முகப்பு
கட்டுரைகள்

இருக்கும் இடத்தை விட்டு...

உள்ளூர் ஜனகூட்டத்தில் அந்நிய முகங்கள் தென்படுவது அதிகரித்துக் கொண்டே போவது உள்ளூர் மண்ணின் மைந்தர்களுக்கு பகீரெனப் பயம் கொள்ளவே வைக்கிறது.

Updated On : 9 ஆகஸ்ட், 2016 at 1:43 AM
பகிர்:
Updated On : 24 ஜனவரி, 2024 at 11:38 PM

பகீரென்கிறது.

உள்ளூர் ஜனகூட்டத்தில் அந்நிய முகங்கள் தென்படுவது அதிகரித்துக் கொண்டே போவது உள்ளூர் மண்ணின் மைந்தர்களுக்கு பகீரெனப் பயம் கொள்ளவே வைக்கிறது.

எங்கும் அந்நிய முகங்கள், எல்லாவற்றிலும் அந்நிய பதிவு என்பதைத் தவிர்க்கவே முடியவில்லை சாதாரண உள்ளூர் மக்களால்.

Advertisement

இடம்பெயர்ந்து வேலைக்காக வந்து பெரு நகரங்களில் குவிந்திருக்கும் அந்நியமுகங்கள் வயிற்றுப்பாட்டுக்காகவே வந்து கூலிகளாக, கொத்தடிமைகளாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். எல்லா பெரு நகரங்களிலும் இவர்கள் குவிந்திருக்கிறார்கள்.

இந்திய அரசியல் அமைப்புச் சட்டப்படி இந்தியாவின் எந்தப்பகுதியினரும் எந்தபகுதிக்கும் வேலை வாய்ப்புக்காக செல்வதற்கும், குடியேறுவதற்கும் உரிமை உண்டு. நீ யார் இங்கு வர என்று கேள்வியெழுப்ப முடியாது.

உலகமயமாக்கலில் உலகமே பெரும் சந்தை. சந்தை வணிகத்திற்காக யாரும் எங்கும் செல்லலாம். உலகமயமாக்கல் விவசாயம், சிறு தொழில்கள், கைத்தொழில்களை முடக்கி கிராம மக்களை பெரும் நகரங்களுக்கு வேலை தேடி இடம் பெயர வைக்கிறது.

முன்பு கேரளம் போன்ற மாநிலங்களிலிருந்து இளம் பெண்களும் ஆண்களும் இப்படி வந்தனர். இப்போது வட மாநிலங்களான பிகார், ஒடிஸா, நேபாளம், வங்கம் போன்ற பல பகுதி மக்களும் இந்தியப் பெருநகரங்களில் குடியேறியிருக்கிறார்கள்.

போர், கால நிலை மாற்றம், அகதி நிலை போன்றவை மக்களை இடம் பெயர வைக்கும் என்ற வரையறை உடைந்து போய் காரல் மார்க்ஸ் கண்டுபிடிக்காத தொழிலாளர்களாய் இவர்கள். கார்ப்பரேட்டுகளின் கூலி பொம்மைகள்.

"இந்தி படி, வேலை கிடைக்கும், வட நாடு போய் பிழைத்துக் கொள்ளலாம்' என்பதெல்லாம் போய், படித்த, படிக்காத வடநாட்டினர் தமிழ்நாட்டில் குடியேறுவது அதிகரித்துக் கொண்டே வருகிறது. வடமாநிலங்களில் பொருளாதார சிரமங்கள், இங்கே வந்தால் வேலை உண்டு. பொருளாதார சிரமங்களும் தீர்ந்துவிடும். அதுமட்டுமல்ல, அவர்களின் ஜாதிய முத்திரையும் ஒழிந்து போகும்.

அங்கு உயர்சாதி, தாழ்த்தப்பட்டவன் என்ற அடையாளங்களுடன் உலவி வந்தவனுக்கு சுதந்திரம் இங்கு. சோற்றுக்கமைந்து விடும் வாழ்க்கை அவர்களுக்கு இங்கு வந்த பின்.

