ஆக்டோபசு படர்வதற்கு பல கைகள் இருப்பதைப் போல, வெறுப்பு அரசியலில் அவதூறானப் பேச்சு, கெட்ட எண்ணத்துடன் கூடிய எழுத்து, எதிரணியினர் மீது வழக்கு தொடர்தல், கொலை செய்தல், தாக்குதல் போன்ற பல்வேறு கெட்ட விழுதுகள் படர்ந்துள்ளன.
ஓர் அரசியல் கட்சி என்பது எதிர்க்கட்சியாகத்தான் இருக்க முடியுமே தவிர, பகைகொண்ட எதிரிக்கட்சியாக இருக்கக்கூடாது. கட்சிகளுக்கிடையே வளர்ந்துவரும் பகையின் விளைவாக மக்கள் நலன்களை மறந்துவிடுகிறார்கள்.
ஒருவர் தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சர் ஆக பதவியேற்கும்போது, பதவியை இழந்த முன்னாள் முதலமைச்சர் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதில்லை. நாகரிகமான அரசியல், வன்முறை, பகைமை அரசியலாக மாற்றப்பட்டுவிட்டது. ஆட்சி அதிகாரத்தைப் பிடிப்பதே முக்கிய நோக்கமாகிவிட்டது. இதனால் பாதிக்கப்படுவது சனநாயகமும் அப்பாவி மக்களும்தான்.
பெரும்பாலான அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வாரிசு அடிப்படையிலேயே வருகிறார்கள். தலைவர்களின் குடும்ப உறுப்பினர்கள், அவர்களது வாரிசுகள் அடுத்தத் தலைவர்களாக வருகின்றனர்.
சனநாயக வழியில் ஆரோக்கியமான, நாகரிகமான அரசியலை மேற்கொள்ள தங்களின் தொண்டர்களுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் அறிவுரைகளை வழங்கி அவர்களை வழிநடத்த வேண்டும்.
"தலைவர்கள், சுய கட்டுப்பாடு, மாண்பு, நாகரிகம் உள்ளிட்டவற்றை வெளிப்படுத்த வேண்டும். தலைவர்கள் இவ்வாறு செயல்படவில்லை என்றால், அசிங்கமான அரசியல் நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாது.
அவதூறாகப் பேசும் அரசியல்வாதிகளை அவர்கள் சார்ந்துள்ள கட்சிகளிலிருந்து நீக்க வேண்டும்' என உயர்நீதிமன்ற நீதிபதி என். கிருபாகரன் வேதனையுடன் தனது தீர்ப்புரை ஒன்றில் கடுமையாகச் சாடியுள்ளார்.
தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் சிலரின் செயல்பாடு அவர் உள்ளத்தில் எத்தகைய வேதனையை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை இந்தத் தீர்ப்பு எடுத்துக்காட்டுகிறது.
அவரது தீர்ப்புரையில் "கடந்த கால அரசியல் நாகரிகம் என்பது வரலாறுபோல் காட்சி தருகிறது' என்று குறிப்பிட்டிருப்பது முக்கியமானதாகும்.
கடந்த தலைமுறை தலைவர்களான ராஜாஜி, பெரியார், திரு.வி.க. காமராசர், ஜீவானந்தம், பி. ராமமூர்த்தி, அண்ணா போன்றோர் எத்தகைய நாகரிகமான அரசியலை நடத்தினார்கள் என்பதை நீதிநாயகம் நினைவுபடுத்தியிருக்கிறார்.
எத்தகைய கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் ஒருவர் மற்றொருவர் மீது வைத்திருந்த மதிப்பு, நட்பு ஆகியவற்றை அவர்கள் ஒருபோதும் மறக்கவில்லை.
இராஜாஜியும் பெரியாரும் காலமெல்லாம் கருத்து மோதலில் ஈடுபட்டிருந்தபோதிலும் ஒருவர் மீது மற்றொருவர் வைத்திருந்த அன்பு அளப்பரியது. இராஜாஜி காலமானபோது அவருக்கு இறுதி மரியாதை செலுத்த, நடமாட முடியாத நிலையில் தள்ளுவண்டியில் வந்த பெரியார் கதறிக்கதறி அழுதுகொண்டே வந்ததை நான் பார்த்து மனம் உருகி இருக்கிறேன்.
