நடுப்பக்கக் கட்டுரைகள்

சாரமிழந்த சகிப்புத்தன்மை! 

ஆண்டாண்டு காலமாக கட்டுக்கோப்பாகக் காக்கப்பட்ட சகிப்புத்தன்மை' இன்று மனித வடிவில் பிறந்த மிருகங்களால் அணுஅணுவாக சித்திரவதை செய்யப்படுகிறது. பாரதியார் பாஞ்சாலி சபத'த்தில்,

தி. இராசகோபாலன்

ஆண்டாண்டு காலமாக கட்டுக்கோப்பாகக் காக்கப்பட்ட சகிப்புத்தன்மை' இன்று மனித வடிவில் பிறந்த மிருகங்களால் அணுஅணுவாக சித்திரவதை செய்யப்படுகிறது. பாரதியார் பாஞ்சாலி சபத'த்தில், தருமர் கடைசிவரை சகிப்புத்தன்மையைக் கடைப்பிடித்திருந்தால், குருச்சேத்திரப் போரைத் தவிர்த்திருக்கலாம்' எனப் பாடுகின்றார்.
பொறுமையினை அறக்கடவுள் புதல்வன் என்னும்
யுதிட்டிரனும் நெடுநாளிப் புவிமேற் காத்தான்
இறுதியிலே பொறுமைநெறி தவறி விட்டான்,
ஆதலால், போர்புரிந்தான் இளையா ரோடே
பொறுமையின்றிப் போர்செய்து பரத நாட்டைப்
போர்க்களத்தே அழித்துவிட்டுப் புவியின் மீது
வறுமையையுங் கலியையும் நிறுத்திவிட்டு
மலைமீது சென்றான்; பின் வானம் சென்றான்!
என்று சகிப்புத்தன்மையின் பீடுகளைப் பாடியதோடு, அதனைக் கடைப்பிடிக்கத் தவறியதால் நேர்ந்த கொடுமைகளையும் பாடிவிட்டான், பாரதி. இப்படிக் காலங்கள்தோறும் பேணிக் காப்பாற்றிய சகிப்புத்தன்மை இன்று நகரங்கள்தோறும், கிராமங்கள்தோறும், சாரமும் சத்தும் இழந்து வருகின்றது. 
நீதித்துறையினர், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சித்தலைவர்களை எச்சரிக்கும் அளவுக்குச் சென்றுவிட்டது. பலதரப்பட்ட கலாசாரங்களைக் கொண்ட, மிகப்பெரிய சனநாயக நாடான இந்தியா, சகிப்புத்தன்மையின் மகத்துவத்தையும் மதிப்பீடுகளையும் காக்கத் தவறிவிட்டது' என உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா கடுமையாகக் கண்டித்துள்ளார்.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மட்டுமன்றி, அவரோடு பணியாற்றிய பிற நீதிபதிகளும் கண்டித்துள்ளனர். தனிமனிதர்கள் சட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டு, நடுத்தெருவிலேயே கொலை கொள்ளைகளை நிகழ்த்தி வருவதைக் கண்டு வருந்திய நீதியரசர்கள், சட்டமும் அதன் பரிபாலனமும் நீதிமன்றங்களால் பரிசீலிக்கப்பட வேண்டுமே தவிர, மற்றவர்களால் அல்ல' எனவும் கூறியிருக்கின்றனர். சட்டத்தால், மனிதர்களை ஒருவரோடொருவர் நேசிக்கச் செய்ய முடியாமல் இருக்கலாம்; ஆனால், அப்பாவி மனிதனின் உயிரை எடுப்பதைச் சட்டம் பார்த்துக் கொண்டிருக்காது' என மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் ஓர் அபாயச் சங்கையும் ஊதியிருக்கிறார்.
