நடுப்பக்கக் கட்டுரைகள்

"படிச்சவன் சூதும் பாவமும் பண்ணினால்...'

இந்தியாவிற்கு விடுதலை வேண்டும் எனப் போர் முரசறைந்த பாரதி, "பாருக்குள்ளே நல்ல நாடு - எங்கள் பாரத நாடு' என்றான். பாருக்குள்ளே நல்ல நாடு என்பதற்குரிய காரணத்தைச் சொல்லும்போது

தி. இராசகோபாலன்

இந்தியாவிற்கு விடுதலை வேண்டும் எனப் போர் முரசறைந்த பாரதி, "பாருக்குள்ளே நல்ல நாடு - எங்கள் பாரத நாடு' என்றான். பாருக்குள்ளே நல்ல நாடு என்பதற்குரிய காரணத்தைச் சொல்லும்போது, "வண்மையிலே உளத்திண்மையிலே - மனத்தன்மையிலே, மதிநுண்மையிலே, உண்மையிலே தவறாத புலவர் உணர்விலே உயர்நாடு' எனவும் பாடினார். அந்த பாரதமோ இன்று, லஞ்சப் பேய்களின் வாயில் நறநறவென்று மென்று தின்னப்படுகிறது.
ஸர் ஸ்டாபோர்டு கிரிப்ஸýம் அட்லியும் இந்தியாவிற்குச் சுதந்திரம் கொடுக்கப்பட வேண்டும் என வற்புறுத்தியபொழுது, வின்ஸ்டன் சர்ச்சில் விடாப்பிடியாக மறுத்தார். சர்ச்சில் மறுத்ததற்குச் சொன்ன காரணம், "இந்திய மக்கள் சுதந்திரத்தைப் பெறுவதற்கோ, அதை அனுபவிப்பதற்கோ இன்னும் முதிர்ச்சியும் பக்குவமும் பெறவில்லை. இப்பொழுது சுதந்திரம் கொடுத்தால், அடுத்த ஐம்பது ஆண்டுகளுக்குள் அதனை இழந்துவிடுவார்கள்' என்றார். கல்வித்துறையில் இன்று தாண்டவமாடுகின்ற லஞ்ச லாவண்யங்களை நினைத்தால், சர்ச்சில் வாய்க்குச் சர்க்கரை போட வேண்டும் எனத் தோன்றுகிறது.
பல்லவர்கள் காலத்திலேயே நம் நாட்டில் லஞ்சம், தஞ்சம் புகுந்துவிட்டது. அப்பரடிகள் சமணத்தை விட்டுச் சைவத்திற்கு மாறிவிட்டார் என்பதைக் கேள்விப்பட்ட மகேந்திர பல்லவன், அப்பரடிகளைக் கட்டி இழுத்துவரச் சொன்னான். மன்னன் காவலர்களுக்கு ஆணை பிறப்பிக்கும்போது, "இடையில் லஞ்சம் வாங்கிக் கொண்டு அப்பரை விட்டுவிடாதீர்கள்' எனவும் எச்சரித்தான். அதனைச் சேக்கிழார், "பொருள் கொண்டு விடாது, என்பால் கொடுவாரும்' எனப் பாடுவார். எனவே, பல்லவர் காலத்திலேயே லஞ்சப் பயிர், அரும்பு விட்டிருப்பதை உணரலாம்.
தொடர்ந்து வந்த ஆங்கிலேயர் ஆட்சியிலும் லஞ்சப் பயிர் பச்சை கட்டியிருக்கிறது. ஐ.சி.எஸ். அதிகார வர்க்கமும், லஞ்சமெனும் தேனை ஆளும் வர்க்கத்திற்குக் கொடுத்துவிட்டுப், புறங்கையை மட்டும் நாவினால் சுவைத்துப் பார்த்திருக்கிறது.
ஐ.சி.எஸ். என்றால், இந்தியன் சிவில் சர்வீஸ் என்பது பொருள். இதற்குக் குதர்க்கமாக விளக்கம் சொல்ல வந்த பண்டித நேரு பெருமகன், "இதில் இந்தியனும் (ஐய்க்ண்ஹய்) இல்லை; நிர்வாகவியலும் (ஸ்ரீண்ஸ்ண்ப்) இல்லை; அவர்கள் செய்வது சேவையும் (ள்ங்ழ்ஸ்ண்ஸ்ரீங்) இல்லை எனப் புகன்றார்.
பண்டித நேரு வருணித்த அந்த ரக அதிகாரிகள் முற்றாக மடிந்து போய்விடவில்லை; அவர்கள் இன்றும் கல்வித்துறையிலும் நிர்வாகத்துறையிலும் புனர்ஜன்மம் எடுத்து வட்டியும் முதலுமாய் வாரிச் சுருட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
