கட்டுரைகள்

ஒரு தாய் மக்கள் நாமென்போம்...

உலக அமைதிக்காகவும், மனித உரிமைகளைப் பாதுகாக்கும் நாளாகவும் அனுசரிக்கப்படும் டிசம்பர் 10-ஆம் நாளில்தான் பதற வைக்கும் கொடூரம் ஈரான் நாட்டில் நடந்தது

ஆர். நட​ராஜ்

உலக அமைதிக்காகவும், மனித உரிமைகளைப் பாதுகாக்கும் நாளாகவும் அனுசரிக்கப்படும் டிசம்பர் 10-ஆம் நாளில்தான் பதற வைக்கும் கொடூரம் ஈரான் நாட்டில் நடந்தது. ஓரு அபலைப் பெண் மீது கொலைக் குற்றம் சுமத்தப்பட்டு, அதனை துரிதமாக நீதிமன்றத்தில் முடித்து, மரண தண்டனை அளிக்கப்பட்டிருக்கிறது.
 தண்டனையை நிறைவேற்ற நூதன முறை - கல்லால் அடித்து உயிரைப் பறிப்பது. தொன்மையான பாரசீக நாகரிகத்தின் உறைவிடமான ஈரான் நாட்டில் தான் இந்தக் கொடுமை, இந்த ஆண்டு 2015 டிசம்பர் 10-ஆம் நாளில் நிகழ்த்தப்பட்டது.
 பெண்ணுக்கு எதிரான குற்றங்களைக் களைவதைப் பற்றிய விழிப்புணர்வு, அதனை ஒழிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்ற ஐக்கிய நாடுகள் சபையின் யோசனைகளுக்கு இணங்க, பல நாடுகள் பெண்கள் பாதுகாப்பை முன்நிறுத்தி முயற்சிகள் எடுப்பதும், சட்டம் இயற்றுவதும் ஒருபுறம் இருக்க, நேர் மாறாக, ஈரான் போன்ற நாடுகளில் கொடூரமான தண்டனைகள் அதுவும் பெண்கள் மீது மட்டும் பாயும் கொடுமை மானுடத்திற்குத் தலைகுனிவு.
 தண்டனைப் பெற்ற பெண், கழுத்துவரை புதைக்கப்பட்டு, தலை மட்டும் பூமிக்கு மேல் தெரிய, அவள் தலை மீது ஐந்து நபர்கள் கல்லால் அடிப்பார்கள். இரத்தம் சொட்டச் சொட்ட அப்பெண் உயிர் துறப்பாள். அதை வேடிக்கைப் பார்ப்பதற்கு பெரும் கூட்டம். சவுக்கடி, கசையடி, கைகால் முடக்கம் போன்ற தண்டனைகள் இன்னும் மத்திய கிழக்காசிய நாடுகளில் இருப்பது வேதனைக்குரியது.
 ஈரான் நாட்டிலிருந்து குடி பெயர்ந்து கனடாவில் வசிக்கும் மனித உரிமை ஆர்வலர்கள், குறிப்பாக மரியாம் யெஸ்தி போன்றவர், ஈரான் நாட்டில் நடக்கும் மனித உரிமை மீறல்களைப் பற்றி உலக நாடுகளின் கவனத்திற்குக் கொண்டு வருகின்றனர்.
 1980-லிருந்து இதுவரை 150 பேர் கல்லடியால் கொல்லப்பட்டிருக்கின்றனர். வன்புணர்ச்சிக்குப் பலியாகும் பெண்களுக்குதான் தண்டனை என்ற விபரீத சட்டம் ஈரானில் உள்ளது. சிறார்களாக இருந்தாலும் மரண தண்டனையிலிருந்து விதிவிலக்கில்லை. சராசரி நாளொன்றுக்கு மூன்று மரண தண்டனைகள் நிறைவேற்றப்படுகின்றன.
 ஆனால், ஈரானில் எரிபொருள் இருக்கிறது, கிடைத்தற்கரிய கனிமங்கள் உள்ளன. அதற்காக மனித உரிமை மீறல்களைக் கண்டுகொள்ளாமல் பல மேலை நாடுகள் வர்த்தக ரீதியாக மட்டும் அணுகும் சுயநலப் போக்கு தொடர்கிறது.
