில் "மேகாட்' எனும் வரலாற்றுப் புகழ்மிக்க நகரத்தில், பெண்களாகிய புள்ளி மான்களை, ஆண்களாகிய வெள்ளைப் புலிகள் தொடர்ந்து வேட்டையாடி வருகின்றன.

மேகாட் பகுதியில் ஆண்கள் 1,000 பேர் பெண்கள் 907 பேர் எனும் விகிதாசாரத்தில்தான் இருக்கிறார்கள். அதனால், அஸ்ஸாமிலிருந்தும், மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், பிகார், ஒடிசா போன்ற மாநிலங்களில் கொத்தடிமைகளாக இருக்கும் சின்னஞ்சிறு பெண்களை விலைக்கு வாங்கி, புரோக்கர்கள் மேகாட், தில்லி, குஜராத் போன்ற மாநிலங்களில் விற்பனை செய்கின்றனர்.

இப்படி விற்கப்படும் பெண்களுக்கு "மொல்கி' என்றும் "பெரோ' என்றும் பெயர்கள் வழங்கப்படுகின்றன.

மேற்கத்திய நாடுகள் பெண்மையை மதிக்கின்றன. நம்நாடு பெண்மையைத் துதிக்கின்றது. ஆனால், அதே நேரத்தில் மிதிக்கவும் செய்கிறது. "ஒரு பாரதபுத்திரன் எந்த இடத்திலும் தனியே நடக்க முடியாது; அவனோடு ஐந்தாயிரம் ஆண்டுக்காலக் கலாசாரமும் கூடவே நடக்கும்' என்றாரே சுவாமி விவேகானந்தர். அவருடைய வாக்கிற்கு ஏற்பட்ட சோதனையைப் பார்த்தீர்களா?

"வேதம் பொன்னுருக் கன்னிகை யாகியே மேன்மை செய்தெமைக் காத்திடச் சொல்வதோ?' எனப் பாடினாரே பாரதியார், அந்த மாகவிஞன் இன்றிருந்தால் இந்தச் சூழலை எண்ணிக் கலங்கிக் கண்ணீர் வடிக்க மாட்டானா?

சாய்ரா என்ற 12 வயதுப் பெண்ணை அவளுடைய தாய் மாமனே 500 ரூபாய்க்கு விலைக்கு வாங்கி, அவனே அவளைப் பாலியல் வன்முறைக்கு உள்படுத்தி இருக்கிறான். பின்னர் பசன்கா கிராமத்திலுள்ள ஒருவனுக்கு மூன்று பங்கு விலைக்கு விற்றிருக்கிறான்.

அந்த மனிதன் ஆறு மாதங்களுக்குப் பிறகு ஜமீல் என்பவருக்கு விற்பனை செய்துவிட்டான். ஜமீலோடு 24 ஆண்டுகள் வாழ்ந்துவிட்ட சாய்ரா சொல்கிறாள்:

"இன்றைக்கு என்னுடைய பேரன் - பேத்திகள் உருளைக்கிழங்கு சிப்ஸ் வாங்குவதற்கும் குளிர்பானங்களுக்கும் ஒவ்வொரு நாளும் ரூ.500 செலவழிக்கிறார்கள்.

ஆனால், அக்குழந்தைகளுக்கு நான் 500 ரூபாய்க்கு அடிமாட்டு விலைக்கு பலருக்கு மாறிமாறி விற்கப்பட்டது தெரியாதே'. "சாதம் படைக்கும் கரங்கள் வேதம் படைக்கவும் வேண்டும்' என்றாயே பாரதி; உன்நாட்டுப் பெண்கள் நிலையைப் பார்த்தாயா?

சஞ்சிதா எனும் 11 வயது அஸ்ஸாமியப் பெண்ணை, அவளுடைய மாமன் தில்லி செங்கோட்டையைக் காட்டுவதாகச் சொல்லி அழைத்துப் போனான்.

ஆனால், தில்லியில் 30 வயதுக்காரன் ஒருவனுக்கு நல்ல விலைக்கு விற்றுவிட்டான். அந்த தில்லிக்காரனுக்கு ஏற்கெனவே திருமணமாகி, ஆறு குழந்தைகள் உண்டு. அவன் சஞ்சிதாவை மிருகவெறிக்கு உள்ளாக்கி, அவளுக்குக் கொடுத்த விலையைப் பெற, ஒவ்வொரு வீடாகப் பத்துத் தேய்க்க வைத்துவிட்டான்.

ஒரு வருடத்தில் கொடுத்த விலை வந்தவுடன், அவன் அவளை ஹட்டின் கிராமத்திலுள்ள ஒருவனுக்கு விற்றுவிட்டான். வாங்கியவனும் ஐந்து மாதங்களுக்குப் பிறகு 52 வயதுடைய ஒருவனுக்கு 30,000 ரூபாய்க்கு அவளை விற்றுவிட்டான்! சஞ்சிதா ஒரு ஏக்கப் பெருமூச்சு விட்டு, "பரவாயில்லை! இன்றைக்கு என்விலை பன்மடங்கு உயர்ந்துவிட்டதே' என்றாள்!

"மங்கையராகப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா! பங்கயக் கைநலம் பார்த்தலவோ, இந்தப் பாரில் அறங்கள் வளருமம்மா' என்று பாடினீர்களே, கவிமணி அவர்களே! நம் நாட்டில் மங்கையர் படுகின்ற பாடுகளைப் பார்த்தீர்களா?

சகீனா எனும் 16 வயதுடைய அஸ்ஸாமியப் பெண்ணை ஒரு தில்லிக்காரன் வாங்கிப் போய், அவளை மீண்டும் ஹரியாணாவைச் சேர்ந்த பின்காட் கிராமத்தானுக்கு, இரண்டு மடங்கு விலைக்கு விற்றுவிட்டான். அவனோ, தன்னுடன் பிறந்த நான்கு சகோதரர்களுக்கும் சேர்த்து, அவளை மனைவியாக்கினான். நல்லவேளையாகச் சகீனாவின் சகோதரன் சான்சல், அந்தக் காட்டு மிருகங்களிடமிருந்து அவளை மீட்டுப் போனான்.

அஸ்ஸாமில் ஜமீலாவை, ஒரு பசுமாட்டை விலையாகக் கொடுத்து அழைத்துப் போனான் ஓர் ஹரியாணாக்காரன்! அந்த மலரைத் துய்த்து முடித்த பிறகு ஒரு புரோக்கர் மூலம், அவளை மூன்று மடங்கு விலைக்கு இன்னொரு மிருகத்திடம் விற்றான், அந்தக்காமுகன்.

புரோக்கரும் அவளை ஒருமுறை பாலியல் வன்முறைக்கு உள்படுத்திவிட்டு, கடைசியாக ஒரு ரிக்ஷாக்காரனுக்கு விற்றுவிட்டான். அந்தச் சைக்கிள் ரிக்ஷாக்காரனுக்கு ஏற்கெனவே ஏழு குழந்தைகள்.

"மைத்ரேயி, கார்க்கி போன்ற வேதக்காலத்துப் பெண்கள், வேத விற்பன்னர்களோடும் அறிவு ஜீவிகளோடும் அமர்ந்து வாதிட்டக் காலம் போய்விட்டதே' (மதுரத் தேமொழி மங்கையர் உண்மை தேர்மாதவப் பெரியோருடன் ஒப்புற்றே, முதுமைக் காலத்தில் வேதங்கள் பேசிய முறைமை மாறிடக் கேடு விளைந்ததாம்) என்று அன்று பாரதி பாடியது, இன்றுவரை நீளவேண்டுமா?

லாகிரிப் பொருள்களும், அவற்றால் விளையும் குற்றங்களும் குறித்து ஐ.நா. அலுவலகம் 2013-ஆம் ஆண்டு ஓர் ஆய்வு அறிக்கை வெளியிட்டது. அவ்வறிக்கை வருமாறு:

"ஹரியாணாவில் 10 ஆயிரம் வீடுகளில் ஒரு சோதனை நிகழ்த்தப்பட்டது. அவ்வீடுகளில் 9 ஆயிரம் பெண்கள் பிற மாநிலங்களிலிருந்து (மேற்கு வங்கம், ஜார்கண்ட், பிகார், ஒடிசா) வாங்கப்பட்ட பெண்ணாக இருந்தார்கள்.

அவ்வாறு வாங்கப்படும் பெண்கள் 12 வயதிலிருந்து 21 வயது வரை உள்ளவர்கள். அவர்கள் 32 வயது அடைகின்ற வரையில், பலமுறை மறு விற்பனை செய்யப்பட்ட பெண்களாக இருக்கிறார்கள்' எனும் அறிக்கையைப் படித்து, "பாரத நாடு பழம்பெரும் நாடு-நீரதன் புதல்வர்' என்றும் "பாருக்குள்ளே நல்ல நாடு-எங்கள் பாரத நாடு' என்றும் தோள் கொட்ட முடியுமா?

மத்தியப் பிரதேசத்தில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட வகுப்புகளைச் சேர்ந்த பெண்களுக்குப் பயிற்சி கொடுத்து, அவர்களை உத்தரப் பிரதேசத்திலும், ராஜஸ்தானிலும், குஜராத்திலும் இருக்கும் ஜெயின்களுக்கும் பிராமணர்களுக்கும் விற்றுவிடுகின்ற கொடுமையும் நடக்கின்றது.

"எம்பவர் பியூபிள்' எனும் அரசு மானியம் பெறும் ஓர் அமைப்பு கணக்கெடுத்ததில், விலைக்கு விற்கப்படும் பெண்களைப் பற்றிய ஒரு புள்ளிவிவரம் கிடைத்தது. 79 விழுக்காடு பெண்கள் இஸ்லாமியச் சமுதாயத்தைச் சார்ந்தவர்களாகவும், 17 விழுக்காடு பெண்கள் மலைவாழ் வகுப்பைச் சார்ந்தவர்களாகவும், 4 விழுக்காடு பெண்கள் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர்களாகவும் இருக்கிறார்கள்.

எந்த வகுப்பைச் சார்ந்தவர்களாக இருந்தாலும், அவர்கள் எல்லாம் இந்தியப் பெண்கள் அல்லவா?

"அப்பெண்களில் 56 சதவீதப் பெண்கள் இரண்டு முறை விற்கப்பட்டவர்களாகவும், 21 சதவீதப் பெண்கள் மூன்று முறை விற்கப்பட்டவர்களாகவும், 6 சதவீதப் பெண்கள் பல தடவை விற்கப்பட்டவர்களாகவும் இருக்கிறார்கள்' என்றும் அவ்வறிக்கை சொல்லுகிறது.

அப்படி விலைக்கு வாங்கப்படும் பெண்களுடைய பெயர்கள் வாக்காளர் பட்டியலிலோ, குடும்ப அட்டையிலோ காணப்படுவதில்லையாம். மேலும் அப்பெண்கள் சமூக அமைப்புச் சார்ந்த விழாக்களிலோ, பொது விழாக்களிலோ கலந்து கொள்ள முடியாதாம்.

அப்பெண்கள் மனைவியாகப் பாவிக்கப்பட்டாலும், சட்டரீதியாக அவர்கள் மனைவியாக முடியாதாம். ஹரியாணாவில் இருக்கும் மேவாட் என்னும் இடம், போக்குவரத்து ஊழியர்களுக்கும் லாரி ஓட்டுநருக்கும் சரியான வேட்டைக்காடாக இருந்து வருகிறது.

"பெண்களை விலை கொடுத்து வாங்குவது, மேகாட்டில் நெடுங்காலமாக நடந்து வருகிறது. இதில் ஒன்றும் பிரச்னை இல்லை. இதுவரை என்னிடத்தில் எந்தப் புகாரும் வந்ததில்லை' எனச் சொல்லுகிறார், அந்த மாநிலத்தின் போக்குவரத்துத் துறை அமைச்சர் அஃப்டாப் அகமது.

"மாட்டை அடித்து வசக்கித் தொழுவினில் மாட்டும் வழக்கத்தைக் கொண்டு வந்தே, வீட்டினில் எம்மிடம் காட்ட வந்தார், அதை வெட்டிவிட்டோமென்று கும்மியடி' எனவும் "நல்ல விலைகொண்டு நாயை விற்பாரந்த நாயிடம் யோசனை கேட்பதுண்டோ? கொல்லத் துணிவின்றி நம்மையும் அந்நிலை கூட்டி வைத்தார், பழிகூட்டி விட்டார்' எனவும் பாடிய மகாகவிக்கு நாம் செலுத்துகின்ற ஆராதனை சரிதானா?

கட்டுரையாளர்: பேராசிரியர் (ஓய்வு).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பழங்குடி மக்களின் பாதங்களைக் கழுவிய பாஜக பெண் எம்எல்ஏ!

இலங்கை அபார பந்துவீச்சு; பில் சால்ட்டின் அரைசதம் இங்கிலாந்தின் வெற்றிக்கு போதுமானதா?

”5 தொகுதிகளைக் கேட்டுள்ளோம்!” காதர் மொகிதீன் தகவல்! | DMK

துரந்தர் - டாக்ஸிக்... தாவீது - கோலியாத்... ராம் கோபால் வர்மாவின் 10 உண்மைகள்!

சிலம்பரசனை இயக்கும் டியூட் இயக்குநர்?

SCROLL FOR NEXT