முகப்பு
நடுப்பக்கக் கட்டுரைகள்

அந்நியமாகிவிட்ட உறவுகள்

டிஜிடல் தொழில்நுட்பத்தால் அமெரிக்கா அருகில் வந்து விட்டது. ஆனால் பாட்டி செய்து கொடுக்கும் பணியாரம்தான் பாவம் பேரப்பிள்ளைகளுக்கு

Updated On : 30 ஜனவரி, 2024 at 1:01 PM
பகிர்:

டிஜிடல் தொழில்நுட்பத்தால் அமெரிக்கா அருகில் வந்து விட்டது. ஆனால் பாட்டி செய்து கொடுக்கும் பணியாரம்தான் பாவம் பேரப்பிள்ளைகளுக்கு தூரமாகிவிட்டது. எங்கோ ஓர் ஊரில் யாரோ ஒரு முதியவருக்கு நடக்கும் அநீதி சமூக ஊடகங்கள் மூலம் பகிரப்பட்டு ஆயிரமாயிரம் பேர் கண்ணீர் சிந்துகின்றனர். ஆனால், கிராமங்களில் நாள்தோறும் நமக்காக காத்திருக்கும் உறவுகளை நினைத்து யாரும் கண்ணீர் சிந்துவதில்லை.
அன்று கிராமங்களில் வசித்து வந்தவர்களின் பிரதான தொழிலாக இருந்து வந்த விவசாயம், இன்று தண்ணீர்ப் பிரச்னை, வேலையாள் பிரச்னையால் கைவிடப்பட்டு, விளைநிலம் ஒன்றுக்கும் உதவாத நிலமாக மாறி விட்டது. பல இடங்களில் விவசாயத்தின் மூலம் பெரிய லாபம் கிட்டாததால் விவசாய நிலங்கள் மனைகளாக உருமாறி வருகின்றன.இந்தியா விவசாய நாடு என்று கூறப்பட்டதெல்லாம் கடந்த கால கனவாகவே மாறி வருகின்றன. கிராமங்களில் விவசாயம் செழித்த காலத்தில் குடும்பத்தினர் அனைவரும் கூட்டுக்குடும்பமாக இருந்து விவசாய வேலைகளை கவனித்து வந்தனர்.
தாத்தா அப்பா, சித்தப்பா,பெரியப்பா என அனைவரும் ஒன்றாக ஒரே வீட்டிலேயே இருந்து விவசாயத்தை மேம்படுத்தி வந்தனர். குடும்பத்தினர் அனைவரும் வயலுக்கு செல்வதும், வேலை செய்வதும், இயற்கை உணவுகளை சாப்பிட்டு நலமுடன் இருந்ததும் பழைய வரலாறாகி விட்டது
கிராமங்களில் விவசாயம் இல்லை. அதனால் வேலை தேடி ஊர்ஊராக அலைய வேண்டிய அவல நிலை முந்தைய தலைமுறைக்கு ஏற்பட்டு கூட்டுக்குடும்பம் சிதறி தனித்தனி தீவுகளாக மாறி விட்டன. இருந்தாலும் நமது முந்தைய தலைமுறையினர் பழசை மறக்காமல் பொங்கல் ,தீபாவளி, கோடை விடுமுறை உள்ளிட்ட நாள்களில் கிராமங்களுக்கு சென்று தத்தமது உறவுகளோடு கலந்து பேசி மகிழ்ந்து வந்தனர். இதனால் குடும்ப உறுப்பினர்களிடையே பாசம் இருந்து வந்தது. ஆனால், இன்றைய தலைமுறையினரோ கோடை விடுமுறையில் கூட கிராமங்களுக்கு செல்வதில்லை.
பொருளாதார வசதியில் முன்னேறிக் காட்ட வேண்டும் என்ற முனைப்பில் கிராமத்தை விட்டு வெளியேறிய முந்தைய தலைமுறையினர், நகரங்களில் சிரமப்பட்டு முன்னேறி, அந்த நகர வேகத்துக்குத் தங்களைப் பழக்கி அங்கேயே தங்களின் வாழ்க்கையைத் தொடர நினைக்கிறார்கள். ஒரு காலத்தில் எப்போது பொங்கல் வரும், தீபாவளி வரும் என காத்திருந்து, அந்த நாள் வந்தவுடன் கிராமத்துக் சென்று தங்களின் உறவுகளை பார்த்து வந்தவர்கள் இப்போது தங்கள் பிள்ளைகளைக் கூட கிராமத்துக்கு அனுப்புவதை தவிர்த்து வருகின்றனர்.
