முகப்பு
நடுப்பக்கக் கட்டுரைகள்

கடலில் மிதக்கும் பிளாஸ்டிக்

மனிதனின் வெற்றிகரமான கண்டுபிடிப்புகளில் ஒன்று நெகிழி எனப்படும் பிளாஸ்டிக்.

நடுப்பக்கக் கட்டுரைகள்

கடலில் மிதக்கும் பிளாஸ்டிக்

மனிதனின் வெற்றிகரமான கண்டுபிடிப்புகளில் ஒன்று நெகிழி எனப்படும் பிளாஸ்டிக்.

Updated On : 30 ஜனவரி, 2024 at 4:36 PM
பகிர்:


மனிதனின் வெற்றிகரமான கண்டுபிடிப்புகளில் ஒன்று நெகிழி எனப்படும் பிளாஸ்டிக். குறைந்த விலை, பயன்படுத்துவது எளிது, பன்முகப் பயன்பாடு என்பதால், இன்று உலகம் முழுக்க நீக்கமற நிறைந்துள்ளது பிளாஸ்டிக். 
கடந்த 1950 முதல் 2015 வரை உலகம் முழுக்க உற்பத்தி செய்யப்பட்ட பிளாஸ்டிக் 830 கோடி மெட்ரிக் டன்னாகும். இவை அனைத்துமே மக்காத தன்மை கொண்டவை என்பதுதான் அதிர்ச்சியளிக்கும் செய்தி. இவை சுற்றுச்சூழலை பேரழிவுக்குக் கொண்டு செல்லக்கூடியவை.
இவற்றில் ஒன்பது சதவீத பிளாஸ்டிக் மட்டுமே மறுசுழற்சி செய்யப்பட்டுள்ளது. 12 சதவீத பிளாஸ்டிக் எரிக்கப்பட்டுள்ளது. எஞ்சிய 80 சதவீதம், அதாவது 630 கோடி மெட்ரிக் டன் பிளாஸ்டிக் பயனற்ற கழிவாக மாறிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவை முடிவற்ற காலம் கொண்டவையாக நிலத்தையும், கடலையும் ஆக்கிரமித்துள்ளன.
கடலில் சேரும் பிளாஸ்டிக்கால், ஒவ்வோர் ஆண்டும் 10 லட்சம் கடல் பறவைகள், ஒரு லட்சம் கடல் வாழ் பாலூட்டிகள், ஏராளமான விலைமதிக்க முடியாத மீன்கள் ஆகியவை உயிரிழக்கின்றன. தற்போதைய நிலையில், உலகம் முழுவதும் கடலில் மிதக்கும் பிளாஸ்டிக்கின் அளவு 15 கோடி மெட்ரிக் டன் என மதிப்பிடப்பட்டுள்ளது. 
அத்துடன், ஒவ்வோர் ஆண்டும் 80 லட்சம் டன் பிளாஸ்டிக் கடலில் சேருகிறது. அதாவது, ஒவ்வொரு நிமிடத்திற்கும் ஒரு லாரி அளவுள்ள பிளாஸ்டிக். இதில், ஆண்டுக்கு 5 லட்சம் டன் முதல் 30 லட்சம் டன் வரையிலான பிளாஸ்டிக் ஆறுகள் வழியாக கடலுக்கு வருகின்றன.
உலகின் மிகப் பெரிய ஆறுகள்தான் அதிகப்படியான பிளாஸ்டிக்கை கடலுக்கு கொண்டுவருபவையாக உள்ளன. குறிப்பாக, குப்பை மேலாண்மையில் போதிய உள்கட்டமைப்பு இல்லாத நாடுகள் இதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. 
ஆறுகள் வழியாக கடலில் சேரும் பிளாஸ்டிக்கில் 95 சதவீதம் குறிப்பிட்ட 10 நதிகள் மூலம் சேருவதாக ஜெர்மனியின் லேய்ப்ஜிக்'(Leipzig)-இல் உள்ள ஹெல்ம்ஹோல்ட்ஸ்' (Helmholtz) எனும் சுற்றுச்சூழல் ஆய்வு மையம் கண்டறிந்துள்ளது.
அங்குள்ள விஞ்ஞானிகள், உலகில் உள்ள 57 மிகப் பெரிய ஆறுகளின் 79 மாதிரி பிளாஸ்டிக் நுண் குப்பைகள் மற்றும் பாட்டில்கள், பைகள் உள்ளிட்டவற்றின் தரவுகளை ஆய்வுக்கு உட்படுத்தினர். இதில், தவறான பிளாஸ்டிக் குப்பை மேலாண்மை காரணமாக குறிப்பிட்ட 10 ஆறுகள் கடலுக்கு அதிக தீங்கிழைப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இதில் எட்டு ஆறுகள் ஆசியக் கண்டத்தில் உள்ளன.
