போதை பாதையில் இருந்து கிரிக்கெட் பாதை...
இத்திய அமெரிக்காவில் மெக்ஸிகோவிற்கு அருகிலுள்ள சிறிய நாடு கவுதமாலா. ஆங்கிலப் படம் பார்ப்பவர்கள் இந்த நாட்டைப் பற்றி அறிந்திருப்பார்கள்.
இத்திய அமெரிக்காவில் மெக்ஸிகோவிற்கு அருகிலுள்ள சிறிய நாடு கவுதமாலா. ஆங்கிலப் படம் பார்ப்பவர்கள் இந்த நாட்டைப் பற்றி அறிந்திருப்பார்கள். ஜேம்ஸ் பாண்ட் படங்கள் உள்பட சில அதிரடி ஆங்கிலப் படங்களில் போதைப் பொருள் கடத்தலின் மையமாக இந்த நாடு இருக்கும்.
இந்த நாட்டை திரையில் காட்டும் வேளைகளில் எல்லாம் திரையில் ஏகப்பட்ட ரத்தச் சிதறல்கள் இருக்கும். ஏறத்தாழ 1 லட்சம் சதுர கிலோ மீட்டர்களே பரப்பளவுள்ள இந்த நாட்டில் ராணுவ ஆட்சி, உள்நாட்டுக் கலவரங்கள், பழங்குடிகளுக்கிடையான மோதல்கள் என ஆயிரம் பிரச்னைகள் இருந்தாலும் இவை எல்லாவற்றையும் விட தலைபோகும் பிரச்னை போதை மருந்து கடத்தல்காரர்களும் அவர்களுக்கிடையான குழு மோதலும் ஆகும்.
போதை எமன்: சிறிய நாடான கவுதமாலாவில் போதைப் பொருள் கும்பல்களுக்கிடையான மோதல்களில் ஆண்டுதோறும் பல்லாயிரக் கணக்கானவர்கள் இறந்தனர்.
Advertisement
ஆனால், இன்று கவுதமாலாவில் சமூக விரோதக் குழுக்களின் மோதல்களால் இறந்து போகிறவர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது எனப்படுகிறது. இதற்குக் காரணமாக அவர்கள் கிரிக்கெட்டை கைகாட்டுகிறார்கள்.
ஜியோவானி என்ற இருபது வயதான இளைஞர் தனது வாழ்க்கையை இப்படியாகச் சொல்கிறார்... "எனது நண்பர்கள் எல்லோருமே தங்களது பதின்ம வயதுகளில் போதைப் பொருள் கடத்தும் குழுக்களில் இணைந்து கொண்டார்கள்.
சிறிது காலத்தில் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார்கள். இல்லை, அவர்களுக்குள்ளேயே குழுச் சண்டையிட்டு இறந்து போனார்கள். நானும் போதைப் பொருள் கடத்தும் குழுவொன்றில் இணைந்துகொள்ளவே இருந்தேன்.
அப்போதுதான் எனக்குக் கிரிக்கெட் அறிமுகமானது. கிரிக்கெட் விளையாட்டில் ஏற்பட்ட ஆர்வம் காரணமாக இப்போது நான் பட்டப் படிப்பை முடித்து ஆசிரியராக உள்ளேன்,' என்கிறார்.
மத்திய அமெரிக்காவில் கிரிக்கெட்: மத்திய அமெரிக்காவில் உள்ள நாடுகளில், பிரிட்டிஷ் ஹாண்டுராஸ் எனப்படும் பெலீசும், கோஸ்ட்டாரிக்காவும் ஆங்கிலம் பேசுகின்ற நாடுகள் ஆகும்.
இவை பிரிட்டிஷ் காலனி நாடுகளாக இருந்தவை என்பதால் இங்கே ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட ஆங்கிலமும் கிரிக்கெட்டும் பிரபலமாகியிருந்தன. ஆனால், ஸ்பெயினின் காலனி நாடாக இருந்த கவுதமாலா, கிரிக்கெட்டுடன் எந்த வகையிலும் தொடர்பில்லாமல் இருந்தது.
