சேரவாரும் செகத்தீரே!
உலகப் பொது மறை தந்த திருவள்ளுவர் கடவுள் வாழ்த்திற்கு அடுத்தபடியாக வான் சிறப்பு என்னும் தலைப்பிலான அதிகாரத்தில், "வானின்று பொழியும் மழையால் இவ்வுலகம் இயங்குகிறது.
உலகப் பொது மறை தந்த திருவள்ளுவர் கடவுள் வாழ்த்திற்கு அடுத்தபடியாக வான் சிறப்பு என்னும் தலைப்பிலான அதிகாரத்தில், "வானின்று பொழியும் மழையால் இவ்வுலகம் இயங்குகிறது. எனவே மழையே உலகிற்கு அமுதமாகிறது' என மழையின் சிறப்பை விவரிக்கின்றார்.
உலக இயக்கத்திற்குக் கடவுளே காரணம் என்பதை ஏற்க மறுப்போரும், மழை காரணமாதலை மறுத்தல் இயலாதல்லவா? அதே சமயம், மழையானது உயிர்களை காக்கவும் செய்யும் கெடுக்கவும் செய்யும் என்பதையும் அறிவுறுத்துகிறார். கெடுத்தலை, மழை இருவகையாகச் செய்கிறது. ஒன்று, அறவே பெய்யாது கெடுத்தல், மற்றொன்று வரம்பின்றிப் பெய்து கெடுத்தல்.
வாழ்விக்கும் அமுதை வரம்பின்றியுண்ணும் பொழுது அதுவே நஞ்சாகிறதல்லவா? அதுபோலத்தான். நாம் அமுதத்தைச் சேமித்து வைத்து வேண்டுங்கால் வேண்டுமளவு உண்டால் அமுதம் நஞ்சாகாது. அதுபோல மழையெனும் அமுதத்தைச் சேமித்து, வேண்டும்போது பயன்படுத்தாமை மனிதக் குற்றமன்றி மழையின் குற்றமல்லவே? அது சரி,மழையை எப்படிச் சேமிப்பது?
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் புலவர், குடபுலவியனார் பாண்டிய மன்னன் நெடுஞ்செழியனை நோக்கி இவ்வாறு கூறுகிறார்: "போகிற உலகத்திற்குப் புண்ணியமெனும் செல்வம் வேண்டுமாயினும் பிற மன்னர்களை வென்றடக்கி நீயே தனியரசு ஆள விரும்பினாலும், அழியாப் புகழை நிலை நிறுத்த நினைத்தாலும் செயத்தக்கது ஒன்றுண்டு. எங்கெல்லாம் நிலப்பகுதி தாழ்வாக இருக்கிறதோ அங்கெல்லாம் நீரைத் தேக்கும் நீர்நிலைகளை ஏற்படுத்துக. அப்படிப்பட்ட மன்னன் பெயரே வரலாற்றில் நிலைத்திருக்கும் (புறம்:18).
நாம் ஏரி, ஓடை எனும் நீர்நிலைகளைக் கூர்ந்து கவனித்தால் ஏரியின் மூன்று புறங்கள் மேட்டுப் பகுதிகளாகவும் ஒருபுறம் மட்டும் தாழ்வாக வழிவதாகவும் இருக்கும். அத்தாழ்வான பகுதியில் உயரமான கரையெழுப்பியிருப்பர். எனவே, மேட்டுப்புறங்களில் பெய்யும் மழைநீர் தாழ்வான பகுதியில் தேங்கி ஏரியெனும் நீர்நிலையாக அமையும். கட்டப்பட்ட கரையில் அமைக்கப்படும் வாய்க்கால்கள் வழியாகப் பயிர் விளைவிப்பர்.
மேட்டூர் அணை கட்டப்பட்டதற்கு முன்பு, காவிரியிலிருந்து சோழ மண்டலத்தின் தொலைதூரப் பகுதிகளிலும் நாட்டின் பிற பகுதிகளிலும் இப்படியாகத்தான் நன்செய்ப் பயிர்கள் விளைவிக்கப்படடன. ஏரியின் முப்புறமான மேட்டுப்பகுதிகளில் கிணற்று நீரைக்கொண்டு புன்செய்ப் பயிர்கள் விளைவிக்கப்பட்டன.
மேட்டூர் அணையிலிருந்து காவிரி நீர் தொலைதூரப் பகுதிகளுக்கும் கொண்டு செல்லப் பட்டதால் அதுகாறும் புன்செய் நிலமாக இருந்த பகுதிகள் நன்செய் நிலமாயிற்று இவற்றைப் புதாற்றுப் பாசனப்பகுதி எனக் குறிப்பிடுவர்.
1974-க்குப் பின்னர் காவிரியில் கர்நாடகத்திலிருந்து வரும் நீரளவு குறைந்தது. எனவே, புதாற்றுப் பாசனப் பகுதிகள் பழையபடி ஆழ்குழாய்க் கிணற்றுப் பாசனப் பகுதிளாகின்றன. ஏரி, ஓடையெனும் நீர்நிலைகள் தூர்ந்து தரிசு நிலமாவதால் பழைய பாசனப் பகுதிகளும் கிணற்றுப் பாசனமாக மாறும் நிலை.
