கட்டுரைகள்

புகை முன்னேற்றத்திற்குப் பகை

வீரப்பன் வேட்டையில் மலைவாழ் மக்களின் ஒத்துழைப்பைப் பெறும் வகையில் காட்டுப் பகுதிகளில் பல நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. அவற்றில் ஒன்று மருத்துவ முகாம்.

ஆர். நட​ராஜ்

வீரப்பன் வேட்டையில் மலைவாழ் மக்களின் ஒத்துழைப்பைப் பெறும் வகையில் காட்டுப் பகுதிகளில் பல நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. அவற்றில் ஒன்று மருத்துவ முகாம்.

ஒருமுறை அப்பல்லோ மருத்துவமனை உயர்மருத்துவ நிபுணர்கள் குழாம் தாளவாடி என்ற இடத்தில் முகாம் நடத்தினர். அதிக அளவில் மலைவாழ் மக்கள் சிசிச்சை பெற்றனர்.

மலைவாழ் மக்களின் நிலை பரிதாபமானது. வனங்களில் விளைபொருள்களை விற்று ஜீவிக்க வேண்டும். வன இலாகாவின் கெடுபிடி இருக்கும். மருத்துவ வசதி மிகக்குறைவு. ஊட்டச்சத்து போதிய அளவு இல்லாதால் பல உபாதைகள். இவற்றோடு புகைபிடிக்கும் கொடிய பழக்கமும் பரவலாக இருக்கும். புகை பிடித்தலும் ஒரு நோய்தான் .

மருத்துவ முகாமில் நடுத்தர வயதுள்ள ஒருவர் பார்ப்பதற்கு விகாராமாக தாடையில் ஒரு பக்கம் சதையே இல்லாது பல்வரிசை தெரிய நடமாடும் எலும்புக் கூடாக வந்தார். முகத்தில் ஈ மொய்த்துக் கொண்டிருந்தது. எந்த உணர்வும் இல்லை. வலியின் உச்சியில் எல்லாம் மரத்துவிட்டது. புகையிலையால் ஏற்பட்ட கொடுமை.

ஆராய்ந்த மருத்துவர் புற்றுநோயின் உச்ச கட்டம் என்று அறிந்து அந்த நோயாளிக்கு எஞ்சியுள்ள நாள்களில் வலியை குறைப்பதற்கு மருந்து கொடுத்தார். அவர் அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற ஏற்பாடு செய்யப்பட்டது. அவரது மரணத்தைத் தவிர்க்க முடியவில்லை. புகையிலை பழக்கத்தால் வந்த புற்று நோய் அவர் உயிரைப் பறித்துக் கொண்டது.

புகையிலைப் பழக்கம் உலகையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. உலக சுகாதார நிறுவனம் அதிகமான உயிரிழப்பை ஏற்படுத்தும் பத்து நோய்களில் ஒன்றாக புகையிலையை அறிவித்துள்ளது.

ஒவ்வோர் ஆண்டும் அரசு நிதிநிலை அறிக்கையில் புகையிலை மீதான வரி உயர்த்தப்படுகிறது. அப்படியாவது கொடிய பழக்கத்தை விடுவார்களா என்பது அரசின் எதிர்பார்ப்பு. ஆனால், அதற்கு மாறாக ஒவ்வொரு நாளும் சுமார் 5,000 புதியவர்கள் இந்த கொடிய பழக்கத்திற்கு இரையாகிறார்கள்.

தெற்கு அமெரிக்க நாடுகளில் இருந்த புகையிலை புகைக்கும் பழக்கம் ஐரோப்பாவிற்கு வந்தது. அங்கிருந்து போர்ச்சுகல். இங்கிலாந்து நமது நாட்டை ஆள வந்த போது அந்த பழக்கமும் நம்மை ஆட்கொண்டது.

