பத்தொன்பதாம் நூற்றாண்டு தொடங்கி, இந்தியா முழுவதும் விடுதலைப் போராட்டக் களமாகவே விளங்கியது. ஆனால் அது காலனி ஆதிக்க எதிர்ப்பு மட்டுமாக இருந்துவிடவில்லை. பெண் விடுதலை, அதற்கு அடிப்படையான பெண் கல்வியின் தேவையை முன்வைத்தும் போராட்டங்கள் நடந்தன.
ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமை என்று எண்ணியிருந்தவர்கள் நிறைந்த காலகட்டம் அது. ஒளவைப் பெருமாட்டியும் ஆண்டாள் நாச்சியாரும் எண்ணற்ற பெண்பாற் தெய்வப் புலவர்கள் பலரும் அவதரித்த இந்த மண்ணிலேதான் பெண்ணடிமைத்தனமும் பெரிதாக வேர்விட்டிருந்தது.
நகர்ப்புறங்களில் எப்படியோ, கிராமப்புறங்களில் பெண்கல்வி இன்னும் பழைமையிலேதான் ஊறிக் கிடக்கிறது. பெண்பிள்ளை படித்து என்னவாகப் போகிறது என்னும் இழிசொல் குறைந்திருக்கிறதே தவிர, மறைந்துவிடவில்லை. இருந்தபோதிலும், இன்றைக்குப் பெண்கல்வி சாத்தியமாகியிருக்கிறது. பெண்கள் உயர்கல்வி கற்பது இயல்பும் ஆகியிருக்கிறது என்பதே உண்மை.
தன் காலத்தில் சமூகம் இருந்த நிலையைக் கண்டு பாரதியார் பெண்களுக்கு அறிவுரை கூறும் விதமாக இப்படி எழுதுகிறார்: 'தமிழ்நாட்டு மாதர் ஸம்பூர்ணமான விடுதலை பெற வேண்டுவராயின் அதற்குக் கல்வித் தோணியே பெருந்துணையாம்...இடைவிடாத பழக்கத்தால் தமிழ் மாதர் தமக்குள்ள இயற்கையறிவை மிகவும் உன்னத நிலைக்குக் கொணர்ந்து விடுதல் சாலவும் எளிதாம். ஒளவையார் பிறந்து வாழ்ந்த தமிழ்நாட்டு மாதருக்கு அறிவுப் பயிற்சி கஷ்டமாகுமா?' என்று வினா எழுப்பிப் பெண்கல்வியை முன்வைக்கிறார்.
'தமிழ் மாதர்களே! மனம் சோர்ந்துவிடாதீர்கள். உங்களுக்கு நல்ல காலம் வருகிறது. வந்துவிட்டது. நீங்கள் விடுதலை பெறுவீர்கள். இந்தியா உங்களால் மேன்மையுறும்' என்று வாயார வாழ்த்துகிறார் பாரதி. அந்த கவிவாக்கு பலித்ததா? அவர் கனவும் வாழ்த்தும் நிறைவேறியதா?
இன்றைய காலத்தில், ஆண் பிள்ளைகளுக்கு இணையாகப் பெண்பிள்ளைகள் கல்விக் கூடத்தைத் தொட்டுவிட்டாலும் மதிப்பெண் பட்டியலில் வெற்றி கொண்டாலும் சமுதாய வெற்றியை அத்தனை எளிதாக அடைய முடியவில்லை என்பதும் உண்மை.
பள்ளி வயது தொடங்கி பணி செய்யும் அலுவலகம் வரைக்கும் பெண்களின் பாத்திரங்களை ஊடகங்கள் எப்படிச் சித்திரிக்கின்றன? பெண்களைப் பெண்களே வஞ்சம் செய்யும் புனைவுகள் எவ்வாறு நிதர்சனமாகின்றன?
பெண்களுக்கு மட்டும்தான் அறிவுரை என்றில்லாது ஆண்களுக்கும் பெண்விடுதலையில் பெரும்பங்குண்டு என்பதாக, 'தமிழா... நமது நாட்டு ஸ்திரீகளிலே பலர் சக்தி கணங்களின் அவதாரமாக ஜனித்திருக்கிறார்கள். பெண்ணை அடிமையென்று கருதாதே. முற்காலத்துத் தமிழர் மனைவியை 'வாழ்க்கைத் துணை' என்றார். ஆத்மாவும் சக்தியும் ஒன்று. ஆணும் பெண்ணும் சமம்' என்று உறுதிபடப் பெண்மையைப் போற்ற வேண்டிய கடமையை ஆண்களுக்கும் அறிவுறுத்துகிறார்.