சீனாவில், கிழக்கு சீன கடலில் கலக்கும் யாங்சே(Yangtze)  மற்றும் ஹாய் ஹீ (Hai He), மஞ்சள் நதி (Yellow River),, தென்சீன கடலில் கலக்கும் பேர்ல் நதி (Pearl River) ரஷியாவில் உற்பத்தியாகி பெரும்பாலும் சீனாவின் எல்லையில் பயணித்து ஓகோட்ஸ்(Okhotsk)  கடலில் கலக்கும் அமுர் நதி (Amur), சீனாவில் உற்பத்தியாகி மியான்மர், லாவோஸ், தாய்லாந்து, கம்போடியா, வியத்நாம் நாடுகளைக் கடந்து தென்சீனக் கடலில் கலக்கும் மேகாங் (Mekong),), சீனாவில் உற்பத்தியாகி, இந்தியா, பாகிஸ்தான் வழியாக அரபிக் கடலில் கலக்கும் சிந்து நதி (Indus), இந்தியாவில் உற்பத்தியாகி, வங்கதேசத்தின் வழியாகச் சென்று வங்கக் கடலில் கலக்கும் கங்கை நதி, எத்தியோப்பியாவில் நீல நைல் நதியாகவும் (Blue Nile), ருவாண்டாவில் வெள்ளை நைல் நதியாகவும் ((White Nile) உற்பத்தியாகி, உகாண்டா, தெற்கு சூடான், சூடான், எகிப்து வழியாகச் சென்று மத்திய தரைக் கடலில் கலக்கும் நைல் நதி, கினியா நாட்டில் உற்பத்தியாகி, மாலி, நைஜர், பெனின், நைஜீரியா வழியாக ஓடி கினியா வளைகுடாவில் கலக்கும் நைஜர் நதி (Niger)ஆகிய இந்த 10 நதிகளே கடலை பிளாஸ்டிக் குப்பைத்தொட்டியாக மாற்றுவதில் முன்னணி வகிப்பதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இவற்றில் யாங்சே நதியே ஆண்டுக்கு 15 லட்சம் டன் பிளாஸ்டிக் குப்பைகளை கிழக்கு சீனக் கடலில் கலக்கிறது.
என்னதான் விழிப்புணர்வுப் பிரசாரம் ஒருபுறம் நடைபெற்றாலும், மறுபுறம் பிளாஸ்டிக் மாசு அதிகரித்துக்கொண்டேதான் வருகிறது. 2016-ஆம் ஆண்டு புள்ளிவிவரப்படி உலகம் முழுக்க 48 ஆயிரம் கோடி பிளாஸ்டிக் பாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 
இது 2021-இல் சுமார் 54 ஆயிரம் கோடியாக அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதோடு, இதில் 50 சதவீதத்துக்கும் குறைவாகவே மறுசுழற்சி செய்யப்படுகிறது.
தற்போது கடலில் சேரும் பிளாஸ்டிக் கழிவின் நிலை நிமிடத்திற்கு ஒரு லாரி என்ற இதே அளவில் தொடர்ந்தால், வரும் 2050-இல் இது 15 வினாடிகளுக்கு ஒரு லாரியாக அதிகரிக்கும் எனவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். எனினும், பிளாஸ்டிக் கழிவுகளைக் குறைப்பது சாத்தியமே என லேய்ப்ஜிக் விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளனர். 
மேற்கண்ட 10 ஆறுகள் பாயும் பகுதிகளில் பிளாஸ்டிக் கழிவு மேலாண்மையைத் தீவிரமாக செயல்படுத்துவதன் மூலம் குறைந்தபட்சம் 45 சதவீத பிளாஸ்டிக் கழிவுகள் ஆறுகள் மூலம் கடலில் சேருவதை தடுக்கலாம் என அவர்கள் கருதுகின்றனர். 
ஆனால், பிளாஸ்டிக் உற்பத்தியைத் தடுக்காமல், பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை மூலம் அதன் பாதிப்பில் இருந்து தப்பிவிடலாம் என உலக நாடுகள் கருதுவது புத்திசாலித்தனமல்ல. விழிப்புணர்வு பிரசாரமும், பிளாஸ்டிக் கழிவு மேலாண்மையும், கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்வதற்கு ஒப்பானதே. இது, இன்றில்லாவிட்டாலும் நாளை நிச்சயம் புரியவரும்.

முழு கட்டுரையைப் படிக்க →