கட்டுரைகள்

வங்கிக் கடனும் தடைக் கற்களும்

வியாபாரத் தேவைகளுக்கு வங்கிக் கடன் கிடைப்பது அவ்வளவு சுலபம் இல்லை என்று பாதிக்கப்பட்ட

எஸ். ராமன்

வியாபாரத் தேவைகளுக்கு வங்கிக் கடன் கிடைப்பது அவ்வளவு சுலபம் இல்லை என்று பாதிக்கப்பட்ட பலர் சலிப்புடன் முணுமுணுப்பதைக் கேட்டுக் கொண்டிருக்கிறோம். இதில் பெரும்பாலானோர், குறு மற்றும் சிறு தொழில் புரியும் வர்க்கத்தினர்.
 இவர்களுடைய தொழிலுக்கான பொருளாதாரத் தேவைகளில் 4 சதவீதம் வரைதான் வங்கிகளில் கடனாகப் பெறப்படுகின்றன. மீதியுள்ள தொகை, வெளிச்சந்தையிலிருந்து அதிக வட்டிக்குப் பெறப்படுவதாகும். வெளிச்சந்தை கடன்களால், இந்தத் துறையின் தொழில் லாபமும், வளர்ச்சியும் பெருமளவில் பாதிக்கப்படுகிறது.
 கடன் விண்ணப்பங்களை வங்கிகள் ஏற்றுக்கொள்ளும்படியாகத் தயாரித்தல், தொழில் திட்டங்கள் பற்றி வங்கிகளால் கேட்கப்படும் கேள்விகளுக்கு துறை சார்ந்த நிபுணர்களின் ஆலோசனையைப் பெற்று, சரியான விளக்கம் அளித்தல் போன்ற அத்தியாவசிய விஷயங்களில் குறைபாடுகள் உள்ளிட்டவை வங்கிகளிடமிருந்து இந்தத் துறையினர் எளிதாகக் கடன் பெறுவதற்குத் தடைக் கற்களாக வளர்ந்து நிற்கின்றன.
 பெரும் தொழில் நிறுவனங்கள், வங்கிகளின் வழிமுறைகளை முழுவதும் அறிந்து, வங்கிகள் ஏற்றுக்கொள்ளும் வகையில் கடன் விண்ணப்பங்களைத் தயார் செய்து, கேட்கப்படும் கேள்விகளுக்குத் தக்க விளக்கம் அளித்து, கடனைப் பெறும் பணிகளைச் செய்வதற்காக பிரத்யேக பணியாளர்களை அமர்த்துகின்றன.
 இதில், சார்ட்டர்ட் அக்கவுன்டன்ட், காஸ்ட் அக்கவுன்டன்ட், நிர்வாக இயல் நிபுணர்கள் (MBAs) ஆகியவர் அடங்குவர். இதுபோன்று பிரத்யேக பணியாளர்களின் உதவியைப் பெறுவதற்கான நிதி ஆதாரம் சிறு தொழில் புரிபவர்களிடம் இல்லை என்பது ஒரு பெரிய குறையாகும்.
 ஆனால், இதுபோன்ற குறைபாடுகளைத் தகர்த்து எறிந்து, வங்கிக் கடன் பெறும் வழிமுறைகளை சிறு தொழில் நிறுவனங்கள் வேகமாகக் கற்பது, அந்தத் துறையின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவும். அந்தத் துறையின் வளர்ச்சி, நாட்டில் வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும். அதற்குரிய முயற்சிகள், இந்தத் தொழில் துறையில் ஈடுபட்டிருப்பவர்களால் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும்.
 வங்கிக் கடன் பெறாமல், வெளிச்சந்தைக் கடன்கள் மூலம் தொழில் செய்பவர்களைக் கண்டறிந்து, வங்கிக் கடன் பெறும் வழிமுறைகள் குறித்து அவர்களுக்குப் பிரத்யேக பயிற்சிகளை அரசு அளிக்க வேண்டும்.
 முதலில், வங்கிக் கடன் பெறுவது கடினம் என்ற எண்ணம் களைந்து எறியப்பட வேண்டும். தொழிலுக்கான கடன் பெற வங்கிகளை அணுகுவதற்கு எந்தவிதத் தயக்கமும் தேவையில்லை. வங்கி அதிகாரிகளிடம் பேசுவதற்கு போதிய கல்வித் தகுதி இல்லை என்ற தாழ்வு மனப்பான்மை அறவே தவிர்க்கப்பட வேண்டும்.