அண்மையில், மேற்கு உத்தரப் பிரதேசத்திலும், காஷ்மீரிலும் நடந்த கோரக் கொலைகள் அனைவருடைய கண்களிலும் கண்ணீரை வரவழைத்திருக்கின்றன. உத்தரப் பிரதேசத்தில் ஹேபூருக்குப் பக்கத்திலுள்ள பில்குவா பகுதியில் இறைச்சிக்கடை வைத்திருந்த காசிம் என்பவன் திருடன் என்ற சந்தேகத்தின் பேரில் சிலரால் கொடூரமாகக் கொல்லப்பட்டிருக்கிறான். எருமை மாட்டு இறைச்சியும் ஆட்டிறைச்சியும் விற்பவன் காசிம். அவனுக்கு வியாபாரத்திற்குரிய மந்தை வந்திருப்பதாக ஒரு தொலைபேசி அழைப்பு வந்திருக்கிறது. அதனை நம்பி அவன் ரூ. 60,000 எடுத்துக்கொண்டு பாஜ்ஹரா குர்த் என்கிற பகுதிக்குச் சென்றிருக்கிறான். அங்கு ஏற்கெனவே காத்துக் கொண்டிருந்த 12 இளைஞர்கள், அவன் மாடு திருட வந்ததாகக் கூறி, அவனை அடித்து உதைத்து, சாலையிலே தரதரவென இழுத்துக் கொண்டுச் சென்றிருக்கின்றனர். இழுத்துக் கொண்டு போகும்போது, கைத்தடியால் அடித்தும், கத்தியால் குத்தியும், அரிவாளால் வெட்டியும் அவனுடைய உடம்பைப் படுகாயப்படுத்தியிருக்கின்றனர். காசிமின் இரண்டு கால்களையும் கயிற்றால் கட்டி இரண்டு பேரும், இரண்டு கைகளைக் கயிற்றால் கட்டி இரண்டு பேரும் முதுகு தேய கரடுமுரடான பாதையில் இழுத்துச் சென்றிருக்கின்றனர்.
தகவல் அறிந்து வந்த மூன்று காவல்துறையினர், வன்முறையாளர்களைத் தடுப்பதற்குப் பதிலாக, அவர்களுக்குப் பாதுகாப்பாக இருந்து, கரடுமுரடான பாதையில் காசிம் இழுத்துச் செல்லப்படுவதற்கு உறுதுணையாகவும் இருந்துள்ளனர். அந்தக் கோரக் காட்சியைச் கண்ட சமியுதீன் என்ற அப்பகுதி இளைஞன் அவர்களை அதட்டிக் கேட்டபொழுது, அந்த வன்முறையாளர்கள் அவனையும் அடித்துத் தள்ளியிருக்கின்றனர். அந்த நேரத்தில் அங்கு வந்த சிலர், காவல்துறையினரின் செயலைக் கண்டித்திருக்கின்றனர். அதற்கு காவல்துறையினர் நாங்கள் ஆம்புலன்ஸ் வரவழைப்பதற்குத்தான் இங்கு வந்தோம். அது வருவதற்கு தாமதமாகிறது' எனப் பொய் புகன்றுள்ளனர்.
உலகம் அபாயகரமானது. தீங்குகளையும், கொடுமைகளையும் செய்பவர்களால் அபாயகரமானது அன்று; அத்தீங்குகளையும் கொடுமைகளையும் வேடிக்கை பார்ப்பவர்களால்; அவை நடக்கட்டும் என்று அனுமதிப்பவர்களால்தான் அபாயகரமானது' என ஆல்பர்ட் ஐன்ஸ்டின் கூறியது, உத்தரப் பிரதேசத்தில் உறுதியாயிற்று.
கலவரக்காரர்கள் காசிமை குழியில் தள்ளி மூடிவிடலாம் என எண்ணியிருந்த நேரத்தில் அப்பகுதிக்கு சில ஆட்கள் வந்ததால், அவர்கள் எண்ணம் நிறைவேறவில்லை. காவல்துறையினர் காசிமை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். ஆனால், மருத்துவமனை செல்லும் வழியிலேயே அவனுடைய உயிர் எமனுலகை எட்டியிருந்தது. 