கிரிக்கெட் என்றொரு விளையாட்டைப் பற்றி சில ஆண்டுகளுக்கு முன்பு வரைக்கும் அவர்கள் அறிந்திருக்கவில்லை.
கம்டன் கிரிக்கெட் கிளப்: இர்ம்ல்ற்ர்ய் இழ்ண்ஸ்ரீந்ங்ற் இப்ன்க்ஷ (இஇஇ) - அமெரிக்காவைச் சேர்ந்த கம்டன் கிரிக்கெட் கிளப்தான் கவுதமாலாவில் கிரிக்கெட்டை அறிமுகப்படுத்தியவர்களில் முக்கியமானவர்கள். அமெரிக்காவில் உள்ள வறிய மற்றும் வீடற்ற இளைஞர்கள் தவறான பாதையில் செல்வதைத் தடுக்கும் பொருட்டு இந்தக் கிரிக்கெட் கிளப் 1995-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
அமெரிக்காவில் வெற்றிகரமாக இயங்கிப் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களை போதையின் பிடியில் இருந்து மீட்ட இவர்கள், போதைப்பொருள் கடத்தலால் சீரழிந்து போயிருந்த கவுதமாலாவில் சில ஆண்டுகளுக்கு முன்பாக தங்களது செயல்பாடுகளை ஆரம்பித்தனர்.
அவர்கள் கவுதமாலாவில் கிரிக்கெட்டை அறிமுகப்படுத்தியபோது கிட்டத்தட்ட 165,000 சமூக விரோதக் கும்பல்கள் மற்றும் போதைப் பொருள் கடத்தல் மன்னர்கள் கவுதமாலாவில் இருந்தனர்.
ஒவ்வொரு போதை மன்னனுக்கும் கீழே பல்லாயிரக் கணக்கான உதவியாளர்கள் என அந்தத் தேசத்தின் ஒட்டுமொத்த இளைஞர் சமுதாயமும் ஏதோ ஒரு வகையில் போதைப் பொருள் கடத்தலிலும் குழு மோதல்களிலும் தொடர்பு கொண்டிருந்தன. இப்போது போதைப்பொருள் கடத்தல் கும்பலில் இருந்தவர்களில் பெரும்பாலானவர்கள் கிரிக்கெட் வீரர்களாகிவிட்டனர்.
கவுதமாலா நாட்டுக்கென இப்போது அதிகாரபூர்வமானதொரு கிரிக்கெட் அணி உருவாகிவிட்டது. போதைப் பொருள் கும்பலிடம் இருந்து மீண்டு வந்தவர்களே அதில் பெரும்பான்மையாக அங்கம் வகிக்கின்றனர்.
போதைப் பொருள்களில் இருந்து இளைஞர்களின் கவனத்தைத் திசை திருப்ப கிரிக்கெட்டைப் பயன்படுத்தியதற்குப் பதிலாக வேறு எதாவது விளையாட்டைப் பயன்படுத்தி இருக்கலாமே என பத்திரிகையாளர் ஒருவர் கம்டன் கிரிக்கெட் கிளப்பின் நிறுவனரும் சமூக சேவையாளருமான டெட் ஹேஸ் என்பவரிடம் கேட்டபோது, அவர் இப்படியாகப் பதில் அளித்திருந்தார்...
"மற்றைய எல்லா விளையாட்டுகளையும் விட கிரிக்கெட் விளையாட்டானது அதிகளவில் வாழ்தலின் மகத்துவத்தைச் சொல்லித் தருகிறது.
ஒரு விக்கெட்டைக் காப்பதற்காகப் போராடும் ஒரு பேட்ஸ் மேனுக்கு, உயிர் வாழ்தலின் மகத்துவம் இலகுவாகப் புரிந்துவிடும். உயிர் வாழ்தலின் மகத்துவத்தைப் புரிந்து கொண்டவன், அடுத்தவனின் உயிரை எடுக்க மாட்டான்' என்றார். எவ்வளவு உண்மை...?