ஏரிகள் தூர்ந்து தரிசாவதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. கடுங்கோடையில் ஏரி, ஓடை, குளம் எனும் நீர்நிலைகள் வறண்டு போதலும் உண்டு. அப்போது விவசாயிகள் நீர்நிலையின் மையப் பகுதியில் படிந்து காய்ந்து போன வண்டல் படிவங்களைப் பெயர்த்தெடுத்து வண்டிகளில் ஏற்றிச் சென்று மேட்டுப்பகுதியின் செம்மண் பாங்கான நன்செய், புன்செய் நிலங்களில் பரப்பிவிடுவர். அந்த வண்டல் மண் இயற்கை உரமாக மாறி அந்தப் பகுதிகளில் விளைச்சல் மிகுதியாகும்.
பசுமைப் புரட்சி எனும் பெயரால் நம் நாட்டின் ஆயிரக்கணக்கான விதைவகைகள் அழிக்கப்பட்டு, நவீன இரசாயன உரங்களால் மட்டுமே விளையக்கூடியனவாக நம் பயிர் வகைகள் மாற்றப்பட்டு விட்டன. எனவே, விவசாயிகள் கோடைக்காலத்தில் வறண்ட நீர்நிலைப் பகுதிகளில் வண்டல் எடுக்கும் வழக்கத்தைக் கைவிட்டனர். இதன் விளைவு இருவகை. முதலாவது, நீர்நிலைகள் மண்மேடாவதால் நிலத்தடி நீர்வளம் குறைந்து கிணற்றுப் பாசனம் மட்டுமல்ல, குடிநீர் வசதியும் இடர்ப்பாடாகின்றது. இரண்டாவது, இரசாயன உரங்களால் மட்டுமே விளையும் உணவுப் பொருட்கள் உயிர்ச் சத்து குறைந்து மக்களின் உடல் நலத்திற்குக் கேடாகின்றது.
நீர்நிலைகளின் மறைவால் ஏற்படும் பாதிப்பு சென்னை போன்ற பெரு நகரங்களில் வேறு வகையாகின்றது. நகருக்குள் இருக்கும் குளங்களும், புறநகரப் பகுதியில் ஏரி, ஓடை என்பனவும் நீர்த் தேக்கமின்றி வறளும் போது அவை கட்டுமானப் பகுதிகளாகின்றன.
இதிலே தனிமனிதர் மட்டுமல்லாது அரசாங்கங்களும் போட்டி போடுகின்றன. நாகர்கோவில் பேருந்து நிலையம், சென்னை வள்ளுவர் கோட்டம், மதுரை உயர்நீதிமன்றக்கிளை போல நாடு முழுதும் அரசு, உள்ளாட்சி மன்றம் மற்றும் தனியார் கட்டுமானங்களாக உருமாறிப் போன நீர் நிலைகள் ஏராளம்.
நகர்ப் பகுதியை ஒட்டிய நீர்நிலைப் பகுதியில் தனி நபர்கள் குடியேறும் போது அனைத்துக் கட்சிக்காரர்களும் ஆக்கிரமிப்பாளர்களுக்குத் தேவையான ஒத்துழைப்பு நல்கி அங்கே தத்தம் கட்சிக் கொடிநட்டு ஓட்டு வேட்டையாடும் பாட்டாளிகளின் கூட்டாளிகளாகிறார்கள். அதன் விளைவாக வறட்சியும், வெள்ளமும் ஏற்படும் போது, "அய்யகோ', "கேட்பாரில்லையா' எனப் புலம்புகிறார்கள்.
நீர்நிலைகள் மட்டுமல்ல சென்னையில் குசஸ்தலை, கூவம், பக்கிங்காம் முதலாக வடிகால்களாகும் நீர் வழித்தடங்களும் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகின்றன. வெள்ள நீர் வடியவில்லையென்று புலம்புகிறோம்? எப்படி வடியும் ஆக்கிரமிப்புகளுக்குத் துணையாதலும், கண்டு கொள்ளாமையும் எல்லாக் காலங்களிலும் எல்லாக் கட்சி அரசுகளுக்கும், எல்லாக் கட்சிக்காரர்களுக்கும் பொதுப் பணப்பு. பாதிப்பு ஏற்படும் போது அப்போதைய அரசைக் குறைகூறுதல் எல்லாக் காலத்தும் எல்லா எதிர்க் கட்சிகளுக்கும் பொதுப்பண்பு.
இன்றைய கடலூர், நாகப்பட்டினம், காரைக்கால் மாவட்டங்கள் பழைய சோழமண்டலத்தின் தாழ்வான பகுதிகள். அதற்குள்ளாகவும் தாழ்வான பகுதிகளுக்கும் கிராமங்களும் விரிவாகின்றன. பெருகும் மழைநீர் வடிந்து சென்று கடலில் கலப்பதற்கான வாய்க்கால்களும், ஆறுகளும் ஆழமும் அகலமும் குறைந்து சிறுத்துவிட்டன. அவற்றின் குறுக்காகும் சாலைகளில் போதுமான அளவில் பாலங்கள் இல்லை. கடலூர் மாவட்டம் கடலுள் மாவட்டமானது இதனால்தான்.
