கட்டுரைகள்

ஏன் இந்த நெருக்கடி?

ஈரானின் அணுசக்தித் திட்டம் தொடர்பான பிரச்னைக்கு ஒரு சர்வதேச தீர்வு ஏற்படும் வாய்ப்பு நெருங்கி வருகிறது.

எஸ். ராஜாராம்

ஈரானின் அணுசக்தித் திட்டம் தொடர்பான பிரச்னைக்கு ஒரு சர்வதேச தீர்வு ஏற்படும் வாய்ப்பு நெருங்கி வருகிறது. இது தொடர்பாக ஜெனீவாவில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சிறிய அளவிலான முன்னேற்றமே ஏற்பட்டிருக்கிறது என்றாலும், மத்திய கிழக்கின் போர்ப் பதற்றத்துக்கு மத்தியில் இது ஒரு முக்கியத் திருப்பமாகக் கருதப்படுகிறது.

அமெரிக்கா, பிரிட்டன், சீனா, பிரான்ஸ், ரஷியா, ஜெர்மனி ஆகிய 6 நாடுகள் மற்றும் ஈரான் இடையிலான இந்தப் பேச்சுவார்த்தையில், ஈரானின் சர்ச்சைக்குரிய அணுசக்தித் திட்டங்கள் மற்றும் அதன் மீதான பொருளாதாரத் தடைகள் குறித்து மார்ச் மாத இறுதிக்குள் ஓர் உடன்பாட்டை ஏற்படுத்திக்கொள்வது என முடிவெடுக்கப்பட்டிருக்கிறது.

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி, ஈரான் வெளியுறவு அமைச்சர் முகமது ஜாவேத் ஷரீப் ஆகியோர் இடையிலான நீண்ட பேச்சுவார்த்தையும் இதில் அடக்கம்.

ஈரானின் அணுசக்தித் திட்டம் 10 ஆண்டுகளுக்கும் மேலாக சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. யுரேனியத்தை செறிவூட்டும் பணியில் ஈரான் தீவிரமாக ஈடுபடத் தொடங்கியதே இதற்குக் காரணம்.

அணுமின் நிலையம் உள்ளிட்ட ஆக்கபூர்வமான, அமைதியான விஷயங்களுக்காகவே யுரேனியத்தை செறிவூட்டும் பணியை மேற்கொண்டதாக ஈரான் தெரிவித்தது. ஆனால், அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் அதை நம்பவில்லை.

அணு ஆயுதம் தயாரிக்கும் முயற்சியில் ஈரான் ஈடுபட்டு வருவதாகக் குற்றஞ்சாட்டி வருகின்றன.

சர்வதேச அணுசக்தி முகமை அதிகாரிகள் ஈரானுக்குச் சென்று, அதன் அணுசக்தித் திட்டங்களை நேரடியாக ஆய்வு செய்து, ஓரளவு ஈரானுக்கு சாதகமான முடிவை அறிவித்தும், அமெரிக்கா அதை ஏற்கவில்லை.

இதைத் தொடர்ந்து, ஈரான் மீது அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் பொருளாதாரத் தடை விதித்தன. இந்தத் தடையால் ஈரானின் பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

நீண்டகாலமாக இருந்து வரும் இந்தப் பிரச்னையில், அமெரிக்கா உள்ளிட்ட ஆறு நாடுகளின் தலையீட்டைத் தொடர்ந்து, 2013-இல் தனது அணுசக்தித் திட்டங்களை தாற்காலிகமாக ஈரான் நிறுத்தியது.

அதற்குப் பதிலாக, தன் மீதான பொருளாதாரத் தடையை விலக்கிக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தியது. இது தொடர்பாக கடந்த நவம்பரில் இந்த நாடுகள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால், அதில் பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கு காலவரையறை நிர்ணயிக்கப்படவில்லை.

இந்தச் சூழ்நிலையில்தான், மார்ச் மாதத்திற்குள் அரசியல் ரீதியான ஓர் உடன்பாட்டை ஏற்படுத்துவது என்றும், ஜூலை 1-க்குள் முழுமையான தீர்வை எட்டுவது என்றும் இப்போது காலவரையறை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பிப்ரவரி மாதம் மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.

இந்தப் பேச்சுவார்த்தையில், அமெரிக்க அதிபர் ஒபாமா, பிரிட்டன் பிரதமர் கேமரூன் ஆகிய இருவரும் மிக ஆர்வமாக இருக்கிறார்கள்.

