கட்டுரைகள்

சீனாவைப் பார்க்க வேண்டாம்...

பொருளாதார வளர்ச்சி, தொழில்துறை முன்னேற்றம், நவீன தொழில்நுட்பம், ஆயுத பலம், மக்கள்தொகையைக் கட்டுப்படுத்துவது என

சு. வெங்கடேஸ்வரன்

பொருளாதார வளர்ச்சி, தொழில்துறை முன்னேற்றம், நவீன தொழில்நுட்பம், ஆயுத பலம், மக்கள்தொகையைக் கட்டுப்படுத்துவது என அடுக்கடுக்கான விஷயங்களில் சீனாவுடன் ஒப்பிட்டு, இந்தியாவும் அந்த அளவுக்கு முன்னேற வேண்டும் என்று கூறுவது நமது பொதுவான வாடிக்கையாகிவிட்டது.
 பொருளாதார வளர்ச்சியிலும், தொழில் வளர்ச்சியிலும் சீனாவை முந்த இந்தியாவுக்கு இன்னும் சில ஆண்டுகளே ஆகும் என சர்வதேச ஆய்வு நிறுவனங்கள் புள்ளி விவரங்களை அள்ளித் தெளிக்கின்றன. இது இந்தியாவில் சீனாவுடனான போட்டி மனப்பான்மையை அதிகரிப்பதாகவே உள்ளது. ஆனால், இந்த "அபார' வளர்ச்சிக்கு சீனா கொடுத்துள்ள விலை என்ன? என்பதையும் நாம் பார்க்க வேண்டும்.
 சீனாவின் வளர்ச்சியின் உபவிளைவுகளை அந்நாட்டு அரசு பெரும்பாலும் மறைத்தே விடுகிறது. அப்படியே சில விளைவுகள் வெளியே வந்தாலும் நாம் அதைக் கண்டுகொள்வதில்லை என்பதே உண்மை.
 சில நாள்களுக்கு முன்பு சீனாவின் ஜியாங்சூ மாகாணத்தில் உள்ள உணவு விடுதி ஒன்று "சுத்தமான காற்றுக்கான கட்டணம்' என்ற பெயரில் கூடுதல் பணம் வசூலிக்கத் தொடங்கியுள்ளனர். இந்த கட்டணத்துக்கு உணவு விடுதி தரப்பில் தரப்படும் விளக்கம், "நாடே காற்று மாசுபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளது.
 எங்கள் விடுதிக்கு சாப்பிட வரும் வாடிக்கையாளர்களுக்கு சுத்தமான காற்றை வழங்குவதற்காக பெரும் செலவில் காற்றை சுத்திகரிக்கும் கருவியை வாங்கிப் பொருத்தியுள்ளோம். அதற்காகத்தான் இந்த சிறப்புக் கட்டணம்' என்பதுதான்.
 காற்று மாசுபாட்டில் சீனா தேசிய அளவில் உச்சம் என்றால், நமது நாடும் முக்கியமாக தலைநகர் புதுதில்லி காற்று மாசுபாடு அதிகமுள்ள நகரங்கள் பட்டியலில் முன்னணியில் உள்ளது.
 காற்று மாசடைவதில் கடந்த 4 ஆண்டு சராசரியில் சீனத் தலைநகர் பெய்ஜிங்குக்கு சிறிதும் சளைக்காமல் புதுதில்லி சம இடத்தைப் பிடித்துள்ளது என்கிறது உலக சுகாதார அமைப்பின் (டபிள்யூஎச்ஓ) அறிக்கை. இந்தியாவின் பல முன்னணி நகரங்களும் காற்று மாசு அதிகமுள்ள நகரங்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.
 சீனாவின் பல முக்கிய நகரங்களில் சாதாரணமாகவே வீட்டைவிட்டும் வெளியே வரும் மக்கள் காற்றுமாசுபாட்டில் இருந்து தங்களைக் காத்துக் கொள்ள "ஏர் ஃபில்டர்' கவசத்தை முகத்தில் அணிந்து நடமாடுகின்றனர். நமது நாட்டில் பனிக் காலத்தில் பகலில் கூட வாகனங்களில் முகப்பு விளக்குகளை எரியவிட்டுச் செல்வது வாடிக்கை.
 ஆனால், சீனாவில் காற்று மாசுபாட்டால் எதிரில் வருபவர்கள் தெரியாத சூழ்நிலை ஏற்பட்டு, பகலில் முகப்பு விளக்குகளுடன் வாகனப் போக்குவரத்து நடைபெறுவது சாதாரண நிகழ்வாகிவிட்டது.
 இவற்றுக்கெல்லாம் உச்சமான சம்பவம் அண்மையில் நடந்தது.
 கடந்த வாரம், பெய்ஜிங் நகரில் காற்று மாசுபாடு அபாயக் கட்டத்தை அடைந்தது. இதனால் குழந்தைகள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்பதால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. வாகனங்களில் இருந்து வெளியேறும் புகையைக் குறைக்க சாலைகளில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. பெய்ஜிங்கை சுற்றியுள்ள பல தொழிற்சாலைகள் தாற்காலிகமாக மூடப்பட்டு அங்கிருந்து வெளியேறும் புகையின் அளவு குறைக்கப்பட்டது.