நம்மவர்கள் உடல் உழைப்புக்குத் தயாரில்லாத இடங்களில் அவர்கள் சுலபமாக அமர்கிறார்கள். கூலியை எப்படியும் குறைத்துக் கொள்ளலாம்.

தொழிலாளி அந்தஸ்து யாருக்கு வேண்டும்? தொழிலாளி உரிமைகள் தேவையில்லை. கோதுமை மாவு மூட்டைகள், உருளைக்கிழங்கு மூட்டைகள் அவர்களுக்குப் போதும். கால்களை நீட்டிப் படுத்துக் கொள்ள பத்தடி நீளம், இரண்டடி அகல இடம் போதும்.

நிரந்தரத் தொழிலாளி அந்தஸ்து வேண்டாம், ஒப்பந்தத் தொழிலாளி அடையாளம் போதும், தினசரி கூலியாள் முத்திரை போதும். உலக முதலாளித்துவம் கொத்தடிமைகளை சுலபமாய் உருவாக்கிக்கொண்டிருக்கிறது. அடிமைத்தனம் ஒழிந்து தொழிலாளர் நிலை வந்தது. உலகம் உருண்டை. மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பும் கோரம்.

பெருநகர வாழ்க்கை நமக்கு ஏசி அறை, வால்மார்ட் சட்டை, கெண்டகி சிக்கன், கோக}கோலா வழங்கும் என்ற எதிர்பார்ப்பில் கனவு காணவும் அவகாசம் கிடைப்பதில்லை.

அவர்களுக்கான விதிமுறைகளும் சட்டங்களும் காகிதங்களில் மட்டுமே உள்ளன. அடையாள, ஆதார் அட்டைகள் கூட மறுக்கப்பட்டவர்கள். எங்கும் அரசே அடிமைகளை உருவாக்க தொழில்களைப் பிரித்துப் போட்டு விட்டது.

இதில் சர்வசிக்ஷா அபியான் ஆசிரியர்கள், நெடுஞ்சாலை ஊழியர்கள், சத்துணவு, ரேஷன் கடை ஊழியர்கள் என்று சகலமானவர்களும் அடைக்கலமாகிறபோது இடம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கும் அதில் இடமில்லாமல் போய் விடுமா என்ன? சகலமானவர்களும் "அமைப்பு சாரா தொழிலாளர்கள்' என்கிற ஒரே கூரைக்கு கீழே.

"சர்வசிக்ஷா அபியான்', "கல்வி உரிமைச் சட்டம் 2009' போன்றவை எல்லாக் குழந்தைகளுக்குமான கல்வியை வலியுறுத்தினாலும் இடம்பெயர்ந்து வந்து வேலை செய்யும் தொழிலாளர்களின் ஏழை குழந்தைகளின் கல்விநிலை பெரும் கேள்விக்குறி.

சுலபமாய் அவர்களுக்கு குழந்தைத் தொழிலாளர் அட்டை கிடைத்து விடும். ஆதார் அட்டைக்கும் அவர்கள் விண்ணப்பிக்கலாம்.

உயிர் வாழ ஏதாவது அட்டை அவசியம். இரத்தத்தை உறிஞ்ச முதலாளித்துவ அட்டைகள் எப்போதும் தயார்தான்.

திருப்பூரின் மக்கள் தொகையில் (10 லட்சத்தில்) 4 லட்சம் பேர் இப்போது அவர்களாகி விட்டார்கள்.

இடம்பெயர்ந்து வந்து வாழும் தொழிலாளர்கள் மண்டியிட்டு தங்களை ஒப்படைத்துக் கொண்டே இருக்கிறார்கள். பலி கொள். தலையை எடுத்துக்கொள் என்கிறார்கள்.

மீண்டும் மீண்டும் தலைகள் அவர்களுக்கு முளைத்துக் கொண்டே இருக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.