குழந்தையும் தெய்வமும்
இந்தியா உலக அரங்கில் பெருமைப்படுவதற்குக் காரணம் நம் நாட்டின் மக்கள் தொகை வளர்ச்சி தான். இங்கு இருக்கும் மனித வளம் தான்.
இந்தியா உலக அரங்கில் பெருமைப்படுவதற்குக் காரணம் நம் நாட்டின் மக்கள் தொகை வளர்ச்சி தான். இங்கு இருக்கும் மனித வளம் தான். இன்று வளரும் குழந்தைகள் தான் நாளைய விஞ்ஞானிகள், கவிஞர்கள், எழுத்தாளர்கள், நடிகர்கள், பல்துறை நிபுணர்கள். அண்மைக் காலமாக தமிழ்நாட்டில் குழந்தை கடத்தல் அதிகரித்து வருவது வருந்ததற்குரிய விஷயமாகும்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சென்னை, கீழ்ப்பாக்கம் அருகே ஒரு குழந்தை காணாமல் போய் காவல் துறையினரின் தீவிர தேடுதலுக்குப் பின் அக்குழந்தை திருவண்ணாமலையில் கண்டெடுக்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இச்சம்பவம் நடந்து சில நாட்களுக்குப் பிறகு மீண்டும் சென்னை பாரிமுனை பகுதியில், வால்டாக்ஸ் சாலையில், பிறந்து ஆறு மாதமேயான பெண் குழந்தையும், சட்டக் கல்லூரி அருகே எட்டு மாத ஆண் குழந்தையும் காணவில்லை. இது குறித்து காவல் துறையின் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குழந்தை கடத்துவது என்பது கொலைக்கு சமமான செயல். இது ஒரு குடும்பத்தை அழித்தொழிப்பதற்கு ஒப்பாகும். போலீஸாரும், பொதுமக்களும் அவ்வப்போது சந்தித்து வரும் பல பிரச்னைகளில் இந்தக் குழந்தை கடத்தல் முக்கிய
மானது.
ஒன்று முதல் 18 வயதுக்கு குறைவானவர்கள், அனைவருமே குழந்தைகள் என்று ஐ.நா. சபை வரையரை செய்துள்ளது. பிச்சை எடுப்பதற்காகவும், உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் குழந்தை இல்லாமல் தவிக்கும் தம்பதியினர்களுக்கு விற்பதற்காகவும், அநாதைக் குழந்தைகள் இல்லம் நடத்துவதாகக் கூறி வெளிநாடுகளிலிருந்து பணம் சம்பாதிக்கவும், வடமாநிலங்களில் பேக்கரி, தேநீர் விடுதி போன்ற சிறு சிறு தொழிலகங்களில் வேலை செய்யவும் குழந்தைகள் கடத்தப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும் குழந்தைகள் பிறந்தவுடனேயே, மருத்துவமனை ஊழியர்களின் உதவியுடன் குழந்தைகள் கடத்தப்பட்டு விற்கப்படுவதாகவும் செய்திகள் வெளியாகின்றன. இது குறித்து மருத்துவமனைகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம்.
தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் 1500 முதல் 2000 வரை குழந்தை கடத்தல் புகார்கள் பதிவாகின்றன. இந்தக் குழந்தை கடத்தலில் பணப் பிரச்னை, தொழில் போட்டி, முன் விரோதம் போன்றவைதான் முக்கிய காரணங்களாக இருக்கின்றன. கடத்தல் சம்பவம் கொலையாக மாறும்போதுதான் இப்பிரச்னைகள் வெளிச்சத்துக்கு வருகின்றன.
தமிழ்நாட்டில் இதுபோன்ற கடத்தல் தொழிலில் ஈடுபடுவது எளிதில் பணம் சம்பாதிக்க விரும்பும் கூலிபடையினர்தான் என்றும், தொழிலதிபர்களையோ ஆண்களையோ கடத்துவதைவிட குழந்தைகள் மற்றும் பெண்களை பணத்திற்காக கடத்தும் சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்று காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்.
குழந்தைகளை மிகுந்த எச்சரிக்கையோடு பெற்றோர்கள் பாதுகாக்க வேண்டும். குறிப்பாக, நடைபாதைகளில் வசிக்கும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை மிகுந்த எச்சரிக்கையுடன் கண்காணிக்க வேண்டும்.
குறிப்பாக இரவு நேரங்களில் குழந்தைகளை அருகிலேயே வைத்திருக்க வேண்டும். பள்ளி செல்லும் குழந்தைகளிடம் பெற்றோர்கள் வீட்டு முகவரி, அவசர போலீஸ் உதவிக்கு உரிய தொலைபேசி எண் உள்பட எல்லா விவரவங்களை சொல்லிக் கொடுக்க வேண்டும்.
அறிமுகமில்லா நபர் பழகினால் அது குறித்து உடனே தெரிவிக்க வேண்டும் என்றும் குழந்தைகளுக்கு தெரிவிக்க வேண்டும். பள்ளி மற்றும் கல்லூரிகளில் பெண்களுக்கு பெப்பர் ஸ்பிரே பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
கடந்த ஆண்டு தமிழ்நாட்டில் 656 குழந்தைகள் கடத்தப்பட்டுள்ளனர் என்றும், இதில் 305 பெண் குழந்தைகள் என்றும் ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
அரசு குழந்தை கடத்தலைத் தடுக்க காவல் துறையில் தனிப் பிரிவை ஏற்படுத்தி, குழந்தைகளைக் கடத்துபவர்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும்.
நாடு முழுவதும் குழந்தைகள் கடத்தப்படுவது குறித்து உச்சநீதிமன்றம் ஏற்கெனவே தனது கவலையைத் தெரிவித்துள்ளது. இச்சம்பவங்கள் குறித்த விசாரணையின்போது பிகார் மற்றும் சத்தீஸ்கர் மாநில தலைமைச் செயலர்கள் மற்றும் டி.ஜி.பி.க்கள் நேரில் ஆஜராகியுள்ளனர். குழந்தை கடத்தை தடுக்க ஒவ்வொரு மாநிலமும் ஒவ்வொரு நடைமுறையை பின்பற்றி வருவதாக வழக்கறிஞர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேலும், பெற்றோர்களை விட்டு பிரிந்து வாழும் குழந்தைகள் பெரும் மன உளச்சல்களுக்கு உள்ளாகி சமூக விரோத செயல்களில் ஈடுபட வாய்ப்புள்ளது.
எனவே குழந்தைகள் காணவில்லை என்றால், முதலில் குழந்தைகளுக்கான உதவி மையத்தின் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ள வேண்டும் அல்லது காவல் துறைக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும், குழந்தைகளுக்கான உதவி மையத்தின் மூலம் அவர்களுக்கான ஆலோசனை சட்ட உதவி ஆகியவற்றைத் தருவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்றும், சமூகத்தின் ஆதரவை திரட்ட வேண்டும் என்றும், தேவைப்பட்டால் மட்டும் கடைசித் தீர்வாகவே ஊடகங்களைத் தொடர்பு கொள்ள வேண்டும் என்றும் வழக்கறிஞர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.