 அதற்குப் பதிலாக, செய்யும் தொழில் மூலம், பலருக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி, நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தில் பங்கு கொள்வதைப் பெருமையாக நினைக்க ஆரம்பித்தால், தாழ்வு மனப்பான்மை தகர்ந்து விடும்.
 கடன் வழங்குபவரும், கடன் பெறுபவரும், மற்றவரின் செயல்பாடுகளை நன்கு புரிந்து கொள்வது மிகவும் அவசியமாகும். கடன் வழங்குவதற்கான சில வழிமுறைகளை வங்கிகள் கட்டாயம் பின்பற்றியே ஆக வேண்டும். ஆனால், அந்த விதிமுறைகளையே கடனை மறுப்பதற்கான ஆயுதமாகப் பயன்படுத்தக் கூடாது. விதிமுறைகள், கடன் பெறுபவரின் புரிதலுக்கு ஏற்ப, எளிமையான முறையில் விளக்கப்பட வேண்டும்.
 கடன் வழங்குபவர் நன்கு புரிந்து கொள்ளும்படியாகத் தன் தொழில் திட்டத்தைப் பற்றி போதிய விளக்கங்களை அளிக்க வேண்டியது கடன் பெறுபவரின் கடமையாகும். தொடங்கப்போகும் தொழில் பற்றிய நுணுக்கங்களை சரிவரக் கற்றால்தான், அதைப் பற்றிய விவரங்களைக் கடன் வழங்கும் நிறுவனத்துக்குத் தெளிவாக விளக்க முடியும்.
 அந்த விளக்கத்தின் மூலம்தான், கடன் வழங்குபவருக்கு, கடன் பெறுபவரின் மீதான நம்பிக்கை துளிர்க்கும். மேலும், கடன் பெறுபவருக்கு, தன் தொழில் திட்டத்தின் மீது இருக்கும் நம்பிக்கையும், ஈடுபாடும் அம்மாதிரி தெளிவான விளக்கங்கள் மூலம்தான் வெளிப்படும்.
 உற்பத்திப் பொருளின் தேவையின் அளவு (Demand), போட்டியாளர்கள் விவரம் (Competition), சந்தைப்படுத்தும் முயற்சி விவரங்கள் (Marketing efforts), தொழிலில் துணை நிற்கும் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஆகிய விவரங்கள் வங்கிக்குத் தெளிவாக விளக்கப்பட வேண்டும். தொழிலுக்குத் தேவையான மூலதனத்தில், ஒரு பகுதியைத் தயாராக வைத்திருக்கும் தொழில் முனைவோர், வங்கிக் கடன் பெறுவது சுலபமாகும்.
 தொழில் திட்டங்கள் பற்றிய விவரங்களை மிகைப்படுத்திக் கூறுவது, ஏற்கெனவே வாங்கப்பட்ட கடன் பற்றிய விவரங்களை மறைப்பது, தவறான தகவல்களை அளிப்பது, கடன் பரிசீலனைக்கான காலக்கெடு முடியும் வரை காத்திருக்காமல் பொறுமை இழப்பது, வங்கி அதிகாரிகளைப் பற்றி அவர்கள் காதுபட தவறாகப் பேசுவது ஆகிய செயல்பாடுகள் கடன் பெறுவதற்கான வாய்ப்புகளைப் பெருமளவில் குறைத்துவிடும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
 கடனுக்கு விண்ணப்பிப்பவரின் நேர்மையான நடவடிக்கை, தொழில் திறமை, பொருளாதார வசதி (Character, Capacity & Capital) ஆகிய காரணிகள் வங்கியால் முதலில் கூர்ந்து கவனிக்கப்படுகின்றன.
 முன்னுக்குப் பின் முரணாகப் பேசுவது, கேள்விகளுக்குப் பதில் அளிக்காமல் எரிச்சல் அடைந்து கோபப்படுவது ஆகிய செயல்பாடுகள், கடன் பெறுபவரால் முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.