அத்துடன் காசிம் கொண்டு வந்தது ரூ. 60,000. அவன் பிணமானபோது அவனுடைய கால்சட்டைப் பையில் இருந்தது ரூ.14,000 மட்டுமே. காசிம் இறந்த செய்தியறிந்து பதறிப்போய் மருத்துவமனைக்கு வந்த குடும்பத்தினரிடம் காவல்துறையினர், காசிம் சாலை விபத்தில் இறந்து போனார் என எழுதிக் கொடுத்துவிட்டு, உடலை எடுத்துக் கொண்டு போங்கள்' என்று கூறினர்.
சகிப்புத்தன்மை சரிந்து கொண்டே போவதற்கு மற்றுமோர் உதாரணம், காஷ்மீரில் ரைசிங் காஷ்மீர்' எனும் பத்திரிகையில் ஆசிரியர், சுஜாத் புகாரி சுட்டுக் கொல்லப்பட்டதாகும். உண்மையை எடுத்துச் சொல்வதில் யாருக்கும் அஞ்சாதவர் சுஜாத் புகாரி. பள்ளத்தாக்கிலும், ஸ்ரீநகரிலுமுள்ள பல பத்திரிகையாளர்கள் சுஜாத்தைத் தங்களின் முன்னோடியாகக் கருதுகின்றனர். சுஜாத் பத்திரிகைத் தொழிலில் எதனோடும் சமரசம் செய்து கொள்ளாதவர்.
காஷ்மீர்ப் பிரச்னைகளைப் பூசி மெழுகாமல், எக்ஸ்ரே' படம் போல் எழுதி வந்தவர். 2001-இல் பாராளுமன்றத்தை முற்றுகையிட்ட அப்சல் குரு, 2013-இல் தூக்கிலிட்டுக் கொல்லப்பட்டார். ஆதாரபூர்வமாக அதனைப் பற்றி ஒரு கட்டுரையை ப்ரண்ட் லைன்' பத்திரிகையில் எழுதி, அனைவரின் பாராட்டையும் பெற்றவர் சுஜாத். சுஜாத் மத்திய அரசாங்கத்தோடு ஓர் ஆரோக்கியமான புரிந்துணர்வை வைத்திருந்தார். அது தீவிரவாதிகள் மத்தியில் ஒரு சந்தேகத்தை எழுப்பியிருந்தது. 
சமீபத்தில், துபாயில் இரண்டாம் முறையாக பத்திரிகையாளர் கருத்தரங்கு நடந்தது. அதில் பாகிஸ்தான் மற்றும் காஷ்மீர் பத்திரிகையாளர்களோடு சுஜாத்தும் கலந்து கொண்டார். அக்கருத்தரங்கில் சுஜாத், இருபத்தெட்டு ஆண்டுகளாகப் பள்ளத்தாக்கும் காஷ்மீரும் இரத்த மழை பொழியும் காடாகவே கிடக்கின்றன. அனைவரும் ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு, சுமுகமாகப் பேசித் தீர்ப்பது ஒன்றே, அமைதிக்கு வழி' எனப் பேசினார். அச்செய்தி எல்லாத் தரப்பினராலும் பாராட்டப் பெற்றது. ஆனால், லஷ்கர்-இ-தொய்பா குழுவினரும், ஹிஸ்புல் முஜாஹுதீன் - ஒன்றிய ஜெகாத் குழுவினரும், துபாய் மாநாட்டில் கலந்து கொண்டவர்களை காஷ்மீரின் துரோகிகள்' எனக் கடுமையாகக் குற்றம் சாட்டினர். 