நடந்தவை நடந்தவையாகட்டும். இனி நடப்பவை நல்லவையாக நாம் செய்ய வேண்டியவை:
முதலாவது, நீர் நிலைகளிலும், வடிகால்களிலும் ஏற்பட்டிருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்றுதற்கான திட்டங்கள் படிப்படியாகவும் முறையாகவும் செய்யப்பட வேண்டும். அரசுக்குரிய இடங்களை ஆக்கிரமிப்பு செய்வோர்க்கு சில ஆண்டுகள் வரை அபராதம் விதித்து, பின்னர் அதையே ஆதாரமாகக் கொண்டு ஆக்கிரமிப்பாளர்க்கு உரிமை மாற்றம் செய்யும் நடைமுறையை, நீர்நிலைகள், ஆறுகள், வடிகால் வழித்தடங்கள் ஆகியவற்றைப் பாதுகாக்கும் வகையில் மாற்றியமைக்க வேண்டும்.
இரண்டாவது, நாடு முழுவதும் தூர்ந்து கிடக்கும் நீர்நிலைகளையும், ஆறுகளையும் தூர்வாரி ஆழப்படுத்த வேண்டும். பிற்காலச் சோழ மன்னராட்சியில் நீர்நிலைகளின் பராமரிப்பு கிராமசபையார் பொறுப்பாக இருந்தது. அதுதான் சரியானது. தற்போதும் அதே பொறுப்பை உள்ளாட்சி அமைப்புகளுக்கு உரித்தாக்குதல் நல்லது.
மூன்றாவது, நகரப்பகுதி, புறநகரப்பகுதி, கிராமப் பகுதி என நாடுமுழுதும் வாய்ப்பான இடங்களில் புதிய குளங்களையும், ஏரிகளையும் ஏற்படுத்த வேண்டும். குடியிருப்புப் பகுதிகளில் சேரும் மழைநீர் பழைய - புதிய நீர்நிலைகளுக்குச் செல்வதற்கான வடிகால்களையும் அமைக்க வேண்டும்.
ஏற்கெனவே வடிகால்களாகப் பயன்பட்ட - சென்னையில் கொசஸ்தலை, கூவம், பக்கிங்காம் போன்று, வடிகால் பகுதிகளில் அமைந்துள்ள குடிசை வாசிகளுக்கு அரசே மாற்றிடங்களில் முறையான குடியிருப்புகளை ஏற்படுத்தி, பழைய வடிகால்களை வலுப்படுத்த வேண்டும்.
நான்காவது, கடலூர் மாவட்டம் போன்று - கடற்கரையை ஒட்டிய - தாழ்வான ஊர்களில் பெருகும் வெள்ளம் வடிந்து கடலுக்குச் செல்லும் படியாக வாய்க்கால்களையும், ஆறுகளையும் கடல்வரை கொண்டு செல்ல வேண்டும்.
ஐந்தாவது, காவிரி, கொள்ளிடம், கெடிலம், வெள்ளாறு, தென்பெண்ணை முதலான ஆறுகளில் ஆங்காங்கே கதவணைகளும், தடுப்பணைகளும் கட்ட வேண்டும். இவை, மக்களுக்கு வெள்ளத்தடுப்பு, விவசாயத்திற்கு நீர் சேமிப்பு என இருவகையாகப் பயன்படும்.
ஆறாவது, தனிப்பட்ட புதிய கட்டடங்களுக்கும், புதிய நகரமைப்பு திட்டத்திற்கும் அனுமதியளிப்பதற்கு முன்பாக, அவற்றுக்கான வடிகால் வசதியை உறுதிப்படுத்த வேண்டும்.
ஏழாவது, மேற்கண்ட செயல்திட்டங்கள் அனைத்திலும் அரசுடன் மக்களும் இணைந்து செயற்பட வேண்டும். நாட்டு நலப் பணிகளில் மக்கள் சக்தியை இணைப்பதாக அமைய வேண்டும்.
காமராசர் காலத்தில், பள்ளிக் கல்வி இயக்குநர் நெ.து. சுந்தரவடிவேலு, நாடுமுழுதும் பள்ளிச் சீரமைப்பு மாநாடுகளுக்கு ஏற்பாடு செய்தார். அப்போது, நிதி மிகுந்தோர் பொற்குவைதாரீர் - நிதி குறைந்தோர் காசுகள்தாரீர் - அதுவுமற்றோர் உடலுழைப்பு நல்குவீர் - என்றொரு முழுக்கத்தை முன்வைத்தார். அந்த முழக்கம் இப்போது நாட்டு நலப்பணிகள் அனைத்திற்குமாகட்டும் - சேரவாரும் செகத்தீரே!
கட்டுரையாளர்: தலைமையாசிரியர் (ஓய்வு).