நடுப்பக்கக் கட்டுரைகள்

தமிழ்நாடு: அகவை 60

மூவேந்தர்கள் ஆட்சிக் காலத்தில்கூட தமிழ்நாடு ஒன்றாக இருந்ததில்லை. சேர, சோழ, பாண்டிய நாடுகளாகப் பிரிந்துக் கிடந்தது. மூவரும் தமக்குள் ஓயாமல் போராடினர்.

பழ. நெடுமாறன்

விண்ணையிடிக்கும் தலையிமயம் - எனும்
வெற்பையடிக்கும் திறனுடையார் - சமர்
பண்ணிக்கலிங்கத் திருள்கெடுத்தார் தமிழ்ப்
பார்த்திவர் நின்ற தமிழ்நாடு
-என பாரதி பெருமிதத்தோடு பாடினான்.
பொற்கோட்டு இமயத்துப் புலி பொறித்து ஆண்டான் பூம்புகார்ச் சோழன். ஆரியப் படைக் கடந்தான் பாண்டிய நெடுஞ்செழியன். இமயத்தில் கல்லெடுத்து கனக விசயர் தலையில் ஏற்றி சேரநாட்டில் கண்ணகிக்குக் கோவில் எழுப்பினான் சேரன் செங்குட்டுவன்.
ஆனால் மூவேந்தர்கள் ஆட்சிக் காலத்தில்கூட தமிழ்நாடு ஒன்றாக இருந்ததில்லை. சேர, சோழ, பாண்டிய நாடுகளாகப் பிரிந்துக் கிடந்தது. மூவரும் தமக்குள் ஓயாமல் போராடினர்.
களப்பிரர் ஆட்சியிலும் அதற்குப் பின்னர் பல்லவர் ஆட்சியிலும் தமிழ்நாடு ஒரே நாடாக விளங்கியதில்லை. முதலாம் பாண்டியப் பேரரசு காலத்திலும், பின்னர் சோழப் பேரரசு காலத்திலும் ஓயாத போர்கள் நடந்தன.
பேரரசர்களான இராசராசன், இராசேந்திரன் ஆகியோர் காலத்தில் இலங்கை, கடாரம் மற்றும் கடல் கடந்த நாடுகளைக் கைப்பற்றி ஆண்டார்கள். ஆனாலும் அவர்கள் காலத்தில் தமிழகம் முழுவதையும் புலிக்கொடியின் கீழ் கொண்டுவர முடியவில்லை.
சோழரும், பாண்டியரும் இடைவிடாது தங்களுக்குள் போராடியதின் விளைவாகத் தமிழகம் வலிமைக் குன்றியது. பின்னர் விசயநகரப் பேரரசின் மேலாண்மையின்கீழ் மதுரை, தஞ்சை, செஞ்சி நாயக்கர்களின் ஆட்சி ஏற்பட்டது. அதற்குப்பிறகு மராட்டியர்களும், நவாபுகளும், தமிழகத்தின் சில பகுதிகளை ஆண்டனர்.
இவர்கள் அனைவரின் ஆட்சியிலும் தமிழகம் பல பகுதிகளாக சிதறுண்டு கிடந்தது. பாளையப்பட்டுகளின் சிற்றரசர்கள் ஆட்சியில் சிறு சிறு துண்டுகளாக தமிழகம் பிளவுபட்டுக் கிடந்தது. கிழக்கிந்திய நிறுவனத்திற்கு இது வாய்ப்பாக அமைந்தது வணிகம் செய்யவந்தவர்கள் நாடாளும் வெறிகொண்டவர்களாக மாறினார்கள். அவர்கள் கைப்பற்றிய நாட்டின் நிர்வாகத்தை பிரிட்டிஷ் அரசே நேரிடையாக மேற்கொண்டது.
சென்னை, மும்பை, கொல்கத்தா ஆகிய துறைமுக நகரங்களை தங்களது வணிக மேம்பாட்டுக்காக உருவாக்கிய ஆங்கிலேயர் அந்நகரங்களைச் சுற்றியிருந்த பல்வேறு மொழி பேசும் மக்கள் வாழும் பகுதிகளை ஒன்றாக இணைத்து பல்வேறு மாகாணங்களை உருவாக்கினார்கள்.
அப்படி அமைக்கப்பட்ட சென்னை மாகாணம் என்னும் சிறைக்குள் தமிழகம் கட்டுண்டுக் கிடந்தது. தெலுங்கு பேசும் மாவட்டங்கள், கன்னட மாவட்டங்கள், மலபார் மாவட்டம் ஆகியவை தமிழ்நாட்டுடன் இணைக்கப்பட்டு பெரும் சென்னை மாகாணமாகத் திகழ்ந்தது.
1920-ஆம் ஆண்டில் நாகபுரியில் வி.விசயராகவாச்சாரியார் தலைமையில் கூடிய காங்கிரசு மாநாட்டில் மாகாண காங்கிரசுக் குழுக்களை மொழிவழி அடிப்படையில் திருத்தி அமைக்கவேண்டும் என்ற தீர்மானத்தை திலகர் முன்மொழிய அதனை காந்தியடிகள் வழி மொழிந்தார்.
அதன் விளைவாக காங்கிரஸ் கட்சி மொழி அடிப்படையில் பிரிக்கப்பட்டுத் திருத்தி அமைக்கப்பட்டது. சென்னை மாகாண காங்கிரசுக் குழு, தமிழ்நாடு காங்கிரசுக் குழு, ஆந்திர காங்கிரசுக் குழு, கர்நாடக காங்கிரசுக் குழு என பிரிக்கப்பட்டு இயங்கத் தொடங்கின. நாடு விடுதலை பெற்ற பிறகு மொழி வழியாக மாகாணங்கள் திருத்தியமைக்கப்படும் என்ற வாக்குறுதியை காங்கிரஸ் அளித்தது.
