கட்டுரைகள்

தொழில்மயமான எதிர்காலம்

உலகத்தைப் பற்றி இரண்டு கருத்துகள் கொண்டவர்கள் மனிதர்கள். சிலர் துன்ப நோக்கு கொண்டவர்கள்

ஆர். நட​ராஜ்

உலகத்தைப் பற்றி இரண்டு கருத்துகள் கொண்டவர்கள் மனிதர்கள். சிலர் துன்ப நோக்கு கொண்டவர்கள். இந்த உலகம் எவ்வளவு கொடூரமானது, எத்தனை கொடியது என்று கூறுவார்கள். வேறு சிலரோ இன்ப நோக்கு கொண்டவர்கள். அவர்கள் இந்த உலகம்தான் எவ்வளவு அழகானது, எத்தனை அற்புதமானது என்று மகிழ்வார்கள்.
 நன்மையையே யோசித்தால் நாட்டில் நல்லது நடக்கும், தீமையானவற்றைப் பற்றியே புலம்பிக் கொண்டிருந்தால் இருந்த இடம் பள்ளம் என்று கீழ் நோக்கித்தான் போவோம்.
 எங்குதான் பிரச்னைகள் இல்லை. ஆனால், அவற்றைச் சமாளித்து வியத்நாம் போன்ற பின்தங்கிய நாடுகளும் முன்னேறிக் கொண்டிருக்கின்றன. ஆனால், நமது நாட்டில் விதண்டாவாதம் தொடர்கிறது.
 "மேக் இன் இந்தியா' (இந்தியாவில் தயாரிப்போம்) என்ற அறைகூவலை மோடி அரசு கொடுத்திருக்கிறது. நமது நாட்டில் உற்பத்தியைப் பெருக்குவதற்கும், பொருளாதாரத்தை மேன்மையாக்கவும் தொழில்களின் முன்னேற்றம் இன்றியமையாதது.
 எந்த நாட்டிலிருந்தும் இந்தியாவுக்கு வந்து பொருள்களை உற்பத்தி செய்து எடுத்துச் செல்லலாம், அதற்கு எல்லாவிதத்திலும் உகந்த நாடு பாரத நாடு. இதைத்தான் பாரதியார் அன்றே சொன்னார்: "ஆயுதம் செய்வோம் நல்ல காகிதம் செய்வோம் ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்'.
 ராணுவத்துக்கான ஆயுதங்களையும் உபகரணங்களையும் நாமே உற்பத்தி செய்ய வேண்டும் என்று மத்திய அரசு முயற்சி எடுத்திருக்கிறது. அது மட்டுமல்ல, எல்லாத் தொழில்களும் பெருக வேண்டும். தொழில் உற்பத்தி உயர்ந்தால்தான் வேலை வாய்ப்பு, சேவை சார்ந்த உப தொழில்கள் வளரும் என்ற நோக்கத்தில் பல திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.
 பொருளாதார வளர்ச்சியைக் குறிக்கும் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜி.டி.பி.) நாடு சுதந்திரம் அடைந்த முதல் 30 வருடங்களில் மூன்று சதவீதத்தைத் தாண்டவில்லை. இது மந்த வளர்ச்சி என்று ஏளனமாகப் பொருளாதார நிபுணர்கள் இதற்குப் பெயர் சூட்டினர். ஆனால், 1750-களில் ஆங்கிலேயர் வ ருகைக்கு முன்பு உலகப் பொருளாதார வளர்ச்சியில் 25 சதவீதம் இந்தியா பங்களித்தது. அதற்குப் பிறகுதான் இந்த வீழ்ச்சி.
 ஜி.டி.பி. என்பது மூன்றெழுத்து, தொழில் என்பதும் மூன்றெழுத்து, "மேக் இன் இந்தியா' மூன்று வார்த்தைகள். ஜி.டி.பி. என்ற மூன்றெழுத்துப் பொருளாதாரக் குறியீட்டை உயர்த்த தேவை மூன்று - தொழில், உழைப்பு, உற்பத்தி.
 இந்த மூன்றிலும் முக்கியமானது உற்பத்திப் பெருக்கம். இந்தியாவில் செய் தொழிலாக்கம் (உற்பத்தி) கடந்த 10 ஆண்டுகளில் தொய்வடைந்துள்ளதாகப் பொருளாதாரக் குறியீடுகள் தெரிவிக்கின்றன.
