கட்டுரைகள்

ஊழலுக்கு எதிரான நெடும் பயணம்!

பணம் பாதாளம் வரை பாயும் என்பது எவ்வளவு உண்மை? உடல், உள்ளத்தைத் தூய்மையாக வைக்கும் விளையாட்டுத் துறையிலும் முறைகேடுகள்,

ஆர். நட​ராஜ்

பணம் பாதாளம் வரை பாயும் என்பது எவ்வளவு உண்மை? உடல், உள்ளத்தைத் தூய்மையாக வைக்கும் விளையாட்டுத் துறையிலும் முறைகேடுகள், லஞ்சம் புகுந்து விட்டன.
 சர்வதேச கால்பந்து கழகத்தின் நிர்வாகத்திலும், தனியார் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு போட்டிகளுக்கான நேரடி ஒளிபரப்பு உரிமை வழங்குவது, வருங்காலத்தில் சர்வதேசப் போட்டிகள் நடத்த வேண்டிய நகரங்களைத் தெரிவு செய்வது, விளையாட்டுச் சாதனங்கள், பிரத்யேக உடைகள் வாங்குதல் போன்ற பல முடிவுகளில் லஞ்சம் விளையாடியிருக்கிறது.
 அமெரிக்க சிறப்புப் புலனாய்வுப் பிரிவின் அறிக்கையின் அடிப்படையில் ஃபிஃபா தலைவர் ஸ்விட்சர்லாந்தை சேர்ந்த செப் ப்ளாட்டர் விசாரணைக்கு உள்படுத்தப்பட்டுள்ளார். 14 ஃபிஃபா அதிகாரிகள் கைதாகியுள்ளனர். ஸ்விஸ் வங்கியில் பணம் போடப்பட்டுள்ளதும், மொத்தம் 15 கோடி டாலருக்கு மேல் பணம் கைமாறியதும் தெரியவந்துள்ளது. 1998-இல் இருந்து தலைவராக இருந்த ப்ளாட்டர் ராஜிநாமா செய்துள்ளார்.
 நமது நாட்டிலும் 2010-இல் தில்லியில் நடந்த காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியை முன்னிட்டு, விளையாட்டு வீரர்களுக்கு கட்டமைப்பு வசதியை செய்து கொடுத்தல், அவர்களுக்கு வாகனம் ஏற்பாடு செய்தது ஆகியவற்றிலும் கையூட்டு பெறப்பட்டிருக்கிறது என்பது மத்திய தலைமை கணக்குத் தணிக்கையாளர் (சி.ஏ.ஜி.) அறிக்கையில் தெரியவந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
 பிகார் மாநில மாட்டுத் தீவன ஊழல், அலைக்கற்றை விநியோக முறைகேடு இவையெல்லாம் பூதாகரமான வகைகள். சிறு தவறுகள் அன்றாடம் மக்கள் சந்திப்பவை.
 இரும்பு மனிதர் சர்தார் வல்லபபாய் படேலின் பிறந்த தினம் அக்டோபர் 31-இல் தேசிய ஒருமைப்பாட்டு தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.
 சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சராக இருந்த படேல், அனைத்து மாகாணங்களையும், குறுநில மன்னர்கள் ஆளுகையில் இருந்த பிரதேசங்களையும் இணைத்து, பாரதத்தின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் நிலைநாட்டியவர். ஆங்கில ஆட்சிக்குத் துணையாக இருந்த காவல் துறையைச் சீரமைத்து, ஜனநாயக வழியில் செயலாற்ற அடித்தளம் வகுத்தவர். படேல் நேர்மைக்கு இலக்கணம் வகுத்தவர்.
 அவரது பிறந்த தினத்தை ஒட்டி ஊழல் எதிர்ப்பு மற்றும் விழிப்புணர்வு நாடெங்கிலும் ஒரு வாரம் அனுசரிக்கப்படுகிறது. மத்திய விழிப்புணர்வு ஆணையம் இந்த ஆண்டு ஊழல் தடுப்பு முறை, வருமுன் காக்கும் விழிப்புணர்வு எவ்வாறு நல்லாட்சிக்கு உதவும் என்பதை மையமாக வைத்து கருத்தரங்குகள் நடத்த அறிவுறுத்தியது.
 ஊழல் தடுப்பு முறையானது தடுத்தல், தண்டித்தல் என்று இரண்டு வகைப்பட்டது. அரசு அலுவலர்கள் பொது நிறுவனங்களில் எவ்வாறு தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பற்றி விவாதித்து நிர்வாகத்தில் நல்ல நடைமுறைகளை அமல்படுத்த வேண்டும் என்பது இந்த விழிப்புணர்வு சிறப்புக் கருத்தரங்கின் நோக்கம்.
 ஊழல் தடுப்பு, நிர்வாகத்தின் நேர்மையை நிமிர்த்துவது மட்டுமல்ல, அதன் ஆளுமையையும் உயர்த்தும். பொருளாதார முன்னேற்றத்துக்கு ஊழலற்ற நிர்வாகம் இன்றியமையாதது என்றும், அதுவே திறமையான நிர்வாகத்துக்கு அடித்தளம் என்றும் விழிப்புணர்வு ஆணையம் வலியுறுத்தியுள்ளது.
 எந்த ஒரு நிர்வாகத்திலும், ஊழலுக்கு வித்திடுவது தலை சுற்ற வைக்கும் விதிகளும் நடைமுறைகளும்தான். அதனை எளிதாக்குவது முதல் கட்டம். ஒவ்வொரு விதியையும் விளக்கவும், எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படுகிறது என்பதை தெளிவுப்படுத்த வேண்டிய பொறுப்பும் சம்பந்தப்பட்ட அதிகாரியைச் சேர்ந்தது. அதை விவரிப்பதற்குதான் கையூட்டுப் பெறப்படுகிறது. இதை உணர்ந்து சிக்கலான விதிகளை மாற்றி எல்லோருக்கும் புரியும் வகையில் விதிகள் தெளிவுபடுத்தப்பட வேண்டும்.
 செயல் திறமை, நீதி, நேர்மை, மாறிவரும் உலக இயல்பினை உணர்ந்து அதற்கேற்றவாறு தனது ஆளுமையை உயர்த்தி நிர்வாகத்தை நடத்துவதுதான் நல்லாட்சியின் இலக்கணம். இதனை உறுதி செய்வதற்கு எல்லாவிதமான தொடர் முயற்சிகள் அவசியம்.
 தொழில்நுட்பம் ஒரு நிர்வாகத்தின் வெளிப்படைத்தன்மையை நிலைநிறுத்துவதற்கு வெகுவாக உதவுகிறது. இணையதளத்தில் ஒவ்வோர் அரசுத் துறையின் செயல்பாடுகள், விதிகள், முக்கிய அறிவுப்புகளை நாம் காண முடிகிறது.
 அரசுத் திட்டங்களை நிறைவேற்ற, கொள்முதல் செய்வதில் பல பிரச்னைகள் உள்ளன. ஒப்பந்தப்புள்ளி வெளியிட்டு அதில் பங்கு கொள்பவர்களை தெரிவு செய்வதில் இ-டெண்டர் மூலம் இணையதளத்தில் அறிவித்து, முடிவுகளை உயர்க் குழு மூலம் ஆராய்ந்து, உடனடியாக முடிவுகளை அறிவித்து, ஒப்பந்தக்காரர்களுக்கும் ஆணையை வழங்கி, ஒப்பளிக்கப்பட்ட பணியை நிறைவேற்ற துறை மூலம் ஒத்துழைப்பு நல்குதல் திறமையான நிர்வாகத்தின் செயல் முறைகள்.
 அதேபோல், நிறைவேற்றப்பட்ட பணிக்கான பணத்தை கணினி மூலம் பட்டுவாடா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது. பெட்ரோல், டீசல் எரிபொருள் விநியோகத்தில் முறைகேடுகளைத் தவிர்க்க, சரக்கு ஏற்றிச் செல்லும் வாகனங்களில் ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்படுகிறது.
 அதன்மூலம், வாகனங்களின் போக்குவரத்தைக் கட்டுப்பாட்டு அறையிலிருந்து கண்காணிக்க முடியும். தகாத இடங்களுக்குச் சென்று சட்ட விரோதச் செயல்களில் ஈடுபடுவர்களையும் கண்டுபிடிக்க முடியும். இதனால், மிகப் பெரிய பிரச்னையாக இருந்த எண்ணெய்க் கலப்படம் தவிர்க்கப்படுகிறது.
 தகவல் அறியும் சட்டம் நிர்வாக வெளிப்படைத்தன்மைக்கு பெரிதும் உதவும். எந்த ஒரு பிரச்னையாக இருந்தாலும் உரிமம் வழங்குவதிலோ, மறுப்பின்மை சான்றிதழ் வழங்குவதிலோ தாமதம் இருந்தால்  சம்பந்தபட்ட துறைக்கு விண்ணப்பம் செய்து விரைவான நடவடிக்கையை உறுதி செய்யலாம்.
 தமிழ்நாடு தேர்வாணையத்தில் தொழில்நுட்பம் மற்ற மாநிலங்களைவிட அதிகமாகப் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இணையதளத்தில் ஓராண்டு தேர்வுத் திட்டம், தேர்வர்கள் தங்கள் படிப்பை முன்கூட்டியே திட்டமிடவும், சம்பந்தப்பட்ட அரசுத் துறைகள் மனித வள மேலாண்மையைத் திட்டமிடவும் உதவும்.
 தேர்வு மையம் முதல் தேர்வு முடிவு வெளியிடும் காலம் வரை விடியோ கண்காணிப்பு முறை ஏற்படுத்தப்பட்டுள்ளதால் எவ்விதத் தவறுக்கும் இடம் தராமல் திறமை அடிப்படையில் வேலைவாய்ப்பு பெற வழி வகை செய்யப்பட்டுள்ளது.
 தேர்வின் ஒவ்வொரு கட்டமும் கணினி மூலம் கணக்கிட்டு ஆய்வு செய்யப்படுவதால் காலதாமதமின்றி முடிவுகளை அறிவிக்க முடியும். நேர்காணல் முடிந்த அடுத்த நாளே முடிவுகளை அறிவிக்க முடியும். அந்த அளவிற்கு தொழில்நுட்பம் வளர்ந்திருக்கிறது. அதனைப் பயன்படுத்துவது நிர்வாகத்தின் கடமை.
 அரசு ஊழியர்களில் மூன்று வகை: நேர்மையானவர், சந்தர்ப்பவாதி, ஊழல்வாதி. ஊழல்வாதிகளில் சிலர் கையூட்டுப் பெற்று வேலையை முடிப்பர். சிலர் கையூட்டுப் பெற்றும் கிடப்பில் போடுவர்; சட்டத்துக்குப் புறம்பான செயல் முறைகேடான நடவடிக்கையாகும்.
 அரசு ஊழியர் செய்ய வேண்டிய செயலை செய்யாமல் இருத்தல் அல்லது செய்யக் கூடாத செயலை கமுக்கமாகச் செய்தல், அதற்குக் கையூட்டு அல்லது வேறு விதமான சலுகை பெறுதல் ஊழல் நடவடிக்கையாகக் கருதப்படும். இத்தகைய செயல் மனித உரிமை மீறல் மட்டுமல்ல ஏழை, எளியவர்க்கும் விரோதமானது.
 பட்டா மாற்றல், சொத்து பரிமாற்றம் பதிவு செய்தல், சாதி சான்றிதழுக்கும், காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்வதிலும், அரசு நிவாரணங்களைப் பெறுவதிலும் நிலவும் சங்கடங்கள் நீக்கப்பட வேண்டும். அதனை சுலபமாக்குவதற்கு திட்டங்கள் அமல்படுத்தப்பட்டாலும் பல இடங்களில் செயலாக்குவதில் தயக்கம் ஏற்படுகிறது.
 ஏழை மக்கள் இடைத் தரகர்களையும், பலம் படைத்தவர்களையும் நாட வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இதுவே ஊழல் வேரூன்றுவதற்கு முதல் கட்டம். நாளடைவில் மீள முடியாத கோர சுழற்சியில் உழல்கிறது. இது எல்லா மாநிலங்களிலும் அடித்தள நிர்வாகத்தில் நிலவும் பிரச்னை.