புகை பிடிப்பது உடலுக்குக் கேடு விளைவிக்கும் என்ற சிறிய எச்சரிக்கை தாங்கிய சிகரெட் பாக்கெட்டுகள் மள மளவென்று விற்பனையாகின்றன. புகை பிடிப்போர் எண்ணிக்கை கூடுகிறது. அந்த எச்சரிக்கை தங்களைத் தாக்காது என்ற நம்பிக்கையோடு புகைப் பழக்கத்திற்கு அடிமையாகி விடுகிறார்கள்.

மது அருந்துவதற்கு பார் வசதியுள்ள கடைக்குச் செல்ல வேண்டும். தொட்டுக் கொள்ள காரசாரமாக ஏதாவது வேண்டும். அந்த அவஸ்தை சிகரெட்டுக்குக் கிடையாது. சிகரெட்டை வாங்கிய கையோடு பற்ற வைத்து ஊதித்தள்ளலாம். பொது இடங்களில் புகைக்க கூடாது என்பது விதி.

நமது நாட்டில் புறக்கணிப்பதற்காகவே விதிகள் பிறப்பிக்கப்படுகின்றனவோ என்று தோன்றுகிறது. காவல் துறைக்கு இது ஒரு சிறு குற்றம்தான். பல முக்கிய பிரச்னைகள் இருக்கும்போது இதை கவனிக்க ஏது நேரம்?

உலக சுகாதார நிறுவனத்தின் கணக்குப்படி சராசரியாக ஒரு வருடத்திற்கு 60 லட்சம் உயிரிழப்புகள் புகையிலை பழக்கத்தால் ஏற்படுகின்றன. அதில் புகை பிடிக்காத ஆறு லட்சம் பேர் மற்றவர்கள் புகைக்கும் சிகரெட் புகையால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கின்றனர்.

இந்த நோயின் தீவிரத்தை உணர்ந்து, ஐக்கிய நாடுகள் சபை 1987-ஆம் வருடம் புகையிலையினால் விளையும் கேடுகளைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த தீர்மானம் நிறைவேற்றியது. அதன்படி ஒவ்வொரு வருடமும் மே மாதம் 31-ஆம் நாள் புகையிலை இல்லா நாளாக (நோ டொபேக்கோ டே) அனுசரிக்கப்படுகிறது.

அன்று பல பிரசாரங்கள், கருத்தரங்குகள், பேரணிகள் எல்லா நாடுகளிலும் நடத்தப்படுகின்றன. ஆனால், அதன் முக்கியத்துவத்தை அந்த ஒரு நாளில் மட்டுமல்ல, ஒவ்வொரு நாளும் நாம் உணர வேண்டும்.

புகைப் பிடிக்கக் கூடாது என்ற விழிப்புணர்வு நாளில்கூட புகையிலை விற்பனைக்குத் தடை கிடையாது. டாஸ்மாக்கிற்காவது வருடத்தில் சில நாள்கள் விடுமுறை உண்டு. மதுவை விட கொடிய புகையிலைக்கு விடுமுறை என்பதே இல்லை.

புகையிலை பழக்கத்தை துறப்பவர் எண்ணிக்கை மிகக் குறைவு. புகை பிடிப்பது ஒருவரது ஆண்மையை நிரூபிக்கும் என்ற எண்ணம் இளைஞர்கள் மத்தியில் மேலோங்கியுள்ளது. அது மட்டுமல்ல, புகை பழக்கத்திற்கு அடிமையானவர்கள் புதியவர்களை இணைப்பதில் இன்பம் கொள்வார்கள்.

சில நகரங்களில் குளிர்சாதன வசதியோடு காபி கடைகள் உள்ளன. அதில் ஹுக்கா புகைக்கும் வசதியுண்டு. இது இளைஞர்களை ஈர்ப்பதற்கான ஏற்பாடு. ஹுக்கா புகைப்பது ஃபில்டர் சிகரெட் போல உடம்புக்கு கெடுதல் இல்லை என்ற விளக்கம் வேறு. நிறைய இடங்களில் ஆண்களுக்கு இணையாக பெண்களும் புகை பிடிப்பது பெருகி வருகிறது.

