நடுப்பக்கக் கட்டுரைகள்

சிறைவாசம், இன்றும் அன்றும்

பல அரசியல் தலைவர்கள் அவர்களது ஆட்சிக் காலத்திய தவறுகளுக்காகவும் அதிகார துஷ்பிரயோகத்துக்காகவும் சிறைக்கு அனுப்பப்படுகின்றனர்.

இரா. கதிரவன்

பல அரசியல் தலைவர்கள் அவர்களது ஆட்சிக் காலத்திய தவறுகளுக்காகவும் அதிகார துஷ்பிரயோகத்துக்காகவும் சிறைக்கு அனுப்பப்படுகின்றனர். அவர்கள் மட்டுமல்ல, கல்வித்துறை துவங்கி கலைத்துறையினர் வரை இத்தகைய செய்திகளில் அடிபடுகின்றனர். அவர்களது சிறைவாசம் குறித்த செய்திகளையும் அடிக்கடி பார்க்கிறோம்.
இப்படி சிறைவாசம் செய்பவர்களின் அடிப்படை மனித உரிமைகள் உறுதி செய்யப்படுகின்றன; இவர்கள் மீது வன்முறையோ அல்லது கொடுமைகளோ இழைக்கப்படுவதில்லை. இவர்கள் குறித்த தகவல்கள் பொதுவெளியிலும் அவ்வப்போது வந்த வண்ணம் இருக்கும். பொதுவாக, இன்றைய சிறைவாசிகளின் குறைந்தபட்ச நலனை உறுதிசெய்யும் நிர்வாக ரீதியான அமைப்புகள் மற்றும் அவர்களது சில உரிமைகளை உறுதி செய்ய மனித உரிமை அமைப்புகளும் உள்ளன. ஏனோ, இவையெல்லாம் மக்களுக்காகவும் தேச விடுதலைக்காகவும் சிறை சென்ற மாமனிதர்களைப் பற்றிய நினைவுகளையும் அவர்கள் பட்ட துயரங்களையும் நம் மனதில் எழுப்புகின்றது.
ஒரு நாட்டின் விடுதலைக்காக, அல்லது ஒரு சித்தாந்தத்துக்காக சிறைப்பட்டவர்கள் ஏற்ற இன்னல்கள் ஏராளம்.
இந்தியாவானாலும், தென்னாப்பிரிக்காவானாலும், விடுதலை வீரர்கள் பலரும் அநேகமாக ஒரே மாதிரியான துன்பங்களை அனுபவித்திருக்கிறார்கள். அரசு, இத்தலைவர்களை தேச துரோகிகளாகச் சித்திரித்து கைது செய்வதன் நோக்கம், இவர்கள் மக்களை ஒன்றிணைத்துப் போராட்டத்தில் ஈடுபடக் கூடாது என்பது மட்டுமல்ல; மாறாக, அவர்களை ஓரளவு உடல் ரீதியாகவும், பெருமளவு மனரீதியாகவும் முடக்கி, பலவீனப் படுத்த வேண்டும் என்பதுமாகும்.
அடிப்படை வசதிகள் கூட இல்லாத, காற்றோட்டமற்ற, இருண்ட அறை வாசம்; தரக்குறைவான உணவு. கடிகாரம், காலண்டர், ரேடியோ, செய்தித்தாள்கள், புத்தகங்கள், பிறரோடு பேசும் வாய்ப்பு அனைத்தும் மறுக்கப்பட்டு, இயந்திரகதி வாழ்க்கையில், காலம் குறித்த பிரக்ஞையைக்கூட பலர் இழந்துவிடுவர்.
பலருக்கு எவருடனும் பேச முடியாத தனிமைச் சிறைக் கொடுமை. மேலும், அத்தலைவர்கள் சார்ந்திருக்கும் இயக்கங்களைப் பற்றியும் குடும்பத்தினர் பற்றியும், சிறைக்குள் பொய்யான தகவல்களைப் பரப்பி, அவர்களுக்கு மன உளைச்சல் ஏற்படுத்துவர்.
நாட்டின் விடுதலைக்காக சிறை சென்றவர்களுக்கு, அவர்களது பெருமை அறியாத சிறை அதிகாரிகள் இழைக்கும் அவமானங்கள் ஏராளம். ஒரு நாட்டின் அல்லது இனத்தின் விடுதலையைத் தேடும் லட்சக்கணக்கான மக்களின் நம்பிக்கையைப் பெற்ற தலைவர்கள் கூட, கிரிமினல் குற்றவாளிகளுடன் அடைத்து வைக்கப்பட்டு, அவர்களைப்போலவே நடத்தப்பட்ட கொடுமைகள் உண்டு.
தமிழகத்தில் சுதந்திர போராட்ட வீரர் சுப்ரமணிய சிவா, ராஜயோகம் பயின்றவர்; உடல் உறுதி வாய்ந்தவர், ஆயினும் ஒரு துறவிபோல வாழ்ந்தவர்; வ.உ .சி.க்கு துணை நின்ற பெரும் வீரர். இவர் மீது, வழக்குப் பதிவு செய்து பத்து ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை வழங்கினர். மேல்முறையீட்டில் அது ஆறு வருடங்களாகக் குறைக்கப்பட்டது.
