காலத்தின் தேவை
உலகெங்கும் வாழும் ஒட்டுமொத்தத் தமிழர்களையும் ஒருங்கிணைத்துள்ளது ஹார்வர்ட் தமிழ் இருக்கை.
உலகெங்கும் வாழும் ஒட்டுமொத்தத் தமிழர்களையும் ஒருங்கிணைத்துள்ளது ஹார்வர்ட் தமிழ் இருக்கை. இந்தியத் தமிழர், இலங்கைத் தமிழர், மலேசியத் தமிழர், புலம் பெயர் தமிழர் என்ற தங்களது அடையாளங்களைத் துறந்து, ஹார்வர்ட் தமிழ் இருக்கைக்காக தமிழர்களாக ஒன்றிணைந்துள்ளனர் உலகத் தமிழர்கள்.
1636-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஹார்வர்ட் பல்கலைக்கழகம் உலகப் பல்கலைக் கழகங்களுக்கெல்லாம் தாய்ப் பல்கலைக் கழகமாக போற்றப்படுகிறது. ஹீப்ரு, அக்கார்டியன், அரபிக், சீனம் போன்ற உலகின் பழமையான மொழிகளுக்கு இந்தப் பல்கலைக் கழகத்தில் பிரத்யேகமான தனித் துறைகள் உண்டு.
இந்தியாவைப் பொறுத்தவரைக்கும் சம்ஸ்கிருத மொழிக்கு மட்டுமே தனித் துறை உண்டு. சம்ஸ்கிருதத்திற்கான துறை சுமார் 130 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்டதாகும். துறை என்பதை, அமெரிக்காவில் "சேர்' என்பார்கள். அப்படியே தமிழ்ப்படுத்தினால் தமிழ் இருக்கை.
Advertisement
ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழுக்காக தனித்துறையைத் தொடங்குவதற்கான முயற்சியில் உலகத் தமிழர்களை ஒருங்கிணைத்து உலகளாவிய இயக்கமாக செயற்பட்டு வருகின்றது ஹார்வர்ட் தமிழ் இருக்கை அமைப்பு.
ஹார்வர்ட் பல்கலைக்கழக்தில் ஒரு மொழிக்கான துறையை/ இருக்கையை தொடங்க வேண்டுமாயின் சுமார் 6 மில்லியன் பணத்தை அதாவது தோராயமாக 40 கோடி இந்திய ரூபாய்களை ஹார்வர்ட் பல்கலைக்கழகத்திற்கு வழங்க வேண்டும். இந்தத் தொகையை திரட்டும் முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர் இவர்கள்.
"40 கோடி என்று உச்சரிக்கும்போது அது பெரியதொரு தொகையாக இருக்கலாம். ஆனால், சிந்தித்துப் பாருங்கள்... உலகின் மிகப் பழமையான பல்கலைக்கழகத்தில் தமிழுக்கென தனித் துறை இருந்தால் அது ஒட்டுமொத்தத் தமிழினத்திற்கும்தானே பெருமை...?
உலகின் ஆதி மொழிகளாக சொல்லப்படும் தமிழ், சம்ஸ்கிருதம், கிரீக், சைனீஸ், ஹீப்ரு, லத்தீன், அரபிக் ஆகிய 7 மொழிகளில் தமிழைத் தவிர மிகுதி 6 மொழிகளுக்கும் ஹார்வர்ட்டில் தனித் துறை உள்ளது.
தமிழுக்கு மட்டும்தான் இல்லை. "கல்தோன்றி மண் தோன்றா காலத்தே முன்தோன்றிய மொழி தமிழ் மொழி எனச் சொல்லிக் கொண்டிருந்தால் மட்டுமே போதுமா...? தமிழின் பெருமையை மற்றைய மொழிபேசும் மக்களிடையேயும் எடுத்துச் செல்ல வேண்டாமா..?
ஹார்வர்ட்டில் வரப்போகும் தமிழ் இருக்கை தமிழின் பெருமையை உலகெங்கும் பறைசாற்றும்' என்கிறார் ஹார்வர்ட் தமிழ் இருக்கை அமைப்பிற்கான இந்தியத் தூதர் கலாநிதி ஆறுமுகம்.
"மூன்று கோடி மக்கள் பேசும் உக்ரேனிய மொழிக்கு,இரண்டு இருக்கைகள் உள்ளன. 15 லட்சம் மக்கள் பேசக்கூடிய, செல்டிக் மொழிக்குக் கூட இருக்கை உள்ளது. ஆனால், 80 மில்லியன் மக்கள் பேசும் தமிழுக்குத் தனி இருக்கை இல்லை. தமிழ் மொழி எந்தவிதத்தில்தான் குறைந்துவிட்டது?' என்கிறார் ஹார்வர்ட் தமிழ் இருக்கை அமைப்பின் இங்கிலாந்திற்கான தூதரான ஜெயராஜ் குலசேகரம்.
