கட்டுரைகள்

பொருளாதாரத்தை அரிக்கும் லஞ்சம்!

ஊழலற்ற நிர்வாகம் மற்றும் ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளின் அடிப்படையில் நாடுகளுக்கு புள்ளிகள் வழங்கப்பட்டு,

எஸ். ராமன்

ஊழலற்ற நிர்வாகம் மற்றும் ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளின் அடிப்படையில் நாடுகளுக்கு புள்ளிகள் வழங்கப்பட்டு, தரவரிசைப் பட்டியல் ஒவ்வோர் ஆண்டும் வெளியிடப்படுகிறது.÷
 சமீபத்திய உலக அளவிலான ஆய்வு முடிவின்படி, 2015-ஆம் ஆண்டுக்கான தரவரிசைப் பட்டியலில், இந்தியா 76-ஆவது இடத்தில் உள்ளதாக (Corruption Perception index) தகவல் வெளியாகி உள்ளது. மொத்தம் 168 நாடுகள் அடங்கிய இந்த தரநிலைப் பட்டியலில், கடந்த ஆண்டைவிட, 9 இடங்கள் முன்னேறி, 2015}இல் இந்தியா 76-ஆவது இடத்தை எட்டியுள்ளது.
 இந்தப் பட்டியலில், சீனா 83-ஆவது இடத்திலும், வங்கதேசம் 139-ஆவது இடத்திலும் உள்ளன. தாய்லாந்து, பிரேசில், டுனீசியா, ஜாம்பியா ஆகிய நாடுகளும், இந்தியாவின் இடத்திலேயே நிற்கின்றன. வழக்கம்போல், டென்மார்க் ஊழலற்ற நிர்வாகத்தில் முதல் இடத்தைப் பிடித்திருக்கிறது. இந்தியாவும் அந்நாடு போன்று ஊழலற்ற நிர்வாகத்தில் தற்போதுள்ள 76-ஆவது இடத்திலிருந்து முதலிடத்தைப் பிடிக்க வேண்டும் என்பதே நமது குறிக்கோளாக அமைய வேண்டும்.
 இந்திய - ஸ்வீடன் வர்த்தகக் கூட்டமைப்பு இந்தியாவில் இயங்கும் 141 ஸ்வீடிஷ் நிறுவனங்களிடம் சமீபத்தில் ஓர் ஆய்வை நடத்தியது. இந்தியாவில், வியாபாரம் செய்வதற்கேற்ற சூழ்நிலை சம்பந்தமான கேள்விகள் அந்த நிறுவனங்களிடம் கேட்கப்பட்டன. இந்தியாவில், சகப் போட்டியாளர்களைச் சமாளிக்க, லஞ்சம் கொடுக்கவேண்டியது அவசியமாகிறது. முதலீடுகளின் பெருக்கத்துக்கு, தடைக்கு, லஞ்சம் ஒரு பெரும் காரணியாக அமைகிறது என்று அந்த ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.
 ஒவ்வோர் இந்திய குடிமகனையும், வெட்கித் தலைகுனியவைக்கும் இந்தத் தகவல்கள், அன்றாட வாழ்வில், நேரிடையாக அல்லது மறைமுகமாக அவர்களைப் பொருளாதார ரீதியாக தாக்கிக் கொண்டிருக்கிறது என்பதால், அதன் மீது அரசும், மக்கள் பிரதிநிதிகளும் அதிகக் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகிறது.
 ஆனால், பலவித தனிப்பட்ட விவகாரங்களுக்காக நாடாளுமன்றத்தை முடக்கும் அரசியல் கட்சிகள், அனைவரின் பொதுக் கவனத்துக்கும் வந்த, இம்மாதிரி தகவல்களின் அடிப்படையில், ஊழலில் இந்தியாவின் நிலை பற்றி விவாதித்து, சர்வதேச அரங்கில் இந்தியாவின் கெளரவத்தை உயர்த்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளாதது வருத்தப்பட வேண்டிய விஷயமாகும்.
 மாற்றுக் கட்சியினர் சம்பந்தமான ஏதாவதொரு ஊழல் வெடிக்கும்போது மட்டும் கூச்சல், குழப்பம் ஏற்படுத்திவிட்டு, அதற்குப் பிறகு அதை மறந்து விடுவது அரசியல்வாதிகளின் பண்பாடாக ஆகிவிட்டது எனலாம்.
 சிறிய அளவில் பணம் கைமாறினால் அது லஞ்சம் என்றும், அதுவே, வெளிநாட்டு வங்கிகளில் முதலீடு வரை பரந்து விரிந்தால் ஊழல் என்றும் அழைக்கப்படுவது சகஜமாகிவிட்டது.
 மக்களின் அன்றாட வாழ்வில் ஒன்றி படர்ந்து கொண்டிருக்கும் லஞ்ச லாவண்யங்கள், நாட்டுப் பொருளாதாரத்தை அரித்து சாய்க்கவல்லது என்பதால், அதன் வளர்ச்சி தடுத்து நிறுத்தப்படவேண்டிய ஒன்றாகும். அந்தத் தடுப்பு முயற்சிகள் சாமான்ய மக்களிடமிருந்துதான் துவங்கப்படவேண்டும்.