அவர் சிறையில் அனுபவித்த இன்னல்களை அவரது வார்த்தைகளிலேயே சொல்வதென்றால், 'மெத்தை தலையணைகளுக்குப் பருத்தியை வில்பிடித்துப் பஞ்சாக அடிப்பது போல், கத்தைக் கத்தையாக, சுண்ணாம்பில் தோய்த்துக் காய்ந்து வரும் கம்பளி ரோமத்தை வில்பிடித்து அடித்துச் சன்னமாக்க வேண்டிய தொழிலில் என்னை ஈடுபடுத்தினார்கள்; இந்த வேலை, எத்தகைய சரீரக் கட்டுடையவனின் சுகத்தையும் பாதிக்க வல்லது; எனக்கு இடையறாத இருமல் துவங்கியது; என்னை இப்போது பிடித்துள்ள வியாதி அங்குதான் துவங்கியது' என்கிறார்.
பெருஞ்செல்வர், வழக்கறிஞர், தமிழறிஞர், ஆங்கிலேயருக்குப் போட்டியாக கப்பலோட்டும் அளவுக்குத் திறமையும் துணிவும் செல்வமும் கொண்ட தேசபக்தர் வ.உ.சி. ராஜதுவேஷ வழக்கில் இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர். கடும் தண்டனை என்ற பெயரில், செக்கு சுற்றுவது உள்ளிட்ட கொடும் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு அவரது உடல் நலிவுற்றது.
தென் ஆப்பிரிக்க கருப்பு இன மக்களின் உரிமைக்காகப் போராடிய நெல்சன் மண்டேலா, இருபத்து ஏழு ஆண்டுகளைச் சிறையில் கழித்தார். பல ஆண்டுகளை, 'பேய்களின் தீவு' எனப்பட்ட ரோபன் தீவுச்சிறையில் கழித்தார். அவர் சிறையில் இருக்கும்போது, மறைந்த அவரது தாய் மற்றும் மகன் ஆகியோரின் இறுதிச் சடங்குகளில் கலந்துகொள்ள அனுமதி மறுக்கப்பட்டது. மண்டேலா சிறைக்குச் செல்லும்போது, அவரது மகள் வயது மூன்று; அடுத்தமுறை அவளைப் பார்க்கும்போது அவள் வயது பதினைந்து. இவ்வளவு கொடுமைகளுக்குப் பின்னரும், அவர் பெருந்தன்மையுடன் சொன்னார்: 'சிறைக்கூடத்தில் நம்மிடம் அதிகாரிகள் காட்டும் அணுகுமுறை என்பது, நாம் அவர்கள் மீது காட்டும் மனப்போக்கினை ஒட்டியே அமையும்.'
மண்டேலாவின் வரிகள் இன்றைக்கு நம் நாட்டில் வித்தியாசமான பொருள் தருபவையாக இருப்பது நகைமுரண்!
அரசின் கொடுந்தண்டனைகளும் செயல்பாடுகளும், லட்சியவாதிகளின் நம்பிக்கையையும் மன உறுதியையும் உடைத்து நொறுக்கும் நோக்கத்துடனே இருந்தன. அந்த சூழலில், தமது அரசியல் நோக்கம், கொள்கை முதலியனவற்றை இழக்காமல் தக்க வைத்துக் கொள்வதே, இவர்களது முன் இருந்த மாபெரும் சவால்.
போராட்டத்தையே வாழ்க்கையாக மாற்றிக் கொண்டு சிறை சென்ற பலரின் வாழ்க்கை சிறையிலும் பெரும் போராட்டமாகவே திகழ்ந்தது; அவர்களுள் பலர் வெளிவரும்போது நடைபிணமாகவே வந்தனர்; வேறு சிலர், சிறைவாசத்தால் கொள்கை உரமேறி, புடம் போட்ட தங்கமாக வெளிவந்தனர்; வேறு சிலரோ வெளிவரவே இல்லை; ஆயினும், இத்தகைய இன்னல்களைத் தாங்கிய தனக்கென வாழாப் பிறர்க்குரியாளர்கள், என்றென்றும் நம் மனச்சிறையில் வாழ்பவர்கள்!
அவர்கள் பட்ட துயரங்களையும், செய்த தியாகங்களையும் நினைவுகூர்வதையே கூட, அவர்களுக்கு நாம் செலுத்தும் நன்றியாக - அஞ்சலியாகக் கருதலாம்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆப்கன் எல்லையில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! 15-க்கும் மேற்பட்டோர் பலி!!

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT