நடுப்பக்கக் கட்டுரைகள்

இன்னொரு கிரீஸ் உருவாகிறதா?

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பில் ஏற்படும் கணிசமான மாறுதல்கள், சாமானிய மக்களின் அன்றாட வாழ்க்கைப் பொருளாதாரத்தை பாதிக்கும் வல்லமை படைத்தது

எஸ். ராமன்

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பில் ஏற்படும் கணிசமான மாறுதல்கள், சாமானிய மக்களின் அன்றாட வாழ்க்கைப் பொருளாதாரத்தை பாதிக்கும் வல்லமை படைத்தது என்பதால், அம்மாதிரி நிகழ்வுகளின்போது, அதற்கான அடிப்படை காரணங்களை புரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும். 
கடந்த வாரத்தில், உலக பொருளாதார சந்தைகளில் ஏற்பட்ட பெரும் அதிர்வலைகள், இந்திய ரூபாயின் மதிப்பிலும் பிரதிபலித்தது. ஒரு அமெரிக்க டாலரை வாங்குவதற்கு எவ்வளவு ரூபாய் தேவைப்படும் என்பதை அளவீடாக கொண்டுதான், நம் நாணயத்தின் மதிப்பு கணக்கிடப்படுகிறது. சந்தையில் ஒரு டாலர் வாங்குவதற்கு, முந்தைய காலத்தை விட, தற்போது அதிக தொகை தேவைப்பட்டால், இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து விட்டதாகக் கணக்கிடப்படுகிறது.
ரூபாய் மதிப்பு சரிவினால், வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய், தங்கம், பிற உற்பத்திக்குத் தேவையான மூலப் பொருள்கள் போன்றவற்றின் விலை அதிகரிக்கும். அதனால் ஏற்படும் உற்பத்திப் பொருள்களின் விலை உயர்வு, பண வீக்கத்துக்கு ஒரு காரணியாக அமையும். பண வீக்கத்தைக் கட்டுப்படுத்த வட்டி விகிதம் உயர்த்தப்படும். இதனால், தொழில் துறையில் முதலீடுகள் குறைந்து, அதனால் உள்நாட்டு மொத்த உற்பத்தி மதிப்பும் (Gross Domestic Product) நலிவடையும். இந்த நலிவு, சர்வதேசச் சந்தையில், நம் நாணயத்தின் மதிப்பை வலுவிழக்க செய்யும். இந்த நிகழ்வுகள் ஒரு சுழல் போன்றது. அந்தச் சுழலின் தாக்கம், சாமான்ய மக்களின் அடிப்படை வாழ்வாதரங்களை பெருமளவில் பாதிக்கும். 
2013-ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதத்தில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 68 என்ற நிலையில், அதிகபட்ச சரிவை சந்தித்தது. அதற்கு பிறகு, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் இறக்கம், உள்நாட்டுப் பொருளாதார சீர்திருத்தங்கள் போன்ற காரணங்களால், அந்த மதிப்பு 63 முதல் 66 வரை என்ற நிலைக்கு இறங்கி, அந்த குறிப்பிட்ட எல்லைக்குள் நகர்ந்து கொண்டிருந்தது. ஆனால், பெரும்பாலும் கச்சா எண்ணெய் விலை சரிவுதான், நம் நாணய மதிப்பின் பெரும் சரிவை தடுத்து நிறுத்தியது எனலாம். 
ஆனால், சமீப காலங்களில் நிகழ்ந்த கச்சா எண்ணெய் விலை ஏற்றம் மற்றும் அமெரிக்க மத்திய வங்கியின் தொடர் வட்டி உயர்வு கொள்கை ஆகிய காரணிகள், இந்திய நாணய மதிப்பை மீண்டும் பதம் பார்க்க ஆரம்பித்து விட்டன. இந்த காரணங்களால், கடந்த ஆண்டிலிருந்து இந்த ஆண்டு வரை, இந்திய ரூபாயின் மதிப்பு சுமார் 10 சதவீதம் வீழ்ச்சி கண்டிருக்கிறது. 2018 ஆகஸ்ட் மாதத்தில் மட்டும், அந்த சரிவின் அளவு சுமார் 2.5 சதவீதமாகும். ஆகஸ்ட் மாதத்தில் காணப்பட்ட சரிவுக்கு முக்கிய காரணம், சில சர்வதேச பிரத்யேக நிகழ்வுகளாகும். அந்த நிகழ்வுகள், சர்வதேசச் சந்தையில் பல நாடுகளின் நாணய மதிப்புகளைத் தாக்கும் வல்லமை படைத்தவையாக அமைந்திருந்தன. 
கடந்த வார நிகழ்வுகளின் மையப்புள்ளி துருக்கி என்ற சிறிய நாடுதான். எட்டு கோடி மக்கள் தொகை உள்ள துருக்கி, 2008-ஆம் ஆண்டில் ஏற்பட்ட உலகப் பொருளாதார சரிவுகளுக்கு பிறகு, வேகமாக வளர்ந்த நாடுகளில் ஒன்றாகும். ஆசியா, ஐரோப்பா ஆகிய இரு கண்டங்களிலும் காலூன்றி நிற்கும் துருக்கி, "யூரோஷியா கண்ட நாடு' என்று அழைக்கப்படுகிறது. ஹேசல் நட் உற்பத்தியில், உலக அளவில் துருக்கி முதல் இடம் வகிக்கிறது. 
