நடுப்பக்கக் கட்டுரைகள்

விண்வெளியில் சாதனை படைக்கலாம்!

'இந்தியாவைப் பொருத்தமட்டில்-முன்னேற்றமடைந்து உள்ள ஏனைய நாடுகளுடன் நம் விண்வெளி ஆய்வு நடவடிக்கைகளை ஒப்பிட்டு சிலர் வினா எழுப்பலாம்.

நெல்லை சு. முத்து

'இந்தியாவைப் பொருத்தமட்டில்-முன்னேற்றமடைந்து உள்ள ஏனைய நாடுகளுடன் நம் விண்வெளி ஆய்வு நடவடிக்கைகளை ஒப்பிட்டு சிலர் வினா எழுப்பலாம். நமது வழிமுறையில் தடுமாற்றம் ஏதுமில்லை. பொருளாதார அடிப்படையில் வளர்ச்சியடைந்த நாடுகளைப் போல - சந்திரனையோ வேறு கிரகங்களையோ சென்றடைவதில் அந்நாடுகளுடன் போட்டியிடவோ, மனிதர்களைச் சுமந்து செல்லும் விண்வெளிப் பயணங்கள் புரியவோ நாம் கனவு காணவில்லை.
ஆயினும், உலக அரங்கினில் பாரதம் தனக்கென்று ஒரு தனிஇடம் வகிக்க வேண்டுமானால், நவீனத் தொழில் நுணுக்கங்களை, தனிமனித, சமுதாயப் பிரச்னைகளுக்குத் தீர்வு காணப் பயன்படுத்துவதில் நாம் மற்ற நாடுகளுக்கு இளைத்தவர் அல்லர் என்று நிரூபித்தாக வேண்டும்' என்கிற டாக்டர் விக்கிரம் சாராபாய் முத்திரை மொழிகளே தொடக்கத்தில் இந்திய விண்வெளிக் கோட்பாடு.
1963 நவம்பர் 21 அன்று திருவனந்தபுரம், தும்பா ஏவுதளத்தில் இருந்து அமெரிக்க நாட்டின் 'நைகி அப்பாச்சி' என்ற முதல் ஏவூர்தி செலுத்தப்பட்டது. அமெரிக்கா, ரஷியா, பிரான்ஸ், ஜப்பான், இங்கிலாந்து, மேற்கு ஜெர்மனி போன்ற பன்னாட்டு விஞ்ஞானிகளுக்கு ஆய்வுக் களனாகத் திகழ்ந்தது தும்பா விண்வெளி நிலையம். 'பன்னாட்டு ஏவூர்தி' செலுத்தும் வசதியாக 1968 பிப்ரவரி 2 அன்று உலக நாடுகளுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.
'இந்திய - ரஷிய நட்புறவு ஒப்பந்தம் ஏற்பட்டதன் அடிப்படையில் 1982 ஏப்ரல் முதல் 1986 மார்ச் வரை 'ஐமேப்' என்கிற 'இந்திய நடு வளிமண்டல ஆய்வுத் திட்டம்' நடைபெற்றது. ஒவ்வொரு புதன்கிழமையும் தும்பா ஏவுதளத்திலிருந்து 'எம்-100' எனும் வானிலை ரஷிய ஆய்வூர்தி செலுத்தப்பட்டது.
இதற்கிடையில் பாரதத்தின் முதலாவது செயற்கைக்கோளான 'ஆரிய பட்டா' 1975}ஆம் ஆண்டு ஏப்ரல் 19 அன்று சோவியத் ரஷியாவின் 'காஸ்மாஸ்' ஏவுகலத்தின் விண்ணில் ஏவப்பெற்றது. முதன்முதலில் 1975-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 'ஏ.டி.எஸ்.-6' எனும் அமெரிக்க நாட்டு பயன்பாட்டுத் தொழில்நுட்பச் செயற்கைக்கோள் உதவியுடன் 1976 வரை அகமதாபாத்திலுள்ள 'செயற்கைக்கோள் பயன்பாட்டு மையம்' நடத்திய பரிசோதனை- 'சைட்' எனப்படும்.
இந்த 'சைட்' திட்டத்தின் கீழ் இந்தியாவில் ஏறத்தாழ 2,400 கிராமங்கள் பயன்பெற்றன.