ஆனால், நாடு விடுதலை பெற்ற பிறகு மொழி வழியாக மாநிலங்களைப் பிரிப்பதை இந்திய அரசு விரும்பவில்லை. மக்கள் போராட்டங்களுக்குப் பிறகு மொழி வழி மாநிலங்கள் அமைக்கப்பட்டன.
சங்க காலம் தொடங்கி ஆங்கிலேயர் ஆட்சிக் காலம் வரையிலும், அதற்குப்பிறகு நாடு விடுதலை பெற்ற 1947 ஆகஸ்டு 15-ஆம் நாளிலிருந்து 1956-ஆம் ஆண்டு அக்டோபர் 31 வரை தமிழ்நாடு தனி மாநிலமாக விளங்கவில்லை. 1956-ஆம் ஆண்டு நவம்பர் முதல் தேதி தமிழ்நாடு உருவாயிற்று. சில பகுதிகளை இழக்க நேரிட்டாலும் முதன் முதலாக தமிழர்களுக்கென்று ஒரு மாநிலம் அமைக்கப்பட்டது.
தமிழ்நாட்டின் தென் முனையில் இருந்த தமிழர் பகுதிகளைத் தமிழ்நாட்டுடன் சேர்ப்பதற்காக நேசமணி, நத்தானியல், பி.எஸ். மணி போன்றோர் தலைமையில் திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ் தொடர்ந்து போராடியது.
வட எல்லையில் வேங்கடம் முதலிய பகுதிகளை தமிழ்நாட்டோடு இணைக்க வேண்டுமென்று ம.பொ.சி., மங்கலங்கிழார், கே. விநாயகம் போன்றோர் தலைமையில் போராட்டம் நடந்தது.
தமிழகத்தின் வடக்கு எல்லையிலும், தெற்கு எல்லையிலும் நடைபெற்ற இந்தப் போராட்டங்களுக்கு தமிழ்நாட்டில் உள்ள கட்சிகள் அனைத்தும் ஆதரவு கொடுத்திருந்தால் நாம் பல பகுதிகளை இழந்திருக்க மாட்டோம்.
சென்னை நகரம் தமிழர்களுக்கே சொந்தமானது என்பதை நிலைநாட்ட அன்றைய முதல்வர் இராஜாஜி, பெரியார், காமராசர், அண்ணா, ஜீவா போன்ற தலைவர்கள் ஒன்றுபட்டுக் குரல் கொடுத்தார்கள்.
தட்சிணப் பிரதேசம் என்னும் சிறைக்குள் தமிழகத்தைப் பூட்டி வைக்கும் திட்டத்தை எதிர்த்து அன்றைய முதல்வர் காமராசரும், மற்ற தலைவர்களும் ஒன்றுபட்டுப் போராடியதால் வெற்றி கிடைத்தது. இந்த ஒற்றுமை எல்லைப் பகுதிகளை மீட்பதில் இல்லாமல் போயிற்று.
எனினும் தமிழகம் அமைந்த நாளான நவம்பர் முதல் நாளை தமிழர்கள் ஆண்டு தோறும் கொண்டாடி மகிழ்ந்திருக்க வேண்டும். கர்நாடகம், கேரளம் போன்ற பல்வேறு மாநிலங்களிலும் அந்தந்த மாநிலம் பிறந்த நாளை, மாநில அரசுகளும், கட்சிகளும் இணைந்து கொண்டாடுகின்றன.
ஆனால், என்ன காரணத்தினாலேயோ தமிழ் நாட்டில் இதுவரை ஆண்ட அரசு எதுவும் தமிழகம் பிறந்த நாளைக் கொண்டாட முன்வரவில்லை. இனியும் இந்த நிலை தொடரக் கூடாது.
தமிழகம் பிறந்து 60 ஆண்டு நிறைவடைகிறது. இத்திருநாள் தமிழர்கள் அனைவரும் இணைந்து கொண்டாடி மகிழ வேண்டிய பெருநாளாகும். இருக்கும் பகுதியைக் காக்கவும், இழந்தப் பகுதிகளை மீட்கவும் நாம் உறுதிபூண வேண்டிய நாள்.
தமிழ்நாடு எனப் பெயர் சூட்ட தன் உயிரை ஈந்த தியாகி சங்கரலிங்கனாரையும், தமிழகம் அமைய அரும்பாடுபட்டு எண்ணற்றத் தியாகங்களைச் செய்த அனைவரையும் இத்தருணத்தில் நன்றியோடு நினைவுகூருவோம்!

கட்டுரையாளர்:
தலைவர், உலகத் தமிழர் பேரமைப்பு.

பழ. நெடுமாறன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதுச்சேரி காங்கிரஸ் - பாஜக நிா்வாகிகள் மீது வழக்குப் பதிவு

பாகிஸ்தான் போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் தொடா்பு: ராணுவ வீரா், பணிநீக்கப்பட்ட காவலா் உள்பட 6 போ் கைது

சித்தோட்டில் கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டி மீட்பு

பிரதமா் மோடி உரை: இஸ்ரேல் எதிா்க்கட்சியினா் புறக்கணிப்பு?

ரயிலில் பயணியிடம் மடிக்கணினி திருடியவா் கைது

SCROLL FOR NEXT