தமிழ்நாட்டில் இதுவரையில் நிகழ்ந்துள்ள சில அசம்பாவிதங்கள் மூலம் ஆட்சியாளர்கள் பாடம் கற்றிருக்கிறார்களோ இல்லையோ, அண்மையில் நிகழ்ந்த தூத்துக்குடி வன்முறைக்குப் பிறகாவது பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். காரணம், ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை பிரச்னை போன்று தமிழ்நாட்டில் கொதிநிலையில் மேலும் பல பிரச்னைகள் அணிவகுத்து நிற்கின்றன.
"வளர்ச்சி' என்ற முத்திரையுடன் மத்திய - மாநில அரசுகள் மேற்கொள்ளும் எந்த ஒரு புதிய திட்டத்துக்கும் முதலில் எதிர்ப்பை பதிவு செய்துவிடுவது என்பது ஒரு புதிய வகை ஜனநாயகமாக உருவாகி வருகிறது. உள்ளூரில் சிறிய அளவில் தொடங்கும் எதிர்ப்பு, நாளடைவில் அரசியல் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகளால் ஊதிப் பெரிதாக்கப்பட்டு பெரும் போராட்டமாக மாறி விடுகிறது.
நீர், நிலம், காற்று ஆகியவற்றை மாசுபடுத்தும் திட்டங்களால் உள்ளூர் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்போது எதிர்ப்பு ஏற்படுவது என்பது தவிர்க்க முடியாதது. அதற்கு அரசு செவிசாய்க்க மறுக்கும்போது, அந்த எதிர்ப்பை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு சில அரசியல் கட்சிகளும், பொதுநல அமைப்புகளும் ஆதாயம் பெற நினைப்பதும் அதிகரித்து வருகிறது.
தமிழ்நாட்டில் தற்போது நீர், நிலம், காற்று ஆகியவற்றை மாசுபடுத்தும் வகையிலான திட்டங்கள் 50-க்கும் மேலாக இருக்கலாம் என கூறப்படுகிறது. தெற்கே கூடங்குளம் அணுமின் திட்டம் தொடங்கி, ஸ்டெர்லைட் ஆலை, தேனியில் நியூட்ரினோ திட்டம், கிழக்கே காவிரி டெல்டா மாவட்டங்களில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்கள், மேற்கு மாவட்டங்களில் விளைநிலங்களில் எண்ணெய் குழாய் பதிக்கும் திட்டம், வடக்கே சென்னை-சேலம் ஆறுவழிச் சாலை திட்டம், "சாகர்மாலா' திட்டம் என மாநிலம் முழுவதும் எல்லாப் பகுதியிலும் உள்ள பல்வேறு முக்கிய திட்டங்கள் இதில் அடங்கும். இவை எல்லாம் பல ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும் திட்டங்கள் ஆகும். இந்த திட்டங்களுக்கு உள்ளூர் மக்களிடம் மட்டுமின்றி மாநில மற்றும் தேசிய அளவிலும் எதிர்ப்பு இருக்கிறது. நல்ல திட்டமாக இருந்தால்கூட எதிர்ப்புகளால் அவற்றை நிறைவேற்ற காலதாமதம் ஆவதால் முதலீட்டு தொகையும் பல மடங்கு அதிகரித்து மக்கள் வரிப்பணம் வீணாகி வருகிறது.
கடந்த 2002-இல் தொடங்கப்பட்ட கூடங்குளம் முதல் மற்றும் இரண்டாம் அணு உலைகளின் ஆரம்பகட்ட திட்ட மதிப்பு சுமார் ரூ. 13,171 கோடி. ஐந்து ஆண்டுகளில் முடிக்கப்பட வேண்டிய இந்தப் பணி, எதிர்ப்புகளால் பணி முடிய 11 ஆண்டுகள் ஆகியது. திட்டச் செலவும் ரூ. 17,270 கோடியாக உயர்ந்தது. இது ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.
ஸ்டெர்லைட் தாமிர ஆலைக்கு எதிரான போராட்டத்தில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் இறந்துள்ளனர். ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால் மக்களுக்கு அதில் நம்பிக்கை இல்லை. அதற்கு கடந்த கால அனுபவமே காரணம். இதற்கு முன்பும் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டு பின்னர் திறக்கப்பட்டுள்ளது. அதேபோல், இப்போதும் சட்ட நடவடிக்கைகள் மூலம் நீதிமன்ற அனுமதி பெற்று ஆலை மீண்டும் திறக்கப்படலாம் என்ற அச்சம் பொதுமக்களிடையே நிலவுகிறது. அதை உறுதி செய்வது போன்று, ஆலையைத் திறக்க சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப் போவதாக ஆலை நிர்வாகம் தெரிவித்துள்ளது. எனவே, பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு ஏற்பட்டு விட்டதாக கருத முடியாது. நியூட்ரினோ திட்டத்தையும் இடமாற்றம் செய்ய முடியாது என திட்ட இயக்குநர் அறிவித்துள்ளார்.
