நடுப்பக்கக் கட்டுரைகள்

தேவை ஒரு சர்ஜிகல் அட்டாக்!

கடந்த சில வருடங்களாக, நம் நாட்டு அரசு வங்கிகள் பற்றிய செய்திகள், பெரும்பாலும், வாராக்கடன்களின் வளர்ச்சி மற்றும்...

எஸ். ராமன்

கடந்த சில வருடங்களாக, நம் நாட்டு அரசு வங்கிகள் பற்றிய செய்திகள், பெரும்பாலும், வாராக்கடன்களின் வளர்ச்சி மற்றும், நிர்வாக சீரமைப்பு சார்ந்ததாகவே இருக்கின்றன. இந்த இரு பிரச்னைகளும் ஒன்றோடு ஒன்று தொடர்பு உடையவை என்றாலும், சம்பந்தப்பட்ட ஆளுமைகளால், அவை தனித்தே கையாளப்பட்டு வருவது வருத்தம் அளிக்கும் விஷயமாகும்.
தரமான நிர்வாக அமைப்பினால்தான், வங்கிகளின் வியாபாரத்தை அதிக பொருளாதார கசிவின்றி வழி நடத்தி செல்லமுடியும். கடந்த காலங்களில், வங்கி வியாபார வழிமுறைகளில் ஏற்பட்ட பெரும் விரிசல்கள்தான், வாராக்கடன் எனும் பெரும் பொருளாதார கசிவுக்கு காரணம் என்பதை அரசு அமைப்புகள் உணர்ந்து செயல்படுவதாக தெரியவில்லை.
சென்ற வருடம், அக்டோபர் - டிசம்பர் மாதங்களில், ரிசர்வ் வங்கியால், அரசு வங்கிகளில் நடத்தபட்ட பிரத்தியேக ஆய்வுகளில் (Asset quality review), நீண்ட காலம் மூடி மறைக்கபட்ட, பல லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள கடன்களை, வாராக்கடன்களாக மாற்றி அமைக்க, வங்கிகள் வலியுறுத்தப்பட்டன.
அந்த ஆய்வுகளின்போது, தோண்டி எடுக்கப்பட்ட கடன்களை வாராக்கடன்களாக மாற்றி அமைக்கவும், அதற்கான ஒதுக்கீடுகளை (Provisions) வருவாயிலிருந்து பிரித்து காட்டவும் மார்ச் 2017 வரை, வங்கிகளுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டிருக்கிறது.
ஒரு கடன் கணக்கில், அசல் அல்லது வட்டி தொகை அல்லது இரண்டும் சேர்ந்து, தொடர்ந்து 90 நாட்களுக்கு மேல், திருப்பி செலுத்தப்படாமல் இருந்தால், அந்த கடன் வாராக்கடன் எனப்படும்.
ஏதாவது ஒரு காரணத்தை குறிப்பிட்டு, வழிமுறைகளில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி, வங்கி மற்றும் பெரும் கடனாளிகளின் கூட்டணி, வங்கிக்கு எந்த வருமானமும் ஈட்டப்படாமலும், திருப்பி செலுத்தப்படாமலும் நிலுவையில் இருந்த கடன்களை, செயல்படும் கடன்கள் (Performing assets) என்று நீண்ட காலமாக கணக்கில் காட்டி வந்ததால்தான், குறுகிய காலத்தில், அதற்கான பெருமளவிலான ஒதுக்கீடுகள் வங்கிகளின் வருவாய் கணக்கை தற்போது பேரிடியாக தாக்கி உள்ளன.
வாராக்கடனுக்கான பிரத்தியேக ஒதுக்கீடுகள், வங்கி வியாபாரத்தின் அடித்தளமான மூலதனத்தின் ஒரு பகுதியை கபளீகரம் செய்துவிட்டன. மூலதன குறைபாடால், வங்கிகளின் கடன் வழங்கும் தொழில் பாதிப்படையும். இந்த பாதிப்பில் சிக்கித் தவிப்பது, சிறு தொழில் சார்ந்த கடனாளிகள்தான்.
சிறு கடன்களின் வசூல் திருப்திகரமாகவே அமைந்திருந்தாலும், வங்கிகளின் கருணை பார்வையை பெறுவதில் சிறு கடனாளிகளின் கடின அனுபவங்கள் எழுத்தில் அடங்காது. ஆனால், சிறு தொழில்களின் வளர்ச்சியில்தான், வேலை வாய்ப்புகளும், சீரான பொருளாதார வளர்ச்சியும் அமையும்.
நிலுவையில் உள்ள வாராக்கடன் பிரச்னைகளை காரணம் காட்டாமல், சிறு தொழில்களுக்கான கடன் உதவிகளை, வங்கிகள் தொடர்ந்து வழங்கவேண்டும்.
