கட்டுரைகள்

புருண்டியின் அரசியல் குழப்பம்

உலகின் மிகவும் ஏழ்மையான நாடுகளுள் ஒன்றான புருண்டியில் நாடாளுமன்றத்துக்கும், அதிபர் பதவிக்குமான

எஸ். ராஜாராம்

உலகின் மிகவும் ஏழ்மையான நாடுகளுள் ஒன்றான புருண்டியில் நாடாளுமன்றத்துக்கும், அதிபர் பதவிக்குமான தேர்தல் தள்ளிவைக்கப்பட்டிருப்பதன் மூலம், அங்கு நிலவி வந்த அரசியல் குழப்பம், வன்முறைக்கு ஒரு தாற்காலிகத் தீர்வு ஏற்பட்டிருக்கிறது.
 அந்த நாட்டின் அதிபர் குருன்ஷிஷா தொடர்ந்து 3-ஆவது முறையாக அதிபராகும் நோக்கத்தில், அதிபர் தேர்தலில் தான் போட்டியிடப் போவதாக கடந்த ஏப்ரலில் அறிவித்ததைத் தொடர்ந்து ஆரம்பமானது பிரச்னை.
 புருண்டியின் அரசியல் சாசன சட்டப்படி, ஒருவர் அதிபராக இரண்டு முறையே பதவி வகிக்க முடியும்.
 ஆனால், "2005-இல் முதல்முறையாக தன்னை அதிபராக நியமித்தது நாடாளுமன்றம்தான், அப்போது தான் தேர்தலில் போட்டியிடவில்லை என்பதால், அது கணக்கில் வராது' என குருன்ஷிஷா கூறிய காரணம், நாட்டில் எதிர்க்கட்சிகளைக் கொந்தளிக்க வைத்தது. இந்தத் தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக எதிர்க்கட்சிகள் அறிவித்தன.
 இதற்கிடையே, அதிபர் கூறும் காரணத்தை ஏற்பதாக, அந்நாட்டு அரசியல் சாசன நீதிமன்றமும் அவருக்கு ஆதரவளிக்கவே நிலைமை மோசமானது.
 அரசுக்கு எதிராக எதிர்க்கட்சியினர் வீதியில் இறங்கிப் போராடத் தொடங்கினர். அரசு எதிர்ப்பாளர்களுக்கும், அரசு ஆதரவாளர்கள், ராணுவத்தினருக்கும் இடையிலான மோதலால் நாடே போர்க்களமானது.
 இதனால் உயிருக்குப் பயந்து சுமார் ஒரு லட்சம் பேர் நாட்டைவிட்டு வெளியேறி, அண்டை நாடான ருவாண்டா, தான்சானியா, காங்கோ ஆகிய நாடுகளில் அகதிகளாகத் தஞ்சமடைந்தனர்.
 இந்நிலையில்தான், கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளுக்கான பிராந்திய அமைப்பானது அவசரமாகக் கூடி, புருண்டியில் தேர்தலை சுமார் 45 நாள்களுக்காவது தள்ளிவைக்க வேண்டும், அதுவரையிலான காலகட்டத்தை நாட்டில் அமைதியை ஏற்படுத்தி, நியாயமான தேர்தல் நடைபெறுவதற்கான சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என வலியுறுத்தியது.
 மேலும், அமெரிக்கா, மேற்கத்திய நாடு
 கள் கொடுத்த நெருக்கடியைத் தொடர்ந்து, ஜூன் 5-இல் நடைபெறவிருந்த நாடாளுமன்றத் தேர்தலைத் தள்ளிவைத்துள்ளது புருண்டி தேர்தல் ஆணையம்.
 ஆப்பிரிக்க நாடான புருண்டி, அரசியல் படுகொலைகள், புரட்சி, இனப் படுகொலைகளுக்குப் பெயர் பெற்றது. 1962-இல் பெல்ஜியத்திடம் இருந்து சுதந்திரம் பெற்ற புருண்டியின் தற்போதைய மக்கள்தொகை சுமார் 1.16 கோடி.
 பெரும்பான்மை ஹூட்டு, சிறுபான்மை டுட்சி இனத்தவர்களிடையேயான இன மோதல் காரணமாக இதுவரை 3 லட்சம் பேர் பலியாகியுள்ளனர். 5 லட்சம் பேர் வீடுகளை இழந்து வெளியேறியுள்ளனர்.
