நடுப்பக்கக் கட்டுரைகள்

ஆன்மிக அரசியல்

ஆன்மிக அரசியல் என ரஜினிகாந்த் அறிவித்த பிறகு பல்வேறு விதமான விவாதங்களும் கருத்துகளும், கேள்விகளும்,கிண்டல்களும்,விமர்சனங்களும் ஆன்மிக அரசியல் குறித்து வந்த வண்ணம் உள்ளன.

அா்ஜுன் சம்பத்

ஆன்மிக அரசியல் என ரஜினிகாந்த் அறிவித்த பிறகு பல்வேறு விதமான விவாதங்களும் கருத்துகளும், கேள்விகளும்,கிண்டல்களும்,விமர்சனங்களும் ஆன்மிக அரசியல் குறித்து வந்த வண்ணம் உள்ளன.
ஆன்மிக அரசியல் என்றால் தர்மம், நியாயம் ஆகும். சாதி, மத வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டது என சுருக்கமாக, தீர்க்கமாக ரஜினி பதில் சொல்லி முடித்துவிட்டார். ஆனால் யானையைத் தடவிப் பார்த்த குருடர்கள் யானையின் வடிவம் சொல்வதுபோல ஆளுக்கு ஒரு கருத்தைச் சொல்கின்றனர். உண்மையில் நம் நாட்டில்ஆன்மிகம் என்பது அரசியலுக்குப் புதிதல்ல. நமது பாரத நாட்டில் ஆன்மிகவாதிகள், துறவிகள், ரிஷிகள், முனிவர்கள், சித்தர்கள் அருளாளர்கள் அரசாட்சிபுரிந்துள்ளனர்.
அரசாட்சி புரியும்போதே துறவு மனப்பான்மையுடன், ஜீவன் முக்தர்களாக அரசு நடத்திய ஜனக மஹாராஜா போன்ற பலர் தர்மராஜ்ஜியம் நடத்தியுள்ள வரலாறும் உண்டு. தமிழகத்தில்  ஆழ்வார்கள், நாயன்மார்களில் பலர் மன்னர்களாக மந்திரிகளாக இருந்து அரசுபுரிந்துள்ளனர். சேக்கிழார் பெருமான், மாணிக்கவாசகர் உள்ளிட்டோர் முதலமைச்சராக இருந்து அரசியல் நடத்தியுள்ளனர். சேரமான் பெருமான் (சுழற்றிவார்நாயனர்), நின்றசீர் நெடுமாறன், புகழ்சோழர் நாயனார் உள்ளிட்ட பல நாயன்மார்கள் மன்னர்களாக இருந்து அரசாட்சிபுரிந்து உள்ளனர். குலசேகர ஆழ்வார், திருமங்கையாழ்வார்ஆகியோர் மன்னர்களாக இருந்து குடிமக்கள் நலன் பேணி உள்ளனர். மன்னர்களாக இருந்த சேர, சோழ, பாண்டியர்கள் தலைசிறந்த ஆன்மிகவாதிகளாக இருந்து, அறம் பிறழாமல், நீதி தவறாமல் அரசாட்சி செய்துள்ளனர். நமது ராஜ நீதி, மனிதர்களுக்கு மட்டுமல்லாது அனைத்து ஜீவராசிகளுக்கும் நீதி வழங்கியது. 
அரசாட்சி தர்மங்கள், நீதி நியாயங்கள், வரிவசூல் செய்யும் முறைகள் இவையெல்லாம் நமது நாட்டில் சிறப்பாக இருந்துள்ளன. அரசியல், அரசர்கள் குறித்தும்  அரசு நிர்வாகம் ஆகியவற்றைக் குறித்து நீதிநூலான திருக்குறள் நமக்கு நல்வழி காட்டியுள்ளது. சாணக்கிய நீதி நூலானஅர்த்த சாஸ்திரம், அதாவது அரசியல் நூல், கௌடில்யரால் எழுதப்பட்டது.
ஆட்சி நிர்வாகத்தில் சாணக்கியர் எப்படி இருந்தார் என்றால், அவரது இல்லத்தில் திருட வந்தவர்கள் பொருட்களை களவாடிய பிறகு, அங்கே பார்த்தால் ஒரு முதியவர் குளிரில் நடுங்கியபடி படுத்திருந்தார். அருகில் ஏராளமான போர்வைகள், கம்பளிகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. 'என்ன இது! இந்த முதியவர்முட்டாளாக இருக்கிறாரே! போர்வை ஒன்றை எடுத்துப் போர்த்தி உறங்குவதுதானே' என சிந்தித்தனர்.
