நடுப்பக்கக் கட்டுரைகள்

மெய்யான வெற்றியா?

எஸ்ஏ. முத்துபாரதி

மக்களுக்காக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட என்கிற பாரம்பரியம் நமது தேர்தல் முறைக்கு உண்டு. முந்தைய ஆட்சியைவிட சிறப்பாக தங்களது பங்களிப்பைச் செய்து வரலாற்றின் பக்கங்களில் சிறப்பான ஆட்சியாக பதிய வேண்டும் என்கிற ஆர்வம் இப்போதைய ஆட்சியாளர்களிடம் ஏன் இல்லை என்று தெரியவில்லை. கேட்டால் அவர்கள் வரலாறும் வேண்டாம் புவியியலும் வேண்டாம் என்று சொல்வார்கள்.
ஏனென்றால் வாழும் இந்த குறுகிய காலத்தில் நன்கு சம்பாதித்து எல்லாம் அனுபவித்துவிட வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதோடுகூட தமது சந்ததிகளுக்கும் சேர்த்து சம்பாதித்து வைத்து அவர்களும் நன்றாக இருக்க வேண்டும் என நினைக்கின்றனர்.
இதேபோல அனைவரும் நலமாக இருக்க வேண்டும் என் சிந்தித்தால் நாட்டில் எவ்வித பிரச்னைகளும் வராது.
தற்போது தேர்வு செய்யப்படும் பிரதிநிதிகள் தாங்கள் வெற்றி பெற்றதாக பெருமையுடன் வலம் வருகிறார்கள். உண்மையில் அவர்கள் பெற்றது வெற்றியா என்றால் பதில் கேள்விக்குறிதான்.
காரணம் பதிவான 60 அல்லது 70 சதவீத வாக்குகளில் மற்ற வேட்பாளர்களைவிட அவர்கள் ஒரு சதவீதம் அதிகம் எடுத்திருந்தாலே வெற்றி என்கிற கோணத்தில்தான் வெற்றி நிர்ணயிக்கப்படுகிறது. இது எந்த வகையில் நியாயம் என்று தெரியவில்லை.
உதாரணமாக, பதிவான 60 சதவீத வாக்குகளில் நான்கு கட்சிகள் போட்டியிட்டு வாக்குகளைப் பெறுகின்றன. அவை தலா 29, 20, 7 மற்றும் 4 சதம் என மொத்தம் 60 சதவீதவாக்குகளைப் பெற்றுள்ளனர்.
இதில் வெற்றி பெற்று சட்டப் பேரவைக்கோ, நாடாளுமன்றமோ செல்பவர் என்பது வெறும் 29 சதவீத வாக்குகளைப் பெற்றவர்தான். எனவே, 100-க்கு 29 என்கிற சதவீத வாக்குகளைப் பெற்றவரே வெற்றி பெற்றவராகிறார். இது முறையான வெற்றி என கருத இயலுமா என்பது கேள்வி.
எனவே, இந்த மாதிரியான தேர்தல் முறையில் மாற்றம் தேவை. பிரதிநிதித்துவ முக்கியத்துவம் என்பது பல நாடுகளில் நடைமுறையில் உள்ளதுதான். ஆனால் இங்கு 100-க்கு 51% எடுத்தவர் வெற்றிபெறுகிறார். 49% எடுத்தவர் தோல்வியடைகிறார். 49% பெற்றவருக்கு எவ்வித அங்கீகாரமும் இருப்பதில்லை.
பல நாடுகளில் அவ்வாறு இல்லை. காரணம் அவர்கள் தோல்வி அடைந்தவர்களுக்கும் அவர்கள் பெற்ற வாக்குகளுக்கு உண்டான பிரதிநிதித்துவம் தரப்பட்டு அவர்களுக்கு உரிய மரியாதை தருவதுதான். இதுவே சிறந்த முறையும்கூட.
