சமீபத்தில் வெளியான வங்கிகளின் டிசம்பர் 2014 வரையிலான காலாண்டு முடிவுகள், பொருளாதார வட்டாரங்களில், அதிர்வு அலைகளை ஏற்படுத்தியுள்ளது. அடங்கிவிட்டது என்று அனைவரும் எண்ணியிருந்த வாராக் கடன் எனும் எரிமலையின் சீற்றம் மீண்டும் தலை தூக்கியிருப்பதுதான், அந்த அதிர்ச்சிக்குக் காரணம்.
காலாண்டு முடிவுகளில் பத்து அரசு வங்கிகளில், ஏழு வங்கிகள் மொத்தக் கடன் தொகையில் 5 சதவீதத்திற்கு மேலான வாராக் கடன்களை சுமந்து கொண்டிருக்கும் தகவல் வெளியாகி உள்ளது. கடந்த காலங்களில் இது பெரும்பாலும் 3.5 சதவீத அளவில்தான் நிலை கொண்டி
ருந்தது.
அரசு வங்கிகளில் இரண்டாவது இடத்தை வகிக்கும் வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கியின் வாராக் கடன் தொகை முந்தைய காலத்தைவிட சுமார் 5,600 கோடி ரூபாய் அதிகரித்து, 22,211 கோடி அளவிற்கு உள்ளது. இது மொத்த கடன் தொகையில் 6 சதவீதமாகும். பாங்க் ஆஃப் பரோடாவின் வாராக் கடனில் 3,042 கோடி ரூபாய் புதிதாக சேர்ந்திருக்கின்றது. கடந்த காலத்தைவிட, இது 18 சதவீத வளர்ச்சியாகும்.
யூகோ வங்கியின் வாராக் கடன், முந்தைய காலாண்டைவிட 28 சதவீத வளர்ச்சி (2,000 கோடி ரூபாய்) கண்டிருக்கிறது. கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் வாராக் கடன்கள் 58 சதவீதம் அதிகரித்து 14,500 கோடி ரூபாயை தொட்டு நிற்கிறது.
2008-ஆம் ஆண்டு 455 கோடி ரூபாய் அளவில் இருந்த வங்கிகளின் வாராக்
கடன்கள், 2014-இல் 2.17 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்து, 500 மடங்கு வளர்ச்சி கண்டிருக்கிறது. இதைத் தவிர. 6.5 லட்சம் கோடி அளவிலான கடன்கள், மறு சீரமைப்பு (Restructured loans) என்ற போர்வையில் மறைந்திருந்து, வாராக் கடன் என்ற எரிமலைக்குள் நுழைவதற்கு காத்திருக்கின்றன.
2009-10-ஆம் ஆண்டுகளில், உலக பொருளாதார பின்னடைவு சூழ்நிலையில், ரிசர்வ் வங்கியால் அறிமுகப்படுத்தப்பட்ட கடன் மறு சீரமைப்பு திட்டம் தவறாக பயன்படுத்தப்பட்டிருப்பதாக சந்தேகங்கள் எழுந்திருக்கின்றன. கடனை திருப்பி செலுத்தும் திறனுடைய பெரிய கடனாளிகளும் இந்த திட்டத்தின் சில ஓட்டைகளைப் பயன்படுத்தி சேர்க்கப்பட்டு விட்டதாக கருதப்படுகிறது.
மறு சீரமைப்பு கடன்களில், 15 சதவீதம் வரைதான் வாராக் கடன்களாக மாறுவதற்கு வாய்ப்பு இருப்பதாக வங்கிகள் சார்பில் கருத்து தெரிவிக்கப்பட்டது. ஆனால், தற்போது, 50 சதவீதம் வரை வாராக் கடன்களாக மாறிவிடுமோ என்ற அச்சம் நிலவுகிறது.
வாராக் கடன் வளர்ச்சியால், வங்கிகளின் லாபம் பெருமளவில் பாதிக்கப்பட்டு, மூலதனத்தில் பெரும் பங்குதாரரான அரசாங்கத்திற்கு வழங்கப்
படவேண்டிய ஈவுத் தொகை குறைந்துவிடும்.
மூலதனத்திற்கு எதிர்பார்க்கப்பட்ட வரவு குறைந்தால், அரசு வரவு செலவு கணக்கில் விரிசல் அதிகமாகும். அந்த விரிசலை அடைக்க புதிய வரிகள் போடப்படும். அதனால், பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள்.
2015-16 நிதி ஆண்டில், 20,000 கோடி ரூபாய், அரசு வங்கிகளுக்கு அரசிடமிருந்து மூலதன நிதி உதவி தேவைப்படுகிறது. இது பெரும்பாலும், வாராக் கடன்களால் கரைந்த மூலதனத்தை ஈடு கட்டுவதற்காகத்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இழக்கப்படும் வங்கிகளின் மூலதனத்தை, அரசால் தொடர்ந்து ஈடு செய்து கொண்டிருக்க முடியாது. வங்கிகளின் முன்னேற்றத்திற்கான உதவி என்பது ஒரு வழிப் பாதை அல்ல.
அரசு வங்கிகள், தங்கள் பங்கிற்கு வியாபார மற்றும் நிர்வாகத் திறமைகளை பெருக்கி, லாப நஷ்ட கணக்கை (Balance sheet) சீர் செய்தால்தான், மூலதனத் தொகையை சரிவர நிர்வகித்து லாபம் ஈட்ட முடியும்.
சமீபத்திய தகவலின்படி, மத்திய அரசு, வரும் நிதி ஆண்டிற்கான பட்ஜெட்டிலிருந்து வங்கிகளுக்கு மூலதன தொகைகளை வழங்குவதற்கு 6,990 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்திருக்கிறது. அந்த நிதி ஒதுக்கீட்டைப் பெறுவதற்கான வழிமுறைகளும் மாற்றி அமைக்கப்பட்டிருக்கின்றன.
அதன்படி, திறமையான செயல்பாடுகளுடைய வங்கிகளுக்கு மட்டும்தான் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். கடந்த மூன்று வருடங்களில், முதலீடுகளுக்கான வருமானம் (Return on capital) மற்றும் சொத்தின் மீதான வருமானம் (Return on assets) ஆகிய செயல்பாடுகள் கணக்கிடப்பட்டு, அதன் அடிப்படையில் நிதி பெறுவதற்கான தகுதி நிர்ணயிக்கப்படும்.
கடந்த பல வருடங்களாக, மத்திய அரசு, வங்கிகளுக்கு மூலதன இழப்பீட்டை தவணை முறையில் ஈடு செய்து கொண்டிருந்தாலும், சீர்திருத்தங்கள் பற்றி சிந்திக்கவில்லை.
மக்களின் வரிப் பணம், வாராக் கடன் என்ற தீயில் வேகமாக கருகிக்கொண்டிருக்கிறது. மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் இந்த விஷயத்தில் இணைந்து வேகமாக செயல்படவேண்டும் என்று வங்கி துறை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
பல பெரிய பொது துறை வங்கிகள் நீண்ட காலமாக, தலைமை நிர்வாகி (Managing Director)) இல்லாமலே செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. இரண்டு செயல் இயக்குநர்கள் (Executive director) செயல்பட்டுக்கொண்டிருந்த சில வங்கிகளில், ஒரு செயல் இயக்குநர் பதவி நீண்ட காலமாக காலியாகவே உள்ளது.
தலைமை இல்லாத எந்த நிர்வாகத்திடமிருந்தும் சிறப்பான செயல்பாடுகளை எதிர்பார்க்க முடியாது. அரசும், ரிசர்வ் வங்கியும், இந்த பதவிகளுக்கு தகுதியானவர்களை நியமனம் செய்வதில் வேகம் காட்டவேண்டும்.
அரசு வங்கி துறையில், Chairman மற்றும் Managing Director பதவிகள் பிரிக்கப்பட்டுவிட்டதாக அறிவிப்பு வெளியாகி சில மாதங்களாகின்றன. ஆனால், எந்த வங்கியிலும், Chairman பதவிக்கு இதுவரை நியமனம் நடைபெறவில்லை.
நிர்வாகக் குழுவில், நிபுணத்துவத்தை (Professionalism in Board) நடைமுறைப்படுத்துவதற்கான அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. அதற்கான நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்பட்டால்தான், வங்கி நிர்வாகங்கள் வலுப்பெரும்.
சமீபத்தில், பிரதமர் மோடியும், வங்கி தலைமை நிர்வாகிகளும் கலந்து கொண்ட எஹ்ஹய் நஹய்ஞ்ஹம் நிகழ்ச்சியில் வெளியான அறிவிப்புகளைத் தொடர்ந்து, வங்கிகள், வெளி தலையீடுகள் இல்லாமல் சுதந்திரமாக செயல்படவேண்டும்.