 இந்தக் காரியத்தைச் செய்தால், உனக்கு பத்து ரூபாய் என்று பெற்றோர் தம் குழந்தைகளிடம், கைம்மாறு குறிப்பிட்டு வேலை வாங்கும் முறையில்தான் லஞ்சத்தின் அறிமுகம் துவங்குகிறது. இம்மாதிரி ஊக்குவிப்புகளால், சாதாரண கடமைகளை ஆற்றுவதற்கு கூட, கைம்மாறுகளை எதிர்பார்க்கும் மனப்பான்மை குழந்தைகளிடையே வளர்கிறது.
 சிறு வயது முதலே, குழந்தைகளிடம் கொடுத்த காசுக்கு சரிவர கணக்கு கேட்காமல் இருப்பது, அவர்களை, நேர்மைக்கு எதிரான வழியின் அடுத்தக் கட்டத்திற்கு இழுத்துச் செல்கிறது.
 லஞ்சம் சாலை மத்தியிலும் தாண்டவமாடுகிறது. சாலை விதிகளை மீறும் வாகன ஓட்டிகளிடம், "அபராதத் தொகையை அரசுக்குக் கட்ட விரும்புகிறீர்களா....அல்லது, அதில் பாதியை எனக்கு கொடுக்கிறீர்களா?' என்று வாகன ஓட்டிகளை ஓரம்கட்டி, போக்குவரத்துக் காவலர் பேரம் பேசும் நிகழ்ச்சிகளை தினமும் நகர சாலைகளில் காண்கிறோம்.
 இம்மாதிரி சம்பவங்களுக்கு, விதி மீறுபவர்கள்தான் முழுக் காரணம் என்று சொல்லலாம். செய்த தவறுக்கு, அரசுக்கு அபராதம் செலுத்துவது நம் கடமை என்பதை உணர்ந்து, விதி மீறுபவர்கள் செயல்படத் துவங்கினால், இந்தத் துறையில் லஞ்ச முறைகேடுகள் குறைய வாய்ப்புள்ளது. ÷அதேபோல், நாம் நேரிடையாக வாகன உரிமத்துக்கு (லைசென்ஸ்) விண்ணப்பித்தால், அதற்கான அரசு கட்டணம் தவிர,வேறு எந்தச் செலவும் இருப்பதில்லை. ஆனால், இடைத் தரகர்கள் மூலம் விண்ணப்பித்தால், பல மடங்கு அதிகமாக நம்மிடம் வசூலிக்கப்படும் தொகையில், பெரும்பகுதி அதிகாரிகளுடன் பகிரப்பட்டு, லஞ்சத்துக்கு வித்திடுகிறது.
 லஞ்சம் என்பது இரு பக்க நாணயம் போன்றது. வழங்குபவர்களும், பெறுபவர்களும் அடங்கிய நாணயத்தில் நாம் ஒரு பக்கமாக இருப்பதை குறைத்தாலே, நாணயம் உருக்குலைந்து, அந்தக் குற்றங்கள் குறைய வாய்ப்பிருக்கிறது. தங்கள் பக்கம் தவறு இருப்பவர்கள்தான் பெரும்பாலும், லஞ்சம் வழங்கி, அந்தத் தவறை மறைக்கப் பார்க்கின்றனர்.
 தவறு இல்லையென்றாலும், முடிவை தாமதப்படுத்துவதன் மூலம், மனுதாரரின் நேரமின்மையையும், பொறுமையையும் துருப்புச் சீட்டாக முன்னிறுத்தி, அதிகாரிகள் லஞ்சம் வழங்கப்படுவதற்கான சாலையை அமைத்துக்கொள்கின்றனர்.
 நம் பக்கம் எந்தத் தவறும் இல்லையென்றால், பொறுத்திருந்து தேவையான ஆவணங்களைப் பெறலாம். லஞ்சத்தின் மூலம், தவறுகள் திருத்தப்படுவதை அரசு இயந்திரங்கள் தடுத்து நிறுத்தவேண்டும். அதற்கான உறுதியும், நேர்மையும் உள்ள அதிகாரிகள் அரசு இயந்திரத்தின் பாகங்களாக இயங்கினால்தான், இது சாத்தியமாகும்.
 மக்களின் வரிப்பணத்தில், அரசு மேற்கொள்ளும், சாலைப் பணிகள் முதல் பலவிதமான சிறிய, பெரிய திட்டங்களுக்கு "டெண்டர்' மூலம் அனுமதி வழங்கும் முறையில், பலவித முறைகேடுகள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. ஒருவரே நிர்வகிக்கும் பல நிறுவனங்களால், வெவ்வேறு பெயர்களில் "டெண்டர்கள்' சமர்ப்பிக்கப்பட்டு, பேப்பர் அளவில் வழிமுறைகள் பின்பற்றப்படுவதுபோல் காட்டப்படுகின்றன.
 சந்தை விலையைவிட, அதிக விலைக்கு "டெண்டர்கள்' வழங்கப்படுவதற்கு இம்மாதிரி முறையற்ற கூட்டணிகள் ஒரு முக்கியக் காரணமாகும்.
 பொதுத் திட்டங்களுக்காக அரசு செலவிடும் ஒவ்வொரு ரூபாயிலிருந்தும், 25 பைசா வரைதான் சம்பந்தப்பட்ட திட்ட செயல்பாடுகளை சென்றடைகிறது என்று பல ஆண்டுகளுக்கு முன்பு, ராஜீவ் காந்தி தன் கருத்தைப் பதிவிட்டார்.
 சில ஆண்டுகளுக்கு முன்பு, அந்த பங்கு பதினைந்து பைசா வரை தேய்ந்திருப்பதாக ராகுல் காந்தி கருத்து தெரிவித்தார். எஞ்சிய தொகைகள், அரசியல்வாதிகள் உள்பட, பல நிலைகளில் பங்கிடப்படுகின்றன. பங்குத் தொகைப் பெருத்தால், பாதுகாப்பு கருதி, அவை வெளிநாடுகளுக்குக் கடத்தப்படுகின்றன.
 சுவிஸ் வங்கி கணக்குகளில் நம் நாட்டினரால் பதுக்கப்பட்டிருக்கும் தொகைகளில் பெரும்பகுதி ஊழல் பணம்தான் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், அதுபோல கடத்தப்பட்ட முறைகேடான பணம், எளிதில் இந்தியாவுக்கு கொண்டுவரமுடியாதபடி, ஒரு வழிப்பாதையாக அமைந்துவிட்டதுதான் கவலைக்குரிய விஷயம்.
 தற்போதைய மத்திய அரசின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான சுவிஸ் பண மீட்பு, இதுவரை நிறைவேற்ற முடியாததன் முக்கியக் காரணம், அதிலுள்ள நடைமுறைச் சிக்கல்களாகும். ஊழல்வாதிகளுக்கு இம்மாதிரிச் சிக்கல்கள் சாதகமாக அமைந்துவிடுகின்றன.
 அரசு அதிகாரிகளின் உதவி இல்லாமல், அரசியல்வாதிகள் ஊழலில் ஈடுபடமுடியாது. ஒரு நேர்மையற்ற அதிகாரி, தன் சொந்த நலனுக்காக, சமூக நலனை அடகு வைத்து, பல ஊழல்களுக்கு வித்திடுகிறார்.
 அதன் மூலம், தனக்குக் கீழ் பணிபுரியும் பல ஊழியர்களையும், ஊழல் சேற்றில் தள்ளுகிறார். அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளின் கூட்டணியில்தான், ஊழல் என்ற சமூக புற்றுநோய், எந்த சிகிச்சையும், தடையுமின்றி வளர்ந்து கொண்டிருக்கிறது.
 சமீபத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட பொது மன்னிப்புத் திட்டத்தின் படி, இதுவரை கணக்கில் காட்டப்படாத கறுப்புப் பணத்தை, குறிப்பிட்ட காலத்திற்குள் 45 சதவீத வரியும், அபராதத் தொகையும் செலுத்தி, வெள்ளையாக மாற்றிக்கொள்ளலாம். ஆனால், மாற்றப்படும் தொகைக்கான உச்ச வரம்பு எதுவும் அறிவிக்கப்படவில்லை. இந்தக் கறுப்புப் பணத்தில், எவ்வளவு ஊழல் பணம் அடங்கியிருக்கிறது என்பதற்கான தணிக்கைகள் அல்லது கேள்விகள் கேட்கப்படப் போவதில்லை.
 இதனால், முறைகேடான வழிகளில் பொருள் ஈட்டியவர்கள் எந்தவிதமான பாதிப்புமின்றி தப்பித்துக்கொள்வார்கள். ஆகையால், இந்தச் சலுகைக்கு உச்ச வரம்பு அறிவிக்கப்படவேண்டும்.
 உலகப் பொருளாதார அரங்கில் இந்தியா தலைநிமிர்ந்து நடக்க, ஊழல் குறைந்த வியாபார சூழ்நிலை உருவாக்கப்படவேண்டும். அந்த அடித்தளம் அமைய நம்மால் முடிந்தவரை, லஞ்சம் கொடுப்பதைத் தவிர்ப்போம் என்று ஒவ்வொருவரும் சபதம் மேற்கொள்வோம்.
 
 கட்டுரையாளர்:
 வங்கி அதிகாரி (ஓய்வு).
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மகளிர் ஆசிய கோப்பை ரைசிங் ஸ்டார்: 2-ஆவது முறையாக கோப்பை வென்றது இந்தியா ஏ!

ஜம்மு-காஷ்மீாின் கிஸ்த்வாா் பயங்கரவாதி சுட்டுக் கொலை

திண்டல் வேலாயுதசுவாமி கோயில் மகா கும்பாபிஷேகம்

Nanjil Sampath Latest Interview | சீமான் தமிழரே இல்லை | TVK Vijay | Seeman | NTK Maanadu

ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம்?

SCROLL FOR NEXT