உலகப் பொருளாதார அரங்கில், அமெரிக்க டாலருக்கு அடுத்தபடியாக, பொது சர்வதேச மாற்று நாணயமாக (alternate common reserve currency) தங்கம் கருதப்படுகிறது. எனவே, உலக நாடுகளின் அரசாங்கங்கள், தங்கள் கஜானா கையிருப்பில், குறிப்பிட்ட ஒரு பகுதியை தங்க வடிவில் வைத்திருப்பதை பொருளாதாரக் கொள்கைகளில் ஒன்றாகக் கடைப்பிடித்து வருகின்றன.
உதாரணத்திற்கு, அமெரிக்கா 8,133 டன்கள், ஜெர்மனி 3,384 டன்கள், இத்தாலி 2,451 டன்கள், இந்தியா 557 டன்கள் என்ற அளவில் தங்கத்தை தங்கள் அரசாங்க கஜானாவில், தற்போது காப்பு நிதியாக (Reserve currency) பாதுகாத்து வருகின்றன.
இந்தியாவைப் பொருத்தவரை, நம் நாட்டு திருமணங்கள் மற்றும் விசேஷ நிகழ்ச்சிகளில் இடம் பெறும் முக்கிய உலோகம் தங்கம்தான். அனைத்து திருமண நிகழ்வுகளுக்கான செலவுகளில், 60 சதவீதத்துக்கு மேல், தங்கத்தின் மதிப்பு ஆக்கிரமித்து கொள்கிறது.
திருமணத்தின்போது, மணப்பெண்ணுக்கு வழங்கப்படும் தங்க நகைகளின் மதிப்பு, மதம், பெண்ணைப் பெற்றவர்களின் அந்தஸ்து, மாப்பிள்ளையின் படிப்பு மற்றும் உத்தியோகம், பிள்ளையைப் பெற்றவர்கள் கடைசித் தருணத்தில், பெண் வீட்டாருக்கு கொடுக்கும் நெருக்கடி, ஆகியவற்றைச் சார்ந்திருக்கின்றன.
சுப நிகழ்ச்சிகளுக்கு, வட்டிக்கு கடன் பெற்றாவது, தங்கம் வாங்கும் பழக்கம் நம்மிடையே, காலப்போக்கில் வளர்ந்து, நம் கலாசாரத்தில் ஆழமாக ஊன்றிவிட்டது என்று சொல்லலாம்.
எதிர்காலப் பொருளாதாரத் தேவைகளுக்காக, நிகழ்கால வருமானத்திலிருந்து ஒரு பகுதியை சேமிப்பவர்கள், அந்தச் சேமிப்பின் ஒரு பகுதியைத் தங்கத்தில் முதலீடு செய்கின்றனர். நிறுவனப் பங்குகள், கடன் பத்திரங்கள், ரியல் எஸ்டேட் தவிர, செல்வந்தர்களின் முதலீடுகளில், தங்க முதலீடுகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. விவசாயிகள், அறுவடைக் கால வருமானங்களின் ஒரு பகுதியைத் தங்கம் வாங்குவதற்காக ஒதுக்குகின்றனர்.
பொருளாதார நெருக்கடி தருணங்களில், தங்க நகைகளை, வங்கிகள் மற்றும் அடகுக் கடைக்காரர்களிடம் அடமானம் வைத்து, எளிதாகக் கடன் பெற முடியும் என்பது, இந்த உலோகம், பலதரப்பினராலும் விரும்பப்படுவதற்கும், வாங்கப்படுவதற்கும் ஒரு முக்கியக் காரணியாகும். மேலும், பணவீக்கத்திற்கு எதிரான முதலீட்டு சாதனங்களில் ஒன்றாக (Hedging against inflation) தங்கம் கருதப்படுகிறது.
இம்மாதிரி, பலதரப்பினராலும், பலவிதக் காரணங்களுக்காக, இதுவரை கொள்முதல் செய்யப்பட்டு, தற்போது இந்தியாவில் புழக்கத்தில் இருக்கும் தங்கத்தின் அளவு 20 ஆயிரம் டன் என்று தோராயமாகக் கணக்கிடப்பட்டிருக்கிறது. இதன் தற்போதைய மதிப்பு சுமார் ரூ. 50 லட்சம் கோடியாகும்.