வியாபார மேம்பாட்டை மட்டுமே கருத்தில் கொண்டு, வங்கிகள் எந்த பயமும் இன்றி, கடன் உதவி பற்றிய முடிவுகளை எடுக்கலாம் என்று நிதி அமைச்சகம் வங்கிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அரசியல் பின்னணியை பயன்படுத்தி, வங்கிகளில் கடன் பெற்று, அதை திருப்பி செலுத்தாமல் இருக்கும் நிகழ்வுகளை தடுப்பதற்கான ஊக்கத்தை வங்கிகளுக்கு இந்த சுற்றறிக்கை அளிக்கும்.
ஒரு முறை தீர்வு (One time settlement) என்ற நடைமுறையில், வழங்கப்பட்ட கடனில் பெரும் பகுதியை தள்ளுபடி செய்து (Write off), சிறு பகுதியை மட்டுமே வங்கிகள் வசூலிக்கின்றன. இம்மாதிரி தள்ளுபடி செய்யப்பட்ட தொகைகள் பல ஆயிரம் கோடிகளை தாண்டும்.
இந்த முறையில் பயன் பெற்றவர்களில் ஒரு பகுதியினர், கடனை திருப்பி செலுத்தும் திறனுடையவர்கள் என்று சந்தேகிக்கப்படுகிறது. பெருந்தொகைகளை தள்ளுபடியாகப் பெற்ற பயனாளிகளின் பெயர்கள் அறிவிக்கப்படவேண்டும்.
பெரிய அளவில் வாராக் கடன்களை அறிவித்திருக்கும் வங்கிகளில், அதற்கான காரணங்களை ஆராயும் தணிக்கைகள் (Forensic audit) ரிசர்வ் வங்கியால் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும். கடன் வழங்கப்பட்டு, குறுகிய காலத்தில் வாராக் கடன்களாக மாறிய (Quick mortality accounts) கணக்குகளில் பிரத்தியேக கவனம் செலுத்தப்பட வேண்டும்.
அரசியல் தலையீடுகளுக்கு அடிபணியும் அதிகாரிகள் ஊக்குவிக்கப்படக் கூடாது. அதிகாரிகளின் வாய்மொழி உத்தரவுகளுக்கு தடை விதிக்க வேண்டும். வங்கியின் நிர்வாகத் தலைவர்கள் மாறும்போது, அடுத்து பதவி ஏற்பவர்கள், அதுவரையில் வெளியிடப்படாத வாராக் கடன் விவரங்களை வெளியிடும் வழக்கம் நிலவி வருகிறது. அம்மாதிரி விவரங்கள், அதுவரை ஏன் வெளியிடப்படவில்லை என்ற காரணமும் வெளிப்படையாக தெரிவிக்கப்படவேண்டும்.
வங்கி நிர்வாகங்களுக்கு தற்போது தேவைப்படுவது சுய பரிசோதனையாகும். கடன் வழங்குவதிலும், கடனை வசூலிப்பதிலும் நிலவி வரும் தவறுகளைக் கண்டுபிடித்து, அவற்றைத் திருத்திக்கொள்வது இந்த சுய பரிசோதனையில் அடங்கும்.
நேர்மையும் திறமையும் ஒன்று சேர்ந்த நிர்வாகத்தினால்தான் வாராக் கடன்களின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்த முடியும். நேர்மை என்பது தனிப்பட்ட மனிதரை சார்ந்தது. திறமை என்பது கல்வி, அனுபவத்தினால் பெறக் கூடியதாகும்.
வங்கி தொழில் என்பது பணம் புழங்கும் சாம்ராஜ்யமாகும். அதில், நேர்மைக்கு பல தருணங்களில் சோதனை நேரிடலாம். அந்த சோதனையில் பெரும்பாலானோர் வென்றாலும், சிலர் நிலை தடுமாறி இடறி விழும் நிகழ்வுகள் நடந்து கொண்டு இருக்கின்றன. தவறு செய்தவர்கள் அனுபவிக்கும் தண்டனை மற்றவர்களுக்கு ஒரு பாடமாக அமையவேண்டும்.
வங்கி நிர்வாகத்தில் போதிய திறமை வளர்க்கப்படவில்லையென்றால், வாராக்கடன்கள் போன்ற பெரும் பொருளாதார சேதங்கள் விளையும் அபாயம் உள்ளது.
வாராக் கடன்களின் பெரும் வளர்ச்சி என்ற நிகழ்வு, இந்திய வங்கி சரித்திரத்தில் ஒரு கெட்ட கனவாக மறைய வேண்டும் என்பதுதான் சாதாரண குடிமகனின் விருப்பமாகும்.
கட்டுரையாளர்: வங்கி அதிகாரி (ஓய்வு).
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.