இந்த கொந்தளிப்பான சூழ்நிலையில் மத்திய - மாநில அரசுகள் ஒன்றை செய்யலாம். தமிழ்நாட்டில் தற்போது எதிர்ப்புக்கு இலக்காகியுள்ள அனைத்து மத்திய, மாநில அரசு திட்டங்கள் குறித்தும் மறு ஆய்வு செய்ய வேண்டும். "வளர்ச்சி' என்ற பெயரிலான இந்த திட்டங்களால் நிலம், நீர், காற்று ஆகியவை மாசுபடுமா? அதனால் மக்களின் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்படுமா? பாதிக்கப்படும் என்றால் அதை தடுக்கவோ அல்லது பாதிப்பை குறைக்கவோ முடியுமா? முடியும் என்றால் அரசு செய்ய வேண்டியது என்ன? அவ்வாறு செய்தால் பொதுமக்களுக்கு குறிப்பாக உள்ளூர் மக்களுக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன?
ஆய்வு ஒளிவுமறைவு இல்லாமல் வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும். அதில், அரசியல் சார்பற்ற உள்ளூர் மக்களின் பங்களிப்பையும் உறுதி செய்வதும் அவசியம். அவ்வாறு செய்தால், பொதுமக்களிடம் தவறான தகவல்களை பரப்பி ஆதாயம் தேட முயற்சிக்கும் அரசியல் கட்சிகளையும், சில பொதுநல அமைப்புகளையும் புறந்தள்ள முடியும்.
எல்லா வளர்ச்சி திட்டங்களுக்கும் சம்பந்தப்பட்ட அரசுத் துறைகள் உரிய ஆய்வுகளின் அடிப்படையில்தான் அனுமதி அளிக்கின்றன. ஆனால் அந்த ஆய்வுகள், அதன் முடிவுகளில் மக்களுக்கு நம்பிக்கை இல்லை. இத்திட்டங்களுக்குப் பின்னால் மறைமுக செயல்திட்டம் இருக்குமோ என்றும் ஐயம் ஏற்படுகிறது. மேலும், உள்ளூர் வளத்தை உலகச் சந்தைக்கு கொண்டு செல்லும்போது, தாம் இழப்பதற்கு ஈடு என்ன என்ற கேள்வியும் அவர்களை உலுக்குகிறது. அதுவே போராட்டமாக வெடிக்கிறது.
ஆளுங்கட்சியாக இருக்கும்போது ஆதாய நோக்கத்துடன் ஒரு திட்டத்துக்கு அனுமதி அளிப்பதையும், எதிர்க்கட்சியான பிறகு அதே திட்டத்துக்கு எதிராக வீறுகொண்டு எழுந்து போராடுவதையும் மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
சில பொதுநல அமைப்புகள் சுயநலத்துக்காகப் போராடுவதையும் மக்கள் அறிவர். இன்றைய தகவல் புரட்சி யுகத்தில் பொதுவெளியில் மறைக்க கூடியது என்று ஒன்றுமில்லை.
எனவே, ஆட்சி, அதிகாரத்தை விரும்பும் எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் வெகுஜன ஆதரவுதான் அச்சாணி. மக்களுக்கு எதிரானவற்றை செய்யும் அரசியலையும், அதிகாரத்தையும் மக்கள் ஏற்க மாட்டார்கள். மக்கள் விரும்பாத "வளர்ச்சி'யையும், திட்டங்களையும் நிறைவேற்றி ஆட்சியாளர்கள் யாருடைய ஆதரவைப் பெற்று ஆட்சி, அதிகாரத்தில் கோலோச்சப் போகிறார்கள்? ஆதலால், எதிர்ப்புக்கு இலக்காகி இருக்கும் திட்டங்கள் எல்லாவற்றையும் திறந்த மனதுடன் வெளிப்படையான மறு ஆய்வுக்கு உட்படுத்தி முடிவு எடுக்க இதுவே தக்க தருணம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.