அதைப்போலவே, இராஜாஜியுடன் காமராசருக்கு இருந்த கருத்து முரண்பாடு அனைவரும் அறிந்ததே.
தான் வளர்த்த காங்கிரசை ஒழித்தே தீருவது என கங்கணம் கட்டிக்கொண்டு தனது முதிய வயதில் களத்தில் இறங்கிய ராஜாஜி, காமராசர் அகில இந்திய காங்கிரஸ் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபின், தில்லியிலிருந்து தமிழகத்திற்கு வந்தபோது அவர் வருவதற்கு முன்னாலேயே சத்தியமூர்த்தி பவனுக்கு வந்து நீண்ட நேரம் காத்திருந்து அவருக்கு வாழ்த்துத் தெரிவித்துவிட்டுச் சென்றார்.
"நானே வந்து உங்களிடம் ஆசிபெற்றிருப்பேனே நீங்கள் வரவேண்டுமா' என காமராசர் நெஞ்சம் நெகிழ்ந்தார்.
பெரியாரிடம் கருத்து வேறுபாடு கொண்டு அண்ணா பிரிந்து தி.மு.க.வை உருவாக்கியபோது, பெரியார் மிகக்கடுமையாக அவரைச் சாடினார்.
1967-ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் தி.மு.க.வுக்கு எதிராக கடும் பிரசாரத்தை மேற்கொண்டவர் பெரியார். ஆனாலும், அண்ணா முதலமைச்சர் பொறுப்பை ஏற்றவுடன் நேரடியாக திருச்சிக்கு சென்று பெரியாரைக் கண்டு அவரது வாழ்த்தைப் பெறத் தவறவில்லை. பெரியாரும் உள்ளம் நெகிழ்ந்தும் மனமுவந்தும் அவரை வாழ்த்தினார்.
1952-ஆம் ஆண்டு ராஜாஜி முதலமைச்சரானபோது சட்டப்பேரவையில் கம்யூனிஸ்டு கட்சி வலுவான எதிர்க்கட்சியாக இருந்தது. "எனது முதலாவது எதிரி கம்யூனிஸ்டுகளே' என சட்டப்பேரவையிலேயே வெளிப்படையாக அறிவிக்க ராஜாஜி தயங்கவில்லை.
ஆனால், முல்லைப் பெரியாறு அணை நீரிலிருந்து மின்சாரம் தயாரிக்க அப்போது கேரள முதலமைச்சராக இருந்த பட்டம் தாணுப்பிள்ளையைச் சந்தித்து அனுமதி பெறுவதற்காக ராஜாஜி யாரைத் தேர்ந்தெடுத்தார் தெரியுமா?
யாரை தனது முதல் எதிரி என்று கூறினாரோ அந்த கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரான பி. இராமமூர்த்தியையே. அவரும் சென்று அந்தப் பேச்சுவார்த்தையை வெற்றிகரமாக முடித்து தமிழகத்திற்கு மின்சாரம் கிடைக்க வழிசெய்தார்.
அதே சட்டப்பேரவையில் கம்யூனிஸ்டு கட்சியின் துணைத் தலைவரான ஜீவானந்தம் தனது தொகுதியில் உள்ள குறைகளையெல்லாம் சுட்டிக்காட்டிப் பேசியபோது, ராஜாஜி குறுக்கிட்டு "ஜீவா சர்வதேசியம் பேசுபவர். கேவலம் ஒரு தொகுதியைக் குறித்துக் கவலைப்படுகிறாரே' என கிண்டல் செய்தார்.
ஜீவா "உண்மைதான். நாங்கள் சர்வதேசியவாதிகள்தான். ஆனால், ஒரு தொகுதி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு இந்த அவைக்கு வந்திருக்கிறேன். எனவே அந்த மக்களின் குறைகளைக் கூறவேண்டியது எனது கடமை. ஆனால், மாண்புமிகு முதலமைச்சருக்கு அந்தக் கடமை கிடையாது. எந்தத் தொகுதியிலிருந்தும் மக்களால் அவர் தேர்ந்தெடுக்கப்படவில்லை. ஆளுநரால் நியமிக்கப்பட்டு வந்திருக்கிறார். எனவே, ஆளுநருக்கு மட்டும் பதில் சொல்லக் கடமைப்பட்டவர்' என்று கூறியபோது, ராஜாஜி உள்பட அனைவரும் வாய்விட்டு சிரித்ததால் சபையே கலகலத்தது.