 ஐக்கிய நாடுகள் சபை 2005-இல் சர்வதேச வர்த்தகத்தில் நாணயமான முறையைக் கடைப்பிடிக்க நேர்மை உடன்படிக்கை என்ற தீர்மானத்தை நிறைவேற்றியது. இதை எல்லா நாடுகளும் அமல்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது.
 நேர்மை, நம்பகத்தன்மை, பண்பு மற்றும் பாரபட்சமற்ற குணங்கள் வர்த்தக பரிவர்த்தனையில் நிலவ வேண்டும் என்பது குறிக்கோள். இந்தியா கையெழுத்திட்டு ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகுதான் 2010-இல் இதற்கு அங்கீகாரம் அளித்தது. ஐ.நா. சபையின் ஊழல் எதிர்ப்பு உடன்படிக்கைக்கு இணங்கி பிரிட்டன் போன்ற பல நாடுகள் லஞ்ச ஒழிப்புச் சட்டத்தை அமல்படுத்தியுள்ளன. அதில் தனியார் நிறுவனங்களும் ஊழலில் ஈடுபட்டால் நடவடிக்கை எடுக்கலாம்.
 இப்போது பல தனியார் நிறுவனங்களில் முறைகேடுகள் நடக்கின்றன. வங்கிக் கடனைத் திருப்பிக் கொடுப்பதில்லை, முதலீட்டைப் பொதுமக்களிடமிருந்து பெற்று திருப்பித் தராமல் இருப்பது, காசோலை தள்ளுபடி மோசடி என்று பல புகார்கள் வருகின்றன.
 ஆனால், இம்மாதிரிக் குற்றங்கள் நடவாமல் இருப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து அவற்றைத் திறம்பட அமல்படுத்துவதன் அவசியத்தை விழிப்புணர் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.
 நமது நாட்டில் 64 சதவீத மக்கள் ஏதோ ஒரு நேர்வில் லஞ்சம் கொடுத்தோ, வாங்கியோ இருக்கிறார்கள் என்று ஓர் ஆய்வு தெரிவிக்கிறது. சிங்கப்பூர், ஹாங்காங், பிலிப்பைன்ஸ், கொரியா போன்ற அதிக ஊழல் நிறைந்த நாடுகள் பல சீர்த்திருத்தங்களை நிறைவேற்றியதால் பிரச்னையைக் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளன.
 விழிப்புணர்வு ஆணையம், தேசிய அளவில் ஊழலை ஒழிப்பதற்கான வரைமுறைகளை வகுத்துள்ளது. தொழில் சார்ந்த ஒழுக்கவியல் நலிந்துள்ளது. சமுதாய மதிப்பீடுகளும் மங்கி வரும் சூழலில், ஊழலுக்கு எதிரான போர்க்கால நடவடிக்கை தேவை. இது எளிதானதல்ல என்கிறார் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் ரகுராம் ராஜன்.
 ஊழலுக்கு எதிரான பயணம் நெடும் தொலைவு.
 அரசு ஊழியர் பொறுப்போடு செய்ய வேண்டிய செயலை செய்யாமல் இருத்தல் அல்லது செய்யக் கூடாத செயலை கமுக்கமாகச் செய்தல், அதற்குக் கையூட்டு அல்லது வேறு விதமான சலுகை பெறுதல் ஊழல் நடவடிக்கையாக கருதப்படும்.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மொபெட்டிலிருந்து தவறி விழுந்து விவசாயி உயிரிழப்பு

நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் லஞ்சம் வாங்கிய ஊழியா்கள் இருவா் கைது

பயங்கரவாதத்தால் இந்தியாவும் பாதிக்கப்பட்டுள்ளது! - இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சு!

”அவர் உருவாக்கிய யாரும் வீண்போகவில்லை!” நல்லகண்ணு குறித்து முத்தரசன்!

மகாராஷ்டிரத்தில் 2025-ல் மட்டும் 41 புலிகள் உயிரிழப்பு!

SCROLL FOR NEXT