நமது நாட்டிலோ, எப்படியாவது மக்கள் பிரதிநிதிகளாக வருபவர்களுக்கு எண்ணிலடங்கா சலுகைகள், வசதிகள், ஊதியங்கள், ஓய்வூதியம் என வழங்கப்படுகிறது. ஆனால், அவர்கள் தங்களுக்கான கடமையில் சரியாக இருக்கின்றனரா என்றால் என்பதும் கேள்விக்குறிதான்.
இதற்கெல்லாம் மாற்றாக சில யோசனைகள் அனைவர் மனதிலும் தோன்றுவது இயற்கைதான். அதாவது அனைவரையும் கட்டாயம் வாக்களிக்கச் செய்வது என்பது. இதற்கு சாத்தியமில்லை என்பது பொதுவான கருத்தாக இருக்கிறது.
இப்படியே எவ்வளவு நாளைக்குத்தான் சொல்லிக்கொண்டே இருப்பது. நல்ல செயல்களை அவ்வப்போது செய்துதான் ஆக வேண்டும். அதற்காக சிலவற்றை இழந்துதான் பெறவேண்டும் எனில் அதற்கும் நாம் தயாராக இருக்க வேண்டும்.
ஏனெனில், உண்மையான வெற்றியை வேட்பாளர்கள் உணர வேண்டும். அனைவரும் வாக்களிக்கவரும்போது உண்மையான வெற்றி யாருக்கு என்பது எளிதில் தெரியவரும். போட்டி என்பது அப்போதுதான் உண்மையானதாக இருக்கும்.
அப்படி வாக்குப்பதிவு செய்பவர்களின் பதிவு முறையாக பராமரிக்க வேண்டும். வாக்களிக்க வரும்போதே முறையான ஆவணங்கள் கொண்டுவந்து பதிய வேண்டும். அப்படி வாக்களிப்பவர்களின் குடும்ப அட்டை போன்ற ஆவணங்களில் வாக்குப் பதிவில் பங்கேற்றதற்கானஅத்தாட்சி சான்று வைக்க வேண்டும்.
அப்படி வாக்குப்பதிவில் பங்கேற்காதவர்களின் குடும்ப அட்டைக்கு சலுகைகள் ரத்து செய்யலாம். இம்மாதிரி ஏதாவது சில வரையறைகள் இருந்தால்தான் அனைவரும் முழுமனதாக வாக்களிக்கும் தங்கள் கடமையை முறையாகச் செய்
வார்கள்.
இதில் விதிவிலக்கு எனவந்துவிட்டால், எல்லோரும் அதையே நாடிச் செல்வார்கள். ஆக, தேர்தல் சமயம் இரண்டு நாள் முழுமையாக தேசிய விடுமுறை அறிவிக்கப்பட்டு, அனைத்து தரப்பினரும் வாக்களிக்க வகை செய்ய வேண்டும்.
அதேபோல மாநில அரசிற்கான தேர்தல் தனியாகவும் மத்திய அரசிற்கான தேர்தல் தனியாகவும் நடத்தப்பட்டு வருவது பல கோடி பணம் மற்றும் நேரவிரயம் ஏற்படுகிறது. மத்திய மற்றும் மாநில அரசு தேர்தல்கள் ஒரேநேரத்தில் நடத்தப்பட வேண்டும்.
வெற்றி பெற்றவர் தனக்கு மக்கள் வழங்கியுள்ள கடமையை நினைத்து அனுதினமும் மக்களுக்கான முன்னேற்றத்திலேயே கவனம் செலுத்த வேண்டும். மக்களுக்குச் சேவை செய்வதன் மூலம் எதிர்க்கட்சிகளின் ஆதரவையும் பெறுவது என்பது மிக முக்கியம்.
அரசியல் எதிரிகளும் பாராட்டும் படியான ஆட்சியைத் தரவேண்டும். உண்மையான வெற்றி என்பது அதுதான். வெறும் சதவீத வாக்குளில் வித்தியாசம் மூலம் பெறுவதல்ல வெற்றி.
மக்களுக்கான ஆட்சியில் சிறந்து விளங்கி மக்களிடத்திலும், எதிர்க்கட்சிகளிடத்திலும் பாராட்டுப் பெறுவதும், அவர்கள் மனதில் நிற்பதும்தான் மெய்யான வெற்றி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT