ஒவ்வொரு புத்தகம் வெளிவரும்போதும் புதுப்புது மன உலகங்கள் விரிகின்றன. புத்தகம் மனவெளியின் பெருவெடிப்பு. புத்தகங்கள், அண்டம் போல புதுப்புது பொருள் தந்து விரிவடைகின்றன. புத்தகங்கள் காலங்களின் சங்கமம்; கடந்த கால அறிவின் விளைச்சல். அதனால்தான் இன்றைய இணைய உலகில் நூல்களைப் பாதுகாக்க அரசும் தனிநபர்களும் ஆவணக் களஞ்சியங்களை உருவாக்கி வருகிறார்கள். அவற்றுள் குறிப்பிடத்தக்க ஒரு ஆவணக் களஞ்சியம் archive.org (http://archive.org). இது, உலகம் முழுதும் பரவிக் கிடக்கிற புத்தகங்கள், திரைப்படங்கள், ஆவணப்படங்கள் ஆகியவை ஓரிடத்தில் கிடைக்கும்படியாக இணைய ஆவணக்காப்பகத்தை உருவாக்கி வருகிறது. யார் வேண்டுமானாலும் இதில் தங்கள் நூல்களைச் சேர்த்து வைக்கலாம்; எங்கிருந்தும் பயன்படுத்திக் கொள்ளலாம். கட்டணம் இல்லை. 2016 அக்டோபர் வரை 30 இலட்சத்துக்கும் மேற்பட்ட நூல்கள் மின்வடிவத்தில் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன. ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் நூல்களும் இடம்பெற்றுள்ளன. வணிக நோக்கமின்றி இந்த ஆவணக் களஞ்சியம் செயற்படுகிறது.
ஏப்ரல் 23-ஆம் நாளை உலக புத்தக நாளாகவும் காப்புரிமை நாளாகவும் ஐ.நா.வின் யுனெஸ்கோ அறிவித்திருக்கிறது. புத்தக வாசிப்பையும் வெளியீட்டையும் பதிப்புரிமையையும் மேம்படுத்த இந்த அறிவிப்பு. இந்த நாள் ஷேக்ஸ்பியர் மறைந்த நாள் மட்டுமில்லை, இன்னும் படைப்பாளிகள் சிலரின் பிறந்த நாளாகவும் மறைந்த நாளாகவும் இருக்கிறது.
தமிழர்களுக்குப் புத்தகக் கொண்டாட்டத்துக்கு ஒரு நாளைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு கிடைக்குமென்றால் அது ஏப்ரல் 6 அல்லது பிப்ரவரி 19 என்று இருந்திருக்கும். ஏனெனில் மகாவித்வான் திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் பிறந்தநாள் ஏப்ரல் 6; தமிழ்த் தாத்தா உ.வே.சா. பிறந்தநாள் பிப்ரவரி 19. அவர்கள், தமிழ்க் கருவூலங்களைச் சுவடிக்கட்டுகளின் பிடியிலிருந்து விடுவித்துப் புத்தகமாக மக்கள் மடியில் தவழவிட்டவர்கள். காலம் எனும் கரையான்களிடமிருந்து தமிழ் நூல்களைக் காப்பாற்றியவர்கள்.
உத்தமதானபுரம் வேங்கடராமனை உத்தமதானபுரம் சாமிநாதையராகப் பெயர் மாற்றி வைத்தவர் திரிசிரபுரம் என்றால் திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் கொள்ளுப் பேரனுக்கு மீனாட்சிசுந்தரம் என்று பெயர் வைத்தவர் உ.வே.சா. திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்களின் 56-ஆவது வயதில் அவரை உ.வே. சா. சந்திக்கிறார். அப்போது உ.வே.சா.வுக்கு 17 வயது. தமிழ் அவர்களை அவ்வாறு காலத்தில் இணைத்துப் போட்டது. பழந்தமிழ் இலக்கியங்களின் பெருவெடிப்பு தொடங்கியது. வெளிப்பட்ட தமிழ்நூல்களோ உ.வே.சா. அவர்களைத் தமிழ்த் தாத்தாவாக ஆக்கிவிட்டன.
திரிசிரபுர வாழ்க்கையில் கஞ்சா வாங்கிக் கொடுத்து இரவுப் பிச்சைக்காரர் ஒருவரிடமிருந்து தண்டியலங்காரச் சுவடியைத் திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம்பிள்ளை அவர்கள் பெற்ற செய்தியை உ.வே.சா. அவர்களே எழுதியிருக்கிறார்.
அந்தக் காலத்தில் யார் யாரிடமிருந்தெல்லாம் தமிழ் நூல்கள் எவ்வாறு மீட்கப்பட்டிருக்கின்றன என்ற அதிர்ச்சியையும் வியப்பையும் அளிக்கின்ற வரலாறு உ.வே.சா. அவர்களின் "என் சரித்திரத்தில்' பதிவாகியுள்ளது. ஊர் ஊராகத் தேடித்தேடிப் போய் சுவடிகளில் இருந்த தமிழ் நூல்களை உயிர்ப்பித்திருக்கிறார். உலகப் புத்தக நாளில் தமிழ்ப் புத்தகக் காலத்தையும் உ.வே.சா. அவர்களையும் நினைக்காமல் இருக்க முடியாது.