 இதன் உச்சகட்டமாக, 1993-இல் ஹூட்டு இனத்தைச் சேர்ந்த அதிபர் மெல்சியர் ததாயே படுகொலை செய்யப்பட்டார். அவரைத் தொடர்ந்து 1994-இல் அதிபராக நியமிக்கப்பட்ட சைபிரியன் தர்யாமிரா என்பவரும் விமானத்தில் பயணம் செய்தபோது சுட்டு வீழ்த்தப்பட்டார். இவரும் ஹூட்டு இனத்தைச் சேர்ந்தவர்தான்.
 அதன்பிறகு 2001-இல் தென் ஆப்பிரிக்காவின் தலையீட்டைத் தொடர்ந்து, ஹூட்டு, டுட்சி இனத்தவர்கள் சரிபாதி அடங்கிய அதிகாரப் பங்கீட்டு அரசு அமைக்கப்பட்டது. இதையடுத்து, ஆயுத இனக் குழுக்களில் பெரும்பாலானவை சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை மேற்கொண்டன.
 அதன் பிறகு 2005-இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் முன்னாள் ஹூட்டு இனக் குழு வெற்றி பெற்று, அதன் தலைவரான குருன்ஷிஷாவை அதிபராக நியமனம் செய்தது. அதுமுதல் மீண்டும் இன மோதல் அதிகரிக்கத் தொடங்கியது. இருப்பினும், 2010 தேர்தலிலும் குருன்ஷிஷா அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
 இந்நிலையில், மூன்றாவது முறையாக மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதாக அவர் அறிவித்ததால்தான் பிரச்னை மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. அவரது அதிபர் பதவி ஆசையை வெளிப்படையாக எதிர்த்த, ராணுவ மேஜர் ஜெனரல் கோடேப்ராய்டு, அதிரடியாகப் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.
 அதன் பின்னர், அதிபர் குருன்ஷிஷா தான்சானியா நாட்டுக்குச் சென்றிருந்த வேளையில், மேஜர் ஜெனரல் கோடேப்ராய்டு தலைமையிலான ராணுவக் குழு, ஆட்சியைக் கைப்பற்றும் நோக்கத்தில் புரட்சியில் ஈடுபட்டது.
 ஆனால், அந்தப் புரட்சி 48 மணி நேரத்தில் முறியடிக்கப்பட்டு, புரட்சியில் ஈடுபட்ட கோடேப்ராய்டு இன்று வரை தலைமறைவாக இருக்கிறார்.
 குருன்ஷிஷாவை சர்வாதிகாரி எனக் குற்றம்சாட்டும் எதிர்க்கட்சிகள், அரசியல் எதிரிகளை நசுக்கக் கொலைகள் உள்பட அவர் என்ன வேண்டுமானாலும் செய்வார் என அச்சம் தெரிவிக்கின்றன. இன்னும் 5 ஆண்டுகளுக்கு அவரை அதிபராகப் பார்க்க எதிர்க்கட்சிகள் விரும்பாததே இந்த வன்முறைக்குக் காரணம்.
 மீண்டும் தேர்தல் நடைபெறும்போது அதிபர் பதவிக்கான போட்டியில் குருன்ஷிஷா நீடித்தால் புருண்டியின் சட்டம் - ஒழுங்கு நிலைமைக் கட்டுப்படுத்த முடியாத அளவுக்குப் போகும் அபாயம் இருக்கிறது.
 அதிபராகும் முன்னர், சிறந்த கால்பந்துப் பயிற்சியாளராக இருந்தவர் குருன்ஷிஷா. நாட்டின் எதிர்காலம் கருதி போட்டியிலிருந்து விலகுவாரா அல்லது தனது ஆதரவாளர்களை வைத்து நாட்டை ஒரு கால்பந்து மைதானமாக சிதறடிப்பாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்காவுடன் இடைக்கால வா்த்தக ஒப்பந்தம்: பேச்சுவாா்த்தை ஒத்திவைப்பு!

மாற்றம் பெறும் மதிப்பீட்டு முறை!

தமிழகத்தில் 2,506 முகாம்கள் மூலம் 3,09,707 பேருக்கு வேலைவாய்ப்பு!

தில்லியில் பயங்கரவாத தாக்குதல் சதி முறியடிப்பு: தமிழகத்தில் இருந்து 6 போ் உள்பட 8 போ் கைது!

இடையறா பயணத்தின் 'மைல்கல்' தேர்தல்!

SCROLL FOR NEXT