 நாட்டின் பொருளாதாரக் குறியீட்டுக்கு செய் தொழிலின் பங்கு 15 சதவீதம் மட்டுமே. 2006-07இல் 16 சதவீதத்தை எட்டியது. 2012-13இல் 14.05 சதவீதமாகக் குறைந்துள்ளது.
 ஆனால், இதர ஆசிய நாடுகளான தாய்லாந்தில் செய் தொழிலாக்கம் ஜி.டி.பி.யில் 36, தென் கொரியாவில் 31, சீனாவில் 30 சதவீதமாக உள்ளது. உலகின் செய் தொழிலாக்கத்தில் நமது நாட்டின் பங்களிப்பு 2.2 சதவீதம் மட்டுமே. சீனாவின் பங்களிப்பு 18.9 சதவீதம்.
 செய் தொழில் மூலம் வேலையில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கை மொத்த வேலைவாய்ப்பில் 12.2 சதவீதமாக இருந்தது, 2012-இல் 10.5 சதவீதமாகக் குறைந்துள்ளது. இந்தியாவின் ஏற்றுமதியில் செய் தொழில் பொருள்களின் பங்கு 1991-இல் 74 சதவீதமாக இருந்தது, இது 2011-இல் 61 சதவீதமாகக் குறைந்துள்ளது.
 விவசாயம், செய் தொழில், செய் தொழில் அல்லாத அமைப்புகள், சேவை சார்ந்த தொழில்கள் ஆகிய இந்த நான்கில்தான் நாட்டின் உழைப்பாளிகள் அடங்குவார்கள். சராசரியாக விவசாயத்தில் 53, செய் தொழிலில் 10.5, செய் தொழில் சாரா அமைப்பில் 12.2, சேவைகள் துறையில் 24.4 சதவீதம் பேர் பணிபுரிகின்றனர்.
 ஒரு நாட்டின் பொருளாதார முன்னேற்றம் தொழிற்சாலைகள் வளர்ந்தால்தான் சாத்தியமாகும். வளர்ந்த நாடுகளில் சராசரி 30 சதவீதம் உழைப்பாளிகள் செய் தொழிலில் ஈடுபடுகின்றனர். நாம் இன்னும் மூன்று மடங்கு செய் தொழில் வேலை வாய்ப்பைப் பெருக்கினால்தான் உயரிய வளர்ச்சி இலக்கை அடைய முடியும்.
 ஆலைகள் செய்வோம் என்று முழங்கலாம். ஆனால், அதற்கான சாத்தியங்களை எளிதாக்கவில்லை. தொழில் துவங்குவதற்கான நேசமான சூழல் சர்வதேச அளவில் கணிக்கப்பட்டுள்ளது. அதில் 185 நாடுகளில் இந்தியாவின் இடம் 132. இப்படி இருந்தால், வெளிநாட்டு முதலீட்டை எப்படி ஈர்க்க முடியும்?
 தொழில் துவங்குவதை எளிதாக்கும் வகையில் "சிங்கிள் விண்டோ' என்ற ஒற்றைச் சாளர முறை வகுக்கப்பட்டது. ஆனால், அந்த ஜன்னலுக்குப் பின்னால்தான் எவ்வளவு ஜன்னல்கள். ஒரு கணக்கின்படி, 1,240 மத்திய - மாநில நெறிமுறைகள் தொழில் துவங்குவதற்கு உள்ளன.
 இந்தியாவில் உள்ள கட்டமைப்புகள் உலகத் தரம் வாய்ந்தவையாக இல்லை. புதிதாகப் போடப்பட்ட ஆறு வழிப்பாதை நடுவே எவ்வளவு இடங்களில் பள்ளங்கள், குண்டுகுழிகள். மின் பற்றாக்குறை எல்லா மாநிலங்களிலும் உள்ளது. அதை ஈடு செய்ய முழுமையாக டீசல் மின் ஊக்கி அமைக்க அதிக முதலீடு தேவை. அதனால், உற்பத்திச் செலவு அதிகமாகும். போட்டி நிறைந்த தொழில் உலகிலே இதை எவ்வாறு ஈடு செய்வது?
 இந்தியாவில் ஒரு தொழிற்சாலையின் வணிக மின்சார நுகர்வு சராசரியாக 760 கிலோ வாட். ஆனால், அதே நுகர்வு சீனாவில் 3,000 கிலோ வாட். அமெரிக்காவில் 12,000 கிலோவாட்.