 ஏற்கெனவே வங்கியுடன் நீண்ட கால வியாபாரத் தொடர்புடைய வாடிக்கையாளர் ஒருவர் மூலம், கடன் பெறுபவர் அறிமுகம் செய்யப்பட்டால், தொழில் முனைவோரைப் பற்றிய தனிப்பட்ட விவரங்களைத் திரட்ட, வங்கிக்கு அது உதவியாக இருக்கும்.
 ஆனால், அரசியல்வாதிகள், இடைத்தரகர்கள் மூலம் அறிமுகம் செய்யப்படுவது அறவே தவிர்க்கப்பட வேண்டும். இதுபோன்ற செயல்பாடுகள், பெரும்பாலான வங்கி அதிகாரிகளால் எதிர்மறைக் காரணிகளாகவே அடையாளம் காணப்படுகின்றன. இதனால், எளிதாகக் கிடைக்க வேண்டிய கடனுதவியும் கிடைக்காமல் போக வாய்ப்பு ஏற்பட்டு விடும்.
 தொழில் கடனுக்கான விண்ணப்பத்தைப் பரிசீலனை செய்யும்போது, கடனுக்கான காரணத்தை (Purpose of loan) தெளிவாகத் தெரிந்து கொள்ள வங்கிகள் விரும்பும். வாங்கப்படும் கடன், உற்பத்தியை ஊக்குவித்து, வருமானத்தைத் தோற்றுவிக்கிறதா என்று ஆராயப்படுகிறது.
 வருமானத்திலிருந்து, வாடகை, சம்பளம், மின்சார செலவு, இயந்திரங்களின் தேய்மானம் போன்ற செலவுகள் போக, எஞ்சி நிற்கும் தொகையில், வங்கிக்கு செலுத்த வேண்டிய கடன் தவணை, வட்டியைச் செலுத்தும் பொருளாதார சக்தி (Repaying capacity) கணக்கிடப்
 படுகிறது.
 தொழில் ஆரம்பித்து, முதல் சில மாதங்களில் அசாதாரண செலவினங்களால், லாபக் கணக்கு காட்ட முடியாத சூழ்நிலை தெரிந்தால், அதை வங்கியிடம் முன்கூட்டியே தெரிவித்துவிட வேண்டும். அந்த மாதிரி சூழ்நிலையில், தவணைத் தொகை அல்லது வட்டி செலுத்துவதை வங்கிகள் நிதி ஆதாரம் பெருகும் வரை (Cash flow) தள்ளிப்போட்டு (Moratorium period), கடனுக்கான அங்கீகாரத்தை வழங்கும்.
 தவணைத் தொகையாக மாதம் எவ்வளவு கட்ட முடியுமோ, அதைக் கடன் பெறுபவர் சரிவரக் கணக்கிட்டு, வங்கியிடம் ஒப்புதல் பெற வேண்டும். வங்கியைத் திருப்திப்படுத்த அதிகத் தொகையை ஒப்புக்கொள்வது தொழிலுக்கான நிதி ஆதாரத்தைப் பாதித்துவிடும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இதற்கு, எதிர்கால செலவினங்களை ஓரளவு கணிக்கும் சிந்தனைத் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
 தற்போதைய நடைமுறையின்படி, தவணை, வட்டித் தொகை தொடர்ந்து 90 நாள்களுக்கு செலுத்தப்படாமல் நிலுவையில் இருந்தால் அந்த மாதிரிக் கடன்கள் வாராக் கடன்களாகக் கருதப்படும். இதனால், வங்கிகளோடு, கடன் பெறுபவரும் பாதிப்புக்கு உள்ளாவார். ஏனென்றால், ஒரு வங்கியில் தோற்றுவிக்கப்பட்ட வாராக் கடனால், அவர்கள் மற்ற வங்கிகளில் கடன் பெற முடியாத சூழ்நிலை உருவாகிவிடும்.