சமீப காலங்களில், பொருளாதாரத்தில் தொடர்ந்து பலம் இழந்து வரும் இந்த நாடு, அமெரிக்காவுடனான மோதல் போக்கைக் கடைப்பிடித்து, அதன் கோபத்திற்கு உள்ளானது. ரஷியாவுடன் ஆயுத பேரம், ஈரானுடன் எண்ணெய் ஒப்பந்தம் போன்ற அதன் நடவடிக்கைகள், அதன் மீதான அமெரிக்காவின் கோபத்திற்கு சில காரணங்களாகும்.
மேலே குறிப்பிட்ட காரணங்களை தவிர, 2016-இல் துருக்கி அரசால், உளவு குற்றத்தில் சிறையிலிடப்பட்ட அமெரிக்க மத போதகரை இதுவரை விடுவிக்காமல் வீட்டு சிறையில் வைத்திருப்பதும் இந்த மோதலுக்கு மற்றொரு முக்கிய காரணமாக அமைந்தது எனலாம்.
இந்த மோதல், துருக்கி மீதான சில திடீர் பொருளாதாரத் தடைகளுக்கு வித்திட்டது. பொருளாதாரத்தில் ஏற்கெனவே தொடர் சரிவுகளை சந்தித்து வந்த துருக்கிக்கு, இது ஒரு பேரிடியாக உலக நாடுகளால் கருதப்பட்டது. சென்ற ஓராண்டில் 70 சதவீத அளவில் மதிப்பு இழந்திருந்த அந்த நாட்டு நாணயமான "லிரா', கடந்த வாரத்தில் மட்டும் 20 சதவீத மதிப்பை இழந்தது.
உலகப் பொருளாதாரத்தில் துருக்கியின் பங்கு சிறியது என்றாலும், அதைவிட சிறிய நாடான கிரீஸ் சந்தித்த பொருளாதார நலிவு நிகழ்வுகளின் போது, அதன் அதிர்வலைகள் உலகப் பொருளாதாரச் சந்தைக்கு பரவியது சமீபத்திய வரலாறு ஆகும். துருக்கியும் மற்றுமொரு கிரீஸ் ஆகிவிடும் என்ற பீதி உலக நாடுகளைத் தொற்றிக் கொண்டது எனலாம். அந்த பீதிக்கான அடிப்படை காரணங்கள் இல்லாமல் இல்லை.
துருக்கியின் 70 சதவீத பொருளாதாரம், அயல்நாடுகளிலிருந்து பெறப்பட்ட, அமெரிக்க டாலர் கடன்களை சார்ந்திருக்கிறது. மற்ற வளரும் நாடுகளை விட, இது மிகவும் அதிக அளவு ஆகும். இந்த கடன்கள், ஸ்பெயின், பிரான்ஸ், இத்தாலி, ஜப்பான், இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளை சார்ந்த வங்கிகளிடமிருந்து பெறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. "லிரா'வின் மதிப்பு இழப்பால், கடன் பெற்ற துருக்கிய நிறுவனங்களால் அந்த கடன்களை திருப்பி கொடுக்க முடியாத நிலை ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. அதனால், கடன் வழங்கிய அயல் நாட்டு வங்கிகள் பாதிக்கப்படும் அபாயம் காத்து நிற்கிறது. 
மேலும், எப்பொழுதும் இல்லாத அளவுக்கு நாட்டின் தற்போதைய பண வீக்கம் 15.9 சதவீதத்திற்கு வளர்ந்துள்ளது மற்றொரு அபாய அறிகுறியாகும். கடந்த காலங்களில் வேகமாக வளர்ந்த கட்டுமானத் துறையும், அதே வேகத்தில் சரிந்து விழ வாய்ப்புகள் உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதனால், அந்தத் துறைக்கு பெருமளவில் கடன் வழங்கிய உள்நாட்டு வங்கிகள் திவால் நிலையை சந்திக்க நேரிடும். 
பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தத் தேவையான வட்டி விகித உயர்வை, அந்நாட்டு அதிபர் விரும்பவில்லை என்பதால், நெருக்கடியான தருணத்தில், துருக்கி நாட்டின் மத்திய வங்கி வெறும் பார்வையாளராக செயல்படுவதாக கடும் விமர்சனம் எழுந்துள்ளது. 
மேலும், துருக்கியின் அந்நிய செலாவணி கையிருப்பு, நிலுவையில் இருக்கும் குறுகிய கால கடன்களை திருப்பி செலுத்தும் அளவுக்கு கூட இல்லை என்பது மற்றுமொரு பொருளாதார பின்னடைவாகும். 
அதன் எதிரொலியாக, ரஷியா, தென் ஆப்பிரிக்கா, பிரேசில், மெக்ஸிகோ, அர்ஜென்டினா, இந்தியா போன்ற நாடுகளின் நாணய மதிப்புகள் கடந்த வாரம், கடந்த இரண்டு வருடங்களில் கண்டிராத அளவுக்கு கீழ்நிலையைத் தொட்டன. நாணய மதிப்பை ஓரளவு பாதுகாக்கும் நடவடிக்கையாக, அர்ஜென்டினாவின் மத்திய வங்கி, வட்டி விகிதத்தை ஒரே நாளில் 5 சதவீதம் உயர்த்தி, 45 சதவீதமாக மாற்றி அமைத்தது. 