ஆனால், ஒரு சர்வதேச பிரச்னை முடிவுக்கு வரும் சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், குடியரசுக் கட்சி உறுப்பினர்களின் ஆதிக்கம் மிகுந்த அமெரிக்க நாடாளுமன்றம், ஈரானுக்கு எதிரான புதிய தடைகளை விதிக்கக் கோரும் மசோதாவை தயாரித்து வருவது பிரச்னையை சிக்கலாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜூலை 1-ஆம் தேதிக்குள் இந்த விவகாரத்தில் உடன்பாடு ஏற்படாவிட்டால், ஈரானுக்கு எதிராக புதிய தடைகளை விதிக்கக் கோரும் மசோதாவை கொண்டுவரப் போவதாக குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

அவ்வாறு புதிய தடை விதிக்கப்பட்டால், அது தற்போது நடைபெற்று வரும் பேச்சுவார்த்தையை சீர்குலைத்துவிடும் என்றும், மத்திய கிழக்கில் ஆயுத மோதலுக்கு வழிவகுத்துவிடும் என்றும் அதிபர் ஒபாமா கூறியுள்ளார்.

அதுமட்டுமல்ல, அதற்கும் மேலே சென்று, தடை விதிக்கக் கோரும் புதிய மசோதா தயாரிக்கப்பட்டால், அதை தனது வீட்டோ அதிகாரத்தைக் கொண்டு ரத்து செய்துவிடுவதாகவும் எச்சரித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பினராக உள்ள அமெரிக்கா, சீனா உள்ளிட்ட ஐந்து நாடுகள், அவற்றோடு இந்தியா, பாகிஸ்தான், வடகொரியா சேர்த்து எட்டு நாடுகள்தாம் இப்போது அணு ஆயுத பலம் கொண்டவை.

இவை தவிர, வேறு எந்த ஒரு நாடும் புதிதாக அணு ஆயுதம் தயாரித்துவிடக் கூடாது என்பதில் அமெரிக்கா குறியாக இருக்கிறது. சர்வதேச நெருக்கடியையும் மீறி, வடகொரியா அணு ஆயுதத்தை தயாரித்து, சோதனை செய்தும் பார்த்த நிலையில், ஈரானும் அந்தப் பட்டியலில் சேர்ந்துவிடக் கூடாது என்பது அமெரிக்காவின் கவலை.

முதன்முதலில் ஜப்பானுக்கு எதிராக அணு ஆயுதத்தைப் பயன்படுத்தி, வரலாற்றின் கருப்புப் பக்கங்களில் இடம் பிடித்த அமெரிக்கா, இப்போது அணு ஆயுதத்தை புதிதாக எந்த நாடும் தயாரிப்பதைக்கூடத் தடுப்பது ஒருவகையில் முரண் என்றாலும், அனைத்து பிராந்தியங்களிலுமே போர் அபாயம் மிகுந்துவிட்டதால் அது அவசியமானதாகக் கருதப்படுகிறது.

அதேவேளையில், அணுகுண்டு தயாரிக்கத்தான் அணுசக்தியை பயன்படுத்த வேண்டும் என்பதில்லை; அணு மின் நிலையம், அணு மின் சக்தியைப் பயன்படுத்தி போர்க் கப்பலை இயக்குதல் உள்ளிட்ட மின்சாரத் தேவை மற்றும் பாதுகாப்பு விஷயங்களுக்கும் அணுசக்தியைப் பயன்படுத்த முடியும். அந்த உரிமை ஏற்கெனவே அணு ஆயுத வல்லமை படைத்த நாடுகளுக்கு மட்டுமே உரியதன்று.

மேலும், ஜனநாயக உலகில், எந்த ஒரு நாடும் தனிமைப்படுத்தப்பட வேண்டிய அவசியம் இல்லாதபோது, ஈரானுக்கு மட்டும் ஏன் நெருக்கடி தொடர வேண்டும்?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்காவுடன் இடைக்கால வா்த்தக ஒப்பந்தம்: பேச்சுவாா்த்தை ஒத்திவைப்பு!

மாற்றம் பெறும் மதிப்பீட்டு முறை!

தமிழகத்தில் 2,506 முகாம்கள் மூலம் 3,09,707 பேருக்கு வேலைவாய்ப்பு!

தில்லியில் பயங்கரவாத தாக்குதல் சதி முறியடிப்பு: தமிழகத்தில் இருந்து 6 போ் உள்பட 8 போ் கைது!

இடையறா பயணத்தின் 'மைல்கல்' தேர்தல்!

SCROLL FOR NEXT