 இயந்திரங்களுக்கான செலவினங்களுக்குத் தவணை முறையில் செலுத்தக் கூடிய நீண்ட கால கடனையும் (Term loan), தொழிலில் ஏற்படும் அன்றாடச் செலவுகளை சமாளிக்க நடைமுறை கடன் வசதியையும் (Working capital finance) சிறுதொழில் நிறுவனங்கள் ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும். ஒன்றை விட்டு, மற்றொன்றை மட்டும் பெற்றால், தொழிலுக்கான தொடர் நிதி ஆதாரம் (Cash flow) பாதிக்கப்படும் அபாயம் உருவாகும்.
 கடன் வழங்கப்பட்டவுடன், வங்கியுடன் பழகும் அணுகுமுறையில் மாற்றம் ஏற்படாமல் இருப்பது நல்லது. மாதம் ஒரு முறையாவது, வங்கி அதிகாரியைத் தொழில் கூடத்துக்கு வலிய அழைத்து, தொழில் முன்னேற்றம் பற்றி விரிவாக விளக்க வேண்டும்.
 அவர்களாக கண்டுபிடிக்கும் வரை காத்திராமல், தொழிலில் ஏற்படும் சில எதிர்மறை நிகழ்வுகளை வங்கியின் கவனத்துக்குக் கொண்டு செல்வதால், தொழில் முனைவோரின் மீது நம்பிக்கை பெருகும்.
 எந்த நோக்கத்துக்காக வழங்கப்பட்டதோ அந்த நோக்கத்துக்குத்தான் கடன் தொகை செலவிடப்பட வேண்டும். இயந்திரங்கள் வாங்குவதற்காக வழங்கப்பட்ட கடனில் ஒரு பகுதியை, சொந்த உபயோகத்துக்கான வாகனம் வாங்குவதற்குப் பயன்படுத்தினால், அது தொழிலுக்கான மூலதனத்தைப் பாதிக்கும்.
 லாபத்தின் ஒரு பகுதியைத் தொழிலிலேயே முதலீடு செய்யும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். வியாபாரத்தில், வரவு - செலவுக் கணக்குக்கு (Balance sheet) வளரும் முதலீடு (Capital) ஒரு மகுடமாகும். தொழில் மேம்பாட்டுக்கு அதை ஓர் ஆரோக்கியமான வியாபார நிர்வாக அறிகுறியாகக் கடன் வழங்குபவர்கள் கருதுகின்றனர்.
 வங்கிக்காக மட்டுமல்லாமல், சொந்த வழிகாட்டுதலுக்காகவும், ஒவ்வொரு மாதமும், வரவு - செலவுக் கணக்குகளை முறையாக எழுதுவதன் மூலம், வியாபாரம் எந்தத் திசையை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறது என்பதை சிறு தொழில் நிறுவனங்கள் துல்லியமாகக் கணிக்க முடியும்.
 கையில் வெண்ணெயை வைத்துக்கொண்டு நெய்க்கு அலையாமல், சிறு தொழில் நிறுவனங்கள், தங்கள் வியாபாரத் தேவைகளுக்கு எந்தத் தயக்கமும் இன்றி வங்கிகளை அணுகும் வழக்கத்தை வளர்த்துக் கொண்டால், அவர்களுடைய தொழிலில் லாபம் அதிகரிப்பது மட்டுமன்றி, வங்கிகளின் வியாபாரமும் பெருகும்.
 சிறுதொழிலின் வளர்ச்சி, நாட்டின் வளர்ச்சி என்பதை வங்கி நிர்வாகங்கள் உணர்ந்து, அந்தத் தொழிலுக்கான கடன் வசதிகளை ஊக்கப்படுத்த வேண்டும்.
 
 கட்டுரையாளர்:
 வங்கி அதிகாரி (ஓய்வு).
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மகளிர் ஆசிய கோப்பை ரைசிங் ஸ்டார்: 2-ஆவது முறையாக கோப்பை வென்றது இந்தியா ஏ!

ஜம்மு-காஷ்மீாின் கிஸ்த்வாா் பயங்கரவாதி சுட்டுக் கொலை

திண்டல் வேலாயுதசுவாமி கோயில் மகா கும்பாபிஷேகம்

Nanjil Sampath Latest Interview | சீமான் தமிழரே இல்லை | TVK Vijay | Seeman | NTK Maanadu

ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம்?

SCROLL FOR NEXT