நடுப்பக்கக் கட்டுரைகள்

கிரிக்கெட்டை அவுட்டாக்கும் ஐபிஎல்

ஐபிஎல் கிரிக்கெட்டின் 11-ஆவது ஆண்டுக் கொண்டாட்டத்துக்கு இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் உற்சாகமாகத் தயாராகி வருகின்றனர்.

சு. வெங்கடேஸ்வரன்

ஐபிஎல் கிரிக்கெட்டின் 11-ஆவது ஆண்டுக் கொண்டாட்டத்துக்கு இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் உற்சாகமாகத் தயாராகி வருகின்றனர். இதற்கான முதல் பணியான வீரர்களின் ஏலம் வரும் 27, 28-ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது. அஃறிணைகள் மட்டுமே ஏலத்தில் விடப்படுவதைப் பார்த்து வந்த நமது நாட்டில், மனிதர்களை ஏலத்தில் எடுக்கும் புதுமையைப் புகுத்தியது ஐபிஎல்! வெளிநாட்டில் இருந்தும் இந்த ஏலத்துக்கு ஏராளமான வீரர்கள் வரிசைகட்டி நிற்கிறார்கள் என்பது கூடுதல் சிறப்பு.
 8 அணிகள் பங்கேற்க இருக்கும் நிலையில், இந்த ஆண்டு 1,122 வீரர்கள் ஏலத்துக்கு முன்வந்துள்ளனர். உலகின் வேறு எங்கும் கிடைக்காத அளவுக்கு பணமும், புகழும் கிடைப்பதே கிரிக்கெட் வீரர்கள் இந்தப் போட்டியில் பங்கேற்க முண்டியடிப்பதற்கு முக்கியக் காரணம்.
 இந்த ஆண்டு முதல், ஐபிஎல் போட்டிக்கு எந்த இடையூறும் வரக்கூடாது என்பதற்காக தனது செல்வாக்கைப் பயன்படுத்தி ஐபிஎல் நடைபெறும் இரு மாதங்களில் உலகில் வேறு எந்த நாட்டு அணிகளிலும் கிரிக்கெட் போட்டி நடத்தாமல் இருக்க ஏற்பாடு செய்து வருவதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ). வெளிநாட்டு வீரர்கள் தங்கள் நாட்டு அணி பங்கேற்கும் போட்டிகளில் பங்கேற்கச் செல்வதைத் தடுக்கவே இந்த ஏற்பாடு.
 ஏனெனில், ஒவ்வொரு ஐபிஎல் போட்டிக்கும் ஒளிபரப்பு உரிமை மூலம் மட்டும் தலா ரூ.55 கோடி பிசிசிஐ-க்கு கிடைக்கிறது. ஐபிஎல்-லில் வீசப்படும் ஒரு பந்தை ரசிகர்கள் பார்ப்பதன் மூலம் பிசிசிஐ-க்கு கிடைக்கும் வருமானம் 23.3 லட்சம். ஏனெனில், அடுத்த 5 ஆண்டுகளுக்கான ஐபிஎல் ஒளிபரப்பு உரிமையை ரூ.16,347.50 கோடி கொடுத்து வாங்கியுள்ளது ஸ்டார் குழுமம். இது கடந்த முறை சோனி நிறுவனம் கொடுத்ததைவிட 3 மடங்கு அதிகம். இங்கிலாந்தில் கால் பந்தாட்டத்துக்கு நடைபெறும் இங்கிலீஷ் பிரீமியர் லீக் போட்டிக்கு (ஒரு போட்டிக்கு ரூ.84 கோடி வருவாய்) அடுத்தபடியாக, அதிக பணம் கொட்டும் இரண்டாவது தனியார் விளையாட்டு அமைப்பாக குறுகிய காலத்தில் உருவெடுத்துள்ளது ஐபிஎல்.
 கிரிக்கெட்டில் பொழுதுபோக்கு அம்சங்கள் என்ற மசாலாவைத் தடவி "சூதாட்டம்' எனும் எண்ணெய் சட்டியில் போட்டு வறுத்து எடுத்தால் அதுதான் ஐபிஎல். ஐபிஎல் ரசிகர்களுக்கு இது சற்று மிகையாகத் தோன்றலாம் என்றாலும், அதுதான் கடந்த கால உண்மை.
 "ஐபிஎல்' சிறு குறிப்பு வரைக? என்று கேள்வி எழுப்பினால், இந்திய மக்களின் "அதிதீவிர' கிரிக்கெட் ரசனையைப் பயன்படுத்தி பிசிசிஐ (இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்) எனும் தனியார் விளையாட்டு அமைப்பு தனது கிளை நிறுவனமான ஐபிஎல் மூலம் பணம் சம்பாதிக்கிறது. நாட்டில் உள்ள பெரும் தொழிலதிபர்களுக்கும், சினிமா நட்சத்திரங்களுக்கும் இதில் பங்கு உண்டு' என்று எளிதாக விளக்கமளிக்க முடியும்.
 கிரிக்கெட் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்ற ஐபிஎல் போட்டியை இந்த அளவுக்கு கடுமையாக விமர்சிப்பது ஏன்? என்ற கேள்வி எழலாம். ஆனால் ஐபிஎல் போட்டியின் 11 ஆண்டுகால வரலாற்றை சற்றுத் திரும்பிப் பார்த்தால் இது எந்த அளவுக்கு உண்மை என்பது புரியும்.
 ஐ.பி.எல். போட்டியின் தொடக்கத்தில் இருந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்ப்பவர்கள் அரங்கில் "சிக்கன உடையில்' நடனமாடும் "சியர் லீடர்ஸ்'. இவர்களுக்கும் கிரிக்கெட்டுக்கும் என்ன தொடர்பு? இப்பெண்கள் யாருக்கு, எந்த வகையான உற்சாகத்தை அளிக்கிறார்கள் என்பதைப் போட்டி ஏற்பாட்டாளர்கள் விளக்கினால்தான் புரியும்.
 அடுத்து வருவது, கிரிக்கெட்டுடன் பிரிக்க முடியாக அம்சமாகி வரும் "ஸ்பாட் பிக்ஸிங்' என்கிற சூதாட்டம். 2012-ஆம் ஆண்டு ஐ.பி.எல். போட்டியில் 5 வீரர்கள் "ஸ்பாட் பிக்ஸிங்' முறைகேட்டில் ஈடுபட்டதாகச் சிக்கினார்கள்.
 ஏலத்தில் தாங்கள் எடுக்கப்பட்டதைவிட, அதிகமான அளவு (கருப்பு) பணத்தைத் தருகிறார்கள் என்று "ஸ்பாட் பிக்ஸிங்கில்' சிக்கிய வீரர் ஒருவரே கேமரா முன்பு ஒப்புக் கொண்டார். இவையெல்லாம் அடுத்த சில நாள்களிலேயே மாற்றப்பட்டு பின் மறைக்கப்பட்டும், மறக்கடிக்கப்பட்டும் விட்டன.
 மைதானத்தில் வீரர்களின் விளையாட்டைவிட மைதானத்துக்கு வெளியே அணி உரிமையாளர்களும், வீரர்களும் அடிக்கும் கும்மாளம்தான் அதிகம். "கொல்கத்தா நைட் ரைடர்ஸ்' அணி உரிமையாளரான நடிகர் ஷாரூக் கான், குடித்துவிட்டு மைதானத்துக்குள் வந்து செய்த சேட்டைகளை மறக்க முடியாது. நடிகைகள் புடைசூழ சுற்றும் உரிமையாளர்கள் தொடங்கி, "ரேவ் பார்ட்டி'க்குச் சென்று போலீஸôரால் கைதான ஐ.பி.எல். வீரர்கள் வரை, பலரையும் கடந்த ஐபிஎல் போட்டிகளில் கண்டோம். 2012-இல் ராயல் சேலஞ்சர் அணியில் இடம்பெற்றிருந்த ஆஸ்திரேலிய வீரர் லூக் போமர்ஸ்பேக், அமெரிக்கப் பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டபோது பாஸ்போர்ட் முடக்கப்பட்டது.