தமிழ்நாட்டின் பெருமையைப் பேசவந்த மகாகவி பாரதி, "கல்வி சிறந்த தமிழ்நாடு' என்றான். படிக்காதவனைப் பாவி எனவும் ஏசினான், பாரதி! ("கண்ட பொருள் விளக்கும் நூல்கள் - பல கற்றல் இல்லாதவன் ஓர் பாவி'). திரிகால ஞானியாகிய பாரதி, இன்று கல்வித்துறையில் புற்றுநோயாய் ஊடுருவிக் கொண்டிருக்கும் லஞ்ச லாவண்யத்தைத் தீர்க்கதரிசனமாக உணர்ந்து, "படிச்சவன் சூதும் பாவமும் பண்ணினால், போவான், போவான், ஐயோ எனப் போவான்' எனக் குடுகுடுப்பை அடித்துச் சொல்கிறான். ஆனால், இதற்கு முன்னர் சூதும் பாவமும் பண்ணிய பல பாவிகள் போக மாட்டாமல், திருதிரு என முழித்துக் கொண்டிருக்கிறார்கள்.
"தொல்லை தீர்த்து உயர்கல்வி, வெற்றி சூழும் வீரம் அறிவாண்மையோடு திகழ வேண்டும்; தன்னலம் பேணி இழிதொழில் புரியோம்' என உயர் கல்வியின், உயர் கல்வியினரின் தரத்தைப் பாடினார்! பாரதியார் பாடியதைப் பாரதியார் பல்கலைக்கழகமே படிக்கவில்லையே!
கல்வி கற்பதால் வரும் பலாபலன்களைப் பாவேந்தர் பாரதிதாசன், "இன்பத் தமிழ்க் கல்வி யாவரும் கற்றவர் என்றுரைக்கும் நிலை எய்திவிட்டால், துன்பங்கள் நீங்கும், சுகம் வரும், நெஞ்சினில் தூய்மை உண்டாகிவிடும், வீரம் வரும்' எனப் பாடினார். ஆனால், கற்றவர்களிடம் தூய்மையா வந்திருக்கிறது? வீரமா வந்திருக்கிறது? இரசாயனப் பவுடர் தடவிய கரன்சிகள் அல்லவா வந்திருக்கின்றன...
இந்திய நாட்டில் ஒரு விவசாயி லஞ்சம் வாங்குவதில்லை. காரணம் அவருக்கு உழைப்பின்மீது நம்பிக்கை இருக்கிறது; மேலும், தன் வருவாய்க்கு மேலான எதிலும் ஆசைப்படுவதில்லை. ஒரு நெசவாளி லஞ்சத்திற்கு ஆசைப்படுவதில்லை. காரணம், அவருக்கு உழைப்பின்மீது நம்பிக்கை இருக்கிறது. இன்னும், அவருடைய வருமானத்திற்கு மேலாக எதற்கும் ஆசைப்படுவதில்லை.
ஆனால், கல்வித்துறையில் ஒரு தொடர் சங்கிலி போல் லஞ்சம் நடமாடுவதற்குக் காரணம் அவர்களுக்கு உழைப்பின்மீது நம்பிக்கை கிடையாது. மேலும், வருமானத்திற்கு மேலாக ஆகாயத்தையே கட்டியாள வேண்டும் என ஆசையும் இருக்கின்றது. பல்கலைக்கழகத்தில் ஒரு பணியிடத்திற்கு வருபவன் ஏன் ரூ.40 இலட்சம் லஞ்சம் தருகிறாரென்றால், ஒருமுறை கொடுத்துவிட்டால், வாழ்நாள் முழுவதும் உழைக்காமல் உட்கார்ந்து சாப்பிடலாம் என்ற எண்ணத்தில்தான்! மற்றும் தன்னிடம் ஆராய்ச்சி நிகழ்த்த வரும் ஆய்வு மாணவர்களிடத்தில், நாளடைவில் கொடுத்த தொகையை வசூலித்துவிடலாம் என்ற நம்பிக்கையும் இருக்கின்றது. இன்னும் முப்பதும், நாற்பதுமாய் கொட்டிக் கொடுத்துப் பணியிடங்களைப் பல பல்கலைக்கழகங்களில் பெற்றவர்கள் ஊமைகளாய், ஆமைகளாய் அடங்கிக் கிடப்பதும், லஞ்சத்தின் விசுவரூபத்திற்குக் காரணம்தானே!
