கட்டுரைகள்

உலா வரும் நிழல் குற்றங்கள்

சைபர் குற்றங்களைப்பற்றி காவல் துறையினருக்கும் நடுவர்களுக்கும் கூட அதிகம் புரிதல் இல்லாத நிலையில், பொதுமக்களிடம் நாம் விழிப்புணர்வை எதிர்பார்க்க முடியாது.

ஆர். நட​ராஜ்

சைபர் குற்றங்களைப்பற்றி காவல் துறையினருக்கும் நடுவர்களுக்கும் கூட அதிகம் புரிதல் இல்லாத நிலையில், பொதுமக்களிடம் நாம் விழிப்புணர்வை எதிர்பார்க்க முடியாது. ஆனால், கணினியையோ அல்லது எந்த ஒரு தகவல் பரிமாற்றக் கருவியையோ எவ்வாறு பயன்படுத்துக் கூடாது என்பது ஒருவருக்குத் தெரிந்திருக்க வேண்டும். குற்றம் சாட்டப்பட்ட பிறகு நான் செய்தது குற்றம் என்று தெரியாது என்று வாதிட முடியாது.

மும்பையில் சென்ற ஆண்டு கல்லூரி மாணவிகள் இருவர் முக நூலில் அரசியல் கட்சியைச் சேர்ந்த ஒரு பிரமுகரின் மறைவிற்கு ஏன் சட்டம் - ஒழுங்கு பாதிக்கும் வகையில் அந்தக் கட்சியை சேர்ந்தவர்கள் பொது அமைதிக்கு களங்கம் விளைவிக்கின்றார்கள் என்று ஆதங்கப்பட்டு பதிவு செய்ததற்கு அந்தக் கட்சியினர் அந்த இரு மாணவிகள் மீது தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் வழக்குத் தொடுத்தனர்.

இந்த நடவடிக்கை சமுதாயத்தின் கண்டனத்தைப் பெற்றது. கருத்துரிமைக்கு எதிரானது என்று உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடுக்கப்பட்டது.

மும்பை காவல் துறையின் பயங்கரவாத ஒழிப்புப் பிரிவு (ஏ.டி.எஸ்.), அனிஸ் அன்சாரி என்பவர் மீது ஜனவரி 15-ஆம் தேதி பயங்கரவாத நடவடிக்கைகளுக்காகவும், இணையதளத்தை தவறான நோக்கத்தோடு பயன்படுத்தியதற்காகவும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.

இணையதளத்தில் டெர்மைட் வெடி குண்டு செய்வதைப் பற்றியும், மும்பை குர்லாவில் உள்ள அமெரிக்க சர்வதேசப் பள்ளியை குண்டு வைத்து தகர்க்கத் திட்டமிட்டுள்ளதாகவும், இராக்கில் உள்ள ஐ.எஸ். ஐ.எஸ். அமைப்போடு தொடர்பு வைத்திருந்ததும் புலனாய்வில் கிடைத்த அதிர்ச்சித் தகவல்கள்.

தன்னிச்சையாக செயல்படும் பயங்கரவாதிகள் காவல் துறைக்குப் பெரிய தலைவலி. "லோன் உல்ஃப்' எனப்படும் இந்த ஒற்றை ஓநாய்களை இனம் காண்பது மிகவும் கடினம்.

அமெரிக்காவில்தான் முதல் முதலாக இவ்வாறு தனியாகவும் யாருடைய உதவியுமின்றியும் பயங்கரவாதிகள் தலையெடுப்பார்கள் என்று கண்டுபிடிக்கப்பட்டது.

கலிபோர்னியா மாநிலத்தில் அலெக்சாந்தர் கர்டிஸ் என்பவர் வெள்ளை இன ஆதிக்கத்தின் உயர்விற்கு தனி ஓநாய்களாக செயல்பட தூண்டியும், சிறுபான்மை இனத்தவரைச் சேர்ந்த அரசு ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தவும் இணையதளம் மூலம் பிரசாரம் செய்ததற்காக அமெரிக்கப் புலனாய்வுத் துறை 1997-ஆம் ஆண்டு கைது செய்து நடவடிக்கை எடுத்தது.

