முகப்பு
கட்டுரைகள்

இதிலொன்றும் தவறில்லை!

கேரள ஆளுநராக தமிழகத்தைச் சேர்ந்த உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பி.சதாசிவம் நியமிக்கப்பட்டுள்ளார். இது வாத பிரதிவாதங்களை முடுக்கிவிட்டுள்ளது.

பகிர்:

கேரள ஆளுநராக தமிழகத்தைச் சேர்ந்த உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பி.சதாசிவம் நியமிக்கப்பட்டுள்ளார். இது வாத பிரதிவாதங்களை முடுக்கிவிட்டுள்ளது.

நீதிபதிகளை ஆளுநர்களாக நியமிப்பது அவர்களுடைய மாண்பைக் குறைக்கும் என ஒரு சாராரும், இதில் தவறில்லை என மற்றொரு சாராரும் கருத்துகளை வெளியிட்டுள்ளனர். தேர்தலில் தோல்வி அடைந்த காங்கிரஸ் கட்சி, ஆளுநர் சதாசிவத்தின் நியமனத்திற்கு எதிர்ப்புக் குரல் எழுப்பியது.

நியமன உத்தரவு வந்தவுடன் நீதிபதி சதாசிவத்தின் நியமனத்தை வரவேற்பதற்காக கேரள உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னித்தலா அறிக்கை வெளியிட்டு, இந்த பிரச்னையை ஒரு முடிவிற்கு கொண்டு வந்தார்.

"கடவுள் பாதி, மிருகம் பாதி இரண்டும் கலந்த கலவை நான்' என கமல்ஹாசன் ஒரு திரைப்படத்தில் பாடுவது போல ஆங்கில ஆட்சி முறை பாதி, அமெரிக்க ஆட்சிமுறை பாதி என கலந்த கலவைதான் நமது ஆட்சி முறை. ஒரு ஜனநாயக நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் சட்டமன்றத்தில் சட்டம் இயற்றுகிறார்கள். அந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த ஆட்சி நிர்வாகம் உள்ளது.

சட்டமன்றமும் ஆட்சி நிர்வாகமும் அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு உள்பட்டு பணியாற்றுகின்றனவா என கண்காணிக்க நீதிமன்றங்கள் உள்ளன. அதனால்தான் ஜனநாயகம் என்பது சட்டமன்றம், ஆட்சி நிர்வாகம், நீதித் துறை என்று மூன்ற கண்களை உடைய சக்திவாய்ந்த முக்கண்ணன் ஆனது. இந்த மூன்று பகுதிகளில் எதுவுமே தனித்து செயல்பட முடியாது. ஒன்றை ஒன்று சார்ந்துதான் செயல்பட வேண்டும். ஒன்றை ஒன்று மீறும் போது மோதல் ஏற்படுகிறது.

இந்தியாவில் 60 ஆண்டுகளுக்கு மேலாக ஜனநாயகம் பூத்துக்குலுங்கும் போது நம்முடன் சுதந்திரம் பெற்ற பாகிஸ்தானின் நிர்வாகத் துறையின் ஓர் அங்கமான பாதுகாப்புத்துறையிடம் சட்டமன்றமும், நீதிமன்றமும் இன்றும் சிக்கித் தவிக்கின்றன.

ஆனால், இந்தியாவின் நிலை அப்படி அல்ல. இங்கு தவறுகள் நடந்தாலும் வெளிப்படைத்தன்மை உள்ளது. சமீபத்தில் லஞ்ச குற்றத்திற்காக துணை இராணுவத் தளபதி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பா.ஜ.க. ஆட்சியில் ஓர் இஸ்லாமியர் குடியரசுத் தலைவராகிறார். அவரை இளைஞர்கள் தலை மீது வைத்து கொண்டாடுகின்றனர்.

பாகிஸ்தானில் இப்படி நடக்குமா? வட மாநிலத்தில் சக்தி வாய்ந்த தலைவர்கள் லஞ்சக் குற்றச்சாட்டில் அரசியல் பதவிகளை இழந்து சிறைக்குச் சென்றுள்ளனர். மிகப்பெரிய அளவில் நீதியின் மாண்பு (தன்ப்ங் ர்ச் கஹஜ்) நீதிமன்றத்தால் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது. இந்தப் பின்னணியில் ஒரு நீதிபதியை ஆளுநராக்கலாமா என ஆராயலாம்.