 இரண்டாம் உலகப் போரின் பேரழிவை உணர்ந்து இனியும் இம்மாதிரியான அழிவு ஏற்படக்கூடாது என்று ஐக்கிய நாடுகள் சபை, 1948-ஆம் ஆண்டு டிசம்பர் பத்தாம் நாள் அமெரிக்க அதிபரின் மனைவி எலினா ரூஸ்வெல்ட் தலைமையிலான குழு வடிவமைத்த முப்பது ஷரத்துக்கள் கொண்ட மனித உரிமை ஆவணத்தை ஏற்று பிரகடனப்படுத்தியது. அதன் நினைவாக, டிசம்பர் 10 மனித உரிமை நாளாக அனுசரிக்கப்படுகிறது.
 நமது உரிமைகள், நமது சுதந்திரம் என்ற மையக்கருத்தை ஐக்கிய நாடுகள் மனித உரிமைக் கழகம், உலக மக்கள் முன் வைத்திருக்கிறது. மேலும், இந்த ஆண்டு சர்வதேச உடன்படிக்கைகள், பொருளாதார, சமூக, கலாசார உடன்படிக்கை, குடிமை மற்றும் அரசியல் சார்ந்த உரிமைகள் அடங்கிய உடன்படிக்கை நிறைவேற்றப்பட்டு ஐம்பது ஆண்டுகள் பூர்த்தியாகின்றன.
 இம்மூன்று தகைசால் பிரமாணங்கள் தான் மனித உரிமைகளின் தாயிடம். இவை ஊற்று போல் பெருக்கெடுத்து உலக மக்களுக்கு ஆறுதலான வாழ்க்கை அமைய, தூண்களாக அமைய வேண்டும் என்பதுதான் உயரிய குறிக்கோள். அதைப்பற்றிய விழிப்புணர்வு தொடர் நடவடிக்கையாக அடுத்த ஒரு வருடம் எல்லா நாடுகளிலும் ஏற்படுத்த வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைக் கழகம் பணித்துள்ளது.
 ஆனால், உலகில் அன்றாடம் ஏற்படும் கணக்கிலடங்கா மனித உரிமை மீறல்கள்தான் எத்தனை வகைகள்? "ஒன்றே குலம், ஒருவனே தேவன்' என்ற உணர்விருந்தால், இத்தகைய கொடுமைகள் நிகழுமா? "மனிதன் நோக, மனிதன் பார்க்கும் பார்வை' என்றாரே மகாகவி பாரதி! எவ்வளவு உண்மை? இந்த ஆண்டு இந்தியாவில் 650 ஜாதி, மத கலவரங்கள் நிகழ்ந்துள்ளன, அதில் 84 மக்கள் பலியாயினர், என்ன கொடுமை?
 மனித உரிமைகளை காப்பதிலும், பாதுகாப்பு அளிப்பதிலும் காவல்துறை முக்கியப் பங்கு வகிக்கிறது. ஐஸ்லாந்து நாட்டில் கடந்த 71 ஆண்டுகளில் ஒருவர்தான் காவல் துறை நடவடிக்கையால் உயிரிழந்திருக்கிறார். ஆனால், அமெரிக்காவில் இந்த ஆண்டு மட்டும் 1,063 நபர்கள் போலீஸாரால் உயிரிழந்திருக்கிறார்கள். நவம்பர் மாதம் நன்றி தெரிவிக்கும் மாதமாக அமெரிக்காவில் அனுசரிக்கப்படுகிறது.
 அதே மாதத்தில், காவல் துறை துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்கள் எண்ணிக்கை 78. இதில் மற்றொரு கொடுமை என்னவென்றால், உயிர் இழந்தவர்களில் பலர் மன நிலை பாதிக்கப்பட்டவர்கள், சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள். மனநிலை குன்றியவர்கள் பதினாறு மடங்கு அதிகமாக காவல் துறை கொடுமைக்கு ஆளாக வாய்ப்புள்ளது என்று ஓர் ஆராய்ச்சி தெரிவிக்கிறது. அமெரிக்க நீதித்துறையும் மத்திய புலனாய்வுப் பிரிவும் இதற்கான காரணங்களை ஆராய்ந்து சீர்திருத்த நடவடிக்கை எடுக்க முனைந்துள்ளது.