புகையிலையில் இருக்கும் நிக்கோட்டின், மூளையின் நரம்பு மையத்தை ஆட்கொண்டு விடுகிறது. அதிலிருந்து விடுபடுவது சுலபமல்ல. மருத்துவர்கள் இதை ஒரு வியாதியாகவே கருதுகின்றனர்.

புகையிலைக்கு அடிமையானவர்கள் அந்தப் பழக்கத்தை திடீரென்று நிறுத்தினால் மன அளவில் பாதிப்பிற்கு உள்ளாகிறார்கள். செய்வதறியாது தவிக்கிறார்கள். "கோல்ட் டர்க்கி' என்ற தத்தளிக்கும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.

மற்ற போதைப் பொருள்களான ஹெராயின், கஞ்சா, பெத்தடின், கோகேய்ன் போன்றவற்றை உட்கொள்வதற்கு புகையிலை அடிகோலியாக இருப்பது மறுக்க முடியாத உண்மை. போதைப் பழக்கத்திற்கு முன்னோடி புகை பிடிக்கும் பழக்கம். முதலில் ஒன்றுக்கு அடிமையாகிவிட்டால் பிறகு மற்றவை மள மளவென்று தொற்றிக் கொள்ளும்.

நகர வாசிகளிடமும் வசதி படைத்தவர்களிடமும் சிகரெட் பழக்கம் என்றால், ஏழைகள் நாடுவது பீடி, சுருட்டு. தும்தி என்ற வகை புகையிலையை சுருட்டி, பற்றவைத்த பகுதியை வாய்க்குள் வைத்து புகைக்கும் பழக்கம் கடலோர ஆந்திர பகுதி மக்களிடம் உள்ளது.

புகையிலை வேறு வடிவமாக மிஸ்ரி, கைனி, குட்கா என்ற பெயர்களிலும் வருகிறது. இவற்றை வாயில் போட்டு சுவைக்கும் பழக்கம் இன்னும் கொடியது.

பொது இடங்களில் புகைக்கக் கூடாது என்ற தொந்தரவு இருக்கிறது. ஆனால், அந்த பிரச்னை புகையிலையை வாயில் குதப்புவதில் கிடையாது. அதுவும் பான் பராக் பழக்கம் வைரஸ் நோய் போல உழைக்கும் வர்க்கத்தினரிடமும் மாணவர்களிடமும் பரவி வருகிறது.

நமது நாட்டில் சுமார் 10 வயதிலிருந்தே பலர் புகையிலைக்கு அடிமையாகிறார்கள் என்றும், பத்திலிருந்து பதினான்கு வயதுள்ள இரண்டு கோடிப் பேர் புகைப் பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளார்கள் என்றும் அரசின் ஆய்வில் தெரியவந்துள்ளது. நாள் ஒன்றுக்கு 5,000 புதிய வரவை கணக்கில் கொண்டால் ஆண்டொன்றுக்கு 20 லட்சம் புகையிலை அடிமைகள் உருவாகிறார்கள். இது அதிர்ச்சியூட்டும் தகவல்.

எவ்வளவோ தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டும் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டும் சுமார் 20 சதவீதம் இளைஞர்கள்தான் இந்த கொடிய பழக்கத்திலிருந்து மீள்கிறார்கள்.

இளைய தலைமுறைனரிடம் ஆய்வுகள் நடத்தப்பட்டன. புகை பிடிக்கும் பழக்கம் 7 சதவீதத்திலிருந்து 23 சதவீதம் வரை பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் பரவியுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவிகள் சுமார் மூன்று சதவீதம்.

கடந்த பத்து வருடங்களில்தான் மாணவிகளிடம் அதிகமாக இப்பழக்கம் தொற்றிக் கொண்டுள்ளது. நாற்பது சதவீதம் இளைஞர்கள் பத்து வயதிலிருந்தே புகை பழக்கத்தை துவங்கிவிடுகின்றனர்.

புகையிலை பழக்கத்திற்கு கிராமம், நகரம் என்ற பாகுபாடு இல்லை. எல்லோரையும் பீடிக்கும். ஆங்கில வழிக் கல்வி பயிலும் மாணவ - மாணவியரிடமும் மருத்துவ கல்லூரி மாணவர்களிடமும் இப்பழக்கம் அதிகமாக உள்ளது.

ஆனால், மருத்துவம் பயிலும் மாணவர்கள் காலப்போக்கில் இப்பழக்கத்திலிருந்து விடுபடுகின்றனர். இதன் கொடுமையை மருத்துவ ரீதியாக அவர்கள் உணர்ந்து விடுவதே முக்கிய காரணம்.

மும்பை, கொல்கத்தா, பெங்களூரு, சென்னை போன்ற மாநகரங்களிலுள்ள நடைபாதை வாசிகளின் குழந்தைகள் இப்பழக்கத்திற்கு அதிகமாக இரையாகிறார்கள். ஒவ்வொரு நகரத்திலும் சுமார் ஒரு லட்சம் ஏழைக் குழந்தைகள் வறுமையின் சுமை காரணமாகவும், பெற்றோரின் கவனிப்பின்மையாலும் புகையிலை என்னும் அரக்கனிடம் சிக்குகிறார்கள்.

நமது நாட்டில் புகையிலை கட்டுப்பாடு சட்டம் உள்ளது. குழந்தைகளுக்கு புகையிலை விற்கக் கூடாது. கல்விக் கூடங்களுக்கு நூறு மீட்டர் அருகில் புகையிலை விற்கக் கூடாது என்றெல்லாம் விதிகள் உள்ளன. எல்லாம் ஏட்டளவில்தான், நடைமுறைப்படுத்துவதில் முழுமையில்லை.

சினிமாவில் சிறு எச்சரிக்கையோடு புகை பிடிக்கும் காட்சிகள் சர்வ சாதாரணமாக வருகின்றன. ஒயிலாக சிகரெட் பற்ற வைப்பது, ஆண்மையை, வீரத்தை வெளிப்படுத்துவதாக ஒரு தவறான பிம்பத்தை கொடுக்கிறார்கள்.

சினிமாவில் சிகரெட், மது அருந்தும் காட்சிகளை காட்டக் கூடாது. அக்காட்சிகள் தாங்கிய படங்களுக்கு வேறு காரணங்களுக்காக வரிச் சலுகைக்கான தகுதியிருந்தாலும் சலுகை அளிக்கக் கூடாது.

இளைய தலைமுறையினரின் எதிர்காலம் நல்ல முறையில் அமைய வேண்டும் என்றால் மது, புகையிலை போதைப் பொருள்களுக்கு அடிமையாகக் கூடாது.

புகை முன்னேற்றத்திற்கு பகை. குடும்ப வருமானத்தை அழிக்கும்; மயானத்திற்கு இழுத்துக் செல்லும்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மகாராஷ்டிரத்தில் 2025-ல் மட்டும் 41 புலிகள் உயிரிழப்பு!

இருதரப்பு உறவை வலுப்படுத்துவது குறித்து பேச்சு : மோடி

எய்ம்ஸ் பணிகளை முடக்கும் திமுக: அண்ணாமலை! | செய்திகள்: சில வரிகளில் | 25.02.26

”அரசியல்வாதிகளுக்கு பாடமாக விளங்கியவர்!” நல்லகண்ணு குறித்து முதல்வர் முக ஸ்டாலின்!

காதல் ரீசெட் ரிபீட் டிரைலர்!

SCROLL FOR NEXT