ஒரு போர்வையை எடுத்து அவருக்குப் போர்த்தினர். விழித்துக்கொண்ட முதியவர் திருடர்களை விசாரித்தார், திருடர்களும் முதியவரை விசாரித்தனர். பிறகுதான் திருடர்களுக்குத் தெரிந்தது, இது ராஜகுரு சாணக்கியரின் வீடு, அந்த முதியவர் சாணக்கியர் என்று. சாணக்கியரிடம், 'ஏன் நீங்கள் இந்தப் போர்வையை உபயோக்கிக்கவில்லை' எனக் கேட்டதற்கு சாணக்கியர் சொன்னார், 'இவைகள் குளிரால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை எளிய மக்களுக்கு விநியோகிக்க வைக்கப்பட்டுள்ள மக்கள் சொத்து. இது எனக்கு சொந்தமானது அல்ல. இதை நான் உபயோகிப்பது திருட்டுக்கு சமம்' என்று கூறினார். 
மக்கள் நலனுக்காக எந்த தியாகத்தையும் செய்ய தயாராக இருக்கும் அரசியல் ஆன்மிக அரசியல். ஆன்மிகம் மனதை தூய்மைப்படுத்துகின்றது. பற்றற்ற தன்மையை உருவாக்குகிறது. தாமரை இலையில் தண்ணீர் ஒட்டாமல் இருப்பது போல லௌகிக வாழ்க்கையில் ஒருவன் இருந்தாலும், அவன் மனம் இறைவனை நாடுகிறது. 'கர்மத்தைச் செய், பிரதிபலனை இறைவன் கொடுப்பான்' எனும் கீதையின் அடிப்படையில், நமது வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும். விருப்பு வெறுப்பு இல்லாமல் மக்களுக்கு தொண்டு செய்ய ஆன்மிகவாதிகளால் இயலும்.வெற்றி தோல்விகளை சமமாக கருதும் மனப்பாங்கு ஆன்மிகவாதிகளுக்குரியது. இன்ப, துன்பங்களையும் லாப, நஷ்டங்களையும், சமமாக ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தை ஆன்மிகம் கொடுக்கும்.   பாரதத்தின்சிறப்பு ஆன்மிகம் ஆகும்.
'பாரதம் உடல் என்றால் ஆன்மிகமும் தர்மமும் பாரதத்தின் ஆன்மா' என சுவாமி விவேகானந்தர் குறிப்பிடுகிறார். ரஜினிகாந்த் புகழ் பெற்ற நடிகராக இருந்து பணம் புகழ் இவை அனைத்தையும் பார்த்தவர். ஆனாலும் தலைகனம் இல்லாதவர், நல்ல அனுபவம் உள்ளவர், ஆன்மிக நாட்டம் உடையவர். தனது 68-ஆவது வயதில் தமிழக மக்களுக்கு நன்மையைச் செய்ய வேண்டும் என்கிற தூய உள்ளத்தோடு ஆன்மிக அரசியல் பாதையைத் தேர்ந்தெடுத்துள்ளார். 
ஆன்மிகத்தையும் ஆன்மிகச் சின்னங்களையும் இங்கே மதச்சின்னங்களாக சித்திரிக்கின்றனர். பாபா முத்திரை (அபான முத்திரை) தாமரை, பாம்பு இவைகள் எல்லாம் யோகத்தையும் தியானத்தையும் குறிப்பதாகும். இவற்றை இந்து மத அடையாளங்கள் என முத்திரை குத்தி, ரஜினிகாந்த் மதவாத அரசியலை முன்னெடுக்கிறார் என்று தவறான பிரசாரம் செய்கின்றனர். ஆன்மிக அரசியல் மீது இனவாதத்தையும் பிரிவினைவாதத்தையும் அடையாளப்படுத்தி, ரஜினியின் அரசியலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆன்மிக அரசியலுக்குப் பதவி மோகம், அதிகார வெறி ஆகியவை கிடையாது. தந்தை சொல் மிக்க மந்திரமில்லை எனும் வாக்கிற்கு சான்றாக இராமன் மகுடம் துறந்து காடேகினான். ஆன்மிக அரசியல் நடத்திய மனு நீதிச் சோழன், பசுவுக்கு நீதி வழங்கினான். சோழ மன்னர்கள் உலகெங்கிலும் சைவத்தையும் தமிழையும் பரப்பினார்கள். 