பல்கலைக்கழகத்தில் ஒரு பணியிடத்திற்கு நேர்முகம் நடத்தப்படும்போது, உரியவரைத் தேர்ந்தெடுக்க மற்ற பல்கலைக்கழகங்களில் இருந்து நான்கு வல்லுநர்கள் வரவழைக்கப்படுகிறார்கள். சில நேரங்களில் ஆளுநரின் பிரதிநிதி ஒருவரும் அத்தேர்வுக்குழுவில் இடம் பெறுவார். நேர்முகத்தின்போது துணைவேந்தர் குறிப்பிட்ட ஒருவரிடம் கரன்சியைப் பெற்றுக்கொண்டு, அவரை நியமிக்க நினைத்தால், வல்லுநர்கள் சேர்ந்து, அதனை மறுதலிக்கலாம். ஆனால், பெரும்பாலும் செல்லுகின்ற வல்லுநர்கள் பயணப்படியைக் கறாராக வசூலிப்பதிலும், போண்டா, பஜ்ஜியிலுமே திருப்தி அடைந்து வந்துவிடுகிறார்கள்.
சென்னைப் பல்கலைக்கழகத்தில் மால்கம் ஆதிசேசையா என்றொரு துணைவேந்தர் இருந்தார். அவர் ஒவ்வொரு மாதமும் ஒரு ரூபாய் மட்டுமே ஊதியமாகப் பெற்றுக் கொண்டார். பல்கலைக்கழகத்தின் அனைத்துத் துறைகளிலும் புனிதம் கவசமாகக் காத்து நின்றது என்றால், அவருடைய காலத்தில்தான்! மூன்றாண்டுகள் கழித்து, அவர் விடைபெற வந்தபோது, அன்றைய முதல்வரே மறுமுறையும் அவரைத் தொடர்ந்து இருக்கும்படி வேண்டினார். அதற்கு மால்கம் ஆதிசேசையா, "நீங்கள் இரண்டாவது முறை யான் என்ன செய்ய வேண்டும் என எதிர்பார்க்கிறீர்களோ, அதனை முதல் தவணையிலேயே செய்துவிட்டேன்' என மறுதலித்து விடைபெற்றார்.
அதற்குப் பிறகு அண்மைக் காலத்தில் ஒரு துணைவேந்தர் வந்தார். அவரைப் போல் லஞ்சத்தை இரசாயன முறையில் நடத்தியவர் யாரும் இருக்க முடியாது. நூற்றுக்கணக்கில் பணியிடங்களை நிரப்பினார். பணி நியமனத்திற்கு வருபவர்களிடத்தில், அவர் கைநீட்டி வாங்கியதில்லை. காரணம், இரசாயனக் கலவை படிந்த கரன்சிகளிடமிருந்து தப்பிக்க வேண்டுமே! தன்னுடைய தரகர்கள் மூலம் உத்தரப்பிரதேசத்திலும், தில்லியிலும் இருக்கும் வங்கிக் கணக்குகளில் தொகையைச் செலுத்திவிட்டு, செலானைக் கொண்டு வந்து கொடுத்துவிட்டால் காரியம் நடந்துவிடும்.
தர்ம தேவதை இப்பொழுது நடமாடும் அதே கோவை மாவட்டத்தில், தீவட்டிக் கொள்ளை அடிக்கின்றபோதே, கையும் களவுமாக ஒரு பொறியியல் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பிடிபட்டார். ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும் பெற்றார். சிறைச்சாலைக்குச் செல்லும் வழியில் பத்திரிகை நிருபர்கள் சந்தித்து, "படித்த நீங்கள் இப்படிச் செய்யலாமா?' எனக் கேட்டபோது, அவர் ஓர் அருமையான பதிலைச் சொன்னார். "ஒவ்வொரு சனிக்கிழமையும் ஒரு கான்ட்ராக்டர், தனது பணியாளர்களுக்கு வாரச் சம்பளம் போடுவதைப் பார்த்திருக்கிறீர்களா? அதைப்போலத்தான் நானும் ஒவ்வொரு சனிக்கிழமையும் துறை சார்ந்த அமைச்சருக்குக் கொட்டி அழ வேண்டியிருந்தது' என அக்கினிக் குழம்பைக் கக்கிவிட்டுப் போனார்.
எனவே, கல்வித் துறையில் ஊழல் நடமாடுவதற்கு முத்தரப்புமே காரணம் எனலாம். ஆனால், பெருந்தலைவர் காமராசர் முதலமைச்சராக இருந்த காலத்தில், கல்விமான்கள், அதிகாரிகள் தங்கள் கைவரிசையைக் காட்ட முடியவில்லை. சான்றாக ஒரு நிகழ்ச்சியைச் சுட்டலாம். நாடு முழுமையும் இருந்த பார்வையிழந்த மாணாக்கர்கள் தங்கிப் படிப்பதற்கென ஆங்கிலேயர்கள், சென்னை அருகே பூந்தமல்லியில் ஒரு பெரிய கல்வி வளாகத்தையே நிறுவியிருந்தனர்.
கர்மவீரர் காமராசர் முதல்வராக இருந்த காலத்தில், ஐக்கிய நாட்டு நிறுவனம் தமிழ்நாட்டில் ஒரு மருத்துவ நிலையத்தையும் ஓர் ஆராய்ச்சி நிறுவனத்தையும் நிறுவ முன் வந்தது. அதற்கு இடந்தேடி அலைந்த மருத்துவத் துறையினர், பார்வையிழந்த மாணவர்கள் தங்கிப் படிக்கும் பூந்தமல்லி வளாகத்தையே தேர்ந்தெடுத்து, அதனைத் தரும்படி கல்வித் துறைக்கு விண்ணப்பித்தனர். கல்வித் துறையினரும் பார்வையிழந்த மாணவர்களுக்கு வளாகத்தின் மூலையில் ஓரிடத்தை ஒதுக்கிக் கொடுத்துவிடலாம் என எழுதிக் கோப்புகளைத் தயாரித்தனர். ஆனால், பிரச்னையின் கனத்தையுணர்ந்த கல்விக் காவலர் நெ.து. சுந்தரவடிவேலு முதல்வரின் பார்வைக்கு இதனைக் கொண்டு சென்றார்.
முதல்வர் மருத்துவத்துறை அதிகாரிகளையும் கல்வித்துறை அதிகாரிகளையும் வரவழைத்தார். "ஆங்கிலேயர்கள் இச்சொத்தைத் தனியார்களிடம் ஒப்படைத்தால் வியாபாரம் செய்துவிடுவார்கள் என்று எண்ணித்தானே அரசாங்கத்திடம் ஒப்படைத்துச் சென்றிருக்கிறார்கள். அவர்களுடைய நம்பிக்கையை நாம் வீணடிக்கலாமா? அரசாங்கமே நம்பிக்கை துரோகம் செய்தால், இனி எதிர்காலத்தில் யார் அறக்கட்டளைகளை நிறுவ முன்வருவார்கள். அவர்கள் விட்டுப்போன ஒரு காரியத்தை வேறு ஒன்றுக்குப் பயன்படுத்துவது முறையன்று; நாணயம் தவறி நடப்பதற்கு நாம் முன்னுதாரணம் ஆகிவிடக்கூடாது. ஐ.நா. சபை உதவிக்கு வேறு இடத்தைப் பாருங்கள்' எனச் சொல்லியனுப்பினார். கர்மயோகி காமராசர் போன்ற ஆளும் வர்க்கமும், மால்கம் ஆதிசேசையா, நெ.து. சுந்தரவடிவேலு போன்ற கல்விமான்களும் இருந்துவிட்டால், கல்வித்துறை சரசுவதி கையில் வீணையாக இருக்கும்; அன்றெனில் கட்டைத் தொட்டியில் கிடக்கும் விறகாகிவிடும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு - காஷ்மீர்: பாதுகாப்புப் படையின் ‘ஆபரேசன் த்ராஷியில்’ ஜெய்ஷ்-ஏ-முகமது தளபதி பலி!

”Vijay அரசியலுக்கு வருவது அவரின் ஜனநாயக உரிமை, ஆனால்..!” இயக்குநர் Raju Murugan!

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review

மின்சாரத் தேவையைத் தொடர்ந்து நிலக்கரித் தேவை அதிகரிக்கும்!

விரைவில் Dragon 2? PR கொடுத்த Update! | Cinema Updates | Dinamani Talkies

SCROLL FOR NEXT