தற்போதைய பொருளாதார அதிர்வுகளிலிருந்து மீண்டு வர, வங்கிகளுக்கு கால அவகாசம் தேவைப்படும். இடைப்பட்ட காலத்திற்குள், இழந்த முதலீட்டு தொகை இழப்பை வங்கிகள் எந்த வகையிலாவது ஈடு கட்டுவதற்கான முயற்சிகளில் ஈடுபடவேண்டிய கட்டாயம் உள்ளது. அதே சமயம், வியாபார விரிவாக்கத்திலும் வங்கிகள் கவனம் செலுத்தினால்தான், எதிர்கால வருவாயைப் பெருக்க முடியும்.
வாராக்கடன் எனும் அரக்கனின் வாயில் நுழையாமல், வங்கி வியாபார ஆழ்கடலில் நீச்சல் அடித்து, குறைந்தபட்ச சேதாரத்துடன் வெளியே வரும் கலைகளை வங்கிகள் கற்றறிய வேண்டிய காலக்கட்டம் இது. அதற்கு கடந்த கால தவறுகள், நல்ல படிப்பினையாக அமையும்.
இதற்கிடையே, சர்வதேச அளவீட்டின்படி (Basel III norms) வங்கிகள் தங்கள் மூலதன அளவை, 2018-ஆம் ஆண்டுக்குள் 1.8 லட்சம் கோடி ரூபாய் கூடுதல் அளவில், பெருக்கிக் கொள்ளவேண்டிய கட்டாயம் உள்ளது. நிதிநிலை அறிக்கைகளை, மேலும் வெளிப்படையாக்க, சர்வதேச நிதி கணிப்பு தர முறைக்கு (International financial reporting standards) ஏப்ரல் 2107-லிருந்து, வங்கிகள் தங்களை தயார் படுத்திக் கொள்ள வேண்டும். இதனால், லாபத்தை கணக்கிடும் முறைகளில் மாற்றம் ஏற்படும்.
இந்த கால கட்டத்தில்தான், ரிசர்வ் வங்கியால் அனுமதி வழங்கப்பட்ட 15-க்கும் மேற்பட்ட சிறு வங்கிகள் (Small payment banks) ஒவ்வொன்றாகத் தொடங்கி செயல்படப் போகின்றன.
பெரிய வங்கிகளுக்கு அனுமதி வழங்கும் முறை எளிதாக்கப்பட இருப்பதால், வங்கி வியாபார துறையில், பலத்த போட்டி நிலவும். தரமும், நம்பிக்கையும் பொருந்திய சேவையை அளிப்பவர்களை மட்டும்தான் வாடிக்கையாளர்கள் விரும்புவர்.
வாராக்கடன்களால் இழந்த மூலதனத்தை ஈடுகட்ட, 2018-19 ஆண்டு வரையில், சுமார் 70,000 கோடி ரூபாய் அளவில், வங்கிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
கடந்த பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட 25,000 கோடி ரூபாய் நிதியில், சுமார் 22,915 கோடி ரூபாய் கடந்த ஜூலையில், ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, பஞ்சாப் நேஷனல் பாங்க், இந்தியன் ஓவர்சீஸ் பாங்க் உள்பட சில வங்கிகளுக்கு வழங்கப்பட்டது. இவ்வாறு வழங்கப்பட்ட நிதி ஒதுக்கீடுகள் முழுவதும், இந்திய குடிமக்களின் வரிப்பணமாகும்.
ஆகவே, இந்த பெருந்தொகை கசிவிற்கான காரணங்களை, இந்திய மக்களுக்கு விளக்கி சொல்ல வேண்டிய தார்மிக பொறுப்பு, மத்திய அரசுக்கு உண்டு.
வங்கிகளில் இம்மாதிரி பொருளாதார விபத்துகள் நிகழ்ந்ததற்கான காரணங்கள் ஆராயப்பட்டதாக எந்தத் தகவலும் இதுவரை வெளியாகவில்லை.
சர்வதேச பொருளாதார சரிவு, வங்கி நிர்வாகக் குறைபாடுகள், அரசியல் தலையீடுகள், கடன் வழங்குதல், வழங்கிய கடன் பராமரிப்பு மற்றும் கடன் வசூலிப்பு ஆகிய துறைகளில் வங்கி பணியாளர்களுக்கு போதிய அனுபவமின்மை, கடன் வசூல் பணியில் வங்கி நிர்வாகம் போதிய கவனம் செலுத்தாமை, முடிவு எடுப்பதில் அரசு துறைக்கே உரிய தாமதங்கள், அதிகாரிகளின் மெத்தனம், கடனாளிகளின் மோசடி நடவடிக்கைகள், அவற்றில் வங்கி ஊழியர்களின் பங்கு ஆகிய காரணிகள் பிரித்து ஆராயப்பட்டு, அவைகளுக்கான அடிப்படை காரணங்கள் பட்டியலிடப்படவேண்டும்.