 இன்னும் பல நாடுகளில், சாதாரண குடிமக்கள் கண்ணியத்தோடு வாழ முடியாத நிலை தொடர்கிறது. இந்நாடுகளில் பொருளாதாரம், அரசியல் மற்றும் நீதி நிலை நாட்டும் முறைகள் சீரமைத்தல் அவசியம். பகை, காழ்ப்புணர்ச்சி தூண்டும் பேச்சு, சிறுபான்மையினரை உதாசீனப்படுத்தல், பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் மனித உரிமை மீறல், கணினி உலகில் தனி நபர் அந்தரங்கங்கள் ஊடுருவல், பாதுகாப்பு என்ற போர்வையில் பொருளாதார, சமுதாய கட்டமைப்புகளை ஒடுக்கல், இவையெல்லாம் சர்வதேச அடிப்படை மனித உரிமைகள் உடன்படிக்கைகளுக்கு எதிரானவை.
 சுற்றுப்புறச் சூழல் பாதிக்கும் வகையில் இயற்கைக்கு எதிரான செயல்களும், திட்டங்களும் மனித உரிமைக்கு களங்கம் விளைவிப்பவை என்பதை ஐக்கிய நாடுகள் சபை ஒவ்வொறு முறையும் வலியுறுத்தி வருகிறது. உலகில் சீதோஷ்ண நிலை மாறி வருவதை உணர முடிகிறது.
 சமீபத்தில் பாரீஸில் நடந்து முடிந்த தட்பவெட்ப நிலை கருத்தரங்கில், உலகைச் சூழ்ந்துள்ள வெப்ப நிலையைக் குறைக்க எல்லா நாடுகளும், குறிப்பாக வளர்ச்சி அடைந்த நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
 தொழிற்சாலைகளிலிருந்து நச்சு வாயு வெளியேறுவதைத் தடுக்கவும் அதனால் பிராண வாயு மற்றும் ஓசோன் விரிப்பில் ஏற்படும் ஓட்டைகள் எந்த அளவிற்கு மக்களைப் பாதிக்கிறது என்பதை ஐக்கிய நாடுகளின் கியோட்டோ மற்றும் ரியோ உடன்படிக்கைகள் விவரிக்கின்றன.
 சமீபத்தில், சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் அமிலம் கலந்த நச்சுப்புகை அதிகரிப்பால் சில நாள்கள் பள்ளிகளும், அலுவலகங்களும் மூடப்பட்டன. நச்சுப்புகை கக்கும் தொழிற்சாலைகளை சீரமைத்தபின்தான் இயல்பு வாழ்க்கை சாத்தியமானது.
 சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு ஒரு முக்கிய மனித உரிமை பிரச்னை. பூகோளத்தைச் சுற்றியிருக்கும் வெளிமண்டல வெப்பம் அதிகரிப்பு இரண்டு டிகிரி செல்ஸியஸுக்கு மிகாமல் உலக நாடுகள் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பது பாரீஸ் மாநாட்டின் முதன்மை தீர்மானம். நீதி வழுவாமை, நேர்மை ஒப்புரவு மேலோங்கிய பாரபட்சமற்ற சுற்றுப்புற பாதுகாப்பு நடவடிக்கைகளை உலக நாடுகள் எடுக்க வேண்டும் என்ற இந்தியாவின் நிலைப்பாடு வரவேற்கப்பட்டது.
 பல நாடுகளில், இயற்கைச் சீற்றம் முன்பு காணாத வகையில் பெருகி வருகிறது. மூன்று மாதம் விட்டு விட்டுப் பெய்யும் மழை மூன்றே நாள்களில் சென்னையில் கொட்டித் தீர்த்து வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்படுத்தியது.
 டிசம்பர் 9-ஆம் தேதி மட்டும் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதியில் பெய்த 48 சென்டி மீட்டர் மழையின் அளவு, சென்னையைச் சுற்றியுள்ள ஏரிகளின் கொள்ளளவை விட இருபது மடங்கு அதிகம். அதனால்தான், எங்கு பார்த்தாலும் தண்ணீர் வெள்ளப்பெருக்கு.