இலங்கையில் மகிந்தனை வென்ற பிறகும் அவனுக்கே முடிசூடினார்கள். நமது மன்னர்கள் எங்கும் எப்போதும் மதம் பரப்பியது கிடையாது. மதச்சார்பற்ற அரசராகவே கோலோச்சினர். இந்தியாவில் முதன்முதலாக ஒரு மதச்சார்புடையஅரசை- மௌரிய பேரரசர் அசோகன் மட்டும்தான் புத்தமத அரசை- நிறுவினார். தமிழக மன்னர்களில் சிலர் மதம் மாறி சமண- பௌத்த மதங்களின் குருமார்களின் சொற்படி ஆட்சி நடத்தினர். இந்தக் காலத்தை களப்பிறர் காலம், இருண்ட காலம் என வரலாற்றில் குறிப்பிடுகிறார்கள்.
இந்து மன்னர்கள் யார் மீதும் ஆக்ரமிப்பு செய்தது இல்லை. பிற மத வழிபாட்டுத் தலங்களை இடித்தது இல்லை. அடுத்தவர் செல்வத்தைக் கொள்ளையடித்து தன் நாட்டு மக்களை வளப்படுத்தியது இல்லை. 
மகான் சமர்த்த இராமதாசர், இந்து சாம்ராஜ்யம் அமைத்த வீரசிவாஜிக்கு குருநாதராக இருந்து வழிகாட்டியுள்ளார். சிவாஜி மன்னரை வென்றபோதெல்லாம் ஒளரங்கசீப் படைகள் கோயில்களை இடித்தார்கள், கொள்ளையடித்தார்கள், பெண்களின் கற்பு சூறையாடப்பட்டது. கட்டாய மதமாற்றம் செய்தார்கள், குடிமக்களைக் கொடுமைப்படுத்தினார்கள். ஆனால் மொகலாயப் படைகளை சிவாஜி வென்றபோது மசூதிகளை இடிக்கவில்லை, இசுலாமிய பெண்கள் பாதுகக்கப்பட்டனர். சத்திரபதி சிவாஜியின் இந்து சாம்ராஜ்ஜியத்தின் ஆன்மிக அரசியல் சாதி மத வேற்றுமையை அகற்றியது; அந்நிய ஆக்கிரமிப்பிலிருந்து பாரத நாட்டைக் காப்பாற்றியது. 
அதிகார வெறி, பதவி மோகம், ஆன்மிக அரசியலுக்கு கிடையாது. மக்கள் நலனே பிரதானமாக இருக்கும். நமது மன்னர்கள் தாங்கள் தங்களின்அரண்மனைகளை அழகாக கட்டி ஆடம்பர வாழ்க்கை வாழ்வது அறத்திற்குப் புறம்பானதாக கருதப்பட்டது. மாறாக, பெரிய கோயில்களைக் கட்டினார்கள்.
கோயில் கோபுரத்தைவிட உயரமாக வீடு இருப்பது கூடாது என்பது நமது சாஸ்திரம். இறைவனின் பிரதிநிதிகளாகவே மன்னர்கள் திகழ்ந்தனர். சாதாரண குடிமக்களுக்கும் சம நீதி வழங்குவது, கோயில்கள் கட்டியது மட்டுமல்ல, குளங்களை வெட்டினர், ஆறுகளைக் காத்தனர், அணைகள் கட்டினர், விவசாயத்தைப் பெருக்கினர், கலைகளை ஆதரித்தனர். தனது நாட்டு மக்களின் நலனுக்கு முக்கியத்துவம் கொடுத்தனர். மக்கள் கருத்தறிந்து தேவையறிந்து நிர்வாகம் நடத்தப்பட்டது. இன்றைய ஜனநாயகத்தின் முன்னோடியான தேர்தல் முறை குடவோலை முறை மூலம் நடத்தப்பட்டது. வாக்காளர்களுக்கும் வேட்பாளர்களுக்கும் தகுதிகள் வரையறுக்கப்பட்டு இருந்தது. உத்திரமேரூர் கல்வெட்டுக்கள் தெளிவாக இதுபற்றிய விசயங்களைக் குறிப்பிட்டுள்ளது. 