 அதே நேரத்தில் காற்று மாசுபாட்டால் மூச்சுத் திணறல், தொண்டை எரிச்சல் என பல்வேறு வகைகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க முடியாமல் மருத்துவமனைகள் திக்குமுக்காடின.
 சீனாவில் குளிர் அதிகம்; இதனால் வீடுகளில் வெப்பத்தை ஏற்படுத்த பெருமளவில் நிலக்கரி பயன்படுத்தப்படுகிறது. இதுவும் காற்று மாசுபாட்டுக்கு முக்கியக் காரணம் என்று கூறப்படுவது உண்டு.
 ஆனால், இத்தனை ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அரசே அபாய எச்சரிக்கை விடுத்து வாகனங்களையும், தொழிற்சாலைகளையும் நிறுத்தும் அளவுக்கு நடவடிக்கை எடுத்ததற்கு, வளர்ச்சி என்ற பெயரில் கட்டுப்பாடுகள் இல்லாமல் கார்பன் வெளியீட்டை அனுமதித்துதான் முக்கியக் காரணம்.
 காற்று மாசுபாடு மட்டுமல்லாது மின்னணுக் கழிவு, விவசாய நிலங்கள் மற்றும் நீர்நிலைகள் மாசடைவது என்று பல மோசமான சூழ்நிலைகளைச் சந்தித்து வருகிறது சீனா. இது அந்நாட்டின் அபார வளர்ச்சியின் உபவிளைவுகள்.
 மழை, வெள்ளம், நிலநடுக்கம் போன்ற இயற்கைப் பேரிடர்களை விட பல மடங்கு மோசமானது காற்று மாசுபாடு. சுருக்கமாகச் சொல்வது என்றால் ஒரு தேசத்தை உள்ளிருந்து கொஞ்சம், கொஞ்சமாகக் கொல்லும் நோய். இது நமக்கு நாமே உருவாக்கிக் கொள்ளும் செயற்கைப் பேரிடர்.
 இந்தியாவை விட சீனா பரபரப்பளவில் 3 மடங்குக்கு மேல் பெரிய நாடு என்பதால் இந்த இடர்பாட்டுடன் மூச்சைப் பிடித்துக் கொண்டு ஓடுகிறது. எனவே, தொழில்மயமாதல், பொருளாதார வளர்ச்சி என்ற பந்தயத்தில் "சீன பாணி'யை நாம் கடைபிடித்தால் அதற்கு கொடுக்க வேண்டிய விலையும் அதிகம் இருக்கும்.
 சீனா கம்யூனிச நாடு; அங்கு நாட்டுக்காகத்தான் மக்கள் என்பது எழுதப்படாத விதி. எனவே, மக்கள் நலனை ஒதுக்கி வைத்துவிட்டு சர்வதேச அளவில் தேசத்தை நிலைநிறுத்திக் கொள்ளும் வெறியில் இயங்குகிறது அரசு இயந்திரம். ஆனால், இந்திய ஜனநாயகம் சீனாவில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. இங்கு மக்களால், மக்களுக்காக, மக்களில் ஒருவரைத் தேர்வு செய்யும் அரசமைப்பு உள்ளது.
 "பொருளாதார வளர்ச்சியின் பயனை ஒவ்வொரு இந்தியருக்கும் கிடைக்கச் செய்வேன்' என்று நமது பிரதமர் மேடைதோறும் கூறிவருகிறார். ஆனால் அதன் பயன் கிடைக்கும்போது அதனை அனுபவிக்க ஆரோக்கியமான இந்தியர்கள் இருக்க வேண்டியது மிகவும் அவசியம்.
 எனவே, இயற்கையை எந்த வகையிலும் பெரிய அளவு தொந்தரவு செய்யாத வளர்ச்சித் திட்டங்களை வகுப்பதே சிறந்தது. இது இந்தியாவுக்கும், இந்தியர்களுக்கும் உகந்ததாக இருக்க வேண்டும். எனவே, வளர்ச்சி என்ற விஷயத்தில் நாம் சீனாவை மட்டுமல்ல; வேறு எந்த நாட்டையும் ஒப்பிட்டுப் பார்க்கத் தேவையில்லை.
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முன்னேர் வழியில் பொன்னேர் பூட்டிய கம்பர்

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 'ஹவாலா பணத்தை' கைப்பற்றுவோம்: இபிஎஸ் சபதம்

எப்படி நிகழ்ந்தது அது?

குடும்பக் கட்டுப்பாடு குறித்த முதல் கவிதை

அறிவுடையோர்: துறவுநெறியில் மனம் செலுத்துவர்

SCROLL FOR NEXT