பட்டியலிடப்பட்ட காரணங்கள், திரும்ப நிகழாதவாறு போதிய பாதுகாப்பு நடவடிக்கைகள் வங்கித் துறை நிபுணர் குழுவினால் வரையறுக்கப்பட வேண்டும். இதற்கான வெள்ளை அறிக்கை, நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டால்தான், வங்கிகள் இழந்த மூலதன பணத்தை தங்கள் வரிப்பணத்திலிருந்து ஈடு கட்டிக்கொண்டிருக்கும் (Recapitalisation of banks) ஒவ்வொரு இந்திய குடிமகனும், ஓரளவு திருப்தி அடைவான்.
தற்போது 5 லட்சம் கோடி அளவிலுள்ள வாராக்கடன்கள், மேலும் வளர்ந்து விடாமல் பாதுகாக்க, வங்கிகளில் நேர்மையான நிர்வாக அமைப்புகள் தேவை. அதை கருத்தில் கொண்டுதான், வங்கியின் உயர் அதிகாரிகள் மற்றும் இயக்குநர்களின் நியமனத்தில் ஆலோசனைகள் வழங்க, Bank Board Bureu என்ற அமைப்பு, நீண்ட தாமதத்திற்கு பிறகு மத்திய அரசால் அமைக்கப்பட்டது.
இந்த அமைப்பு, நுண்ணிய பகுத்தாய்வுக்கு பிறகு, உயர் பதவி நியமனத்திற்கு தகுதியானவர்களின் பெயர்களை அரசாங்கத்துக்கு பரிந்துரைக்கலாமே தவிர, அமைச்சர் குழுவுக்குத்தான், நியமன அதிகாரம் உள்ளது, அரசாங்க அமைப்புகளுக்கே உரிய தாமதம் வங்கி நிர்வாக அதிகாரிகளை நியமிப்பதில் ஏற்பட்டு வருவது, கவலைக்குரிய விஷயமாகும்.
பொதுத்துறை வங்கிகளில், காலியாகும் தலைமை பதவிகளுக்கு, உடனடியாக நியமனங்கள் மேற்கொள்ளப்படவேண்டும். தலைவர் இல்லாமல் வங்கிகள் இயங்கக்கூடாது என ரிசர்வ் வங்கியின் டெபுடி கவர்னர், எஸ்.எஸ். முந்த்ரா அண்மையில் கூறியுள்ளார்.
பொதுத் துறை வங்கிகளில், 73 சதவீத துணை பொது மேலாளர்கள் மற்றும் பொது மேலாளர்கள் 55 வயதை தாண்டியவர்கள்; 23 சதவீதம் பேர், 50-55 வயதினர். இத்தகையோர் ஓய்வு பெறுவதற்கு முன், பதவி உயர்வு பெற வழியில்லை.
ஆகையால், வங்கிகளின் நிர்வாகத்தில் பெரும் அனுபவ இடைவெளி காத்திருக்கிறது. அந்த இடைவெளி விழாமல் பாதுகாக்க, திறமையானவர்களை தேர்ந்தெடுத்து (Talent search) வங்கிகளை திறம்பட நடத்தும் பொறுப்பு மத்திய அரசை சாரும்.
கீழ் மற்றும் இடை நிலை ஊழியர்களுக்கு, பொதுத்துறை வங்கிகளில், தனியார் வங்கிகளைவிட அதிக ஊதியமும், தலைமை மற்றும் உயர் அதிகாரிகளுக்கு, தனியார் வங்கிகளை விட குறைவான ஊதியமும் வழங்கப்படுகின்றன.
இதனால், பொதுத்துறை வங்கிகளில், உயர் பதவிகளுக்கு திறமையான நிபுணர்களை ஈர்ப்பது கடினமாக உள்ளது. இம்மாதிரி ஊதிய குறைபாடுகள் சரி செய்யப்பட்டாலே, திறமைசாலிகள், பொதுத்துறை வங்கிகளை நோக்கி வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன.
வங்கிகளின் வாராக்கடன் வளர்ச்சிக்கு, திறமையான தொடர் நிர்வாகம் இல்லாதது ஒரு முக்கிய காரணம் என்பதை அரசு நிர்வாகம் உணர வேண்டும்.
வாராக்கடன் பிரச்னைகளின் இருப்பிடத்தை துல்லியமாக கண்டறிந்து, அரசு நிதித்துறை நிர்வாக அமைப்புகள், தேவையான சர்ஜிகல் அட்டாக் நடத்தினால்தான், மக்களின் வரிப்பணம் மேலும் விரயம் ஆகாமல் தடுக்க முடியும்!

கட்டுரையாளர்: வங்கி அதிகாரி (ஓய்வு).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மகளிர் ஆசிய கோப்பை ரைசிங் ஸ்டார்: 2-ஆவது முறையாக கோப்பை வென்றது இந்தியா ஏ!

ஜம்மு-காஷ்மீாின் கிஸ்த்வாா் பயங்கரவாதி சுட்டுக் கொலை

திண்டல் வேலாயுதசுவாமி கோயில் மகா கும்பாபிஷேகம்

Nanjil Sampath Latest Interview | சீமான் தமிழரே இல்லை | TVK Vijay | Seeman | NTK Maanadu

ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம்?

SCROLL FOR NEXT