இந்தியாவைப் பொருத்தவரை, ஆகஸ்ட் 14-ஆம் தேதி அன்று, ஒரு டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, இதுவரை காணாத சரிவை எதிர்கொண்டு, 70.08-ஐ தொட்டுத் திரும்பியது. ரூபாயின் மதிப்பிழப்பைக் கட்டுப்படுத்த, கையிருப்பிலிருந்து பெருமளவு அமெரிக்க டாலர்கள், மத்திய வங்கியால், சமீப காலங்களில், இந்திய சந்தையில் விற்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ள நிலைமையை கட்டுக்குள் கொண்டுவரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, நாணயத்தின் மதிப்பை தாங்கிப் பிடிக்க, கையிருப்பு டாலர்களை உடனடியாக "லிரா'வுக்கு மாற்றும்படி தன் நாட்டு மக்களுக்கு துருக்கி அதிபர் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகும் மின்னணுப் பொருள்களுக்குத் தடை விதிக்க ஆலோசிப்பதாகவும் தெரிவித்துள்ளார். வரும் நாள்களில், துருக்கியின் மத்திய வங்கி, சில பொருளாதாரக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை எடுக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. 
இந்த மோதல்கள் முடிவுக்கு வந்து, துருக்கியின் பொருளாதார நிலை கட்டுக்குள் வரும்வரை, சர்வ தேச நாணய சந்தைகள் கடும் ஏற்ற இறக்கங்களைச் சந்திக்க நேரிடும். அதற்கு இந்தியாவும் விதி விலக்கல்ல. 
நம் நாட்டில் நிலைமையை சமாளிக்க, தங்கம் போன்ற இறக்குமதிகள், தற்போதைக்குக் கட்டுப்படுத்தப்பட வேண்டும். இதைத் தவிர, பண மதிப்பு இழப்பால் இறக்குமதி செய்யப்படும் பொருள்களின் விலை உயர்வால் ஏற்படும் பண வீக்கம் மற்றும் அந்நிய செலாவணியில் ஊடக பேர வணிகம் (Speculative Trades) ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவதிலும், உள்நாட்டுப் பணப் புழக்கத்தை கட்டுப்படுத்துவதிலும் ரிசர்வ் வங்கி கவனம் செலுத்தும். 
அதற்கான முக்கிய சாதனம் வட்டி உயர்வு என்பதால், இடைக்கால வட்டி உயர்வு அறிவிப்பை ரிசர்வ் வங்கியிடமிருந்து எதிர் பார்க்கலாம் என்று நிபுணர்கள் கருதுகிறார்கள். இதனால், தொழில் நிறுவனங்களின் லாபக் கணக்குகள் பாதிக்கப்படும் வாய்ப்புகள் உள்ளன. 
கடந்த வாரப் பொருளாதார நிகழ்வுகளின் தாக்கத்தினால், வளர்ந்த நாடுகள், தங்கள் முதலீடுகளை வளரும் நாடுகளிலிடமிருந்து மீட்கத் தொடங்கி விட்டன. இம்மாதிரி நடவடிக்கைகளால் பாதிப்புக்குள்ளாகும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. மேலும், பொதுத்தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசாங்கத்தின் நிதிப் பற்றாக்குறை விரிவடைய வாய்ப்புகள் உள்ளன. 
நாணய மதிப்பு வீழ்ச்சியால் ஏற்படும் எரிபொருள்களின் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த, அவற்றின் மீது மத்திய, மாநில அரசுகளால் சுமத்தப்பட்டிருக்கும் பல்வேறு முனை வரிகளைக் குறைக்க வேண்டிய தருணம் இது. உறுதிமொழிகளை விட, சாதாரண மக்களின் அன்றாடப் பொருளாதாரத்தைக் காக்கும் அரசின் உறுதியான நடவடிக்கைகள்தான் தற்போது அனைவரது எதிர்பார்ப்பாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெர்லின் திரைப்பட விழாவில் அசாம் பெண் இயக்கிய படத்துக்கு விருது!

பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு!

#t20wc | இலங்கை bowling எப்படி இருக்கு? | T20 World Cup Review | #SLvsENG

#t20 | இலங்கை Batting எப்படி இருக்கு? | T20 World Cup2026 Review | #SLvsENG |

தில்லி: வீட்டில் ஏற்பட்ட தீயை அணைக்க முயன்றபோது சிலிண்டர் வெடித்து 13 பேர் காயம்

SCROLL FOR NEXT