உலக நாகரிகங்கள் எல்லாம் நதிக்கரைகளில்தான் ஆரம்பம் ஆயின என்று வரலாறுகள் குறிப்பிடுகின்றன. ஆறுகள்தான் மக்கள் வாழ்வதற்கு ஆதாரமாகவும், அடிப்படையாகவும் இருந்து வந்திருக்கிறது. வடக்கே கங்கையென்றால் தெற்கே காவிரிதான். சிந்துவெளி நாகரிகம் முதல் கீழடி நாகரிகம் வரை இதுதான் உண்மை.
தமிழர் நாகரிகத்தின் சின்னமாகத் திகழும் காவிரிதான் இப்போது தமிழகத்தில் போராட்டத்துக்குக் கிடைத்த புதையலாக இருக்கிறது. நீண்ட நெடிய வரலாற்றின் வடிவமாக விளங்கும் காவிரியே நமக்குத் தாய், தந்தை, பிள்ளை எல்லாம். அதனை இழப்பதற்கு யாருக்கு மனம் வரும்? அதனை இழந்துவிட்டால் நமக்கு வாழ்வேது?
கர்நாடக மாநிலத்தில் குடகு மலையில் உற்பத்தியாகும் காவிரி 700 கி.மீ.க்கும் மேல் பயணம் செய்து, தமிழ்நாட்டில் கடலில் கலக்கிறது. இதில் 320 கி.மீ. கர்நாடகத்திலும், 416 கி.மீ. தமிழகத்திலும் எஞ்சிய தொலைவு கேரளத்திலும், புதுவையிலும் பாய்கிறது.
குடகு மாவட்டம் சென்னை மாகாணத்திலும், குடகுக்கு அடுத்து காவிரி பாயும் சில பகுதிகள் மைசூர் மன்னராட்சியிலும் இருந்தன. இதனால் மைசூருக்கும் சென்னை மாகாணத்திற்கும் இடையே இரண்டு முறை காவிரி நீர் பங்கீடு குறித்து ஒப்பந்தங்கள் ஏற்பட்டன.
மைசூர் அரசு தன் பாசன வசதியைப் பெருக்க காவிரியின் குறுக்கே அணைகட்ட முயன்றதால் 1892-இல் முதல் ஒப்பந்தம் ஏற்பட்டது. இந்த ஒப்பந்தத்தை மைசூர் அரசு 1911-இல் மீறத் தொடங்கியது. தன் பாசனப் பரப்பைப் பெருக்க மைசூர் கண்ணம்பாடியில் அணை கட்ட முயன்றபோது, சென்னை மாகாண அரசு அதனை எதிர்த்தது. ஆயினும் பின்னர் தம் கட்டுப்பாட்டில் இருந்த கோலார் தங்கச் சுரங்கத்துக்கு மைசூர் அரசு மின்சாரம் வழங்கும் நிபந்தனையுடன் அணை கட்ட ஒப்புக் கொண்டது. எனினும் இந்த அணையில் தேக்கி வைக்க அனுமதிக்கப்பட்ட 41 டிஎம்சி நீரின் அளவைவிட அதிகமாகத் தேக்கி வைக்க மைசூர் அரசு முயன்றதால் சென்னை அரசு இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்திலும், பின்னர் பிரிட்டிஷ் இந்திய அரசிடமும் முறையிட்டது. இரு இடங்களிலும் மைசூர் அரசுக்கு சாதகமாகத் தீர்ப்பு வரவே இலண்டனில் மேல் முறையீடு செய்தது. இன்னொரு ஒப்பந்தம் செய்து கொள்ளலாம் என்று இலண்டன் தீர்ப்பைத் தொடர்ந்து 1924-இல் இரண்டாம் ஒப்பந்தம் ஏற்பட்டது.
1956-இல் மொழிவாரியாக மாநிலங்கள் மாற்றியமைக்கப்பட்டபொழுது, மாநிலங்களுக்கு இடையே பாயும் நதிநீர் பற்றியும் மத்திய அரசு ஒரு சட்டத்தை இயற்றியது. 1924-ஆம் ஆண்டு ஒப்பந்தம் ஆங்கிலேயர் காலத்தில் ஏற்பட்ட ஒப்பந்தம் என்று புகார் கூறிக் கொண்டிருந்த கர்நாடகம் 1968 முதல் ஒப்பந்தத்தின் அம்சங்களை மீறிக் கொண்டே வந்தது.
தமிழகத்தின் அனுமதி பெறாமலும், மத்திய அரசின் இசைவைக் கேட்டுப் பெறாமலும் கர்நாடகத்தில் காவிரியின் குறுக்கே அணைகள் கட்டப்பட்டன. காவிரியில் கிருஷ்ணராஜ சாகருக்கு மேற்கே ஹாரங்கி, ஹேமாவதி, இலக்குமண தீர்த்தம் ஆகிய துணை நதிகளிலும், கிழக்கே கபினி, சுவர்ணவதி ஆகிய துணை நதிகளிலும் கர்நாடக அரசு அணைகளைக் கட்டியது.
1968 முதல் ஒப்பந்தத்தின் சில அம்சங்களை மீறத் தொடங்கிய கர்நாடக அரசு, 1924 ஒப்பந்தத்தின் 50 ஆண்டு முடிந்த பிறகு, அந்த ஒப்பந்தமே காலாவதியாகிவிட்டது எனக் கூறியது. கர்நாடக அணைகளில் நிரம்பி வழிகிற நீரை மட்டுமே பெற்றுக் கொள்ளுகிற பரிதாப நிலைக்குத் தமிழகம் தள்ளப்பட்டது.
எல்லா பேச்சு வார்த்தைகளும் தோல்வியடைந்ததன் விளைவாக, 1990-இல் தமிழக விவசாயிகள் சங்கம் நடுவர் மன்றம் அமைக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதில் தமிழக அரசும் தன்னை இணைத்துக் கொண்டது. நதிநீர் தாவா சட்டம் 1956, 4-ஆம் பிரிவின் கீழ் நடுவர் மன்றம் அமைந்திட உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இத்தகைய பிரச்னைகளின் மூலம் சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு இடையே கசப்புணர்ச்சிகள் உருவாவது தடுக்கப்பட்டாக வேண்டும். தகராறு நீடிக்க, நீடிக்க கசப்புணர்வும் அதிகமாகும். இந்தியாவில் உள்ள சகல மாநிலங்களிலும் உள்ள மக்களின் நலனைக் காக்க வேண்டிய பொறுப்பை வகிக்கும் இந்திய அரசு இதுபோன்ற நேரங்களில் உடனடியாக நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும். அதிருஷ்டவசமாக இத்தகைய தகராறுகளைத் தீர்ப்பதற்குப் பாரபட்சமற்ற நடுவர் மன்றத்தினை அமைக்கும் அதிகாரத்தை நாடாளுமன்றம் ஒரு சட்டத்தின் மூலம் இந்திய அரசுக்கு வழங்கியிருக்கிறது. எனவே இவ்வளவு நீண்ட காலமாக இந்தத் தகராறு தீர்க்கப்படாமல் இருப்பதற்கு எவ்வித காரணமும் இல்லை. சட்டம் வழங்கியிருக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி உடனடியாக செயல்படாமல் தாமதிப்பது மேலும் கசப்புணர்வை வளர்ப்பதாகும். எனவே இப்பிரச்னை மேலும் முற்றி வெடிப்பதற்குள் சட்ட ரீதியாக செயல்பட வேண்டியது அவசியமாகும்... என்று உச்ச நீதிமன்ற நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா தமது தீர்ப்பில் கூறியுள்ளார்.
இந்தத் தீர்ப்பு 1990-ஆம் ஆண்டு மே 4 வழங்கப்பட்டது. இவ்வளவு காலமாகியும், ஆட்சிகள் மாறிய போதிலும், மத்திய அரசு இப்பிரச்னையைத் தீர்க்கவில்லை. இதனால் இப்போது இரு மாநில மக்களுக்கும் இடையே கசப்புணர்வு முற்றி, வெடிக்கும் நிலையை அடைந்துள்ளது.
நடுவர் மன்றம் 1991 ஜூன் 24 இடைக்காலத் தீர்ப்பை வழங்கியது.1980-81 முதல் 1990-91 வரையிலான 10 ஆண்டுகளில் காவிரியில் வந்த நீரைக் கணக்கில் எடுத்துக் கொண்டது. ஆண்டுதோறும் சராசரியாக 205.3 டிஎம்சி தண்ணீர் வந்துள்ளது. எனவே 205 டிஎம்சி தண்ணீரை ஜூன் முதல் மே வரையிலான 12 மாதங்களுக்கு மேட்டூர் அணைக்குத் திறந்துவிட வேண்டும்.
1974-இல் கர்நாடகக் காவிரியின் பாசனப் பரப்பு 3.5 லட்சம் ஏக்கராக இருந்தது. இப்போது 11 லட்சம் ஏக்கராக உயர்ந்திருப்பதை நடுவர் மன்றம் அங்கீகரித்திருக்கிறது. இனிமேல் பாசனப் பரப்பை 11.2 லட்சம் ஏக்கர் அளவுக்கு மேல் பெருக்கக் கூடாது என்ற தடையும் விதித்திருக்கிறது. எனினும் 11 லட்சம் ஏக்கரை அங்கீகரித்திருப்பதும், 205 டிஎம்சி போக எஞ்சிய நீரை அங்கீகரித்ததும் கர்நாடகத்துக்குச் சாதகமானவையே!
இருப்பினும் நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்பு அரசிதழில் வெளியிடப்பட்டதும், கர்நாடகத்தில் வாழும் தமிழர்களும் எதிராக இனவெறி தூண்டிவிடப்பட்டது. தமிழர்கள் தாக்கப்பட்டனர்; சொத்துகள் பறிப்பு, வீடுகள் எரிப்பு என்னும் துன்பங்கட்கு ஆட்பட்டு ஒரு லட்சம் தமிழர்கள் துரத்தப்பட்டனர். இந்தக் கலவரத்தில் 12-க்கும் மேற்பட்டோர் உயிர் இழந்ததாகவும், ரூ.17 கோடிக்கு இழப்பு ஏற்பட்டதாகவும் இந்திய மக்கள் உரிமை நடுவர் மன்றம் குறிப்பிட்டுள்ளது.
இவ்வாறு மனித நீதிகள் முற்றும் மறுக்கப்படுவதால் தமிழகத்தில் காவிரி டெல்டா பகுதியில் குறுவை சாகுபடி செய்ய முடியவில்லை; இப்போது சம்பா சாகுபடிக்கும் வழியில்லை. இதனையே நம்பியிருக்கும் இலட்சக்கணக்கான விவசாயத் தொழிலாளர்களுக்கு வேலையில்லை.
வான்பொய்ப்பினும் தான்பொய்யாமலைத்தலைய கடல்காவிரி...
என்று இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பட்டினப்பாலையில் பாடப்பட்டது. இவ்வாறு தமிழர்களின் உணர்வோடும், பண்பாட்டோடும் இரண்டறக் கலந்துவிட்ட காவிரியின் உரிமை முற்றிலும் மறுக்கப்படுகிறது. இது வரலாற்றுத் தவறு மட்டுமல்ல, மனித உரிமை மறுப்பு; சர்வதேச சட்டத்துக்கு எதிரானது.
கடந்த பிப்ரவரி 15, 2018 உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பை அளித்தது. காவிரியாறு ஒரு குறிப்பிட்ட மாநிலத்துக்குச் சொந்தமானது இல்லை என்றும், காவிரியாறு தேசிய சொத்து என்றும், அதனை எந்த மாநிலமும் உரிமை கொண்டாட முடியாது என்றும் உச்ச நீதிமன்றம் முதன்முறையாகக் கூறியுள்ளது.
அத்துடன் காவிரி நதிநீர்ப் பங்கீடு தொடர்பாக மக்களின் நலன்கருதி 1892, 1924 ஆகிய ஆண்டுகளில் ஏற்பட்ட ஒப்பந்தங்கள் செல்லுபடியாகும் என்றும், எனவே தமிழகத்தின் அனுமதியின்றி கர்நாடகம் காவிரியாற்றின் குறுக்கே புதிய அணை கட்ட முடியாது என்றும் கூறப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவால் தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய நீரின் அளவு 192 டிஎம்சி யில் இருந்து 177.25 டிஎம்சியாகக் குறைக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவிற்குக் கூடுதலாக 14.75 டிஎம்சி நீர் ஒதுக்கப்பட்டுள்ளது.
சுதந்திரத்துக்கு முந்தைய ஒப்பந்தம், நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்பு, இறுதித் தீர்ப்பு உள்ளிட்ட அனைத்திலும் தமிழ்நாட்டுக்கான நீரின் அளவு குறைந்து கொண்டே வருவதால் தமிழக விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி ஆறு வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முன் வராத மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் போராட்டக் களமாக மாறியுள்ளது. இதற்கு கர்நாடக மாநிலத் தேர்தலே காரணமாகக் காட்டப்படுகிறது.
இந்திய அரசியல் சட்டத்தின் மேல் உறுதிமொழி எடுத்துக் கொண்ட ஒரு மாநில அரசு சட்டத்தையும், நியாயத்தையும் மட்டுமல்ல, தருமத்தையும் மீறுகிறது. கூட்டாட்சித் தத்துவத்தையே கேலி செய்கிறது. கர்நாடகம் இந்தியாவின் ஒரு மாநிலம் என்பதையே மறந்துவிட்டது.
ஜனநாயகத்தில் தேர்தல் ஒரு முக்கிய அம்சம்தான். ஆனால் தேர்தலே ஜனநாயகம் ஆகாது. மக்கள் பல நேரங்களில் தவறான காரணங்களுக்காக தேர்வு செய்யும் பாதை சரியாக இருந்துவிடுவதும், சரியான காரணங்களுக்காக தவறான பாதையைத் தேர்வு செய்வதும் உண்டு என்பது கடந்த கால வரலாறு. தேர்தல் வெற்றி தோல்வியையே மனதில் கொண்டு செயல்படும் அரசு சிறந்த அரசாக இருக்க முடியாது.
இந்தியப் பெருநாட்டின் உயர்ந்த அதிகார அமைப்பாகிய உச்ச நீதிமன்றத் தீர்ப்பே அலட்சியப்படுத்தப்படுகிறது. இவ்வாறு அவமதிப்பு செய்யப்படுவது நீதித்துறையின் மேலாண்மையைக் குறைத்துவிடாதா? உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகளை ஏற்றுக் கொள்ளாத மத்திய, மாநில அரசின் சட்ட திட்டங்களுக்கு மக்கள் மட்டும் கட்டுப்பட வேண்டும் என்று எதிர்ப்பார்ப்பது எப்படிச் சரியாகும்? காவிரி அன்றும் அப்படித்தான், இன்றும் அப்படித்தான்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.