பாரதியார் பிற்காலத்தில் (அதாவது தற்காலத்தில்) ஏற்படப் போகிற கல்வி முறை குறித்துக் கனவு காணுகிறார். 'உங்களுடைய கிராமத்தில் ஒரு பாடசாலை ஏற்படுத்துங்கள். அல்லது பெரிய கிராமமாக இருந்தால் இரண்டு மூன்று வீதிகளுக்கு ஒரு பள்ளிக்கூடம் வீதமாக எத்தனை பள்ளிக்கூடங்கள் ஸாத்தியமோ அத்தனை ஸ்தாபனம் செய்யுங்கள். அதில் ஸ்திரீகளையும் சேர்த்துக் கொண்டு அவர்களுடைய யோசனையையும் தழுவி நடத்தாவிடின் கல்வி சுதேசியம் ஆகமாட்டாது. தமிழ்க் கல்விக்கும் தமிழ்க் கலைகளுக்கும் தொழில்களுக்கும் தமிழ் ஸ்திரீகளே விளக்குகளாவர். தமிழ்க்கோயில், தமிழரசு, தமிழ்க்கவிதை, தமிழ்த்தொழில் முதலியவற்றுக்கெல்லாம் துணையாகவும் தூண்டுகோலாகவும் நிற்பது தமிழ் மாதரன்றோ?' என்று தாம் கண்ட அந்தக் கனவின் வழியாகப் பெருமிதம் கொள்கிறார்.
பாவேந்தர் பாரதிதாசன் தனது குருவாகிய பாரதி போலவே பெண்கல்வியைப் பெரிதும் போற்றியவர். ஆண்பிள்ளைகள் மட்டுமே கல்விக்கூடங்களுக்குச் சென்று கொண்டிருந்த காலத்தில் வாழ்ந்த அவருக்குப் பெண் பிள்ளைகளும் அங்கே கல்வி கற்கச் செல்வதைப் போலக் கனவு தோன்றுகிறது. அந்தக் கனவு நனவாகிவிடாதா என்னும் நோக்கில் மற்றொரு காட்சியைத் தன் கனவோடு ஒப்பிட்டுக் காணுகிறார்.
சங்க காலத்தில் அன்னையொருத்தி- முந்தைய போர்களில் தனது தந்தையையும், கணவனையும் இழந்தவள்- தன் இளவயது ஒரே மகனைப் போர்க்களத்துக்கு அனுப்புவதற்காகத் தயார் செய்கிறாள்.
வேல்கைக் கொடுத்து வெளிதுவிரித்து உடீஇப்
பாறுமயிர்க் குடுமி எண்ணெய் நீவி
ஒருமகன் அல்லது இல்லோள்
செருமுக நோக்கிச் செல்க
என அவன் குடுமிக்கு எண்ணெய் தடவி, வெள்ளாடை உடுத்துக் கையிலே வேலையும் எடுத்துக் கொடுத்து, 'போர்முனை நோக்கிச் செல்க' என்று அனுப்பினாளாம்.
இதை மனத்தில் கொண்டு பாவேந்தர் ஒருவேளை தனது கனவு பலித்து வருங்காலத்தில் பெண்பிள்ளைகள் பள்ளிக்குப் போனால் எப்படியிருக்கும் என்று கற்பனையும் நயமும் கொள்கிறார். கவி வாக்கு பிறக்கிறது.
தலைவாரிப் பூச்சூட்டி உன்னை - பாட
சாலைக்குப் போஎன்று சொன்னாள் உன்
அன்னை
தலை வாரியதும் பூச்சூடியதும் மணச்சந்தையில் உன்னை அடிமாட்டைப் போல விற்று விடுவதற்காக அன்று. சங்ககாலத்துத் தாய் ஆண்பிள்ளையை எவ்வாறு போருக்கு அனுப்பினாளோ, அதைப் போலவே சமுதாயக் களத்திலே உனக்கு எதிராகக் கொம்பு முளைத்து எழுந்து நிற்கிற கொடுமைகளையெல்லாம் எதிர்த்து நின்று போராடுவதற்காக - அப்படிப்பட்ட கல்வியைக் கற்பதற்காகத்தான் பாடசாலைக்குப் போ என்று இந்த அன்னை அனுப்பி வைக்கிறாள். அந்தப் புரட்சிக் கவிஞனின் கனவும் பொய்க்கலாமா? இந்த அன்னையின் கனவும் ஈடேற வேண்டாமா?
தலை வாரியும் பூச்சூட்டியும் பெண்பிள்ளையைப் பெற்றோர்கள் படிக்கத்தான் அனுப்புகிறார்கள் என்பதைப் பெண்களே ஏன் மறந்துவிடுகிறார்கள்?
பெண்களே பெண்களின் அறிவை வளர்ப்பதை விட்டுவிட்டு அழகை அளப்பதைச் செய்யலாமா? அதனை விலைபேசி விற்கலாமா? இதுதானா பெண்கல்வியின் பெருமை?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.