 ஏன் அந்த நாடுகளின் உற்பத்தித் திறன் நமது நாட்டைவிட ஐந்து மடங்கிலிருந்து பத்து மடங்குக்கு மேல் இருக்காது. நமது அடிப்படைக் கட்டமைப்புகளை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும், மேம்படுத்த வேண்டும்.
 வங்கிக் கடன் உடனடியாகக் கிடைப்பதில்லை. உரிய சமயத்தில் நிதி உதவி என்பது உயிர் காக்க ரத்தம் பாய்ச்சுவதைப் போல். ஆனால், அதில்தான் எத்தனை இடர்பாடுகள். உரியவர்களுக்கு, நேர்மையாளர்களுக்குக் கிடைப்பதில்லை. அதிலும், சிறு தொழில் செய்பவர்களுக்கு நிதிப் பற்றாக்குறை பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. மத்திய அரசு அறிவித்துள்ள "முத்ரா திட்டம்' உரிய நேர நிதி உதவி கிடைக்க வழிவகுக்கும் என்று நம்பலாம்.
 மேலும், தொழிலாளர்கள் சம்பந்தப்பட்ட சட்டங்கள், நடைமுறைகள் எளிதாக்கப்பட வேண்டும். ஒரு கணக்கின்படி சுமார் 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர் சட்டங்கள் உள்ளன. தொழில் துவங்குவதற்கு நிலம் கையகப்படுத்துவதில் சிக்கல். நிலம் கையகப்படுத்தும் சட்டம் இன்னும் நாடாளுமன்றத்தில் விவாதத்திலேயே உள்ளது.
 ஒவ்வோர் ஆண்டும் நமது நாட்டில் 1.20 கோடி இளைஞர்கள் வேலைவாய்ப்புச் சந்தையில் இணைகிறார்கள். இது, குறைந்தது இன்னும் 15 ஆண்டுகளுக்குத் தொடரும். அவர்களுக்குப் பணி செய்யக்கூடிய திறன் கூட்டுப் பயிற்சி அவசியம். திறன் கூட்டும் பயிற்சி அளிக்க மத்திய, மாநில அரசுகள் திட்டங்கள் வகுத்துச் செயல்படுத்துகின்றன. ஆனால், அது போதுமானதாக இல்லை. ஒவ்வொரு தொழில் நிறுவனமும் அதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும்.
 மேற்கு ஜெர்மனியில் மாணவர்களுக்கு படிக்கும்பொழுதே தொழிற்சாலைகளில் கட்டாயப் பயிற்சி அளிக்கப்படுகிறது. ஆனால், நமது தொழிற்கல்வி கூடங்களில் ஏட்டளவில்தான் இம்முறை உள்ளது. நடந்தாலும் மேலெழுந்தவாரியான பயிற்சிதான். அதனால்தான், பட்டம் பெற்றவர்கள் லட்சத்துக்கு மேல் இருந்தாலும், வேலைக்கு லாயக்கானோர் அதில் 10 சதவீதம்தான் என்ற நிலை உள்ளது.
 திறமைமிக்க இளைய சமுதாயம் உருவானால்தான் தொழில், வணிக நிறுவனங்கள் நிலைக்கும். 1990-களில் தாராளமயமாக்கல் கொள்கையைத் தொடர்ந்து தகவல் தொடர்பு நவீனமயமாக்கல் மூலம் கணினி பயின்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவானது.
 எல்லா ஐ.டி. நிறுவனங்களும் கணினி பயிற்சியை விரிவாக்கி, செயலாக்கம் மிகுந்த திறமையாளர்களை உருவாக்கின. அத்தகைய திறன் மேம்பாடு, செய் தொழில் முறைகளிலும் வரவேண்டும்.
 நவீன நகரங்கள்தான் தொழில் நிறுவனங்களுக்கு அடித்தளம். பிரேசில் நாட்டில் உள்ள ஒரு சிறிய நகரம் இடாஜுபா. அதன் மக்கள் தொகை 90,000. அந்த நகரின் குறிக்கோள் டெக்னோபோலிஸ் என்று தொழில்நுட்ப நகரமாக வேண்டும் என்பதுதான்.
 அந்த நகரின் மக்கள் தரமான கல்வி, மனநிறைவான கலாசாரத்தையும் நேசிப்பவர்கள். விஞ்ஞானமும், தொழில்நுட்பமும்தான் எல்லோருக்கும் முன்னேற்றத்தை அளிக்கும் என்று திடமாக நம்புகின்றனர்.
 தொழிலே தெய்வம் என்று அதனை ஊக்கப்படுத்த கல்வியாளர்கள், தொழில் வல்லுநர்கள், அரசுத் துறை, சமூக நல அனுபவசாலிகள் கொண்ட கருவூலத்தை அமைத்துள்ளார்கள். அதன் மூலம் அரசியலுக்கு அப்பாற்பட்டு நகர முன்னேற்றம் ஒன்றையே குறிக்கோளாக வைத்து அந்த சிறிய நகரம் முன்னேறியுள்ளது.
 தென் அமெரிக்க நாடுகளில் ஹெலிகாப்டர் தயாரிக்கும் ஹெலிப்ராஸ் என்ற ஒரே நிறுவனம் இந்த சிறிய நகரில் அமைந்துள்ளது என்பதே அந்நகரத்தின் முன்னேற்றத்துக்கு ஓர் எடுத்துக்காட்டு.
 நாட்டின் மொத்த பொருளாதார வளர்ச்சிக்கு நகரங்கள் பெருமளவு உதவுகின்றன. டோக்கியோ, நியூயார்க், லண்டன், பாரிஸ், சியோல், சிகாகோ போன்ற நகரங்களின் ஜி.டி.பி. அந்தந்த நாட்டின் ஜி.டி.பி.யை விட 80 சதவீதம் அதிகம். 2025-இல் ஆண்டுக்கு 20 ஆயிரம் டாலர் அளவுக்கு வாங்கும் திறன் படைத்த மக்கள் வசிக்கும் 25 நகரங்களில் தில்லி, மும்பை உள்பட 13 நகரங்கள் இப்போது வளர்ந்துவரும் நாடுகளில் உள்ளன.
 2011 பொருளாதார ஆய்வின்படி, இந்தியாவில் 15 பெரிய நகரங்கள் நாட்டின் ஜி.டி.பி.யில் 56 சதவீதம் பங்களித்தன. அந்த நகரங்களின் மொத்த மக்கள் தொகை நாட்டின் மக்கள் தொகையில் 7.5 சதவீதம்தான். நகரங்கள்தான் பொருளாதார மையங்கள்.
 வளர்ச்சி சாத்தியப்பட வேண்டுமென்றால், துன்ப நோக்குடையவர்கள், அதிகார வர்க்கத்தின் முட்டுக்கட்டைகள் தகர்த்தெறியப்பட வேண்டும்.
 மத்திய அரசின் 100 நவீன (ஸ்மார்ட்) நகரங்கள் திட்டமும், தமிழக முதல்வரின் 2023 தொலைநோக்கு திட்டமும் வலுவான வளர்ச்சிப் பாதையை அமைக்கின்றன. சென்னையில் வரும் செப்டம்பரில் தமிழக அரசு நடத்தவிருக்கும் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு தொழில், வணிக முன்னேற்றத்தை உறுதி செய்யும்.
 1750-களில் ஆங்கிலேயர் வருகைக்கு முன்பு உலகப் பொருளாதார வளர்ச்சியில் 25 சதவீதம் இந்தியா பங்களித்தது. அதற்குப் பிறகுதான் இந்த வீழ்ச்சி.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”அவர் உருவாக்கிய யாரும் வீண்போகவில்லை!” நல்லகண்ணு குறித்து முத்தரசன்!

மகாராஷ்டிரத்தில் 2025-ல் மட்டும் 41 புலிகள் உயிரிழப்பு!

இருதரப்பு உறவை வலுப்படுத்துவது குறித்து பேச்சு : மோடி

எய்ம்ஸ் பணிகளை முடக்கும் திமுக: அண்ணாமலை! | செய்திகள்: சில வரிகளில் | 25.02.26

”அரசியல்வாதிகளுக்கு பாடமாக விளங்கியவர்!” நல்லகண்ணு குறித்து முதல்வர் முக ஸ்டாலின்!

SCROLL FOR NEXT