 ஐ.பி.எல். போட்டியை எதிர்த்து 2011-ஆம் ஆண்டில் தொடரப்பட்ட வழக்கில், "ஐ.பி.எல். போட்டிக்கு வரி விலக்கு அளிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது' என்று சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்து, அரசிடம் விளக்கம் கேட்டதும் உண்டு.
 மகாராஷ்டிரத்தில் வறட்சி நிலவியபோது மைதானங்களைப் பராமரிக்க நீரை வீணடித்து மும்பை உயர் நீதிமன்றத்தின் கண்டனத்துக்கும் உள்ளானது ஐபிஎல் நிர்வாகம். ஐபிஎல் உத்தியை உருவாக்கி அதன் தலைவராக இருந்த லலித் மோடி, 3 ஆண்டுகளில் பல்வேறு முறைகேடு புகார்களில் சிக்கி லண்டனுக்கு தப்பிவிட்டார்.
 இவை எல்லாவற்றுக்கும் மேலாக சூதாட்டப் புகாரில் சிக்கிய சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் கடந்த இரு ஆண்டுகளாக ஐபிஎல் போட்டி பங்கேற்க தடை விதிக்கப்பட்டது என ஐபிஎல் மீதான குற்றச்சாட்டுகளை அடுக்கிக் கொண்டே போகலாம். இது தவிர ஐபிஎல்லின் பெரியண்ணனான பிசிசிஐ, உச்ச நீதிமன்றத்திடம் சிக்கி சீரழிந்து வருவதை தனிப் புத்தகமாகவே எழுதலாம்.
 இவற்றை எல்லாம் மீறி சீசன் தவறாமல் ஐபிஎல் நடத்துவதற்கு பணமே பிரதானம் என்ற கொள்கையும், எதிலும் லாபம் பார்க்கும் தொழிலதிபர்களும்தான் காரணம் என்பதை சொல்லித் தெரிய வேண்டியது இல்லை. ஐபிஎல் நீங்காப் புகழுடன் வளர்ந்து வருவதற்கு கிரிக்கெட் ரசிகர்கள் கண்மூடித்தனமாக அளித்து வரும் ஆதரவுதான் அடுத்த காரணம். அந்த அளவுக்கு மதியை மயக்கும் உத்திகள் ஐபிஎல்-லில் கடைப்பிடிக்கப்படுகின்றன. ஒவ்வொரு முக்கிய நகரின் பெயரிலும் ஓர் அணி அமைத்து ஊர்ப் பற்றையும், மாநிலப் பற்றையும் ஊட்டுகிறார்கள்.
 இத்தனை களேபரங்களுக்கு மத்தியில், இவ்வாண்டின் ஐபிஎல் ஏலம் தொடங்க இருக்கிறது. இதில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பல கோடி ரூபாய்க்கு வீரர்கள் ஏலம் போவார்கள் என்று தெரிகிறது. எது எப்படிப் போனால் என்ன... இரண்டு ஆண்டு தடைக்குப் பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் போட்டியில் பங்கேற்க இருக்கிறது. அதற்கு "விசில் போடுவோம்' என்ற ரசிகர்கள் கூட்டம் இருக்கும் வரை எதுவும் மாறாது.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முன்னேர் வழியில் பொன்னேர் பூட்டிய கம்பர்

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 'ஹவாலா பணத்தை' கைப்பற்றுவோம்: இபிஎஸ் சபதம்

எப்படி நிகழ்ந்தது அது?

குடும்பக் கட்டுப்பாடு குறித்த முதல் கவிதை

அறிவுடையோர்: துறவுநெறியில் மனம் செலுத்துவர்

SCROLL FOR NEXT