பெருவெடிப்புக்கு முன் பிரபஞ்சம் போல சுவடிகளில் தமிழும் உறைந்து கிடந்திருக்கும். இலக்கியங்களும் சுவடிகளில் மறைந்து கிடந்திருக்கும். தகுதியானவர் கண் பட்டதும் - கை தொட்டதும் அவை புத்துயிர்ப்பு அடைந்திருக்கின்றன.
தமிழ்ச் சுவடிகள், உ.வே.சா. பார்வைக்காகவும் கைகளுக்காகவும் காத்திருந்திருக்கின்றன. அப்படித்தான் காலம்தோறும் நூல்கள் ஒவ்வொருவர் வழியாகக் காலத்தைக் கடந்தும் காலத்தைச் சுமந்தும் வந்திருக்கின்றன.
"காலம் ஒரு வரலாற்றுச் சுருக்கம்' எனும் நூல், அறிவியலின் பெரு வெடிப்பாக விளங்கி, அண்மையில் மறைந்து போன ஸ்டீபன் ஹாக்கிங் எழுதியது. தமிழ் உள்பட ஏறத்தாழ 40 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. உலகில் 750 பேருக்கு ஒரு புத்தகம் என்கிற வகையில் அந்த நூல் விற்பனையாகி இருக்கிறது.
அண்டத்தில் ஒன்று மற்றொன்றைச் சுற்றிச் சுற்றி வருகிறது. ஒவ்வொன்றுக்கும் ஈர்ப்பு இருக்கிறது. அடுத்ததின் ஈர்ப்பில் அகப்பட்டுக் கொள்ளாமல் ஒன்றின் ஈர்ப்பு இன்னொன்றை இழுத்துப் பிடித்துக் கொண்டிருக்கிறது. ஈர்ப்பு இல்லையேல் மோதல் வரும்; சிதறுண்டு போகும். இவ்வளவுக்கும் இடையில் தன்னைத்தானே சுற்றிக் கொள்ள வேண்டி இருக்கிறது.
இதை வாழ்க்கைக்கும் பொருத்திப் பார்க்கப் புத்தகங்கள் உதவுகின்றன. மனித வாழ்க்கை சிதறுண்டு போகாமல் பாதுகாக்கப்படவும் ஈர்ப்பு வேண்டும். அத்தகைய ஈர்ப்புக்குப் புத்தகங்கள் தேவைப்படுகின்றன.
நிழல்களைக் கொண்டு உண்மைகளைக் காண வேண்டி இருக்கிறது. சூரிய, சந்திர கிரகணங்களின் நிழல்களைக் கொண்டுதான் பூமியின் வடிவத்தை உறுதிப்படுத்திக் கொள்ள முடிந்தது. புத்தகங்கள் காட்டும் நிழல் வாழ்க்கை நிகழ்ச்சிகளிலிருந்தும் வாழ்க்கையின் உண்மைகளைக் கண்டுகொள்ள வேண்டியிருக்கிறது.
அண்டத்தில் ஒவ்வொரு புள்ளியும் மையம்தான். ஒவ்வொரு புள்ளியும் மையமாக இருக்கவே மற்ற புள்ளிகளோடு போராடுகின்றன. மையத்தைச் சுற்றியும் பல்வேறு புள்ளிகள். இப்படியான புள்ளிகளின் வாழ்க்கையைப் புரிந்துகொள்ள புத்தகங்கள் உதவுகின்றன.
பிறந்தவர்கள் மறைவார்கள், ஆனால் பூமி இருக்கும் என்று ஸ்டீஃபன் சொல்கிறார். "மன்னா உலகத்து மன்னுதல் வேண்டின் தம்புகழ் நிறுவ வேண்டும்' என்கிறது புறநானூறு. உலகம் நிலையில்லாதது, நிலையில்லாத உலகத்தில் நிலைத்து நிற்கப் புகழ் பெற வாழச் சொல்கிறது. ஹாக்கிங் கூற்றுப்படி பூமி நிரந்தரமாக இருக்கும் என்பது அறிவியல் என்றால், உலகத்தை அழிப்பதாக இல்லாமல் நிலைபெறச் செய்வதாக மனிதகுல வாழ்க்கை இருக்க வேண்டும் என்று சொல்வது வாழ்வியலாக இருக்கிறது. இரண்டையும் அறிந்துகொள்வதற்கும் சொல்வதற்கும் புத்தகங்கள் தேவைப்படுகின்றன.
காலத்திற்குத் தொடக்கப் புள்ளி இருக்கிறதா என்று கேட்கிறார் ஸ்டீபன் ஹாக்கிங். "நிலமும் பொழுதும் முதல் பொருள்' என்று தொல்காப்பியர் சொல்கிறார்.