1954-ஆம் ஆண்டில் காமராசர் முதலமைச்சர் பொறுப்பை ஏற்றபோது சட்டப்பேரவையில் உறுப்பினராக இருக்கவில்லை. எனவே, குடியேற்றம் தொகுதியில் அவர் சட்டப்பேரவை உறுப்பினராகப் போட்டியிட்டார். அவரை தி.மு.க. உள்பட அனைத்துக் கட்சிகளும் ஆதரித்தபோது, கம்யூனிஸ்டு கட்சி மட்டும் அவரை எதிர்த்து வேட்பாளரை நிறுத்தியது.
காமராசர் வெற்றிபெற்று முதலமைச்சராக இருந்தபோதுதான் நீண்டகால சிறை தண்டனை பெற்றிருந்த கம்யூனிஸ்டுத் தலைவர்களான பாலதண்டாயுதம், ப. மாணிக்கம், ஆர். நல்லகண்ணு உள்பட பலரை விடுதலை செய்ய உத்தரவிட்டார்.
பி. இராமமூர்த்தி, ஜீவானந்தம் போன்ற தலைவர்கள் காமராசருடன் நெருங்கிய நட்புறவு கொண்டிருந்தார்கள். ஆனாலும், அரசியலில் அவரை மிகக்கடுமையாக விமர்சிக்க அவர்கள் தயங்கியதில்லை.
தாம்பரத்தில் குடிசை வீடு ஒன்றில் ஜீவா வசித்தபோது, முதலமைச்சராக இருந்த காமராசர் அவர் வீட்டிற்கே சென்று அவர் வாழ்ந்த நிலையைப் பார்த்து நெக்குருகிய வரலாறு அனைவரும் அறிந்தது.
காமராசருக்கும், இந்திரா காந்திக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தபோது, இருவருக்குமிடையே தூது சென்று இருவரையும் ஒன்றுபடுத்த முயற்சி மேற்கொண்டவர் பி.இராமமூர்த்தி என்பதை நான் நேரடியாகவே அறிந்தவன்.
காங்கிரஸ் கட்சி பிளவுபட்டால், அது தனது கட்சிக்குத்தானே ஆதாயம் என்று பி. இராமமூர்த்தி நினைக்கவில்லை. அதுபோலவே, மாற்றுக்கட்சியைச் சேர்ந்த
பி. இராமமூர்த்தி தங்களுக்கிடையே சமரசம் ஏற்படுத்த முயன்றபோது, அதை சந்தேகக் கண்கொண்டு காமராசரும், இந்திராவும் பார்க்கவில்லை. அவர் மீது முழுமையான நம்பிக்கை வைத்திருந்தார்கள்.
தமிழ்நாட்டுப் பிரச்னைகளிலும் அந்தத் தலைவர்கள் ஒன்றுபட்டு நின்றார்கள். ஆந்திர மாநிலம் பிரிந்தபோது, சென்னை நகரின்மீது ஆந்திர மக்கள் உரிமை கொண்டாடினார்கள். அப்போது முதலமைச்சராக இருந்த ராஜாஜி சென்னை நகரம் தமிழர்களுக்கே சொந்தமானது என்பதில் உறுதியாக இருந்தார்.
இரு மாநிலங்களுக்கும் பொதுவான தலைநகரமாக சென்னை இருக்கட்டும் என நேரு யோசனை கூறியபோது, ராஜாஜி அதை ஏற்க மறுத்து "இதுதான் உங்கள் முடிவு என்று சொன்னால் இந்தக் கடிதத்தையே எனது பதவி விலகல் கடிதமாக வைத்துக்கொள்ளலாம்' என ராஜாஜி நேருவிற்கு எழுதினார்.
அவரின் நிலையை பெரியார், காமராசர் அண்ணா, ம.பொ.சி. ஆகியோர் ஆதரித்து உறுதியாக நின்றார்கள். அதன் விளைவாக சென்னை நகரம் தமிழர்களுக்குச் சொந்தமாயிற்று.