பிரிட்டனில் மக்களாட்சி நடக்கிறது என்றாலும் நிர்வாகத் தலைவரான ராணி அல்லது ராஜாவின் பதவி அரச குடும்பத்தின் பரம்பரைச் சொத்தாகும். கிட்டத்தட்ட இந்த நிலைமை நெதர்லாந்து, சுவீடன் போன்ற பல நாடுகளில் இருக்கிறது.

பிரிட்டனின் காலனியாக இருந்து அவர்களை முறைத்துக் கொண்டு போரிட்டு தனி நாடு கண்ட அமெரிக்காவில் நிர்வாகத் தலைவரான அதிபர் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுகிறார். அவர் அமைச்சரவை அமைத்து நாட்டை வழிநடத்தினாலும் நாடாளுமன்றத்துக்கு கட்டுப்பட்டவர். அவர்களுக்கு நடுவில் தோன்றும் பிரச்னையை அமெரிக்க உச்சநீதிமன்றம் தீர்த்து வைக்கிறது.

மொத்த இந்தியாவின் ஆட்சி குடியரசுத் தலைவர் பெயரால் நடக்கிறது. ஆனால் அவர் பதவி, பரம்பரையானதும் அல்ல; அவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவதும் இல்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.

உண்மையில் ஆட்சி அதிகாரம் படைத்த பிரதமரை மெஜாரிட்டி அடிப்படையில் ஆட்சி அமைக்க குடியரசுத் தலைவர் அழைக்கிறார். ஆளுநரை சட்டப்பிரிவு 155-இன் படி இந்திய குடியரசுத் தலைவர் நியமிக்கிறார். அந்த நியமனம் குடியரசுத் தலைவருடைய விருப்பம் வரை நீடிக்கும் என சட்டப்பிரிவு 156 சொல்கிறது.

ஆட்டுக்கு தாடியும், நாட்டுக்கு ஆளுநரும் ஏன் வேண்டும் என்ற கேள்வியை அண்ணாதுரை எதிர்க்கட்சியில் இருக்கும் போதே எழுப்பினார். ஒரே கட்சி மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி செய்யும் போது பிரச்னை இல்லை. மத்தியில் ஒரு கட்சியும், மாநிலத்தில் ஒரு கட்சியும் ஆட்சி செய்யும் போது ஆளுநர் என்பவர் மத்திய அரசின் ஒற்றராகவும் மாநில அரசுக்கு இடைஞ்சல் செய்பவராகவும் பார்க்கப்படுகிறார்.

மக்கள் மன்றத் தேர்தலில் தோற்றுப் போனவர்கள் எல்லாம் மாநில அரசுகளில் ஆளுநர்களாக நியமிக்கப்படும் போது அது அவர்களுடைய அரசியல் செல்வாக்கை வெளிப்படுத்தும் தகுதியாக பார்க்கப்படுகிறது. மாநிலம் என்று எடுத்துக் கொண்டால் மகாராஷ்டிரமும், மேகாலயமும் ஒன்றுதான். ஆட்சி மாறியவுடன் ஆளுநர்கள் அனைவரும் பதவியை ராஜினாமா செய்வதுதான் சரி.

இந்த வாதம் குடியரசுத் தலைவர் பதவிக்குப் பொருந்தாது. காரணம் குடியரசுத் தலைவர் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார். ஆனால் ஆளுநர்கள் ஆளுங்கட்சிகளின் பரிந்துரை அடிப்படையில் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார்கள். எதற்கு எடுத்தாலும் அமெரிக்காவைப் பார், ரஷியாவைப் பார் என சொல்லும் நம் அரசியல்வாதிகள், ஒரு புதிய அமெரிக்க அதிபர் தேர்ந்தெடுக்கப்பட்டவுடன், முந்தைய அமெரிக்க அதிபரால் பொறுப்புக்கு வந்த அனைவரும் கூண்டோடு ராஜிநாமா செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள் என்பதை ஏன் கவனிப்பது இல்லை?

இந்த நல்ல பழக்கம் அரசு வழக்குரைஞர்கள் நியமனத்தில் மட்டும் கடைப்பிடிக்கப்படுகிறது. பிற துறைகளில் கடைப்பிடிக்கப்படுவதில்லை. இதனால்தான் உள்துறை செயலாளர் ஒவ்வொரு ஆளுநரையும் அழைத்து பதவியை ராஜிநாமா செய்யச் சொல்வதும், செய்ய மாட்டோம் என ஆளுநர்கள் சொல்வதும் நடக்கிறது.

இது போன்றச் செயல்பாடுகள் ஆளுங்கட்சிக்கும் அழகு அல்ல, ஆண்ட கட்சிக்கும் அழகு அல்ல; சில ஆளுநர்கள் ராஜிநாமா செய்ய மறுத்தவுடன் போலீஸ் விசாரணைக்கு உள்படுத்தப்பட்டு ராஜிநாமா செய்ய கட்டாயப்படுத்தப்பட்டது, இந்திய அரசியல் நிர்ணயச் சட்டத்திற்கு ஏற்பட்ட மிகப்பெரிய அவமானம் ஆகும்.

ஓர் ஆளுநரின் பணியில் மிக முக்கியமானது என்பது சட்டப்பிரிவு 356-இன் கீழ் ஒரு மாநில அரசைக் கலைப்பதற்கு குடியரசுத் தலைவருக்கு பரிந்துரைப்பதுதான். இதுதான் அரசியல் காரணங்களுக்காக அதிகமாக தவறாகப் பயன்படுத்தப்படும் பிரிவு ஆகும்.

உரிமைக்குக் குரல் கொடுப்போம் என பேசியவர்கள் தான் தாங்கள் ஆட்சி கலைக்கப்பட்ட போது வாய்மூடி மெளனம் காத்து உறவுக்கு கை நீட்டினார்கள். அதை விடக் கொடுமை அவர்களின் அரசியல் எதிரியின் ஆட்சியை கவிழ்க்க அவர்களே தில்லிக்கு காவடி தூக்கினார்கள். தன் வினை தன்னை சுட்ட போது வாய்மூடி மெளனிகளாக இருந்தார்கள்.

ஆனால், கர்நாடகத்தின் எஸ்.ஆர். பொம்மை தான், பொம்மையாக செயல்படாமல் தன் ஆட்சி கலைக்கப்பட்டபோது பொங்கி எழுந்து குடியரசுத் தலைவரின் ஆட்சிக் கலைப்பு அதிகாரத்தை கேள்வி குறி ஆக்கினார்.

இந்தப் பின்னணியில்தான் ஒரு நீதிபதியை ஆளுநராக நியமிக்கலாமா என ஆராய வேண்டும். ஒரு தலைமை நீதிபதி தான் குடியரசுத் தலைவருக்கு பதவி பிரமாணம் செய்கிறார். ஆகவே அவர் குடியரசுத் தலைவர் அளிக்கும் ஆளுநர் பதவியை ஏற்கக்கூடாது என்ற வாதம் சொத்தையானது.

ஓர் உயர்நீதிமன்ற நீதிபதியையும், உச்ச நீதிமன்ற நீதிபதியையும் நியமிப்பவர் குடியரசுத் தலைவர். அவர் தலைமை நீதி

பதிக்கு மட்டும் பதவி பிரமாணம் செய்கிறார். அதைப்போல் மாநிலத்தில் புதிய சட்டமன்றம் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு தாற்காலிக பேரவைத் தலைவரை வயது மற்றும் அனுபவ மூப்பு அடிப்படையில் ஆளுநர் நியமித்து பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். தலைமை நீதிபதி ஏனைய நீதிபதி

களுக்கும், ஆளுநருக்கும் பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.

இது ஒரு காலச் சக்கரம். இன்றைய மாறிவிட்ட அரசியல் சூழ்நிலையான மாநிலத்தில் தனியாட்சி, கூட்டாட்சி, மத்தியில் வேறுபட்ட கட்சிகளின் ஆட்சி என சூழல் மாறிவிட்ட பிறகு ஆளுநர் என்பவர் வெறும் அரசியல் பிரமுகராக மட்டும் இருக்க முடியாது, இருக்கக் கூடாது. சட்டத்தில் தேர்ச்சி பெற்றவராகவும் தனித்தன்மை உள்ளவராகவும் இருக்க

வேண்டும்.

ஆளுநர் பதவி என்பது இனிமேல் அலங்காரப் பதவியாக இருக்க முடியாது. கம்யூனிஸ்ட் கட்சியில் அமைச்சராக இருந்து பின்னர் உச்சநீதிமன்ற நீதிபதியான வி.ஆர். கிருஷ்ண அய்யர் கொண்டாடப்படுவது அவருடைய அரசியல் கொள்கைக்காக அல்ல, ஆணித்தரமான தீர்ப்புகளுக்காக. அவருடைய அரசியல் ஞானம் மற்றும் ஆட்சி அனுபவம் அவருடைய தீர்ப்புகளை செதுக்கியது என்பது உண்மை.

பன்முகத்தன்மைதான் ஜனநாயகத்தின் அடிப்படைப் பண்பாக இருக்க வேண்டும். தி.மு.க. மாவட்டச் செயலராக இருந்த ரத்தினவேல் பாண்டியன், பின்னர் நீதிபதி ரத்தினவேல் பாண்டியனாக மாறி, மேனகா காந்தி வழக்கில் சிறப்பான மனித உரிமைத்தீர்ப்பை வழங்கினார்.

நீதிபதிகளை வேறு பதவிகளில் அமர்த்துவதை எதிர்ப்பவர்களின் அச்சம் நீதித்துறையை அரசியல் கட்டுப்படுத்திவிடுமோ என்பதுதான். இது போன்ற நேரடி அரசியல் குறுக்கீடு இல்லாத போதே நீதித்துறை அரசுக்கு ஆட்பட்டுதான் இருந்தது. இந்திய ஜனநாயகம் 77-இல் எரிமலையாக வெடித்த போது எல்லாமே மாறியது.

இந்திய அரசியலைமைப்பில் நீதித்துறை மட்டும் அதிகம் பேசப்படுகிறது. ஆனால், அரசியல் நிர்ணயச் சட்டத்தில் தேர்தல் ஆணையமும், இந்திய தணிக்கை அதிகாரியும் முக்கியமானவர்கள். டி.என். சேஷன் என்ற ஒரு தமிழர் அமைச்சர்கள் கீழ் பணியாற்றிய அதிகாரி. அவர் தேர்தல் ஆணையத்தின் ஆணையராக நியமிக்கப்பட்டவுடன் தேர்தல் ஆணையத்தின் முகத்தை மட்டுமல்ல, இந்திய தேர்தல் வரலாற்றையே மாற்றி விட்டார்.

நீதிபதி சதாசிவம் கேரள மாநிலத்தின் ஆளுநராகியிருப்பதால், முல்லைப் பெரியாறு பிரச்னை முழுமையாக தீர்ந்துவிடும் என சொல்ல முடியாது.

முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்பானது என அனைவருக்கும் தெரியும். ஆனால், கேரளத்துக்காரர்கள் அதை எதிர்க்க காரணம், அந்த தண்ணீரிலிருந்து மின்சாரம் எடுக்க முடியவில்லையே என்ற ஆதங்கம்தான். நீதிபதி சதாசிவம் அ.தி.மு.க. அரசின் வழக்குரைஞராக இருந்தவர். காங்கிரஸ் அரசால் உயர்நீதிமன்ற நீதிபதியாகவும், உச்சநீதிமன்ற நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டவர். இப்பொழுது பா.ஜ.க. அரசால் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். இதுவே அவரின் பொதுத்தன்மைக்கு சான்று.

இன்றைய ஆளுநர்கள் வெறும் ஆளுநராக மட்டும் இல்லாமல் சமன் செய்து சீர் தூக்கும் கோல் போல் அமைந்து ஒரு பால் கோடாமையுடன் இருக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகி விட்டது. இந்தப் பணிக்கு ஓய்வு பெற்ற நீதிபதிகளை நியமிப்பது பொருத்தமே.

நீதிபதிகள் ஆளுநராக வருவதால் அண்டை மாநில பிரச்னைகள் குறையலாம். ஏன் தமிழ்நாட்டையும், கேரளத்தையும் மத்திய அரசையும் அழைத்துப் பேசி முல்லைப்பெரியாறுக்கு வரும் கூடுதல் தண்ணீரில் எடுக்கப்படும் கூடுதல் மின்சாரத்தை தமிழ்நாடும், கேரளாமும் பகிர்ந்து கொள்ள ஏற்பாடு செய்யலாம். இதை ஒரு நீதிபதியோ, ஆளுநரோ செய்ய முடியாது. ஆனால், ஒரு விவசாயி செய்ய முடியும். நீதிபதி தன்னை ஒரு விவசாயி என வெளிப்படையாக அறிவித்துக் கொள்பவர்.

கட்டுரையாளர்:

சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.