நிலத்திற்கு முன்பு பொழுது இருந்திருக்குமா? அதாவது சூரியனிடமிருந்து பூமி பிரிந்து மக்கள் வாழ்வதற்கு உரிய நிலமாக ஆன பின்புதான் பொழுது தெரிந்திருக்கும். மக்கள் வாழ்வதற்கான நிலமாகும் முன் பூமியில் காலம் இருந்திருக்கும். மக்களுக்கு முன்பே நிலமும் காலமும் இருந்திருக்கின்றன என்பதால்தான் தொல்காப்பியர் நிலத்தையும் பொழுதையும் முதல் பொருள் என்று சொல்லி இருக்கிறார் போலும்.
இருட்டறையில் இருக்கும் பொருட்கள் வெளிச்சம் வந்தபின்தான் தெரியவருகின்றன. அதனால் அந்தப் பொருட்களை வெளிச்சம்தான் கொண்டுவந்தது என்று சொல்ல முடியாது. ஆனால் வெளிச்சம் இல்லையேல் நமக்குத் தெரிய வாய்ப்பில்லை. புத்தகங்கள் வெளிச்சம் தருகின்றன. நம்மைச் சுற்றி நடப்பதை நமக்குக் காட்டுகின்றன.
"காலம் பின் நோக்கி ஓடுமா?' என்பதும் ஸ்டீபன் ஹாக்கிங் கேள்வி. கடக்க முடியாத தூரம் என்பது கடந்த விநாடிக்கும் இந்த விநாடிக்கும் இடைப்பட்ட தொலைவுதான் என்று சொல்கிறார்கள்.
காலம் தனியாக ஓடாது. மற்றொன்றோடு ஒட்டிக்கொண்டுதான் பயணிக்கும்.
இருக்கிற உடலோடு யாரும் கடந்த காலத்திற்கோ எதிர்காலத்திற்கோ பயணிக்க முடியாது. ஆனால் மன உடம்போடு பயணிக்கலாம்.
ஸ்டீபன் ஹாக்கிங் சொல்கிறார், "கோட்பாட்டு இயற்பியலைத் தேர்ந்தெடுத்த வகையிலும் நான் கொடுத்து வைத்தவனே. ஏனென்றால் அது மனம் சார்ந்த ஒன்று.'
இலக்கியங்கள் மனம் சார்ந்தவை என்பது தெரியும். இயற்பியலும் மனம் சார்ந்த ஒன்று என்கிறார் அவர்! அப்படியென்றால் ஆய்வுக்கும் மனம் முக்காலத்திலும் பயணிக்க வேண்டி இருக்கிறது. "அகர முதல' என்று திருவள்ளுவர் காலத்துக்கும் போகலாம். சுதந்திரம் அடைவதற்கும் முன்பே, "ஆடுவோமே பள்ளு பாடுவோமே! ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம்' என்று பாரதியாரைப் போல எதிர்காலத்திற்கும் பறக்கலாம்.
அப்படியென்றால் காலத்தைப் பின் நோக்கி மட்டுமில்லை, முன் நோக்கி ஓட்டிச் செல்லவும் மனதால் முடியும். மன உடம்பைத் தூக்கிச் செல்வதற்கு நினைவுகளும் சிந்தனைகளும் தேவை. அவற்றைப் புத்தகங்கள்தாம் தருகின்றன. நினைவுகள் மட்டுமில்லை எதிர்காலத்துக்கும் தேவைப்படுகிற சிந்தனைகளையும் கடந்த காலத்திலிருந்து கைமாற்றிக் கைமாற்றி, காலத்தோடு கொண்டு வரும் மொழியின் வாழ்விடங்களாகவும் புத்தகங்கள் இருக்கின்றன.
புத்தகம் எல்லையில்லாத மானுடப் பிரபஞ்சத்தைக் காட்டுகிறது. "யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்று இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் முன்பே மனித மனப் பிரபஞ்சத்தை விரிவுபடுத்த எல்லைகளை உடைத்திருக்கிறது சங்க இலக்கியம்.
மெய், வாய், மூக்கு, கண், காது எனும் ஐந்து புலன்கள் வழியாக நேரடியான அனுபவங்கள் வழியாக மட்டும் பெறும் ஐந்து அறிவோடு மனதின் வழியாக ஆறாவது அறிவைப் பெறுகிறவர்கள் மனிதர்கள். மனதின் வழியாக ஐம்புலன் அறிவையும் பெறும் வாய்ப்பினைப் புத்தகங்கள் வழங்குகின்றன.
ஐம்புலன்களும் காலத்தாலும் இடத்தாலும் கட்டுண்டு கிடப்பவை. ஆனால் மனம், கடந்த காலத்திலும் எதிர்காலத்திலும் இடம் கடந்து சென்று அறிவைத் திரட்டும். அதற்கு உதவியாக இருப்பவை நூல்கள்.
காலம், புத்தகத்தில் உறைந்து கிடக்கிறது. வாழ்க்கை, புத்தகத்தில் மறைந்து கிடக்கிறது. புத்தகம் என்பது பக்கக் கணக்கில் இல்லை. அது மனிதகுல வாழ்வியலைத் தொடர வைக்கும் மனவெளியின் பெருவெடிப்பு. ஆகவே, உலகப் புத்தக நாளைத் திருநாளாகக் கொண்டாடுவோம்.
இன்று
உலக புத்தக தினம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.