அதைப்போலவே தட்சிணப் பிரதேசம் அமைக்க பிரதமர் நேரு முயற்சி செய்தபோது, முதலமைச்சர் காமராசர் அதை ஏற்கவில்லை. அவருடைய நிலையை பெரியார், அண்ணா, ம.பொ.சி. போன்றவர்கள் ஆதரித்து நின்று தட்சிணப் பிரதேசத் திட்டத்தைத் தகர்த்தார்கள்.
1967-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் காமராசர் தோற்றபோது அண்ணா மிகவருந்தினார். அதை பகிரங்கமாக வெளியிட அவர் தவறவில்லை. அதைப்போலவே, அண்ணாவின் உடல்நிலை பாதிக்கப்பட்டபோது அவரைச் சென்று பார்த்த காமராசர் மனம் கலங்கி உடனடியாக மருத்துவர்களைக் கொண்ட குழு ஒன்றை அமைத்ததோடு, முதல்வரின் உடல்நிலைக் குறித்து அவ்வப்போது மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என தி.மு.க. தலைவர்களிடம் அன்புடன் கடிந்து கொண்டார்.
சென்னையில் 2-ஆவது உலகத் தமிழ் மாநாடு நடைபெற்றபோது. இராஜாஜி, பெரியார், ஜீவா, ம.பொ.சி. உள்ளிட்ட தலைவர்களை, முதலமைச்சராக இருந்த அண்ணாவே நேரில் சென்று அழைத்தார். இந்த உயர்ந்த பண்பாடு பிற்காலத்தில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாடுகளில் காணப்படவில்லை.
அ.தி.மு.க. ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டில் தி.மு.க. தலைவர்கள் கலந்துகொள்ளவில்லை. தி.மு.க. ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது நடந்த மாநாட்டில் அ.தி.மு.க. கலந்துகொள்ளவில்லை.
தமிழக சட்டப்பேரவையும் மக்கள் பிரச்னைகளைக் குறித்த தரமான விவாதங்கள் நடைபெறும் இடமாக இல்லாமல், தரங்கெட்ட வகையிலும், தங்களது பகைமையை வெளிக்காட்டும் வகையிலும் தி.மு.க. அ.தி.மு.க. மோதல் களமாக மாற்றப்பட்டுவிட்டது.
இரு கட்சித் தலைவர்களும் முதல்வராக இருந்தால் மட்டுமே சட்டப்பேரவைக்குச் செல்வது, இல்லாவிட்டால் செல்வதில்லை என்ற சனநாயக விரோதப் போக்கை கடைப்பிடிக்கிறார்கள்.
சட்டப்பேரவைக்குச் செல்ல விரும்பாவிட்டால், பதவியை விட்டு விலகி வேறு ஒருவர் அந்தத் தொகுதி மக்களின் பிரதிநிதியாக செல்வதற்கு வழிவிட வேண்டுமே தவிர, பதவியையும் விடமாட்டேன், சட்டப்பேரவைக்கும் போகமாட்டேன் என்று சொல்வது சனநாயகத்தை மதிக்காதப் போக்காகும்.
சட்டப்பேரவைக்கு உள்ளே மட்டும் அல்ல, வெளியேயும் இந்த இரு கட்சிகளும் ஒன்றுக்கொன்று எதிரிக்கட்சியாக நடந்துகொள்கின்றன. இதன் விளைவாக இந்த தீய அரசியல் போக்கு மற்ற கட்சிகளுக்கும் பரவுகிறது.
தமிழ்நாட்டு அரசியல் தலைமை, இந்திய அரசியலுக்கு வழிகாட்டிய நிலை போய்விட்டது. இன்று தமிழக அரசியலைப் பார்த்து இந்தியாவின் பிற மாநில அரசியல்வாதிகள் எள்ளி நகையாடும்போக்கு பெருகிவிட்டது.
இவற்றைக் கண்டு மனம் பொறுக்காத நிலையில்தான் உயர்நீதிமன்றத்தில் நீதிநாயகம் கிருபாகரன் தனது வேதனையை வடித்திருக்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.