மன்னராட்சி காலத்தில் மன்னன் மஹாவிஷ்ணுவின் அம்சமாக கருதப்பட்டான். தற்போது மக்களாட்சி, மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்கிற நிலை உருவாகி உள்ளது. ஆன்மிக அரசியலில் மதவெறிக்கு இடம் கிடையாது, சாதி வெறிக்கும் இடம் கிடையாது. தனது சொந்த நாட்டு மக்களை கொடுமைப்படுத்தியவர்கள் கொடுங்கோலர்கள் என மக்களால் வெறுக்கப்பட்டார்கள்! வீழ்த்தப்பட்டார்கள்! பொதுவாக, ஆன்மிகவாதிகள் அரசியல்வாதிகளாக மாறினால் அது அரசியலை தூய்மைப்படுத்திடும். 
தேசியம், தெய்விகம் இரண்டும் இரு கண்கள் என்பதை முத்துராமலிங்கத்தேவர் தெளிவுபடுத்துகிறார். வ.உ.சிதம்பரம் பிள்ளை, ஓமந்தூரார், இராஜாஜி, காமராஜர் ஆகியோர் தலைசிறந்த ஆன்மிகவாதிகளாகவும், தேசியவாதிகளாகவும் திகழ்ந்தார்கள்.
வெள்ளையரிடமிருந்து நம் நாட்டை விடுதலை செய்யப் போராடியவர்களில் பெரும்பாலோர் ஆன்மிகவாதிகள்தான். நாத்திகவாதிகளாக இருந்த பலர் நம் நாட்டிற்கு சுதந்திரம் தேவையில்லை என்றனர். ஆன்மிக அரசியல் என்பது நேர்மையான அரசியல், வெறுப்பு அரசியல் இல்லை. வன்முறைஅரசியல் ஆன்மிக அரசியலாக இருக்க முடியாது. எல்லோரையும் அரவணைக்கும் நல்லிணக்க அரசியல், நாகரிக அரசியல், அநீதிக்கு எதிரான, லஞ்ச ஊழலுக்கு எதிரான, சுரண்டலுக்கு எதிரான அரசியல்தான் ஆன்மிக அரசியல்.
ஆன்மிக அரசியல் என்பதுதான் உண்மையான மதச்சார்பற்ற தன்மையாகும். கடவுளுக்கும் ஆன்மிகத்திற்கும் மதம் கிடையாது. நல்லதையே நினைப்போம், நல்லதையே செய்வோம், நல்லதே நடக்கும் என்பது ஆன்மிக அரசியலாகும்.
உண்மை, உழைப்பு உயர்வு என்பது ரஜினியின் ஆன்மிக அரசியலின் தாரக மந்திரம் ஆகும். சுதந்திரத்திற்கு பிறகு கட்சி அரசியல் ஊழல் அரசியல் என பலவற்றை பார்த்துவிட்டோம். திராவிட அரசியல், தேசிய அரசியல் என பல அணுகுமுறைகளைப் பார்த்துவிட்டோம். கம்யூனிச, சோஷலிச அரசியல் கட்சிகளையும் பார்த்துவிட்டோம்.
ஆன்மிக அரசியல் என்பது தமிழகத்திலே ஒரு மாற்றத்தை உருவாக்கும் என தமிழக மக்கள் கருதத் துவங்கிவிட்டனர். ஐம்பதாண்டு கால திராவிட அரசியல், அதற்கு முன் காங்கிரஸ் அரசியல் ஆகியவற்றை அனுபவித்துள்ள தமிழக மக்கள், மாற்றத்தை விரும்புகின்றனர். ரஜினியின் ஆன்மிக அரசியலுக்கு மக்களிடம் அமோக ஆதரவு வந்துள்ளது. ரஜினியின் ஆன்மிக அரசியல் நடவடிக்கைகளை அனைவரும் கூர்ந்து கவனித்துவருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆப்கன் எல்லையில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! 15-க்கும் மேற்பட்டோர் பலி!!

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT