கட்டுரைகள்

காஷ்மீர் பற்றி எரிவது ஏன்?

'உலகம் இங்கு முடிகிறது. சொர்க்கம் இங்கு தொடங்குகிறது. மகிழ்ச்சிப் பள்ளத்தாக்கு உங்களை வரவேற்கிறது' என்ற பெயர்ப் பலகை ஜம்மு - காஷ்மீருக்குள் நுழையும் நெடுஞ்சாலையின் முகப்பில் காட்சியளிக்கிறது.

பழ. நெடுமாறன்

"உலகம் இங்கு முடிகிறது. சொர்க்கம் இங்கு தொடங்குகிறது. மகிழ்ச்சிப் பள்ளத்தாக்கு உங்களை வரவேற்கிறது' என்ற பெயர்ப் பலகை ஜம்மு - காஷ்மீருக்குள் நுழையும் நெடுஞ்சாலையின் முகப்பில் காட்சியளிக்கிறது.

ஆனால், கடந்த 16 ஆண்டுகளில் காஷ்மீரில் ஆயுதப்படைகளால் ஒரு இலட்சம் பேருக்கு மேல் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட குழந்தைகள் பெற்றோரைப் பறிகொடுத்து அனாதைகளாக்கப்பட்டிருக்கிறார்கள். பல்லாயிரக்கணக்கான பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாகியிருக்கிறார்கள். அந்த சொர்க்கம் இப்போது நரகமாகக் காட்சியளிக்கிறது.

இந்நிலைக்குக் காரணமென்ன?

1846-ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சி 75 இலட்சம் ரூபாய்க்கு ஜம்மு - காஷ்மீர் சமஸ்தானத்தை குலாப்சிங் என்பவருக்கு விற்றது. அவரின் மகனான ஹரிசிங் 1920-இல் காஷ்மீர் மன்னராக முடிசூட்டிக் கொண்டார். மன்னராட்சியில் இழைக்கப்பட்டக் கொடுமைகளுக்கு எதிராக ஷேக் அப்துல்லா காஷ்மீர் முஸ்லிம் மாநாடு என்ற கட்சியைத் தொடக்கினார்.

1931-ஆம் ஆண்டு சூலை 13-ஆம் நாள் ஸ்ரீநகரில் மக்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின்போது மன்னரின் படை 22 பேரை சுட்டு வீழ்த்திற்று. மன்னராட்சிக்கு எதிரானப் போராட்டம் அன்று தொடங்கியது.

1938-ஆம் ஆண்டில் ஜவாஹர்லால் நேருவின் ஆலோசனையை ஏற்று ஷேக் அப்துல்லா தனது கட்சியின் பெயரை காஷ்மீர் தேசிய மாநாடு என்று மாற்றினார். நயா காஷ்மீர் என்ற பெயரில் இக்கட்சியின் சோசலிசக் கொள்கைத் திட்டம் அறிவிக்கப்பட்டது. மதச்சார்பற்ற அமைப்பாக இக்கட்சி இயங்கும் என அறிவிக்கப்பட்டது.

ஷேக் அப்துல்லா மன்னராட்சிக்கு எதிரான போராட்டத்தைத் தொடங்கினார் என குற்றம் சாட்டப்பட்டு 1945 மே 25-ஆம் தேதி கைது செய்யப்பட்டு அவருக்கு மூன்றாண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் காஷ்மீரத்திற்குள் நுழைய முயன்ற ஜவாஹர்லால் நேரு தடுத்து நிறுத்தப்பட்டார். அதையொட்டி இந்தியா முழுவதிலும் கண்டன ஆர்ப்பட்டங்கள் நடத்தப்பட்டன.

ஜம்மு - காஷ்மீர் சமஸ்தானத்தில் 100-க்கு 80 பேர் முஸ்லிம்கள். ஆனால், மன்னரோ இந்து. ஆங்கிலேயே ஆட்சி முடிவடைந்து இந்தியா, பாகிஸ்தான் என இரு நாடுகள் உருவானபோது காஷ்மீரை பாகிஸ்தானுடன் இணைத்துக்கொள்ள ஜின்னா மிகவும் ஆர்வம் காட்டினார். காஷ்மீர் தலைவர்களை அழைத்துப் பேசி பல சலுகைகள் தருவதாகவும் கூறினார்.