1977-ஆம் ஆண்டுவாக்கில் ஜெர்மன் நாட்டு 'சிம்ஃபனி' உபயத்தால் 'செயற்கைக்கோள் தொலைத்தகவல் தொடர்புப் பரிசோதனைகள் திட்டம்' ஈடேறியது. 1981 ஜூன் 19 அன்று ஐரோப்பிய விண்வெளிக் கழகத்தின் ஏரியன் எனும் ஏவுகலன் உதவியுடன் இந்தியா 'ஆப்பிள்' செயற்கைக்கோள் திட்டம் மகத்தான வெற்றி பெற்றது.
தொடர்ந்து நம் சொந்தச் செயற்கைக்கோள்களையும் விண்கலன்களையும் சொந்த ஏவுகலன்களினால் நம் நாட்டு ஏவுதளங்களில் இருந்தே விண்ணில் செலுத்தும் திறன் பெற்றோம்.
இதன் வளர்ச்சியாக, 1995 ஜனவரி 30 அன்று இந்திய விண்வெளித்துறை 133 நாடுகள் அடங்கிய 'இன்டெல்சாட்' என்கிற 'பன்னாட்டுத் தொலைத்தகவல் தொடர்புச் செயற்கைக்கோள் நிறுவன'த்துடன் ஒப்பந்தம் செய்தோம். நம் நாட்டின் இன்சாட்-2இ செயற்கைக்கோளின் 11 டிரான்ஸ்பாண்டர்கள் இன்டெல்சாட்டுக்குக் குத்தகைக்கு விடப்பட்டது.
இந்தியத் தொலையுணர்வுச் செயற்கைக்கோள் படங்களை வணிக ரீதியில் அந்நிய நாடுகளுக்கு வழங்கவும் வகை செய்தோம். 1995-ஆம் ஆண்டு பிப்ரவரி 2 அன்று அமெரிக்காவின் 'இயோசாட்' கம்பெனியுடன் இந்தியாவின் 'அன்ட்ரீக்ஸ் கார்ப்பரேசன்' செய்து கொண்ட 'புரிந்துணர்வு ஒப்பந்த'த்தினால் இது சாத்தியம் ஆயிற்று. கடந்த 10 ஆண்டுகளில் உலக விண்வெளி வர்த்தகத்தில் இந்தியா தொடர்ந்து வளர்ந்து வருகிறது.
20-ஆம் நூற்றாண்டின் இறுதியில் 18.11.1999 அன்று புதுதில்லியில் 'ஆசியா மற்றும் பசிபிக் நாடுகளில் வளங்குன்றா வளர்ச்சிக்கான விண்வெளிப் பயன்பாடுகள் குறித்த இரண்டாவது அமைச்சர்கள் மாநாடு' நடைபெற்றது.
அந்நாள் பாரதப் பிரதமர் அடல்பிகாரி வாஜ்பாயி மற்றும் இந்திய விண்வெளித் துறைத் தலைவர் டாக்டர் கஸ்தூரிரங்கன் போன்றோர் கலந்து கொண்ட அறிவியல் மாநாடு. அதில் இருபது நாடுகளில் இருந்து 21 அமைச்சர்கள் பங்கெடுத்தனர்.
விண்வெளி வசதிகளை இந்த நாட்டு மக்களின் தளராத முன்னேற்றத்துக்குக் கையாளும் செயல்திட்டங்கள் விவாதிக்கப் பெற்றன.
ஆயின், இந்திய மண், காற்று மண்டலம் சார்ந்த ஆய்வுகளைத் தாண்டி, டாக்டர் சாராபாய்க்குப் பிறகு நிலவுப் பயணம் குறித்த கருத்தாக்கம் இந்திய விண்வெளித் துறையில் சூடு பிடித்தது. ஹீலியம்-3 என்ற ஐசடோப் நிலாவெளியில் தாராளமாய்க் கிடைக்கிறது என்றும், அதனையே உந்துசக்தி ஆக்கி, அண்டை கிரகங்களுக்கு எளிதில் பயணம் மேற்கொள்ளலாம் என்றும் ஒரு தொலைநோக்கினை வெளியிட்டேன்.
2001 ஆகஸ்ட் 'சுட்டி விகட'னில் மதுரை மாணவர் ஒருவரின் கேள்விக்கு கலாம், 'இன்னும் 50 ஆண்டுகளுக்குள் செவ்வாயிலும், சந்திரனிலும் மனிதர்கள் குடியேறும் திட்டங்களில் சில வெற்றியடையும்' என்றும் குறிப்பிட்டு இருந்தார்.
அந்தக் காலகட்டத்தில் டாக்டர் கலாம் குடியரசுத் தலைவரானதும் இந்திய விண்வெளித் துறையின் இரண்டாம் கட்டம் கருக்கொண்டது. 2003 சுதந்திர தின விழாப் பேருரையில் அந்நாள் பிரதமர் வாஜ்பாய், சந்திரயான்-1 திட்டத்தினை நாட்டு மக்களுக்கு அறிவித்தார்.
2008}ஆம் ஆண்டு நவம்பர் 14 அன்று இந்திய விஞ்ஞானிகள் நம் நாட்டுக் குழந்தைகளுக்கு வழங்கிய தேசியப் பரிசாக, 'மிப்' என்ற நிலா மோதுகலன் ஒன்றைச் சந்திரனில் விழச் செய்த 'சந்திரயான்' திட்டத்திற்கும் வித்திட்டவர் டாக்டர் கலாம்.
இன்று விண்வெளித் துறையின் மூன்றாவது கட்டம் நடந்தேறி வருகிறது. நாட்டின் பாதுகாப்பு சார்ந்தும் அண்டை நாடுகளின் நல்லுறவை மேம்படுத்தும் விதமாகவும் இந்திய விண்வெளி ஒத்துழைத்து வருகிறது.
'இந்தியத் தொழிற்துறைகளின் கூட்டமைப்பு' 2002 ஜூன் 5 அன்று பெங்களூருவில் நடத்திய மாநாட்டில் ஏறத்தாழ 500 தொழில்கூடங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். அதில் விண்வெளித் துறையின் பல்வேறு தொழில்நுட்பங்களை இந்தியத் தொழில் துறைகளோடு பகிர்ந்து கொள்ளும் முயற்சி அது. விண்வெளியின் 245 தொழில்நுட்பங்கள் இந்தியத் தொழில் துறைகளுக்கு மாற்றலாகி உள்ளன.
இந்தியத் தொழில்துறைக் கூட்டமைப்பிற்கு உள்நாட்டில் 30 இடங்களிலும், ஆஸ்திரேலியா, ஆஸ்திரியா, பிரான்ஸ், ஹங்கேரி, இஸ்ரேல், சிங்கப்பூர், தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, அமெரிக்கா, ஹாங்காங் ஆகிய பத்து நாடுகளிலும் அலுவலகங்கள் உள்ளன. மொத்தத்தில் உலகின் 92 நாடுகளில் உள்ள 191 தொழில் நிறுவனங்களுடன் இந்த அமைப்பு தொடர்பு கொண்டு இயங்குகிறது.
ரஷியாவின் சாதனையினை முறியடித்து, 2017 பிப்ரவரி 15 அன்று 104 செயற்கைக்கோள்களுடன் பி.எஸ்.எல்.வி.-சி37 என்கிற ஏவுகலன் ஸ்ரீஹரிக்கோட்டா ஏவுதளத்தில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. அது உலகமே அண்ணாந்து நோக்கவைத்த சாதனை.
இந்திய மண்ணில் இருந்து மொத்தம் 225 செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளன. அவற்றில் 180 செயற்கைக்கோள்கள் 23 அயல்நாடுகளுக்குச் சொந்தமானவை. 'அன்ட்ரீக்ஸ் கார்ப்பரேசன்' வழி பல கோடி ரூபாய் அந்நியச் செலாவணியும் நமக்குக் கிடைக்கிறது.
2013-2015 காலகட்டத்தில் வெளிநாட்டுச் செயற்கைக்கோள்களுக்காக நாம் ஈட்டிய அந்நியச் செலாவணி 10 கோடி அமெரிக்க டாலர். இந்திய மதிப்பில் 600 கோடி ரூபாய்.
உலக வரலாற்றில் ஏனைய விண்வெளி நாடுகளைக் காட்டிலும் இந்தியா தனித்துவம் வாய்ந்தது. காரணம், ரஷியாவின் 'ருஸ்காஸ்மாஸ்', அமெரிக்காவின் 'நாசா', 'ஐரோப்பிய விண்வெளிக் கழகம்', ஜப்பானின் 'ஜாக்ஸா', சீனாவின் 'தேசிய சீன விண்வெளி நிர்வாகம்' அனைத்துமே முகமை அல்லது நிர்வாக அமைப்பு சார்ந்தே இயங்கி வருகின்றன.
'இஸ்ரோ' மட்டும்தான் 'இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம்'. மத்திய அரசின் தனித்துறை. இதற்கெனத் தனி அமைச்சகம் இல்லை. பாரதப் பிரதமரின் நேரடிப் பார்வையில் செம்மையாகச் செயல்பட்டு வருகின்றது.
அண்ணல் காந்தியடிகள் 'வெள்ளையனே வெளியேறு' இயக்கத்தில் சிறைபட்டு விடுதலையான நாள் 1944 மே 5. அதே நாளில் (05.05.2017) பிரதமர் நரேந்திர மோடி, நாட்டு மக்களுக்கு நேரடியாக இந்தத் தெற்காசியச் செயற்கைக்கோள் வெற்றியினை அறிவித்தது மிகவும் சிறப்புடையது.
ஏற்கெனவே செலுத்தப்பட்ட 'ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.' (IRNSS) 7 செயற்கைக்கோள்களும் 'இந்திய மண்டல பயண நெறிப்பாட்டுச் செயற்கைக்கோள் திட்ட'த்தில் 'சார்க்' நாடுகளின் தெற்கு ஆசியப் பிராந்தியத்தைக் கண்காணிக்க உதவுகின்றன.
தெற்கு ஆசிய நாடுகளுக்கு இந்தியா மட்டும் அண்டை நாடு அல்ல. சீனாவும்தான். நேபாளம், பூடான், மியான்மர், லாவோஸ், வியட்நாம், வட கொரியா, ரஷியா, மங்கோலியா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், இந்துஸ்தான் ஆகிய 14 அண்டை நாடுகளுடன் சீனா எல்லைத் தகராறு கொண்டு உள்ளது.
அவற்றில் இலங்கை நீங்கலாக 6 சார்க் நாடுகள் (ஆப்கானிஸ்தான், வங்கதேசம், பூடான், மாலத்தீவு, நேபாளம், பாகிஸ்தான்) சீன - இந்திய எல்லைக்குப் பொது உறுப்பினர்கள்.
இந்த ஆண்டின் 125-ஆம் நாளில் - அதுதான், மே 5 அன்று பாகிஸ்தான் நீங்கலான 'சார்க்' நாடுகளுக்குத் 'தெற்காசியச் செயற்கைக்கோள்' செலுத்தப்பட்டது. இதன்வழி தெற்காசிய நாடுகளிடையே தொலைத் தகவல்தொடர்பு, தொலை மருத்துவம், தொலை வகுப்பறை, தொலை கண்காணிப்பு எனப் பல பயன்பாடுகளின் தலைமையிடமாக இந்தியா உயர்ந்து உள்ளது.
'நீட்' தேர்வு பற்றிக் கவலைப்படும் மாணவர்களே, 'ஐ.ஐ.எஸ்.டி.' எனப்படும் இந்திய விண்வெளி அறிவியல், தொழில்நுட்ப நிறுவனம் திருவனந்தபுரத்தில் 14.09.2007 அன்று தொடங்கி இந்திய விண்வெளிக்கு விஞ்ஞானிகளையும் பொறியியலாளர்களையும் உருவாக்கி வருகின்றது.
அந்த தொழில்நுட்ப நிறுவனத்தின் முதல் வேந்தர் நம் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம். இங்கு இளநிலைப் பொறியியல் படிப்பிற்கு ஜே.இ.இ. தேர்வு எழுதியும், முதுநிலைப் பொறியியல் படிப்பிற்கு 'கேட்' தேர்வு எழுதியும் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இந்திய விண்வெளியில் நீங்களும் சாதனை படைக்கலாமே.

கட்டுரையாளர்:
இஸ்ரோ விஞ்ஞானி (ஓய்வு).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முன்னேர் வழியில் பொன்னேர் பூட்டிய கம்பர்

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 'ஹவாலா பணத்தை' கைப்பற்றுவோம்: இபிஎஸ் சபதம்

எப்படி நிகழ்ந்தது அது?

குடும்பக் கட்டுப்பாடு குறித்த முதல் கவிதை

அறிவுடையோர்: துறவுநெறியில் மனம் செலுத்துவர்

SCROLL FOR NEXT