இதைத்தவிர, ஓராண்டுக்கான தங்கத்தின் தேவை, சுமார் 1,000 டன் அளவுக்கு வளர்ந்து நிற்கிறது. பண்டிகைக் காலங்கள், விவசாயத்துக்கு ஏற்ற, சீரான அளவிலான பருவ மழை மற்றும் நாட்டின் ஜி.டி.பி. வளர்ச்சி, தனி நபரின் தங்க முதலீட்டை அதிகரிக்க செய்யும் சில காரணிகளாகும்.
இந்தியாவைப் பொருத்தவரை, தங்க உற்பத்தி படிப்படியாக குறைந்து வந்து கொண்டிருக்கிறது. 1942-ஆம் ஆண்டில், 81 டன் அளவில் இருந்த உற்பத்தி, தற்போது வெறும் 2 டன் அளவுக்கு தேய்ந்திருக்கிறது. தேவைக்கும், உற்பத்திக்கும் இடையேயான பெருத்த இடைவெளி, வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுவதன் மூலம் நிரப்பப்படுகின்றது.
இந்தியாவைவிட, தென் ஆப்பிரிக்கா 60 மடங்கும், கனடா 22 மடங்கும்,ஆஸ்திரேலியா 5 மடங்கும், தங்கத்தை உற்பத்தி செய்கின்றன. இந்நாடுகளில், தங்கத்துக்கான தனி நபர் தேவை அதிகம் இல்லாததால், அவற்றில் பெரும்பகுதி ஏற்றுமதி செய்யப்பட்டு, அந்நாடுகளின் அன்னியச் செலாவணியின் வரவுக்கு வழிவகுக்கின்றன. இந்தியாவை விட, பத்து மடங்கு ஜி.டி.பி. வலுப்பெற்றிருக்கும் அமெரிக்காவின் தங்கத்திற்கான தேவை, இந்தியத் தேவை அளவில் பத்தில் ஒரு பகுதிதான்.
ஆண்டுதோறும், தங்கத்துக்கான உலக மொத்தத் தேவைகளில், மூன்றில் ஒரு பங்கு இந்தியாவுக்கானதாகும். சமீபத்திய புள்ளி விவரப்படி, தங்கத்துக்கான தேவையில், முன்னணியில் இருந்த சீனாவைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, இந்தியா முதல் இடத்திற்கு முன்னேறி உள்ளது. சீனாவின் தேவை, கடந்த ஓராண்டில், 38 சதவீதம் குறைந்துள்ளதே இதற்குக் காரணமாகும்.
அரசு அதிகாரிகளுக்கு, விழாக் காலங்களில், தங்கம் பரிசாக வழங்கப்படுவதைத் தடுக்க, சீன அரசாங்கத்தால் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட சில கடுமையான லஞ்ச ஒழிப்பு நடவடிக்கைகள், இந்தச் சரிவுக்கு ஒரு முக்கியக் காரணமாக கருதப்படுகிறது.
உலகப் பொருளாதார நிலவரம், அமெரிக்க டாலரின் பலம் மற்றும் பலவீனம், இந்திய ரூபாயின் மதிப்பு, போர்மூட்ட சூழ்நிலை, மத்திய வங்கிகளின் தங்கக் கொள்முதல் நடவடிக்கை போன்றவை, தங்கத்தின் சர்வதேச விலையை நிர்ணயிக்கும் சில முக்கியக் காரணிகளாகும்.
அமெரிக்கப் பொருளாதாரத்தில், 2011 செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் நிலவிய அசாதாரண சூழ்நிலை தருணத்தில், சர்வதேசச் சந்தையில் தங்கத்தின் விலை உச்சியை ( 1889 அமெரிக்க டாலர்அவுன்ஸுக்கு) தொட்டது. அமெரிக்க டாலர் மீது, உலகப் பொருளாதாரத்திற்கு, பெரும் அவநம்பிக்கை உதித்திருந்த காலக் கட்டம் அது.
28.8.13 அன்று இந்தியச் சந்தையில், தங்கத்தின் விலை சிகரத்தைத் (ரூ33,625 10கிராம்) தொட்டது. அன்றைய தினம்தான், டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 68.85ஆக சரிந்திருந்தது. தங்கத்தின் விலை, இம்மாதிரி, பல திடீர்ச் சந்தை நிகழ்வுகளைச் சார்ந்திருக்கிறது.
நல்ல முதலீடு என்பது, அதன் விலை ஏற்ற இறக்கங்களின் காரணிகள், எல்லா வகையான முதலீட்டாளர்களாலும், எளிதாகப் புரிந்து கொள்ளும்படியாக அமைதல் வேண்டும். முதலீட்டின் அடிப்படை மதிப்பு (Principal amount) முற்றிலும் பாதுகாக்கப்படவேண்டும்.
ஆனால், தங்கத்தின் விலை, மேலே கூறியுள்ளபடி, சாமானிய மக்கள் புரிந்து கொள்ளமுடியாத பல சர்வதேசச் சந்தை நிகழ்வுகளைச் சார்ந்திருக்கிறது. இதனால், முதலீட்டின் அடிப்படை மதிப்பு, பெருமளவில் தேய்ந்து விட வாய்ப்பிருக்கிறது, ஆகவே, தங்கத்தை முதலீட்டு நோக்கத்தில், சிறு முதலீட்டாளர்கள் வாங்குவதற்கு முன்பு, பலமுறை யோசிக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.
தற்போதைய சூழ்நிலையில், தங்க முதலீடுகள் பெரும்பாலும், பண பரிவர்த்தனை மூலமே (Cash transactions) செய்யப்படுகின்றன. கருப்புப் பண உலக இயக்கத்தில், தங்கம் முக்கியப் பங்கு வகிக்கிறது. அரசின் கருப்புப் பண ஒழிப்புக் கொள்கையும், தாராள தங்க இறக்குமதிக் கொள்கையும் ஒன்றுக்கு ஒன்று முரண்பட்டு நிற்கின்றன.
தங்கத்தில் முதலீடு என்பது, நாட்டின் ஆக்கப்பூர்வமான திட்டங்களுக்கு பயன்படாத, ஒரு செயல்படாத முதலீடாகும். முதலீட்டு காலத்தில் விலை உயர்வு இருந்தாலொழிய, வட்டி, ஈவுத்தொகை போன்ற வேறு எந்த வருமானத்தையும் தங்க முதலீடு ஈட்டுவதில்லை.
இந்தியாவைப் பொறுத்தவரை, தங்கத்துக்கான தேவைகளுக்கு, அது, பெருமளவில் இறக்குமதியைச் சார்ந்திருக்கிறது. கடந்த ஓராண்டில், வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு, சுமார் ரூ. 2 லட்சத்து 50 ஆயிரம் கோடியாகும். இந்த இறக்குமதிகளுக்கு, ஏற்றுமதிகள் மூலம் ஈட்டிய அந்நியச் செலாவணியை செலவழிக்கிறோம். இதனால், நம் அந்நியச் செலாவணி பெருமளவில் கரைகிறது.
சமீப காலங்களில், சர்வ தேசச் சந்தையில் ஏற்பட்ட கச்சா எண்ணெய் மற்றும் உலோகங்களின் விலை வீழ்ச்சியால், இந்தியாவின் நடப்பு கணக்கு விரிசல், (ஏற்றுமதி வரவு மற்றும் இறக்குமதி செலவு ஆகியவற்றின் இடைவெளி) ஜி.டி.பியில் 0.2 சதவீதத்தை தொட்டு, மீண்டும் உயர ஆரம்பித்திருக்கிறது. இறக்குமதி செலவில், 12 சதவீதம் வரை தங்க இறக்குமதி செலவுகள் ஆக்கிரமிக்கின்றன.
அத்தியாவசிய இறக்குமதி பொருள்களின் விலை ஏற்றங்கள் மீண்டும் தலை தூக்கும்போது, நிலைமையைச் சமாளிக்கும் திறமையை நாம், இப்பொழுதிலிருந்தே வளர்த்துக்கொள்ள வேண்டியது மிக அவசியமாகும்.
தங்க இறக்குமதியைக் கட்டுப்படுத்தவும், குறைக்கவும், அரசாங்கம் பல கட்டங்களில், கூடுதல் வரி, ஏற்றுமதி கடமை (Export obligation for importers) ஆகியவைகளை அறிமுகம் செய்தது. இந்த நடவடிக்கைகள், கடத்தல் நடவடிக்கைகளை ஊக்குவித்ததே தவிர, இறக்குமதி அளவை குறைக்க உதவவில்லை.
தங்க இறக்குமதியைக் குறைக்க மேலும் சில நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. அதன்படி, தங்க சேமிப்புத் திட்டம், தங்கப் பத்திரத் திட்டம் ஆகியவைகள் அடுத்த மாதம் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.
தங்கச் சேமிப்புத் திட்டத்தின் கீழ், தங்க நகைகளை, வங்கிகளில், ஓர் ஆண்டு முதல் 15 ஆண்டுகள் வரை, குறைந்தபட்சம் 30 கிராம் வரை டெபாசிட் செய்யலாம். முதிர்வு காலத்தில், தங்கத்தின் மதிப்பைப் பொறுத்து, தங்கமாகவோ, பணமாகவோ பெற்றுக்கொள்ளலாம்.
தங்க கடன் பத்திரங்கள், 5, 10, 50 மற்றும் 100 கிராம் அளவில், 5 முதல் 7 ஆண்டுகள் வரை முதிர்வு காலம் உடையதாக இருக்கும். சந்தை போக்கைப் பொறுத்து, வட்டி விகிதம் அமையும். பத்திரத்தின் முதிர்வில், தங்கமாகவோ, பணமாகவோ பெறுவதற்கு, பத்திரத்தை வாங்கும்போது, அதற்கான ஒப்புதலை அளிக்கவேண்டும். இந்த பத்திரங்களை அடமானமாக வைத்து, வங்கிகளில் எளிதில் கடன் பெறலாம்.
அரசு அறிமுகப்படுத்த உள்ள தங்கக் கடன் பத்திரங்கள், தங்க முதலீட்டாளர்களின் முதலீட்டு நோக்கத்தின் பெரும்பகுதியை உள்ளடக்கியதாக இருப்பதால், நீண்ட கால சிறு முதலீட்டாளர்களுக்கு இது பொருத்தமானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் திட்டம் பெருமளவில் வெற்றியடைய, கிராமப்புறங்களில், இந்த திட்டத்தின் செயல்பாடுகள் நன்கு விளக்கப்பட்டு, பிரபலப்படுத்தப்படவேண்டும்.
முந்தைய சந்ததியினரைவிட, அதிக தெளிவான சிந்தனைகளை உடைய தற்போதைய இளைய சமுதாயம், தங்கள் திருமணச் சடங்குளில் வழங்கப்படும் தங்கத்தின் அளவைக் குறைக்க முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். தங்கள் சந்ததிகளுக்குத் தங்கம் வழங்கும் நோக்கமுடைய பெற்றோர்கள், தங்கப் பத்திரங்களைப் பரிசாக வழங்கலாம். அரசு நடவடிக்கைகளைவிட, மக்களின் மனமாற்றம், தங்கத்தின் தேவையைப் பெருமளவில் குறைக்கும் வல்லமை படைத்ததாகும்.
மேற்கூறிய மாற்றுத் திட்டங்களை மட்டும் நம்பியிராமல், நாட்டின் உற்பத்தித் திறனுக்கு சற்றும் பயன்படாத தங்க இறக்குமதியின் அளவை அரசு படிப்படியாகக் குறைத்து, அரிய அன்னியச் செலாவணியை, பொருளாதார முன்னேற்றத்துக்குப் பயன்பட வழிவகை செய்யவேண்டும் என்பதுதான் அனைவருடைய எதிர்பார்ப்பாகும்.
நோய் வரவிடாமல் தடுப்பது, நோய் வந்த பிறகு சிகிச்சை எடுத்துக்கொள்வதை விட விவேகமானது என்ற கூற்றின்படி, தங்க இறக்குமதியை தற்பொழுதே கட்டுப்படுத்தி, அன்னியச் செலாவணி பற்றாக்குறை என்ற வருங்கால நோயிலிருந்து நாட்டைக் காப்பாற்றும் செயல்பாடுகளை அரசு மேற்கொள்ளவேண்டியது மிக, மிக அவசியமாகும்.
நம் நாட்டு திருமண நிகழ்வுகளுக்கான செலவுகளில், 60 சதவீதத்துக்கு மேல், தங்கத்தின் மதிப்பு ஆக்கிரமித்து கொள்கிறது. எதிர்கால பொருளாதாரத் தேவைகளுக்காக, சேமிப்பின் ஒரு பகுதியைத் தங்கத்தில் முதலீடு செய்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.