ஆனால், காஷ்மீர் தேசிய மாநாட்டின் தலைவரான ஷேக் அப்துல்லா அதை ஏற்கவில்லை. இந்தியாவுடன் இணைவதையே அவர் விரும்பினார். எனவே, பாகிஸ்தான் மலைவாசிகள் தூண்டிவிடப்பட்டு இராணுவத் துணையுடன் காஷ்மீர் மீது படையெடுத்தனர். அதுவரை செய்வதறியாமல் ஊசலாடிக் கொண்டிருந்த காஷ்மீர் மன்னர் தனது சமஸ்தானத்தை இந்தியக் குடியரசில் இணைப்பதாக அறிவித்தார்.

காஷ்மீரைக் காப்பாற்ற இந்திய இராணுவம் உடனடியாக அனுப்பப்பட்டது. ஸ்ரீநகர் வரை வந்துவிட்ட பகைவர்களை இந்திய இராணுவம் விரட்டியடித்தது. இப்படைக்குத் தலைமை தாங்கிய பிரிகேடியர் உஸ்மான் உயிர்த்தியாகம் செய்து ஈட்டிய வெற்றி இது. இந்தியப் படைக்குத் துணையாக தேசிய மாநாட்டுத் தொண்டர்களும் போரிட்டார்கள்.

1947-ஆம் ஆண்டு டிசம்பரில் பாகிஸ்தான் படையெடுப்புக் குறித்து இந்திய அரசு ஐ.நா. பாதுகாப்பு குழுவிடம் புகார் செய்தது. 1948-ஆம் ஆண்டு ஏப்ரல் 21-ஆம் தேதியன்று பாதுகாப்புக் குழு அமைதி ஆணையம் அமைத்து போர் நிறுத்த எல்லைக்கோட்டை வகுத்தது.

பின்னர், காஷ்மீர் மக்களின் கருத்தறிய பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற யோசனையை பாதுகாப்புக் குழு தெரிவித்தது. ஆனால் அதை ஏற்க இந்திய அரசு மறுத்துவிட்டது. 1948-ஆம் ஆண்டிலிருந்து 1957-ஆம் ஆண்டு வரை ஐ.நா. பாதுகாப்புக் குழு காஷ்மீரில் பொது வாக்கெடுப்பை வலியுறுத்தி பல தீர்மானங்களை நிறைவேற்றியது. ஆனால், அவற்றை இந்திய அரசு ஏற்கவில்லை.

காஷ்மீர் பிரதமர் ஷேக் அப்துல்லாவும் இந்தியப் பிரதமர் ஜவாஹர்லால் நேருவும் பேச்சு வார்த்தை நடத்தியதால் இந்தியாவின் வேறு எந்த மாநிலத்திற்கும் அளிக்கப்படாத சிறப்பு உரிமைகள் ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கு அளிக்கப்பட்டன.

அம்மாநிலத்திற்கென்று தனியான அரசியல் சட்டம் வகுத்துக்கொள்ள அரசியல் அவை ஒன்று அமைக்கப்பட்டு 1956-ஆம் ஆண்டு நவம்பர் 17-ஆம் நாள் காஷ்மீருக்கான தனி அரசியல் சட்டம் இயற்றப்பட்டது. அம்மாநிலத்திற்கு மட்டுமே அளிக்கப்பட்ட சிறப்பு உரிமைகளை காணலாம்.

1950-ஆம் ஆண்டில் காஷ்மீர் அரசைக் கலந்தாலோசித்து இந்தியக் குடியரசுத் தலைவர் பிறப்பித்த ஆணையின்படி பாதுகாப்பு, வெளிநாட்டுறவு, செய்தித் தொடர்பு ஆகிய மூன்று துறைகள் பற்றி மட்டுமே இந்திய நாடாளுமன்றம் சட்டங்களை இயற்றலாம்.

காஷ்மீர் மாநிலத்தின் நிரந்தர குடிமக்களுக்கு அசையாச் சொத்துகள் வாங்குவது, வேலை வாய்ப்பு, குடியிருப்பு போன்றவற்றில் சிறப்புரிமைகள் வழங்கப்பட்டுள்ளன. பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் காஷ்மீரத்தில் அசையாச் சொத்துகள் வாங்க முடியாது.

காஷ்மீர் சட்டப் பேரவையின் அனுமதியில்லாமல் அம்மாநிலத்தில் அவசர கால நிலைமையை இந்திய குடியரசுத் தலைவர் அறிவிக்க முடியாது. காஷ்மீர் சட்டப் பேரவையின் அனுமதியில்லாமல் அம்மாநிலத்தின் பெயரை மாற்றவோ, எல்லைகளைத் திருத்தியமைக்கவோ மத்திய அரசிற்கு அதிகாரம் இல்லை. காஷ்மீர் சட்டப் பேரவையே அம்மாநில ஆளுநரைத் தேர்ந்தெடுக்கும்.

இவ்வாறு எல்லாமே நட்புறவுடன் சென்றுகொண்டிருந்த நிலையில், காஷ்மீர் பிரதமர் ஷேக் அப்துல்லா சுதந்திர நாடாக காஷ்மீரை அறிவிக்கத் திட்டமிட்டிருக்கிறார் என்ற சந்தேகம் பிரதமர் நேருவிற்கு ஏற்பட்டது. அதனால், 1953-ஆம் ஆண்டு அவர் கைது செய்யப்பட்டு 12 ஆண்டு காலம் சிறை வைக்கப்பட்டார்.

அவருக்குப் பிறகு இராணுவத்தின் துணையுடன் முறைகேடான தேர்தல்கள் நடத்தப்பட்டு பொம்மை முதலமைச்சர்கள் நாற்காலியில் அமர்த்தி வைக்கப்பட்டார்கள். காஷ்மீரின் சிறப்புரிமைகள் ஒவ்வொன்றாகப் பறிக்கப்பட்டன.

சிறையில் இருந்து ஷேக் அப்துல்லா 1964-ஆம் ஆண்டு விடுவிக்கப்பட்டு மீண்டும் காஷ்மீர் ஆட்சிப் பொறுப்பை ஏற்றார். நேருவின் மறைவிற்குப் பிறகு பிரதமராக லால் பகதூர் சாஸ்திரி பொறுப்பேற்றபோது ஷேக் அப்துல்லா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

1967-ஆம் ஆண்டு ஷேக் அப்துல்லாவை விடுதலை செய்ய வேண்டுமென ஜெயப்பிரகாஷ் நாராயணன் வேண்டியபோது, பிரதமர் இந்திரா காந்தி அக்கோரிக்கையை ஏற்கவில்லை. ஆனாலும், ஷேக் அப்துல்லாவின் வயது முதுமையைக் கருதி அவர் விடுவிக்கப்பட்டார்.

அவருக்கு இழைக்கப்பட்ட அநீதி காஷ்மீர் மக்களின் உள்ளங்களை புண்படுத்திவிட்டது. அதற்குப் பிறகு அவருடைய மகன் பரூக் அப்துல்லா உட்பட பலர் காஷ்மீர் ஆட்சிப் பொறுப்பை ஏற்றபோதும் நிலைமை சீராகாதது மட்டுமல்ல, மேலும் மேலும் சீரழிந்துகொண்டுமிருக்கிறது.

இதற்குக் காரணம் என்ன? முஸ்லிம் நாடான பாகிஸ்தானுடன் இணைய மறுத்த காஷ்மீர் முஸ்லிம்கள் இந்தியாவுடனேயே இணைவது என முடிவெடுத்தனர். தங்களை நம்பி இணைந்த காஷ்மீர் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை இந்தியா அப்பட்டமாக மீறியது மட்டுமல்ல, இராணுவ ஒடுக்குமுறையை அம்மக்கள் மீது ஏவி விட்டது.

இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்டத் தமிழர்களை இலங்கையில் படுகொலை செய்த சிங்கள இராணுவத்தின் மீது சர்வதேச நீதிவிசாரணை தேவை என்ற கோரிக்கையை சிங்கள அரசு ஏற்க மறுப்பதற்கும், இந்திய அரசின் காஷ்மீர் நிலைப்பாட்டிற்கும் வேறுபாடு இல்லை.

காஷ்மீர் பிரச்னையில் இந்திய அரசும், கிழக்கு வங்கப் பிரச்சினையில் பாகிஸ்தான் அரசும், ஈழத் தமிழர் பிரச்னையில் இலங்கை அரசும் தங்கள் இராணுவத் தளபதிகளின் நெருக்குதல்களை மீறி செயல்படத் துணிவில்லாமல் பணிந்துவிட்டன.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கிழக்கு வங்க அரசுக்கு பாகிஸ்தான் அரசு அதிகாரம் அளிக்க மறுத்தது. காஷ்மீர் அரசுக்கு, இந்திய அரசும், இலங்கையின் வடக்கு மாகாண அரசிற்கு சிங்கள அரசும் அதிகாரங்களை அளிக்க மறுக்கின்றன.

காஷ்மீர் அரசிடமிருந்து பறித்த அதிகாரங்களை மறுபடியும் கொடுத்தால் காஷ்மீர் பிரிந்துபோய்விடும் அல்லது பாகிஸ்தானுடன் இணைந்துவிடும் என தில்லி தவறாக கருதுகிறது.

உருது மொழி திணிக்கப்பட்டபோது வங்க முஸ்லிம்கள் கொதித்தெழுந்து போராடி வெற்றி பெற்றதையும், இன்றும் பாகிஸ்தானில் உள்ள பக்டூன் முஸ்லிம்கள் பக்டூனிஸ்தான் கேட்டு போராடுவதையும், காஷ்மீர் மக்கள் அறியாதவர்கள் அல்லர். எனவே, பாகிஸ்தானுடன் அவர்கள் ஒருபோதும் சேரமாட்டார்கள்.

பாகிஸ்தானுடன் இணைய மறுத்து இந்தியாவுடன் விரும்பி இணைந்த காஷ்மீர் மக்களை பாகிஸ்தான் கைக்கூலிகள் என குற்றம் சாட்டுவதால் எதிர்மறையான விளைவுகள் ஏற்படக்கூடும்.

காஷ்மீரில் உள்ள ஆயுதப்படைகளை திரும்பப் பெறுவது, மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட படை வீரர்கள்மீது நீதிவிசாரணை நடத்துவது, அங்கு நேர்மையான முறையில் தேர்தல் நடத்தி உண்மையான மக்கள் அரசை அமைப்பது, காஷ்மீரிடமிருந்து பறிக்கப்பட்ட அதிகாரங்களை திரும்பக்கொடுப்பது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமே தவிர, மேலும் மேலும் படைகளைக் குவிப்பதும் அப்பாவி மக்கள் மீது ஒடுக்குமுறையை ஏவிவிடுவதும் பிரச்னையைத் தீர்க்காது.

கட்டுரையாளர்:

தலைவர், உலகத் தமிழர் பேரமைப்பு.

பழ. நெடுமாறன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்காவுடன் இடைக்கால வா்த்தக ஒப்பந்தம்: பேச்சுவாா்த்தை ஒத்திவைப்பு!

மாற்றம் பெறும் மதிப்பீட்டு முறை!

தமிழகத்தில் 2,506 முகாம்கள் மூலம் 3,09,707 பேருக்கு வேலைவாய்ப்பு!

தில்லியில் பயங்கரவாத தாக்குதல் சதி முறியடிப்பு: தமிழகத்தில் இருந்து 6 போ் உள்பட 8 போ் கைது!

இடையறா பயணத்தின் 'மைல்கல்' தேர்தல்!

SCROLL FOR NEXT