அதற்குப் பிறகு தான் இம்மாதிரி தனி ஓநாய்களாக பயங்கரவாதிகள் செயல்படக்கூடும் என்பது உணரப்பட்டது. அதன் அடிப்படையில், இணைய தளம் மூலமாகவும் மற்ற தகவல் பரிமாற்ற முறைகள் மூலமாகவும் உலகெங்கும் சுழலும் தகவல்களை கண்காணிக்கும் அதிகாரத்தை சட்டதிருத்தம் மூலமாக பெற்றது.

தனி மனித சுதந்திரம் பாதிக்கப்படும், அந்தரங்கம் இல்லாமல் போகும் என்ற எதிர்ப்பு இருந்தாலும், பாதுகாப்பு கருதி சமுதாயத்திற்கு எதிராகச் செயல்படும் ஓநாய்களை களையெடுக்க வேண்டும் என்ற வாதத்தை மறுக்க முடியாது.

சமீபத்தில் இங்கிலாந்தில் செல்லிடப்பேசியில் பொருத்தப்படும் சிம் கார்டின் ரகசியக் காப்புகளை உடைத்து அதில் பரிமாற்றம் செய்யப்படும் தகவல்களை அமெரிக்கா, இங்கிலாந்து ஒற்றர் படை ஊடுருவியதாக செய்தி வந்துள்ளது.

இதன் மூலமும் எந்த ஒரு சிம் கார்ட் மூலம் பரிமாற்றப்படும் தகவல்கள், உரையாடல்களை ஊடுருவ முடியும். இதேமுறையை பயங்கரவாத அமைப்புகளும் கையாளக்கூடும். இது சர்வதேச காவல் துறையினருக்கு மிகப்பெரிய சவால்.

2011-ஆம் ஆண்டு லண்டன் மாநகரில் கருப்பர் இனத்தைச் சேர்ந்த ஓர் இளைஞரின் சந்தேகத்திற்கிடமான மரணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த கூட்டம் கட்டுக்கடங்காமல் வன்முறையில் ஈடுபட்டது.

பிளாக் பெரி செல்லிடப்பேசி மூலம் தகவல் காட்டுத் தீபோல் பரவி, பல நகரங்களில் சேதம் விளைவிக்கப்பட்டது. கலகக்காரர்கள் கடைகளை சூறையாடினர். அதை பெருமையாக போட்டோ எடுத்து பகிர்ந்து கொண்டனர். ஆனால், அதுவே குற்றம் புரிந்தவரை பிடிக்கவும் உதவிற்று.

2011-ஆம் வருடம் மத்திய கிழக்காசிய நாடு டியுனீசியாவில் தெரு வியாபாரி முகமது பெளசிசி என்பவர் உள்ளூர் சிறு அதிகாரிகளின் தொல்லை தாங்காது தானே தனக்கு தீவைத்துக் கொண்டு இறந்தது நாட்டையே உலுக்கியது. தகவல் இணையதளம் மூலம் பரவி கலவரம் வெடித்தது. கொடுங்கோல் ஆட்சியாளர்கள் நாட்டை விட்டே ஓடிவிட்டனர்.

இத்தகைய மக்கள் போராட்டங்கள் துருக்கி, எகிப்து நாடுகளுக்கும் பரவியது. இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது தொழில்நுட்ப வளர்ச்சியால் தகவல்கள் அதிவிரைவில் சென்றடைவதால் ஏற்படும் விளைவுகளைத்தான்.

இணையதளத்தில் விசேஷத் தகவல்களும், நிர்வாகம் சம்பந்தப்பட்ட கோப்புகளும், நாடுகளின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட அறிக்கைகளும் குறிப்புகளும் ரகசியக் குறியீடுகளுடன் கணினி மூலம் மேக பெட்டகம் என்ற முறையில் வைக்கப்பட்டுள்ளன.

இவற்றைத் தகர்த்து ரகசிய தகவல்களை சூறையாடும் ஹாக்கிங்க் என்ற மென்பொருளை ஊடுருவும் சதி தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு பெரிய பிரச்னை.

அமெரிக்க உளவுத் துறை ஆய்வில், 2013-ஆம் ஆண்டு அதிக அளவில் தகவல் தகர்ப்பு (ஹாக்கிங்க்) நடந்துள்ளது தெரிய வந்துள்ளது. இது 2012-ஆம் ஆண்டைவிட 62 அதிகம்.