 ஏரிகளின் மதகுகள் திறந்தது, திறக்காதது என்று சர்ச்சையைக் கிளப்பி உண்மை நிலையைத் திரிப்பது தவறு. ஏரிகள் உடையாமல் பாதுகாத்து நகரைக் காப்பாற்றியதற்கு அரசாளுமையைப் பாராட்ட வேண்டும்.
 சமுதாய ஏற்றத்தாழ்வுகளைக் கடந்து வெள்ளம் எல்லோரையும் தாக்கி சமத்துவ, மனித நேய பாடங்களை மக்களுக்கு உணர்த்தியது. இந்த அளவிற்கு எந்த ஓர் அரசு இயந்திரமும் முழுவீச்சுடன் இயங்கியிருக்க முடியாது என்று போர்க்கால நடவடிக்கை மீட்புப்பணி, உணவு, உடை, மருத்துவ வசதி, நிவாரண மையங்கள், வாகன பழுது பார்த்தல், உடனடி நிவாரணம், உதவித் தொகை, தேங்கிய நீர், குப்பை அகற்றல் என்று பல்வகைப்பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டன.
 அமெரிக்கா போன்ற வசதி படைத்த நாடுகளிலும் ஹரிகேன் பேரிடரில் சகஜ நிலை திரும்ப பல வாரங்களாயின. ஆனால், சென்னையில் இத்தகைய பேரிடரிலும் தினசரி பால் கிடைத்தது. அரசுப் பேருந்துகள் இயங்கின. நோய் பரவவில்லை. மின்சார இணைப்பு துரிதமாக சீர் செய்யப்பட்டது. அரசுப் பணியாளர்கள் தன்னலம் கருதாது, அர்ப்பணிப்போடு பணி செய்தனர். நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது மிகப்பெரிய சாதனை.
 ஒருதாய் மக்கள் நாம் என்போம் என்று வேற்றுமை பாராட்டாமல் சாதாரண மக்கள், தன்னார்வத் தொண்டர்கள், இளைஞர்கள் நேசக்கரம் நீட்டி, பரஸ்பர உதவி அளித்ததில் சென்னைக்கு உலகளவில் பாராட்டுக் கிடைத்தது. இந்திய மனித உரிமைக் கழகம், தேசியப் பேரிடர் மேலாண்மை படையின் டி.ஜி.பி. சிங்குக்கு இந்தியாவில், குறிப்பாக சென்னையில் ஆற்றிய பணியைப் பாராட்டி பேரிடர் பாதுகாப்பு மேலாண்மை விருது வழங்கியுள்ளது.
 சுதந்திர சுவாசம் என்பது அச்சமில்லா வாழ்வு, பேச்சுரிமை, சமய சன்மார்க்கம், இல்லாமையிலிருந்து விடுதலை, பாதுகாப்பான சுற்றுப்புறம். இவற்றை உறுதி செய்வதுதான் ஒரு நாட்டின் இறையாண்மையை மேம்படுத்தும். இதைத்தான் மனித உரிமை ஆணையம், "நமது உரிமை, நமது சுதந்திரம், இன்றும், என்றும், என்றென்றும்' என்ற அறைகூவல் விடுத்திருக்கிறது.

சமுதாய ஏற்றத்தாழ்வுகளைக் கடந்து வெள்ளம் எல்லோரையும் தாக்கி சமத்துவ, மனித நேய பாடங்களை மக்களுக்கு உணர்த்தியது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மொபெட்டிலிருந்து தவறி விழுந்து விவசாயி உயிரிழப்பு

நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் லஞ்சம் வாங்கிய ஊழியா்கள் இருவா் கைது

பயங்கரவாதத்தால் இந்தியாவும் பாதிக்கப்பட்டுள்ளது! - இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சு!

”அவர் உருவாக்கிய யாரும் வீண்போகவில்லை!” நல்லகண்ணு குறித்து முத்தரசன்!

மகாராஷ்டிரத்தில் 2025-ல் மட்டும் 41 புலிகள் உயிரிழப்பு!

SCROLL FOR NEXT