சகிப்புத்தன்மையற்ற சழக்கர்கள் சுஜாத் உயிருக்குக் குறி வைத்துவிட்டனர். இராணுவத்தின் கண்காணிப்பு மிகத் துல்லியமாக சிறகு விரித்திருந்த ஸ்ரீநகரில் மூன்று மோட்டார் சைக்கிள்களில் வந்த யமதூதர்கள் சுஜாத்தையும் அவருக்குப் பாதுகாப்பாக இருந்த இரு காவலர்களையும் இயந்திரத் துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டிருக்கின்றனர். அதில் சுஜாத் புகாரி அநியாய மரணம் அடைந்தார். இத்தனைக்கும் முதலமைச்சர் மெஹ்பூபா முப்தி சயீதின் ஆட்சிக் காலம் அது. அது மட்டுமல்ல, சுஜாத்தின் சகோதரர், முப்தி சயீதின் அமைச்சரவையில் ஓர் அமைச்சராகவும் இருந்த நேரம்.
ரைசிங் காஷ்மீர்' பத்திரிகை தன் காவிய நாயகனை இழந்தது; சத்திய ஆவேசம் கொண்ட எழுத்தாளர்கள் ஒரு முன்மாதிரியை இழந்தார்கள்; தர்மதேவதை தனக்குக் கவசமாக இருந்த ஒரு தூதுவனை இழந்தது; காஷ்மீரத்தின் ஒரு வெள்ளை ரோஜா வன்முறையாளர்கள் நிகழ்த்திய கொலைவெறியால், சிவப்பு ரோஜா ஆயிற்று; காந்தியடிகள் இரத்தம் சிந்திப் போற்றிப் பாதுகாத்த சகிப்புத்தன்மை' எனும் கோட்பாட்டின்மீது, ஒரு கோடித்துணி கூலிப்படையால் போர்த்தப்பட்டது. 
பாம்பு பசியெடுத்தால்தான் தவளையைப் பற்றுகிறது; ஒரு புலி பசியெடுத்தால்தான் ஆட்டைக் கொல்கிறது. ஆனால், மனிதன் காழ்ப்புணர்ச்சியாலும், முன்விரோதங்களாலும் பிற மனிதர்களை எல்லாம் கொல்கிறான். மனிதம் சகிப்புத்தன்மையை இழந்ததால் பாரதம் முழுவதும் இன்று மரண ஓலம் கேட்டுக் கொண்டேயிருக்கிறது. கூடி வாழ்வதற்கு தைத்துக் கொடுக்கப்பட்ட கவசம்தான், சட்டமும் நீதித்துறையும். அந்தக் கவசம் இன்று வன்முறையாளர்களால் குரங்கின் கை மாலையாகிவிட்டது. காவல் நிலையங்கள் கசாப்புக் கடைக்காரர்களின் கூடாரம் ஆகிவிட்டன.
பல வண்ணங்களைக் கொண்ட மலர்கள் சேர்ந்து வாழ்வதுதான் நந்தவனம். பல உயிரினங்கள் சேர்ந்து வாழ்வதுதான் காடு. பல்வேறு உற்பத்தி ஸ்தானங்களிலிருந்து பெருக்கெடுப்பதுதான் கங்கை. பல வண்ணங்களால் ஆனதுதான் வானவில். மனிதம் நந்தவனம் ஆக இருக்க வேண்டும்; கங்கையாக இருக்க வேண்டும்; வானவில்லாக இருக்க வேண்டும். 
சகிப்புத்தன்மையை இழந்தால் மனிதம் சவக்கிடங்கு ஆகிவிடும்; சுட்டெரிக்கும் சுடுகாடு ஆகிவிடும்.

கட்டுரையாளர்:
பேராசிரியர் (ஓய்வு).
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்திய அணிக்கு இதுதான் சரியான பிளேயிங் லெவன் | T20 World Cup Review

தோ்தல் வந்துவிட்டால் பாஜக 'சோதனை' என்று சிபிஐயை பயன்படுத்தும்: கனிமொழி எம்.பி.

”மேஷ ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

Abhishek Sharma-விடம் Gautam Gambhir என்ன பேசினார்? | T20 World Cup Review

இஸ்ரேலுக்குச் செல்லும் பிரதமர் மோடி: நெதன்யாகுவுடன் புதன்கிழமை சந்திப்பு!

SCROLL FOR NEXT