இவர், கடந்த சில மாதங்களாக தனது சொந்தப் பணத்தில் உலகெங்கும் பயணம் செய்து தமிழ் அமைப்புகளையும், தமிழ்ச் சங்கங்களையும் சந்தித்து ஹார்வர்ட் தமிழ் இருக்கையின் முக்கியத்துவத்தை பரப்புரை செய்து வருகிறார்.
"ஹார்வர்ட் தமிழ் இருக்கையை உலக தமிழ் மக்கள் அனைவரின் பங்களிப்புடனேயே ஆரம்பிக்க விரும்புகிறோம். ஹார்வர்ட் தமிழ் இருக்கைக்கு பணம் நன்கொடை அளிக்கும் இணையத்தளத்திற்கு சென்று பாருங்கள் எளிய மக்கள் 50 ரூபாய், 100 ரூபாய் கூட நன்கொடை அளித்திருப்பார்கள்.
இப்படியாக ஒட்டுமொத்த உலகத் தமிழர்களின் பங்களிப்புடனேயே இதைச் செய்ய விரும்புகிறோம். இதுவரைக்கும் உலக அரங்கில் தமிழர்களின் வரலாற்றை தமிழர்களால் எழுத முடியவில்லையே. இனி அந்தக் குறை ஹார்வர்ட் தமிழ் இருக்கை மூலமாக நீக்கப்படும் என்கிறார் ஜெயராஜ் குலசேகரம்.
"1984-ஆம் ஆண்டு ஆர். பாலகிருஷ்ணன் என்பவர் முதல்முறையாக தமிழ் மொழியில் ஐ.ஏ.எஸ். பரீட்சை எழுதி வெற்றி பெற்றார். அதற்குப் பிறகு அவரைப் பின்பற்றிப் பலர் தமிழில் ஐ.ஏ.எஸ். தேர்வெழுதி வெற்றி பெற்றார்கள். அதுபோல, ஹார்வர்ட்டில் தொடங்கவுள்ள தமிழ்த் துறையில் தமிழ் கற்க வேண்டும் என்ற பேரவா உள்ள அடுத்த சந்ததி உருவாகும் என்கிறார் கலாநிதி ஆறுமுகம்.
"எனது தாய் நோய்வாய்ப்பட்டிருக்கிறார் என வைத்துக் கொள்ளுங்கள். அவருக்கு நான் எவ்வளவு பணம் செலவழித்தாவது, உலகத்தின் முதன்மையான வைத்தியரிடமே சிகிச்சை பெற வைப்பேன். ஏனென்றால், அவர் என் தாய்.
அதேபோல உலகத்தில் பல பல்கலைக்கழகங்களில் தமிழ்த் துறைகள் இருந்தாலும், பல்கலைக்கழகங்களுக்கெல்லாம் முதன்மையான ஹார்வர்ட்டில் தமிழ்த் துறை திறக்கப்பட வேண்டும். எனது அன்னைக்கும் எனக்குமான பாசப்பிணைப்புப் போல, இது தமிழர்களுக்கும் எனக்குமான பாசப்பிணைப்பு. அதனால்தான் முழுமூச்சாக வேலை செய்துவருகிறேன்.
"ஒரு தடவை 6 மில்லியன் டாலரைக் கொடுத்தால் போதும். காலம் முழுவதும் தமிழ்த் துறைக்காக ஆகும் செலவுகளை ஹார்வர்ட் பல்கலைக்கழகம் பார்த்துக் கொள்ளும். ஹார்வர்டில் ஒருவர் தமிழில் ஆய்வுக் கட்டுரை எழுதி அது பிரசுரமானால் அதற்கான மதிப்பே வேறு" என்கிறார் எழுத்தாளர் அ. முத்துலிங்கம்.
சில ஆண்டுகளுக்கு முன்பு ஹார்வர்ட் பல்கலைக்கழகம் யோகாவை அங்கீகரித்தது. அந்த அங்கீகாரம் உலகளவில் யோகாவிற்குக் கிடைத்த அங்கீகாரமாகக் கருதப்பட்டது. அதேபோலத்தான். தமிழ் மொழிக்கு ஹார்வர்டில் கிடைக்கும் அங்கீகாரம், உலக அளவில் தமிழுக்குக் கிடைத்த அங்கீகாரமாகவே பார்க்கப்படும்.