அதுமட்டுமல்ல, சில இணையதள அமைப்புகளைக் குறிவைத்து தகர்க்கும் முறை 91 அதிகமாகியுள்ளது. முன்னேற்றத்தைத் தடுக்க எதற்கெடுத்தாலும் போராட்டத்தில் குதிக்கும் போலி ஆர்வலர்கள் போல் இணையதளத்திலும் இத்தகைய கயவர்கள் பெருகி வருகின்றனர்.

இணையதளம் பயங்கரவாத அமைப்புகளுக்கு உலகளாவிய தகவல் தொடர்புகளுக்கான முகப்பை கொடுத்துள்ளது. சுமார் 5,000 பயங்கரவாத இணையதள வலைகள் புழங்குகின்றன என்று அமெரிக்க உளவுத் துறை கண்டுபிடித்துள்ளது. அதனை முறியடிக்க தேர்ச்சி பெற்ற சைபர் போர் வீரர்கள் முனைப்பாக செயல்பட்டு வருகிறார்கள்.

சில பயங்கரவாத இணையதள வலைகள் தகவல் பரிமாற்றம் முடிந்த பின் சில நிமிடங்களில் அழிந்து விடும். அதன் பூர்வீகத்தை கண்டுபிடிப்பது கடினம்.

மேலைநாடுகளில் பயன்பாட்டில் இருக்கும் மடிக்கணினிகள், செல்லிடப்பேசிகள் திருட்டு அதிகமாகியுள்ளதற்கு ஒரு காரணம் பயங்கரவாதிகளோடு தொடர்புடைய கமுக்கப் படை (ஸ்லீப்பர் செல்) தகவல் பரிமாற்றத்திற்கு இவற்றைப் பயன்படுத்திவிட்டு வீசி விடுகின்றனர் என்பது தெரியவந்துள்ளது.

இப்போது சிம் கார்டு வாங்குவதற்கு பல ஆதாரங்கள், முகவரி சான்றிதழ் போன்றவை கேட்கப்படுகிறது. செல்லிடப்பேசி இணைப்பு வாங்குவதில் சிக்கலை முறியடிக்க சுலபமான வழி திருட்டு செல்லிடப்பேசியை உபயோகித்து தூக்கி எறிந்துவிடுவதுதான்.

இதனால்தான், செல்லிடப்பேசி திருடு போனால் தகவல் தர வேண்டும் என்பதும் காவல் துறை உடனடியாக பதிவு செய்ய வேண்டும் என்பதும் முக்கியமாகிறது.

2008-ஆம் ஆண்டு மும்பை நகரை பயங்கரவாதிகள் தாக்கியபோது இணையதள இணைப்பு மூலம் கராச்சியில் பயங்கரவாத அமைப்பின் தலைவன் அதை நேரலையில் பார்த்து எங்கெல்லாம் தாக்க வேண்டும், எங்கு அதிரடிப்படை உள்ளனர் என்று தகவலளித்ததால் அதிகமான சேதாரம் விளைந்தது என்பதை மறக்க முடியாது.

நமது மின்னணு ஊடகங்களும் நேரடி ஒளிபரப்பு செய்தது பயங்கரவாதிகளுக்கு சாதகமாயிற்று. இவையெல்லாம் உச்சகட்ட சைபர் குற்றங்கள்.

இணையதள இணைப்பு அதி வேகத்தில் பெருகி வரும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இங்கு சுமார் 14 கோடி இணையதள இணைப்புகள் உள்ளன. ஆண்டொன்றுக்கு 30 சதவீத இணைப்புகள் பெருகிக் கொண்டிருக்கின்றன. நமது நாட்டின் மென்பொருள் ஏற்றுமதி 2012-ஆம் ஆண்டில் 68.7 பில்லியன் அமெரிக்க டாலர்.

ஒருபுறம் தொழில்நுட்பம் வளர்ந்துவரும் அதேவேளையில், அதைச் சார்ந்த குற்றங்களும் தோன்றியுள்ளன. ஆண்டுதோறும் சராசரியாக 2,000 சைபர் குற்றங்கள் பதியப்படுகின்றன என்கிறது தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் புள்ளிவிவரம். கணினிமயமாக்கலின் வளர்ச்சியை ஒப்பிட்டால் பதியப்படும் குற்றங்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு.