தாத்தாக்களும், பாட்டிகளும் தாங்கள் பிறந்து, வளர்ந்த கிராமத்து மண்ணை விட்டு வெளியே வர மனமின்றி விடுமுறை காலங்களிலாவது தங்களது பிள்ளைகள், பேரப் பிள்ளைகள் தங்களைப் பார்க்க வருவார்கள் என நம்பி கோடை விடுமுறை, பொங்கல்,தீபாவளி,ரம்ஜான், கிறிஸ்துமஸ் என விழா தோறும் வழி மேல் விழி வைத்து காத்திருக்கின்றனர்.அப்படி காத்திருக்கும் உறவுகளுக்கு கிடைப்பது ஏமாற்றமே.
ஒவ்வொரு விடுமுறையிலும், 'ஏய்யா எப்போ பிள்ளைகள கூட்டிட்டு வரப்போற... கண்ணுக்குள்ளையே பிள்ளைக இருக்குது...' என தள்ளாடும் பெற்றோர்கள் கூறுவதை அலட்சியப்படுத்தி, 'போட்டி நிறைஞ்ச உலகம்பா இது... லீவுலயும் படிச்சாத்தான் சாதிக்க முடியும்...முடிஞ்சா கூட்டிட்டு வர்றோம்' என கூறும் நகரத்து மக்கள் அதிகம்.
குடும்பம் வசதியாக வாழ வேண்டும் என்று நாம் ஆசைப்பட்டு நகரத்தில் இருந்துகொண்டு பகல், இரவு பார்க்காமல் உழைப்பது சரி. ஆனால், நம்மைப் பெற்றவர்களுக்கு,தங்கள் பேரன்,பேத்திகளை பார்க்கும் ஆசை இருக்கும் என்பதை நாம் உணருவதில்லையை ஏன்?
பெருநகரங்களிலுள்ள, பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் பலர், தங்களின் ரத்த சொந்தங்களையும், தூரத்து உறவுகளையும் பற்றித் தெரியாமலேயே வளர்ந்து வருகிறார்கள் அல்லது வளர்க்கப்பட்டு வருகிறார்கள். 'திருநெல்வேலி மாவட்டத்தில ஏதோ, ஒரு கிராமத்தில் சொந்தக்காரங்க இருக்காங்கன்னு எங்க அப்பா சொல்லியிருக்காங்க' என்பது மட்டுமே அவர்களுக்குத் தெரிந்த ஒரே விஷயம்.
இப்படி காலச் சக்கரத்தில் சுழன்ற முந்தைய தலைமுறை, தாம் பிறந்த கிராமத்தையே அந்நியமாக்கி விட்டதுடன், இன்றைய தலைமுறையினருக்கு கிராமச் சூழலை அடையாளம் காட்டவே மறந்து விட்டது. கிராமத்து பாசம் அறியாமலேயே வளருகின்றனர் இன்றைய பிள்ளைகள்.
கிராமத்துக்குச் செல்ல வேண்டும் என்று நினைக்கும் சில பிள்ளைகளுக்கும் இன்றைய போட்டி நிறைந்த உலகம் அதற்கான வாய்ப்பை அளிக்க மறுத்து வருகிறது.எதிர்த்த வீட்டு பையன் சம்மர் லீவில் நீச்சல் கத்துக்க போறான். அடுத்த வீட்டு சின்னப்பையன் கோடை விடுமுறையில் புது சாப்ட்வேர் படிக்கப் போறான். அந்தப் பொண்ணு பரதநாட்டியம் கத்துக்கப் போகுது, அப்ப நம்ம பிள்ளையையும் சம்மர் ஸ்பெஷல் கோர்ஸுக்கு அனுப்புவோம் என நினைக்கும் பெற்றோர்களால் பிள்ளைகளின் கிராமத்து கனவு சிதைந்து வருகிறது.
இதற்கிடையே நகரத்திலுள்ள பல பள்ளிகள் கோடை விடுமுறையிலும் கூட சிறப்பு வகுப்புகளை நடத்தி வருகின்றன. இதனாலும் கிராமத்துப் பயணம் தடைப்படுகிறது. எங்கோ ஒரு கிராமத்து மூலையில், அதுவும் வாழ்க்கையின் விளிம்பில் இருந்துகொண்டு, தங்களின் பேரன், பேத்தி, மகன், மருமகள் என எல்லோருடைய நலனுக்காகவும், இன்றும் வேண்டிக் கொண்டிருக்கும் தாத்தா, பாட்டியின் மனதைப் புரிந்தாவது, கிராமத்துக்கு வர நகரத்து சொந்தங்கள் முயல வேண்டும். இந்திய கலாசாரத்தின் அடிப்படையான விஷயமே இந்த உறவுகள்தான் என்பதை இளம் தலைமுறையினர் உணர வேண்டும். இந்த விடுமுறையிலாவது நகர மக்கள், உறவுகளை பார்க்க கிராமத்துக்கு 
செல்வார்களா?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.