2000-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட தகவல் தொழில்நுட்ப சட்டத்தில் உள்ள குறைபாடுகள் அகற்றப்பட்டு புதிய சட்டம் 2009-ஆம் ஆண்டு அமலுக்கு வந்தது. அதில் 66 அ பிரிவு படி, கணினிமூலம் பரிமாற்றம் செய்யப்படும் தகவல்கள் தவறானவையாக இருத்தல், ஒருவரை புண்படுத்தும் வகையில் அமைதல், துன்புறுத்தும் வகையில் ஆபத்து விளைவிப்பது, அவதூறு பரப்புவது, விரசமான தகவல்கள், மானபங்கம் விளைவிப்பது, பாலியல் கொடுமைகள் போன்றவை சைபர் குற்றத்தில் அடங்கும் என்றும் அதற்கு மூன்று வருட சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கலாம் என்றும் சட்டம் கடுமையாக்கப்பட்டுள்ளது.

தொந்தரவு செய்திகள், தவறான கேலி மற்றும் விளையாட்டாக அனுப்பும் தகவல்களும் இந்தச் சட்டத்தின் கீழ் குற்றமாகக் கருதப்படும்.

பாலியல் உணர்வுகளைத் தூண்டும் வீடியோக்கள், படங்கள், குழந்தைகளைப் பாலியல் கொடுமைக்கு உள்ளாக்குதல் சம்பந்தப்பட்ட படங்கள், காணொலிகள் சைபர் உலகில் பரவி வருவது வேதனைக்குரியது. இத்தகைய வலைதளங்கள் நான்கு லட்சத்திற்கும் மேல் உள்ளன. இவற்றைப் பார்த்தாலே குற்றம்.

மென்பொருள் மூலம் யார் பார்க்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள முடியும். அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியும். இந்த கண்காணிப்பு அதிகாரம் காவல்துறை சைபர் குற்றப்பிரிவிடம் உள்ளது.

கணினி அவசர நிலை எதிர் செயல் மையம் (கம்ப்யூட்டர் எமர்ஜன்ஸி ரெஸ்பான்ஸ் டீம்), விரசமான மற்றும் கேடுவிளைவிக்கக் கூடிய இணைய வலைகளை முடக்குவதற்காக மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்குகிறது. சீனா போன்ற நாடுகளில் பல இணைய வலைகளை தடுத்துவிட்டார்கள்.

நமது நாட்டில் அரசியல் சாசனம் உள்பிரிவு 19-இல் கொடுக்கப்பட்டுள்ள பேச்சுரிமைக்குப் பாதகம் இல்லாத வகையில் இந்த மத்திய குழு இணைய வலைகளை கண்காணிக்கவோ முடக்கவோ நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உலகெங்கிலும் சைபர் குற்றங்களைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது. இணையதளம் மூலம் வர்த்தகம் பண்ட பரிமாற்றம், வங்கிச் சேவைகள், பங்கு விநியோகம், பரிமாற்றம் நம் நாட்டில் பெரிய அளவில் வளர்ச்சி பெற்றிருக்கும் நிலையில் இதன் மூலம் ஈ-குற்றங்களும் பரவி வருகின்றன என்பதை உணர்ந்து அதற்குத் தகுந்த பாதுகாப்பு வளையங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும்.

வான வீதியில் உலவும் குற்றங்கள் மாயை அல்ல, நிஜம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மகாராஷ்டிரத்தில் 2025-ல் மட்டும் 41 புலிகள் உயிரிழப்பு!

இருதரப்பு உறவை வலுப்படுத்துவது குறித்து பேச்சு : மோடி

எய்ம்ஸ் பணிகளை முடக்கும் திமுக: அண்ணாமலை! | செய்திகள்: சில வரிகளில் | 25.02.26

”அரசியல்வாதிகளுக்கு பாடமாக விளங்கியவர்!” நல்லகண்ணு குறித்து முதல்வர் முக ஸ்டாலின்!

காதல் ரீசெட் ரிபீட் டிரைலர்!

SCROLL FOR NEXT